Saturday, September 29, 2018

திருவண்ணாமலை

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: திருவண்ணாமலை

திருக்கோயில்: அருள்மிகு உண்ணாமுலை அம்மை சமேத ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), மணிவாசகர் (திருவாசகம்)


தலக் குறிப்புகள்

பஞ்ச பூத ஷேத்திரங்களில் நெருப்பு மலையாக விளங்குவது, திருஞானசம்பந்தர்; திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது, மணிவாசகப் பெருந்தகை திருவெம்பானவை அருளிய தலம், வல்லாள மகாராஜா அருள் பெற்ற தலம், அருணகிரிப் பெருமானின் நாவில் ஆறுமுக தெய்வம் 'ஓம்' என்று தன் திருக்கை வேலால் எழுதி அருள் புரிந்த தலம், 'முத்தைத் தரு' எனும் முதல் திருப்புகழ் தோன்றிய அற்புதத் தலம், குகை நமசிவாயர்; குரு நமசிவாயர்; அம்மணி அம்மாள்; பகவான் ரமணர்; சேஷாத்ரி சுவாமிகள் என்று கோடி கோடி அருளாளர்களும்; சித்தர்களும் உயிரெனப் பேணிய தலம்.

விண்ணுயர் இராஜ கோபுரங்கள், மிக மிக மிகப் பிரமாண்டமான ஆலய வளாகம், ஆலயத் துவக்கத்திலேயே நாம் தரிசிப்பது 'கம்பத்து இளையனார்' சன்னிதி, தவப்பெரும் குன்றான அருணகிரியாரின் வேண்டுகோளினை ஏற்று முருகப் பெருமான் 'பிரபுடதேவராய மன்னன் உள்ளிட்ட திருவண்ணாமலை மக்கள் யாவருக்கும்' திருக்காட்சி தந்துப் பேரருள் புரிந்த இடம், இம்மூர்த்தி வேலேந்திய சிறிய திருமேனியர், அடுத்து தல விநாயகர், அருகிலேயே சிவகங்கை தீர்த்தம், பின்னர் பிரமாண்டமான திருநந்தி தேவரின் திருச்சன்னிதி. இதன் தொடர்ச்சியாக, கோபுர உச்சியிலிருந்து கீழே குதித்து இன்னுயிர் மாய்த்துக் கொள்ள முனைந்த அருணகிரியாரைக் காத்து உபதேசித்து அருள் புரிந்த 'கோபுரத்து இளையனார்' சன்னிதி. இங்கு கந்தக் கடவுள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளான்,

பின்னர் நெடுந்தூரம் பற்பல பிரகாரங்களைத் தரிசித்தவாறே மூலக் கருவறையில் எழுந்தருளியுள்ள ஆதிப் பரம்பொருளை, தெய்வங்கள் தொழும் தனிப்பெரும் தெய்வத்தை, காண்பதற்கரிய அற்புதக் கடவுளை, திருஅண்ணாமலையாரைத் தரிசித்து உச்சி கூப்பிய கையினராய் வணங்குகின்றோம், உட்பிரகாரச் சுற்றில், பின்புறம், வலது புறத்தில் ஆறுமுகப் பெருமான் இரு தேவியரோடு எழுந்தருளி இருக்கின்றான், அம்பிகை தனிக்கோயிலில், சிறிய திருமேனியளாய், வார்த்தைகளால் விவரிக்கவொண்ணாத பேரழகுத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றாள்.

அருணகிரிநாதர் இத்தலத்திற்கென 79 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், கற்ப கோடி கால வினைக் குப்பைகள் வெந்து  சாம்பலாகுமாறு, பன்முறை யாத்திரை மேற்கொண்டு, கிரிவலம் வந்துத் தரிசித்துப் பணிந்துப் பேரருள் பெற்று மகிழ வேண்டிய திருத்தலம்,

(Google Maps: Arulmigu Arunachaleswarar Temple, Pavazhakundur, Tiruvannamalai, Tamil Nadu 606601, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 81.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

திருப்பாடல் 1:
தத்தத்தன தத்தத் தனதன
     தத்தத்தன தத்தத் தனதன
          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனஓதும்

முக்கட் பரமற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித்திருவரும்
          முப்பத்து முவர்க்கத்தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிரதத்தைக் கடவிய
     பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்க நடிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக ...... எனஓதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற்றவுணரை
     வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

குமர குருபர குணதர நிசிசர
     திமிர தினகர சரவண பவகிரி
          குமரி சுத பகிரதி சுத சுரபதி ...... குலமானும் 

குறவர் சிறுமியும் மருவிய திரள்புய
     முருக சரணென உருகுதல் சிறிதுமில்
          கொடிய வினையனை அவலனை அசடனை ...... அதிமோகக்

கமரில் விழவிடும் அழகுடை அரிவையர்
     களவினொடு பொருள் அளவள அருளிய
          கலவி அளறிடை துவளுறும் வெளிறனை ...... இனிதாளக்

கருணை அடியரொடருணையில் ஒருவிசை
     சுருதி புடைதர வருமிரு பரிபுர
          கமல மலரடி கனவிலும் நனவிலும் ...... மறவேனே

தமர மிகுதிரை எறிவளை கடல்குடல்
     மறுகி அலைபட விடநதி உமிழ்வன
          சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச்

சகல உலகமும் நிலைபெற நிறுவிய
     கனக கிரிதிரி தரவெகு கரமலர்
          தளர இனியதொர் அமுதினை ஒருதனி ...... கடையா!நின்

றமரர் பசிகெட உதவிய க்ருபைமுகில்
     அகில புவனமும் அளவிடு குறியவன்
          அளவு நெடியவன் அளவிட அரியவன் ...... மருகோனே

அரவு புனைதரு புநிதரும் வழிபட
     மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்
          அறிவை அறிவது பொருளென அருளிய ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

அருவம்இடையென வருபவர் துவரிதழ்
     அமுது பருகியும் உருகியும் ம்ருகமத
          அளகம் அலையவும் அணிதுகில் அகலவும் அதிபார

அசக முலை புளகிதம்எழ அமளியில்
     அமளி படஅநவரதமும் !அவசமொ
          டணையும் அழகிய கலவியும் அலம்அலம் உலகோரைத்

தருவை நிகரிடு புலமையும் அலம்அலம்
     உருவும் இளமையும் அலம்அலம் விபரித
          சமய கலைகளும் அலம்அலம் அலமரும் ...... வினைவாழ்வும் 

சலில லிபிஅன சனனமும் அலம்அலம்
     இனி உனடியரொடொருவழி படஇரு
          தமர பரிபுர சரணமும் மவுனமும் அருள்வாயே

உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
     இருகுதையும் முடி தமனிய தநுவுடன் 
          உருளை இருசுடர் வலவனும் அயனென ...... மறைபூணும்

உறுதி படுசுர ரதமிசை அடியிட
     நெறு நெறென முறிதலும் நிலை பெறுதவம்
          உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ...... ஒருகோடி

தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு
     சடசடென வெடி படுவன புகைவன
          திகுதிகென எரிவன அனல் நகைகொடு ......முனிவார்தம் 

சிறுவ வனசரர் சிறுமியொடுருகிய
     பெரும அருணையில் எழுநிலை திகழ்வன
          சிகரி மிசையொரு கலபியில் உலவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்
     பிசித அசன மறவர்இவர் முதலிய
          கலக விபரித வெகுபர சமயிகள் ...... பலர்கூடிக்

கலகலென நெறி கெடமுறை முறைமுறை
     கதறி வதறிய குதறிய கலைகொடு
          கருத அரியதை விழிபுனல் வரமொழி ...... குழறா!அன்

புருகி உனதருள் பரவுகை வரில் !விர
     கொழியில் உலகியல் பிணைவிடில் உரைசெயல் 
          உணர்வு கெடிலுயிர் புணரிரு வினை அளறதுபோக

உதறில் எனதெனும் மலம்அறில் அறிவினில் 
     எளிது பெறலென மறைபறை அறைவதொர் 
          உதய மரணமில் பொருளினை அருளுவதொருநாளே

தருண சததள பரிமள பரிபுர
     சரணி தமனிய தநுதரி திரிபுர
          தகனி கவுரி பவதி பகவதி பயிரவிசூலி

சடில தரி அநுபவை உமை திரிபுரை
     சகல புவனமும் உதவிய பதிவ்ருதை
          சமய முதல்வி தனய பகிரதி சுத ...... சதகோடி

அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு
     கருணை வருணித தனுபர குருபர
          அருணை நகருறை சரவண குரவணி ...... புயவேளே

அடவி சரர்குல மரகத வனிதையும் 
     அமரர் குமரியும் அனவரதமும் !அரு
          கழகு பெறநிலை பெற வரமருளிய ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

துகிலு ம்ருகமத பரிமள அளகமும் 
     நெகிழ இருதன கிரியசை தரஇடை
          துவள மனிதரும் அமரரும் முநிவரும்  ...... உடனோடித்

தொடர வனமணி மகரம் இலகுகுழை
     அடருவன விட மிளிர்வன ரதிபதி
          சுருதி மொழிவன கயல்விழி புரள்தர ...... நடுவாக

வகிரும் மதிபுரை தநுநுதல் பனிவர
     வனச பதயுக பரிபுரம் ஒலிபட
          மறுகு தொறும் உலவிஇனிய கலவியை ...... விலைகூறும்

வரைவில் அரிவையர் தருசுக சலதியில் 
     அலையும் எனதுயிர் அநுதின நெறிதரு
          மவுன சிவசுக சலதியில் முழுகுவதொருநாளே

முகிலும் மதியமும் ரவியெழு புரவியும் 
     நெடிய குலைமிடர் இடற முதுககன
          முகடு கிழிபட வளர்வன கமுகினம் ...... மிசைவாளை

முடுகு கயலுகள் வயல்களும் முருகவிழ்
     தடமும் முளரியும் அகழியும் மதிள்களும் 
          முழுதும் உடையதொர் அருணையில் உறைதரும் ...... இளையோனே

அகிலும் மருதமும் முகுளிதம் வகுளமும் 
     அமுத கதலியும் அருணமும் வருடையும் 
          அபரிமிதமத கரிகளும் அரிகளும் உடனே!கொண்

டருவி இழிதரு மருவரை தனிலொரு
     சவர வனிதையை முநிதரு புனிதையை
          அவசமுடன் மலர் அடிதொழுதுருகிய ...... பெருமாளே

திருப்பாடல் 6:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

மகரம் எறிகடல் விழியினும் மொழியினும் 
     மதுப முரல்குழல் வகையினும் நகையினும்
          வளமையினும்முக நிலவினும் இலவினும் ...... நிறமூசும்

மதுர இதழினும் இடையினும் நடையினும் 
     மகளிர் முகுளித முலையினும் நிலையினும்
          வனச பரிபுர மலரினும் உலரினும் ...... அவர்நாமம்

பகருகினும்அவர் பணிவிடை திரிகினும் 
     முருகி நெறிமுறை தவறினும் அவரொடு
          பகடியிடுகினும் அமளியில் அவர்தரும் ...... அநுராகப்

பரவை படியினும் வசமழியினும் முதல் 
     அருணை நகர்மிசை கருணையொடருளிய
          பரம ஒருவசனமும் இரு சரணமும் ...... மறவேனே

ககன சுரபதி வழிபட எழுகிரி
     கடக கிரியொடு மிதிபட வடகுல
          கனக கன குவடடியொடு முறிபட ...... முதுசூதம் 

கதறு சுழிகடல் இடைகிழி படமிகு
     கலக நிசிசரர் பொடிபட நடவிய
          கலப மதகத துரகத ந்ருபகிரி ...... மயில்வாழ்வே

தகன கரதல சிவசுத கணபதி
     சகச சரவண பரிமள சததள
          சயன வனசரர் கதிபெற முனிபெறு ...... புனமானின்

தரள முகபட நெறிபட நிமிர்வன
     தருண புளகித ம்ருகமத தனகிரி
          தழுவ மயல்கொடு தனிமடல் எழுதிய ...... பெருமாளே.

திருப்பாடல் 7:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

முகிலை இகல்பொரு முழுஇருள் குழலென
     முதிய மதியது முகமென நுதலிணை
          முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி ...... எனமூவா

முளரி தனின் முகுளிதமலர் முலையென
     முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை
          மொழிய அரியதொர் தெரிவையர் வினையென ...... மொழிகூறிப்

பகலும் இரவினும் மிகமன மருள்கொடு
     பதிஇலவர் வடிவுளதழகென ஒரு
          பழுதுமற அவர் பரிவுற இதமது ...... பகராதே

பகைகொடெதிர் பொரும் அசுரர்கள் துகைபட
     விகடமுடன்அடை பயில்மயில் மிசைவரு
          பவனி தனை அநுதின நினை எனஅருள் ...... பகர்வாயே

புகல அரியது பொருளிது எனவொரு
     புதுமையிட அரியது முதலெனும்ஒரு
          பொதுவை இதுவென தவமுடை முநிவர்கள் ...... புடைசூழப்

புரமும் எரியெழ நகையது புரிபவர்
     புனலும் வளர்மதி புனை சடையினர் அவர்
          புடவி வழிபட புதை பொருள் விரகொடு ...... புகல்வோனே

அகில கலைகளும் அறநெறி முறைமையும் 
     அகில மொழிதரு புலவரும் உலகினில் 
          அறிஞர் தவமுயல்பவர்களும் இயலிசை ...... அதனாலே

அறுவர் முலைஉணும் அறுமுகன் இவனென
     அரிய நடமிடும் அடியவர் அடிதொழ
          அருணை நகர்தனில் அழகுடன் மருவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 8:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்
     முலைகள் அளவிடு முகபட பகடிகள்
          முதலும் உயிர்களும் அளவிடு களவியர் ...... முழுநீல

முழுகு புழுககில் குழை வடிவழகியர்
     முதிர வளர்கனி அதுகவர் இதழியர்
          முனைகொள் அயிலென விழியெறி கடைசியர் அநுராகம்

மருவி அமளியில் நலமிடு கலவியர்
     மனது திரவியம் அளவளவளவியர்
          வசனம் ஒருநொடி நிலைமையில் கபடியர் ...... வழியேநான்

மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன்
     அருணை நகர்மிசை கருணையொடருளிய
          மவுன வசனமும் இருபெரு சரணமும் ...... மறவேனே

கருதியிருபது கரமுடி ஒருபது
     கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது
          கடிய வியனகர் புகவரு கனபதி ...... கனல்மூழ்கக்

கவச அநுமனொடெழுபது கவிவிழ
     அணையில் அலையெறி எதிரமர் பொருதிடு
          களரி தனிலொரு கணைவிடும் அடலரி ...... மருகோனே

சருவும் அவுணர்கள் தளமொடு பெருவலி
     அகல நிலைபெறு சயிலமும் இடிசெய்து
          தருமன்அவர்பதி குடிவிடு பதனிசை ...... மயில்வீரா

தருண மணியவை பலபல செருகிய
     தலையள் துகிலிடை அழகிய குறமகள்
          தனது தனமது பரிவொடு தழுவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 9:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

விடமும் அமுதமும் மிளிர்வன இணைவிழி
     வனசம்அல தழல் முழுகிய சரமென
          விரைசெய் ம்ருகமத அளகமும் முகில்அல ...... ஒருஞான

விழியின் வழிகெட இருள்வதொர் இருளென
     மொழியும் அமுதல உயிர்கவர் வலையென
          விழையும் இளநகை தளவல களவென ...... வியன்நாபித்

தடமும் மடுஅல படுகுழி எனஇடை
     துடியும் அல மதன் உருவென வனமுலை
          சயிலம் அல கொலை யமனென முலைமிசை ...... புரள்கோவை

தரள மணிஅல யமன்விடு கயிறென
     மகளிர் மகளிரும் அலபல வினைகொடு
          சமையும் உருவென உணர்வொடு புணர்வதும் ...... ஒருநாளே

அடவி வனிதையர் தனதிரு பரிபுர
     சரண மலரடி மலர்கொடு வழிபட
          அசல மிசைவிளை புனமதில் இனிதுறை ...... தனிமானும்

அமரர் அரிவையும் இருபுடையினும் வர
     முகர முகபட கவளத வளகர
          அசல மிசைவரும் அபிநவ கலவியும் ...... விளையாடும் 

கடக புளகித புயகிரி சமுகவி
     கடக கசரத துரகத நிசிசரர்
          கடக பயிரவ கயிரவ மலர்களும் ...... எரிதீயும் 

கருக ஒளிவிடு தனுபர கவுதம
     புநித முநிதொழ அருணையில் அறம்வளர்
          கருணை உமைதரு சரவண சுரபதி ...... பெருமாளே.

திருப்பாடல் 10:
தனன தனதன தனன தனதன
     தனன தனதன தனன தனதன
          தனன தனதன தனன தனதன ...... தனதான

கமரி மலர்குழல் சரிய புளகித
     கனக தனகிரி அசைய பொருவிழி
          கணைகள் எனநுதல் புரள துகிலதை ...... நெகிழ்மாதர்

கரிய மணிபுரள் அரிய கதிரொளி
     பரவ இணைகுழை அசைய நகைகதிர்
          கனக வளைகல நடைகள் பழகிகள் ...... மயில்போலத்

திமிரு மத புழுகொழுக தெருவினில் 
     அலைய விலைமுலை தெரிய மயல்கொடு
          திலத மணிமுக அழகு சுழலிகள் ...... இதழூறல்

திரையில் அமுதென கழைகள் பலசுளை
     எனவும் அவர்மயல் தழுவும் அசடனை
          திருகு புலைகொலை கலிகள் சிதறிட ...... அருள்தாராய்

குமர குருபர குமர குருபர
     குமர குருபர குமர குருபர
          குமர குருபர குமர குருபர ...... எனதாளம் 

குரைசெய் முரசமொடரிய விருதொலி
     டமட டமடம டமட டமவென
          குமுற திமிலை சலரி கினரிமுதல் ...... இவைபாட

அமரர் முநிவரும் அயனும் அனைவரும் 
     மதுகை மலர்கொடு தொழுது பதமுற
          அசுரர் பரிகரி இரதம் உடைபட ...... விடும்வேலா

அகில புவனமொடடைய ஒளிபெற
     அழகு சரண்மயில் புறமதருளியொர் 
          அருணகிரி குறமகளை மருவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 11:
தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான

கயல்விழித்தேன் எனைச் செயல் அழித்தாய் எனக்
     கணவ கெட்டேன் எனப் ...... பெறுமாது

கருது புத்ராஎனப் புதல்வர் அப்பாஎனக்
     கதறிடப் பாடையில்  ...... தலைமீதே

பயில் குலத்தார் அழப் பழைய நட்பார்அழப்
     பறைகள் கொட்டாவரச் ...... சமனாரும்

பரியகைப் பாசம் விட்டெறியும் அப்போதெனைப்
     பரிகரித்தாவியைத் ...... தரவேணும்

அயிலறச் சேவல் கைக்கினி தரத் தோகை !உற்
     றருணையில் கோபுரத்தில் உறைவோனே

அமரர்அத்தா சிறுக் குமரிமுத்தா !சிவத்
     தரியசொல் பாவலர்க்கெளியோனே

புயல்இளைப்பாறு பொற் சயிலமொய்ச் சாரலில் 
     புனமறப் பாவையைப் ...... புணர்வோனே

பொடிபடப் பூதரத்தொடு கடற் சூரனைப்
     பொரும் முழுச் சேவகப் ...... பெருமாளே.

திருப்பாடல் 12:
தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான

கறுவு மிக்காவியைக் கலகும் அக்காலன் !ஒத்
     திலகு கண் சேல் களிப்புடன் ஆடக்

கருதிமுற்பாடு கட்டளை உடல் பேசியுள் 
     களவினில் காசினுக்குறவால் !உற்

றுறு மலர்ப் பாயலில் துயர் !விளைத்தூடலுற்
     றுயர் பொருட்கோதி உட்படு மாதர்

ஒறுவினைக்கே உளத்தறிவு கெட்டேன்உயிர்ப்
     புணை இணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ

மறையெடுத்தோதி வச்சிரம் எடுத்தானும் மைச்
     செறி திருக்கோலம் உற்றணைவானும்

மறைகள் புக்காரெனக் குவடு நெட்டாழி !வற்
     றிடஅடல் சூரனைப் ...... பொரும்வேலா

அறிவுடைத்தாரும் மற்றுடனுன் உனைப் !பாடலுற்
     றருணையில் கோபுரத்துறைவோனே

அடவியில் தோகை பொற்தட முலைக்காசை !உற்
     றயரும்அச் சேவகப் ...... பெருமாளே.

திருப்பாடல் 13:
தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான

பரியகைப் பாசம் விட்டெறியும்அக் காலனுள் 
     பயன்உயிர்ப் போய் அகப்பட மோகப்

படியில் உற்றாரெனப் பலர்கள் பற்றா !அடற்
     படர்எரிக் கூடுவிட்டலை நீரில் 

பிரியும் இப்பாதகப் பிறவி உற்றேமிகப்
     பிணிகளுக்கே இளைத்துழல் நாயேன்

பிழை பொறுத்தாய் எனப் பழுதறுத்தாள் எனப்
     பிரியம் உற்றோதிடப் ...... பெறுவேனோ

கரியமெய்க் கோலமுற்றரியின் !நற்றாமரைக்
     கமைவ பற்றாசை அக்கழலோர்முன்

கலை வகுத்தோதி வெற்பது தொளைத்தோன் இயற்
     கடவுள் செச் சேவல்கைக் .கொடியோன் !என்

றரியநற் பாடலைத் தெரியும் உற்றோற் !கிளைக்
     கருணையில் கோபுரத்துறைவோனே

அடவியில் தோகைபொற் தடமுலைக்காசை !உற்
     றயரும்அச் சேவகப் ...... பெருமாளே.

திருப்பாடல் 14:
தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான

தருணமணி வான்நிலத்தில் அருணமணிஆலவிட்ட
     தழல்அமளி மீதெறிக்கும் ...... நிலவாலே

தலைமை தவிரா மனத்தின் நிலைமை அறியாதெதிர்த்த
     தறுகண் மதவேள் தொடுத்த ...... கணையாலே

வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்றும் 
     மருவும் எனதாவி சற்றும் அழியாதே

மகுடமணி வாரிசைக்கும் விகடமதுலாவு சித்ர
     மயிலின் மிசையேறி நித்தம் ...... வரவேணும்

கருணை அகலா விழிச்சி களபம்அழியா முலைச்சி
     கலவி தொலையா மறத்தி ...... மணவாளா

கடுஉடைஅரா நிரைத்த சடிலமுடி மீது வைத்த
     கடிஅமலர் ஆதரித்த ...... கழல்வீரா

அருணமணியால் அமைத்த கிரணமணி சூழும் வெற்றி
     அருணைநகர் கோபுரத்தில் உறைவோனே

அசுரர்குலம் வேரறுத்து வடஅனலை மீதெழுப்பி
     அமரர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.

திருப்பாடல் 15:
தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான

முழுகி வடவா முகத்தின் எழுகனலிலே பிறக்கும் 
     முழுமதி நிலாவினுக்கும் ...... வசையாலும்

மொழியும்மட மாதருக்கும் இனிய தனிவேய் இசைக்கும் 
     முதிய மத ராஜனுக்கும் அழியாதே

புழுகு திகழ் நீபம் அத்தில் அழகிய குரா நிரைத்த
     புதுமையினில் ஆறிரட்டி ...... புயமீதே

புணரும்வகை தான் நினைத்ததுணரும் வகை நீல சித்ர
     பொரு மயிலிலேறி நித்தம் ...... வரவேணும்

எழுமகர வாவி சுற்றும் பொழில்அருணை மாநகர்க்குள் 
     எழுதரிய கோபுரத்தில் உறைவோனே

இடைதுவள வேடுவச்சி படம் அசையவே கனத்த
     இளமுலை விடாத சித்ர ...... மணிமார்பா

செழுமகுட நாகம் மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
     சிவனை முதல் ஓதுவித்த ...... குருநாதா

திசைமுகன் முராரி மற்றும் அரியபல தேவருற்ற
     சிறையடைய மீள விட்ட ...... பெருமாளே.

திருப்பாடல் 16:
தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான

வடவை அனலூடு புக்கு முழுகியெழு மாமதிக்கு
     மதுரமொழி யாழிசைக்கும் இருநாலும் 

வரைதிசை விடாது சுற்றி அலறுதிரை வாரி திக்கும் 
     மடிஅருவ வேள் கணைக்கும் அறவாடி

நெடுகனக மேருஒத்த புளகமுலை மாதருக்கு
     நிறையுமிகு காதலுற்ற ...... மயல்தீர

நினைவினொடு பீலி வெற்றி மரகத கலாப சித்ர
     நிலவு மயிலேறி உற்று ...... வரவேணும்

மடல்அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து
     மவுலிஅற வாளி தொட்ட ...... அரிராமன்

மருக பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க
     மவுன மறை ஓதுவித்த ...... குருநாதா

இடையரி உலாவும் உக்ர அருணகிரி மாநகர்க்குள் 
     இனியகுண கோபுரத்தில் உறைவோனே

எழுபுவி அளாவு வெற்பும் முடலிநெடு நாகம்எட்டும் 
     இடைஉருவ வேலை விட்ட ...... பெருமாளே.

திருப்பாடல் 17:
தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தந்ததான

ஆலவிழி நீலத்தால் அதர !பானத்
     தால் அளக பாரக் ...... கொண்டலாலே

ஆர நகையால் விற்போர் நுதலினால் !வித்
     தார நடையால்நற் ...... கொங்கையாலே

சால மயலாகிக் கால !திரிசூலத்
     தால்இறுகு பாசத் துன்பமூழ்கித்

தாழ்வில்உயிர் வீழ்பட்டூழ்வினை விடாமல் 
     சாவதன் முன்ஏவல்  ...... கொண்டிடாயோ

சோலைதரு கானில் கோலமற மானைத்
     தோளில் உறவாகக் ...... கொண்ட வாழ்வே

சோதி முருகா நித்தா பழய ஞானச்
     சோணகிரி வீதிக் ...... கந்தவேளே

பாலக கலாபக் கோமள மயூரப்
     பாகஉமை பாகத்தன் குமாரா

பாதமலர் மீதில் போதமலர் தூவிப்
     பாடும்அவர் தோழத் ...... தம்பிரானே.

திருப்பாடல் 18:
தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தந்ததான

பேதக விரோதத் தோதக விநோதப்
     பேதையர் குலாவைக் ...... கண்டுமாலின்

பேதைமை உறா மற்றேதம் அகலாமல் 
     பேதவுடல் பேணித் ...... தென்படாதே

சாதக விகாரச் சாதல் அவை போகத்
     தாழ்வில் உயிராகச் ...... சிந்தையால்உன்

தாரை வடிவேலைச் சேவல் தனை ஏனல் 
     சாரல் மறமானைச் ...... சிந்தியேனோ

போதக மயூரப் போதக கடாமன்  
     போதருணை வீதிக் ...... கந்தவேளே

போதக கலாபக் கோதைமுது வானில் 
     போன சிறை மீளச் ...... சென்றவேலா

பாதக பதாதிச் சூரன்முதல் வீழப்
     பாருலகு வாழக் ...... கண்டகோவே

பாதமலர் மீதில் போதமலர் தூவிப்
     பாடும்அவர் தோழத் ...... தம்பிரானே.

திருப்பாடல் 19:
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

அமுதமூறும் சொலாகிய தோகையர்
     பொருள் உளாரை என்ஆணை உன்ஆணைஎன் 
          அருகு வீடிது தானதில் வாருமென் உரைகூறும்

அசடு மாதர் குவாதுசொல் கேடிகள்
     தெருவின் மீது குலாவி உலாவிகள்
          அவர்கள் மாயை படாமல் கெடாமல் நின்அருள்தாராய்

குமரி காளி வராகி மகேசுரி
     கவுரி மோடி சுராரி நிராபரி
          கொடிய சூலி சுடாரணி யாமளி ...... மகமாயி

குறளு ரூப முராரி சகோதரி
     உலக தாரி உதாரி பராபரி
          குரு பராரி விகாரி நமோகரி ...... அபிராமி

சமர நீலி புராரி தனாயகி
     மலை குமாரி கபாலி நனாரணி
          சலில மாரி சிவாய மனோகரி ...... பரையோகி

சவுரி வீரி முநீர்விட போஜனி
     திகிரி மேவு கையாளி செயாளொரு
          சகல வேதமும் ஆயின தாயுமை ...... அருள்பாலா

திமிதமாடு சுராரி நிசாசரர்
     முடிகள் தோறும் கடாவியிடேய் ஒரு
          சில பசாசு குணாலி நிணாமுண ...... விடும்வேலா

திருஉலாவு சொணேசரணா மலை
     முகில் உலாவு விமான நவோநிலை
          சிகர மீது குலாவி உலாவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 20:
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

உருகும் மா மெழுகாகவுமே மயல்
     பெருகும் ஆசை உளாகிய பேர்வரில் 
          உரிய மேடையில் வார்குழல் நீவிய ...... ஒளிமானார்

உடைகொள் மேகலையால் முலை மூடியும்
     நெகிழ நாடிய தோதகம் ஆடியும் 
          உவமை மாமயில் போல்நிற மேனியர் உரையாடும் 

கரவதாம் மன மாதர்கள் நீள்வலை
     கலக வாரியில் வீழ்அடியேன் நெறி
          கருதொணாஅதி பாதகன் நேசமதறியாத

கசட மூடனை ஆளவுமே அருள்
     கருணை வாரிதியே இரு நாயகி
          கணவனே உன தாளிணை மாமலர் ...... தருவாயே

சுருதி மாமொழி வேதியன் வானவர்
     பரவு கேசன்ஐ ஆயுத பாணிநல்
          துளப மாலையை மார்பணி மாயவன் ...... மருகோனே

தொலைவிலா அசுரேசர்கள் ஆனவர்
     துகளதாகவுமே எதிராடிடு
          சுடரின் வேலவனே உலகேழ் வலம் ...... வருவோனே

அருணர் கோடியினார் ஒளி வீசிய
     தருண வாள்முக மேனியனேஅரன் 
          அணையும் நாயகி பாலகனே நிறை ...... கலையோனே

அணிபொன் மேருயர் கோபுர மாமதில் 
     அதிரும் ஆரணம் வாரண வீதியுள் 
          அருணை மாநகர் மேவிஉலாவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 21:
தனதன தனன தனந்த தானன
     தனதன தனன தனந்த தானன
          தனதன தனன தனந்த தானன ...... தனதான

கரியுரி அரவம் அணிந்த மேனியர்
     கலைமதி சலமும் நிறைந்த வேணியர்
          கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் ...... கஞ்சமாதின்

கனமுலை பருகி வளர்ந்த காமனை
     முனிபவர் கயிலை அமர்ந்த காரணர்
          கதிர்விரி மணிபொன் நிறைந்த தோளினர் ...... கண்டகாள

விரிவென உனதுள் உகந்த வேலென
     மிகஇரு குழையும் அடர்ந்து வேளினை
          அனையவர் உயிரை விழுங்கி மேலும் வெகுண்டுநாடும்

வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற
     விதமிகு கலவி பொருந்தி மேனியும் 
          எழில்கெட நினைவும் அழிந்து மாய்வதொழிந்திடாதோ

எரிசொரி விழியும் இரண்டு !வாளெயி
     றிருபிறை சயிலம் இரண்டு தோள் !முகி
          லென வரும் அசுரர் சிரங்கள் மேருஇடிந்து !வீழ்வ

தெனவிழ முதுகு பிளந்து காளிகள் 
     இடுபலி எனவும் நடந்து தாள்தொழ
          எதிர் பொருதுதிரம் உகந்த வேகம் உகைந்த வேலா

அரிகரி உழுவை அடர்ந்த வாள்மலை
     அருணையில் அறவும் உயர்ந்த கோபுரம் 
          அதின்உறை குமர அநந்த வேதம் மொழிந்து வாழும்

அறுமுக வடிவை ஒழிந்து வேடர்கள்
     அடவியில் அரிவை குயங்கள் தோய்புய
          அரிஅர பிரம புரந்தராதியர் ...... தம்பிரானே.

திருப்பாடல் 22:
தனதன தனதன தந்த தானன
     தனதன தனதன தந்த தானன
          தனதன தனதன தந்த தானன ...... தநததான

கனைகடல் வயிறு குழம்பி வாய்விட
     வட தமனிய கிரி கம்பமாய் நட
          கணபண விபரித கந்தகாள புயங்க ராஜன்

கயிறென அமரர் அநந்த கோடியும் 
     முறைமுறை அமுது கடைந்த நாளொரு
          கதியற உலகை விழுங்கு மேக ஒழுங்குபோல

வினைமத கரிகளும் எண் திசாமுக
     கிரிகளும் முறுகிட அண்டகோளகை
          வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு ...... நஞ்சுபோல

விடுகுழை அளவும் அளந்து காமுகர் 
     உயிர்பலி கவர்உறு பஞ்ச பாதக
          விழிவலை மகளிரொடன்பு கூர்வதொழிந்திடாதோ

முனைபெற வளைய அணைந்த மோகர
     நிசிசரர் கடகம் முறிந்து தூளெழ
          முகிலென உருவம் இருண்ட தாருகன் அஞ்சமீனம் 

முழுகிய திமிர தரங்க சாகரம் 
     முறையிட இமையவர் தங்களூர்புக
          முதுகிரி உருவ முனிந்த சேவக ...... செம்பொன்மேரு

அனையன கனவித சண்ட கோபுர
     அருணையில் உறையும் அருந்துணாமுலை
          அபிநவ வனிதை தரும்குமார நெருங்குமால் !கொண்

டடவியில் வடிவு கரந்து போயொரு
     குறமகள் பிறகு திரிந்த காமுக
          அரிஅர பிரம புரந்தராதியர் ...... தம்பிரானே.

திருப்பாடல் 23:
தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான

இரவியும் மதியும் தெரிவுற எழும்அம்
     புவிதனில் இனம் ஒன்றிடுமாதும்

எழில் புதல்வரும் நின்றழுதுளம் உருகும்
     இடர்கொடு நடலம் ...... பலகூறக்

கருகிய உருவம் கொடுகனல் விழி !கொண்
     டுயிரினை நமனும் ...... கருதாமுன்

கலைகொடு பலதுன்பமும் அகலிடநின்
     கழலிணை கருதும் ...... படிபாராய்

திருமருவியதிண் புயன்அயன் விரி!எண்
     திசை கிடுகிட வந்திடுசூரன்

திணிபுயமது சிந்திட அலை !கடலஞ் 
     சிட வலியொடு கன்றிடும் வேலா

அருமறையவர் அந்தரம் உறைபவர் !அன்
     புடையவர் உய அன்றற மேவும்

அரிவையும் ஒருபங்கிடம்உடையவர் !தங் 
     கருணையில் உறையும் ...... பெருமாளே.

திருப்பாடல் 24:
தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான

விரகொடு வளை சங்கடமது தருவெம்
     பிணிகொடு விழி வெங்கனல்போல

வெறிகொடு சமனின்றுயிர் கொளும் நெறி !இன்
     றெனவிதி வழி வந்திடு போதில் 

கரவடம் அதுபொங்கிடு மனமொடு !மங்
     கையர் உறவினர்கண் ...... புனல்பாயும் 

கலகமும் வருமுன் குலவினை களையும் 
     கழல்தொழும் இயல் தந்தருள்வாயே

பரவிடும்அவர் சிந்தையர் விடம் உமிழும்
     படஅரவணை கண் ...... துயில்மால் அம்

பழமறை மொழி பங்கயன் இமையவர்தம்
     பயமற விடமுண்டெருதேறி

அரவொடு மதியம் பொதிசடை மிசை !கங்
     கையும்உற அனலம் ...... கையில்மேவ

அரிவையும் ஒருபங்கிடம்உடையவர்!தங் 
     கருணையில் மருவும் ...... பெருமாளே.

திருப்பாடல் 25:
தனதன தனன தனதன தனன
     தனதன தனதன ...... தந்ததான

இடமடு சுறவை முடுகிய மகரம் 
     எறிகடல் இடையெழு ...... திங்களாலே

இருவினை மகளிர் மருவிய தெருவில் 
     எரியென வருசிறு ...... தென்றலாலே

தடநடுஉடைய கடிபடு கொடிய
     சரம்விடு தறுகண் அநங்கனாலே

சரிவளை கழல மயல்கொளும் அரிவை
     தனிமலர் அணையில் நலங்கலாமோ

வடகுல சயில நெடுஉடல் அசுரர்
     மணிமுடி சிதற எறிந்த வேலா

மறமகள் அமுத புளகித களப
     வளர்இள முலையை மணந்த மார்பா

அடலணி விகட மரகத மயிலில் 
     அழகுடன் அருணையில் நின்றகோவே

அருமறை விததி முறைமுறை பகரும் 
     அரிஅர பிரமர்கள் ...... தம்பிரானே.

திருப்பாடல் 26:
தனதன தனனா தனதன தனனா
     தனதன தனனா ...... தனதான

கெஜநடை மடவார் வசமதில் உருகா
     கிலெசம்அதுறு பாழ் ...... வினையாலே

கெதிபெற நினையா துதிதனை அறியா
     கெடுசுகம் அதில்ஆழ் ...... மதியாலே

தசையது மருவீ வசையுடல் உடனே
     தரணியில் மிகவே ...... உலைவேனோ

சததள மலர்வார் புணைநின கழலார்
     தருநிழல் புகவே ...... தருவாயே

திசை முகவனைநீள் சிறையுற விடுவாய்
     திருநெடு கருமால் ...... மருகோனே

திரிபுர தகனார் இடமதில் மகிழ்வார்
     திரிபுரை அருள்சீர் ...... முருகோனே

நிசிசரர் உறைமா கிரியிரு பிளவா
     நிறைஅயில் முடுகா ...... விடுவோனே

நிலமிசை புகழார் தலமெனும் அருணா
     நெடுமதில் வடசார் ...... பெருமாளே

திருப்பாடல் 27:
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
     தனத்தா தனத்தத் ...... தனதான

அருக்கார் நலத்தைத் திரிப்பார் !மனத்துக்
     கடுத்தாசை பற்றித் ...... தளராதே

அடற் காலனுக்குக் கடைக்கால் !மிதித்திட்
     டறப் பேதகப் பட்டழியாதே

கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
     கலிச் சாகரத்தில் ...... பிறவாதே

கருத்தால் எனக்குத் திருத்தாள் அளித்துக்
     கலைப் போதகத்தைப் ...... புகல்வாயே

ஒருக்கால் நினைத்திட்டிருக்கால் !மிகுத்திட்
     டுரைப்பார்கள் சித்தத்துறைவோனே

உரத்தோளிடத்தில் குறத்தேனை !வைத்திட்
     டொளித்தோடும் வெற்றிக் ...... குமரேசா

செருக்கால் தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
     செருச்சூர் மரிக்கப் ...... பொரும்வேலா

திறப் பூதலத்தில் திரள் சோண வெற்பில் 
     திருக்கோபுரத்தில்  ...... பெருமாளே.

திருப்பாடல் 28:
தனனா தனனத் தனனா தனனத்
     தனனதா தனனத் ...... தனதான

அருமா மதனைப் பிரியாத சரக்
     கயலார் நயனக் ...... கொடியார்தம்

அழகார் புளகப் புழுகார் !சயிலத்
     தணையா வலிகெட்டுடல் தாழ

இருமா நடை புக்குரை போய் !உணர்வற்
     றிளையா உளம் உக்குயிர் சோர

எரிவாய் நரகில் புகுதாத !படிக்
     கிருபாதம் எனக்கருள்வாயே

ஒருமால் வரையைச் சிறுதூள் பட!விட்
     டுரமோடெறி பொற் ...... கதிர்வேலா

உறைமான் அடவிக் குறமா !மகளுக்
     குருகாறிரு பொற் ...... புயவீரா

திருமால் கமலப் பிரமா விழியில் 
     தெரியா அரனுக்கரியோனே

செழுநீர் வயல் சுற்றருணாபுரியில் 
     திருவீதியினில் ...... பெருமாளே.

திருப்பாடல் 29:
தனதனா தானனத் தனதனா தானனத்
     தனதனா தானனத் ...... தனதான

அழுதும் ஆவாஎனத் தொழுதும் ஊடூடு !நெக்
     கவசமாய் ஆதரக் ...... கடல் !ஊடுற்

றமைவில் கோலாகலச் சமய !மாபாதகர்க்
     கறிஒணா மோன முத்திரை நாடிப்

பிழைபடா ஞான மெய்ப் பொருள் பெறாதே வினைப்
     பெரிய ஆதேச புற்புதமாய

பிறவி வாராகரச் சுழியிலே போய்விழப்
     பெறுவதோ நான்இனிப் ...... புகல்வாயே

பழைய பாகீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
     படியும்ஆறாயினத் ...... தன சாரம்

பருகுமாறானனச் சிறுவ சோணாசலப்
     பரம மாயூர வித்தக வேளே

பொழுதுசூழ் போது வெற்பிடிபடா பார்முதல் 
     பொடிபடா ஓட முத்தெறி மீனப்

புணரி கோகோ எனச் சுருதி கோகோவெனப்
     பொருத வேலாயுதப் ...... பெருமாளே.

திருப்பாடல் 30:
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
     தானதனத் தானதனத் ...... தனதானா

ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசை !பட்
     டாடை மறைத்தாடும் மலர்க் ...... குழலார்கள்

ஆரவடத் தோடலையப் பேசி நகைத்தாசை !பொருட்
     டாரையும் மெத்தாக மயக்கிடும் மோகர்

சோனைமழைப் பாரவிழித் தோகைமயில் சாதியர்கைத்
     தூதுவிடுத்தே பொருளைப் ...... பறிமாதர்

தோதகம் உற்றேழ் நரகில் சேரும்அழல் காயனைஉட்
     சோதிஒளிப் பாதம் அளித்தருள்வாயே

தானதனத்தீ திமிலைப் பேரிகை கொட்டாச மலைச்
     சாயகடல் சூரை வதைத்திடுவோனே

தாளஇயல் சோதிநிறக் காலின்எழக் கோலிஎடுத்
     தாபரம் வைத்தாடுபவர்க்கொருசேயே

தேனிரசக் கோவைஇதழ்ப் பூவைகுறப் பாவை !தனத்
     தேயுருகிச் சேரும் மணிக் ...... கதிர்வேலா

சீர்அருணைக் கோபுரம்உற்றான புனத் தோகையும் மெய்த்
     தேவ மகட்கோர் கருணைப் ...... பெருமாளே.

திருப்பாடல் 31:
தனனத் தனதானன தனனத் தனதானன
     தனனத் தனதானன ...... தனதான

இடருக்கிடராகிய கொடுமைக் கணை மேல்வரும் 
     இறுதிச் சிறுகால் வரும்  ...... அதனாலே

இயலைத் தருகானக முயலைத் தருமேனியில் 
     எரியைத் தருமா மதி ...... நிலவாலே

தொடரக் கொடு வாதையில் அடையக் கரை மேலலை
     தொலையத் தனிவீசிய ...... கடலாலே

துணையற்றணி பூ மலர் அணையில் தனியேன்உயிர்
     துவளத் தகுமோ துயர் ...... தொலையாதோ

வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
     மடியச் சுடஏவிய ...... வடிவேலா

மறவக் குலமாம் ஒரு குறமெய்த் திருமாமகள்
     மகிழப் புன மேவிய ...... மயில்வீரா

அடரப் படர் கேதகை மடலின் தழை சேர்வயல் 
     அருணைத் திருவீதியில் உறைவோனே

அவனித் திருமாதொடு சிவனுக்கிமையா விழி
     அமரர்க்கரசாகிய ...... பெருமாளே.

திருப்பாடல் 32:
தனதாதன தானன தத்தம் ...... தனதான
     தனதாதன தானன தத்தம் ...... தனதான

இமராஜன் நிலாவதெறிக்கும்  ...... கனலாலே
     இளவாடையும்  ஊரும் ஒறுக்கும் ...... படியாலே

சமராகிய மாரன்எடுக்கும் ...... கணையாலே
     தனிமான்உயிர் சோரும் அதற்கொன்றருள்வாயே

குமரா முருகா சடிலத்தன் ...... குருநாதா
     குறமா மகளாசை தணிக்கும் ...... திருமார்பா

அமராவதி வாழ்வு அமரர்க்கன்றருள்வோனே
     அருணாபுரி வீதியில் நிற்கும் ...... பெருமாளே.

திருப்பாடல் 33:
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
     தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
          தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த ...... தனதனத் தனதான

இரத சுரத முலைகளும் மார்பு குத்த நுதல் வேர்வரும்ப
     அமுத நிலையில் விரலுகி ரேகை தைக்க மணிபோல் விளங்க
          இசலி இசலி உபரித லீலை உற்று இடைநூல் நுடங்க ...... உள மகிழ்ச்சியினோடே

இருவருடலும்ஒரு உருவாய் நயக்க முகமேல் அழுந்த
     அளகம் அவிழ வளைகளும் மேகலிக்க நயனாரவிந்த
          லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த ...... உரையெழப் பரிவாலே

புருவம் நிமிரஇரு கணவாள் நிமைக்க உபசாரமிஞ்ச
     அவச கவசம்அளவியலே தரிக்க அதிலேஅநந்த
          புதுமை விளையஅது பரமாபரிக்க இணைதோளும்ஒன்றி ...... அதிசுகக் கலையாலே

புளக முதிர விரகமென்வாரி தத்த வரைநாண் மழுங்க
     மனமும் மனமும்உருகியெ ஆதரிக்க உயிர்போல் உகந்து
          பொருளதளவும் மருவுறுமாய வித்தை விலைமாதர் சிங்கி ...... விட அருள் புரிவாயே

பரவும் மகர முகரமும் மேவலுற்ற சகரால் விளைந்த
     தமர திமிரபிரபல மோக ரத்ந சலராசி கொண்ட
          படியை முழுதும்ஒரு நொடியே மதித்து வலமாக வந்து ...... சிவனிடத்தமர்சேயே

பழநி மிசையில் இசை இசைஏரகத்தில் !திருவாவினன்கு
     டியினில் பிரமபுர மதில்வாழ் திருத்தணிகை ஊடும்அண்டர்
          பதிய முதிய கதியது நாயெனுக்கும் உறவாகிநின்று ...... கவிதையைப் புனைவோனே

அரியும் அயனும்அமரருமாய சிட்ட பரிபாலன் அன்பர் 
     அடையும் இடரை முடுகியெ நூறதுட்ட கொலைகாரர்என்ற
          அசுரர் படையை அடையவும் வேரறுத்த அபிராம செந்தில் ...... உரக வெற்புடையோனே

அருண கிரண கருணைய பூரச் சரணமேலெழுந்த
     இரண கரண முரணுறு சூரனுட்க மயிலேறு கந்த
          அருணை இறையவர் பெரியகோபுரத்தில் வடபாலமர்ந்த ...... அறுமுகப் பெருமாளே.

திருப்பாடல் 34:
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
     தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான

இரவுபகல் பலகாலும் இயலிசை முத்தமிழ் கூறித்
     திரம்அதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே

பர கருணைப் பெருவாழ்வே பரசிவ தத்துவ ஞானா
     அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.

திருப்பாடல் 35:
தனன தனனா தனன தனனா
     தனன தனனா ...... தனதான

இருவர் மயலோ அமளி விதமோ
     எனென செயலோ ...... அணுகாத

இருடி அயன்மால் அமரர்அடியார் 
     இசையும் ஒலிதான் இவை !கேளா

தொருவன்அடியேன் அலறு மொழிதான் 
     ஒருவர் பரிவாய் ...... மொழிவாரோ

உனது பததூள் புவன கிரிதான் 
     உனது கிருபாகரம் ஏதோ

பரம குருவாய் அணுவில்அசைவாய்
     பவன முதலாகிய பூதப்

படையும் உடையாய் சகல வடிவாய்
     பழைய வடிவாகிய வேலா

அரியும் அயனோடபயம் எனவே
     அயிலை இருள்மேல் ...... விடுவோனே

அடிமை கொடுநோய் பொடிகள் படவே
     அருணகிரி வாழ் ...... பெருமாளே.

திருப்பாடல் 36:
தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான

இருவினை அஞ்ச மலவகை மங்க
     இருள்பிணி மங்க ...... மயிலேறி

இனவருள்அன்பு மொழிய !கடம்பு
     வின் அதகமும் கொடளி பாடக்

கரிமுகன் எம்பி முருக\ன்எனண்டர்
     களிமலர் சிந்த ...... அடியேன்முன்

கருணை பொழிந்து முகமும் மலர்ந்து
     கடுகி நடம் கொடருள்வாயே

திரிபுர மங்க மதனுடல் மங்க
     திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்

சிவம் வெளி அங்கண் அருள்குடி கொண்டு
     திகழ நடம் செய்தெமை ஈண

அரசிஇடங்கொள மழுவுடை எந்தை
     அமலன் மகிழ்ந்த ...... குருநாதா

அருணை விலங்கல் மகிழ்குற மங்கை
     அமளி நலம்கொள் ...... பெருமாளே.

திருப்பாடல் 37:
தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த
     தனதன தாந்த தந்த ...... தனதான

இருவினை ஊண்பசும்பை கருவிளை கூன்குடம்பை
     இடரடை பாழ் பொதும்பகித வாரி

இடைதிரி சோங்கு கந்தம் மதுஅது தேங்கும் கும்பம் 
     இரவிடை தூங்குகின்ற ...... பிண!நோவுக்

குருவியல் பாண்டம்அஞ்சும் மருவிய கூண்டு !நெஞ்சொ
     டுயிர்குடி போம் குரம்பை ...... !அழியாதென்

றுலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தொழிந்துன் 
     உபய பதாம் புயங்கள் அடைவேனோ

அருணையில்ஒங்கு துங்க சிகர கராம் புயங்கள் 
     அமரர் குழாம் குவிந்து ...... தொழவாழும்

அடியவர் பாங்க பண்டு புகல்அகிலாண்டம் உண்ட
     அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட
     கடவுள் நடேந்த்ரர் மைந்த ...... வரைசாடும் 

கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த
     கர குலிசேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே.

திருப்பாடல் 38:
தனதனன தனதனன தான தத்த தந்த
     தனதனன தனதனன தான தத்த தந்த
          தனதனன தனதனன தான தத்த தந்த ...... தனதான

இருள்அளகம் அவிழமதி போத முத்தரும்ப
     இலகுகயல் புரளஇரு பார பொன்தனங்கள்
          இளகஇடை துவள வளை பூசலிட்டிரங்க ...... எவராலும்

எழுதரிய கலைநெகிழ ஆசைமெத்த உந்தி
     இனியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொடந்த
          இதழமுது பருகிஉயிர் தேகமொத்திருந்து ...... முனிவாறி

முருகுகமழ் மலரமளி மீதினில் புகுந்து
     முகவனச மலர் குவிய மோகம் முற்றழிந்து
          மொழிபதற வசம்அழிய ஆசையில் கவிழ்ந்து ...... விடுபோதும்

முழுதுணர உடையமுது மா தவத்துயர்ந்த
     பழுதில்மறை பயிலுவ எனாதரித்து நின்று
          முநிவர்சுரர் தொழுதுருகு பாதபத்மம் என்றும் ...... மறவேனே

ஒருசிறுவன் மணமதுசெய் போதில்எய்த்து வந்து
     கிழவடிவு கொடுமுடுகி வாசலில் புகுந்து
          உலகறிய இவன்அடிமை யாமெனக் கொணர்ந்து ...... சபையூடே

ஒருபழைய சருகுமடி ஆவணத்தை அன்று
     உரமொடவனது வலியவே கிழிக்க நின்று
          உதறிமுறையிடு பழைய வேத வித்தர் தந்த ...... சிறியோனே

அரியஉடு பதிகடவி ஆடகச் !சிலம்பொ
     டழகுவட மணிமுடி வியாளம் இட்டழுந்த
          அமரரொடு பலர்முடுகி ஆழியைக் கடைந்து ...... அமுதாக

அருளும்அரி திருமருக வாரணத்தை அன்று
     அறிவினுடன் ஒருகொடியிலே தரித்துகந்த
          அருணகிரி நகரிலெழு கோபுரத்தமர்ந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 39:
தனன தனதன தனன தனதன
     தனன தனதன ...... தனதான

இறுகு மணிமுலை மருவு தரளமும் 
     எரியும் உமிழ்மதி ...... நிலவாலே

இரவி எனதுயிர் கவர வருகுழல் 
     இசையில் உறுகடல் அலையாலே

தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு
     சரமில் எளியெனும் அழியாதே

தருண மணிபொழில் அருணை நகருறை
     சயில மிசையினில் ...... வரவேணும்

முறுகு திரிபுரம் முறுகு கனலெழ
     முறுவல் உடையவர் ...... குருநாதா

முடிய கொடுமுடி அசுரர் பொடிபட
     முடுகு மரகத ...... மயில்வீரா

குறவர் மடமகள் அமுத கனதன
     குவடு படும்ஒரு ...... திருமார்பா

கொடிய சுடரிலை தனையும்எழுகடல்
     குறுக விடவல ...... பெருமாளே.

திருப்பாடல் 40:
தனதனன தத்த தனதனன தத்த
     தனதனன தத்த ...... தனதான

உலையில் அனலொத்த உடலின் அனல் பற்றி
     உடுபதியை முட்டி ...... அமுதூறல் 

உருகிவர விட்ட பரம சுகம் உற்று
     உனதடியை நத்தி ...... நினையாமல் 

சிலை நுதலிலிட்ட திலதம்அவிர் பொட்டு
     திகழ் முகவர் முத்து ...... நகையாலே

சிலுகு வலையிட்ட மயல் கவலை பட்டுத்
     திருடனென வெட்கி ...... அலைவேனோ

கலைகனக வட்ட திமிலை பறை கொட்ட
     கனக மயில் விட்ட ...... கதிர்வேலா

கருதலரின் முட்டிக் கருகிவரு துட்ட
     கதம்அமணர்உற்ற ...... குலகாலா

அலைகடல்உடுத்த தலமதனில் வெற்றி
     அருணைவளர் வெற்பில் உறைவோனே

அசுரர்களை வெட்டி அமரர்சிறை விட்டு
     அரசுநிலையிட்ட ...... பெருமாளே.

திருப்பாடல் 41:
தனதனன தனந்த தானன ...... தந்ததான
     தனதனன தனந்த தானன ...... தந்ததான

கடல்பரவு தரங்க மீதெழு ...... திங்களாலே
     கருதிமிக மடந்தைமார் சொல் வதந்தியாலே

வடவனலை முனிந்து வீசிய ...... தென்றலாலே
     வயல்அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ

இடம்உமையை மணந்த நாதர் இறைஞ்சும்வீரா
     எழுகிரிகள் பிளந்து வீழஎறிந்தவேலா

அடல்அசுரர் கலங்கிஓட முனிந்தகோவே
     அரிபிரம புரந்தராதியர் ...... தம்பிரானே.

திருப்பாடல் 42:
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
     தனதனனத் தனதனனத் ...... தனதான

கமலமுகப் பிறைநுதல்பொன் சிலையென வச்சிரகணை நல் 
     கயலெனபொன் சுழலும்விழிக் ...... குழல்கார்போல்

கதிர்தரள் ஒப்பிய தசனக் கமுகுகளப் புயகழைபொன்
     கரகமலத்துகிர் விரலில் ...... கிளிசேரும் 

குமரிதனத் திதலை மலைக்கிசலி இணைக் கலசமெனக்
     குவிமுலை சற்றசைய மணிக் ...... கலனாடக்

கொடியிடை பட்டுடை நடைபொன் சரணமயில் கமனம்எனக்
     குனகிபொருள் பறிபவருக்குறவாமோ

திமிலை உடுக்குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட்
     டிமிடிமிடிட் டிகுர்திமிதித் ...... தொலிதாளம்

செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடிஎண் 
     திகைசிலை பட்டுவரிபடச் ...... சிலைகோடித்

துமிலம் உடற்றசுரர் முடிப் பொடிபட ரத்தமுள் பெருகத்
     தொகுதசை தொட்டலகைஉணத் ...... தொடும்வேலா

துவனி தினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயல் 
     சுகமொடணைத்தருணகிரிப் ...... பெருமாளே.

திருப்பாடல் 43:
தனன தத்தத் தத்த தத்தத் தனதன
     தனன தத்தத் தத்த தத்தத் தனதன
          தனன தத்தத் தத்த தத்தத் தனதன ...... தனதான

கமல மொட்டைக் கட்டழித்துக் குமிழியை
     நிலைகுலைத்துப் பொற்குடத்தைத் தமனிய
          கலச வர்க்கத்தைத் தகர்த்துக் குலையற ...... இளநீரைக்

கறுவி வட்டைப் பின்துரத்திப் !பொருதப
     சயம் விளைத்துச் செப்படித்துக் குலவிய
          கரிமருப்பைப் புக்கொடித்துத் திறல்மதன் அபிஷேகம்

அமலர் நெற்றிக் கண்தழற்குள் பொடிசெய்து
     அதிக சக்ரப் புள்பறக்கக் கொடுமையில் 
          அடல் படைத்தச்சப்படுத்திச் சபதமொடிருதாளம்

அறைதல் கற்பித்துப் பொருப்பைப் பரவிய
     சிறகறுப்பித்துக் கதிர்த்துப் புடைபடும் 
          அபிநவச் சித்ரத் தனத்துத் திருடிகள் உறவாமோ

தமர மிக்குத் திக்கதிர்க்கப் பலபறை
     தொகுதொகுக்குத் தொத்தொகுக்குத் தொகுதொகு
          தரிகிடத்தத் தத்தரிக்கத் தரிகிட ...... எனஓதிச்

சவடுறப் பக்கப் பழொத்திப் புகையெழ
     விழிகளுள் செக்கச் சிவத்துக் குறளிகள்
          தசைகள் பட்சித்துக் களித்துக் கழுதொடு ...... கழுகாட

அமலைஉற்றுக் கொக்கரித்துப் படுகள
     அசுர ரத்தத்தில் குளித்துத் திமியென
          அடி நடித்திட்டு இட்டிடித்துப் பொருதிடு ...... மயிலோனே

அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியில் 
     உலவு மெய் ப்ரத்யக்ஷ நற்சற் குருபர
          அருணையில் சித்தித்தெனக்குத் தெளிவருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 44:
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
     தனதனத் தனதனத் ...... தனதான

கரிமுகக் கடகளிற்றதிக கற்பகமதக்
     கஜமுகத்தவுணனைக் ...... கடியானை

கடலைஎள் பயறுநற் கதலியில் கனிபலக்
     கனி வயிற்றினில் அடக்கிய வேழம்

அரிமுகத்தினன் எதிர்த்திடு களத்தினில்!மிகுத்
     தமர்புரிக் கணபதிக்கிளையோனே

அயிலெடுத்தசுரர் வெற்பலைவுறப் பொருது!வெற்
     றியை மிகுத்தறுமுகக் ...... குமரேசா

நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்
     கையில் பிடித்தெதிர் நடத்திடும்ஈசன்

நடனம் இப்படியிடத்தினும் இசைத் தரையினில் 
     கரி உரித்தணிபவற்கொருசேயே

துரிபெறச் சரிபொழில் கனவயற்கழகுளத்
     துரியமெய்த் தரள மொய்த்திட வீறிச்

சுரர் துதித்திட மிகுத்தியல் தழைத்தருணையில் 
     சுடர் அயில் சரவணப் ...... பெருமாளே.

திருப்பாடல் 45:
தனன தந்தனம் தனதன தனதன
     தனன தந்தனம் தனதன தனதன
          தனன தந்தனம் தனதன தனதன ...... தனதான

கருநிறம் சிறந்தகல்வன புகல்வன
     மதன தந்திரம் கடியன கொடியன
          கனக குண்டலம் பொருவன வருவன ...... பரிதாவும்

கடலுடன் படர்ந்தடர்வன தொடர்வன
     விளையும் நஞ்சளைந்தொளிர்வன பிளிர்வன
          கணையை நின்று நின்றெதிர்வன முதிர்வன ...... இளையோர்முன்

செருவை முண்டகம் சிறுவன உறுவன
     களவு வஞ்சகம் சுழல்வன உழல்வன
          தெனன தெந்தனம் தெனதென தெனதென ...... எனநாதம்

தெரிசுரும்பை வென்றிடுவன அடுவன
     மருள்செய் கண்கள் கொண்டணைவர்தம் உயிரது
          திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ...... ஒழிவேனோ

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம்இவை
     கலகலன்கலின் கலினென இருசரண்
          மலர்கள் நொந்து நொந்தடியிட வடிவமும் ...... மிகவேறாய்

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் 
     முறை செழும்புனம் தினைவிளை இதண்மிசை
          மறவர் தங்கள்பெண் கொடிதனை ஒருதிரு ...... உளநாடி

அருகு சென்றடைந்தவள் சிறு பதயுக
     சததளம் பணிந்ததிவித கலவியும் 
          அறமருண்டு நெஞ்சவளுடன் மகிழ்வுடன் அணைவோனே

அமரர் சங்கமும் குடிபுக நொடியினில்
     நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து
          அருணை வந்துதென் திசைதனில் உறைதரு ...... பெருமாளே.

திருப்பாடல் 46:
தானான தான தானான தான
     தானான தான ...... தந்ததான

காணாத தூர நீள்நாத வாரி
     காதாரவாரம் அதன்பினாலே

காலாளும் வேளும் ஆலால நாதர்
     காலால் நிலாவுமும் முனிந்துபூமேல்

நாணான தோகை நூலாடை சோர
     நாடோர்கள்ஏச அழிந்து தானே

நானாபவாத மேலாக ஆக
     நாள்தோறும் வாடி மயங்கலாமோ

சோணாசலேச பூணார நீடு
     தோளாறும்ஆறும் விளங்குநாதா

தோலாத வீர வேலால்அடாத
     சூராளன் மாள வெகுண்ட கோவே

சேணாடர் லோகம் வாழ்மாது யானை
     தீராத காதல் சிறந்த மார்பா

தேவாதி கூடு மூவாதி மூவர்
     தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே.

திருப்பாடல் 47:
தானா தத்தன தானா தத்தன
  தந்தன தந்தன தான தந்தன
    தானா தத்தன தானா தத்தன
      தந்தன தந்தன தான தந்தன
        தானா தத்தன தானா தத்தன
          தந்தன தந்தன தான தந்தன ...... தந்ததான

காராடக் குழல் ஆலாலக்கணை
  கண்கள் சுழன்றிடவே முகங்களில் 
    நாலா பச்சிலையாலே மெற்புசி
      மஞ்சள் கலந்தணி வாளி கொந்தளம் 
        காதாடக் கலன் மேலாடக் குடி
          இன்பரசம் குடமார் பளிங்கொளி ...... கொங்கை மாதர்

காசாசைச் செயலாலே சொக்கிடும் 
  விஞ்சையர் கொஞ்சிடு வாரிளங்குயில்
    போலே நற்றெரு ஊடாடித்துயல்
      தொங்கல் நெகிழ்ந்திடையே துவண்டிட
        கால்தாவிச் சதியோடே சித்திரம் 
          என்ப நடம் புரிவாருடன்செயல் ...... மிஞ்சலாகிச்

சீராடிச் சில நாள்போய் மெய்த்திரை
  வந்து கலந்துயிர் ஓட!அங்கமொ
    டூடாடிப்பல நோயோடுத்தடி
      கொண்டு குரங்கெனவே நடந்துசொல்
        சீயோடிக் கிடை பாயோடுக்கி!அ
          டங்கி அழிந்துயிரோடுளைஞ்சொளியும் கண்மாறிச்

சேராமல்பொறி கேளாமல்செவி
  துன்பமொடின்பமுமே மறந்துபின்
    ஊரார் சுற்றமும் மாதோர் மக்களும் 
      மண்டியும் அண்டையுடே குவிந்திது
        சீசீ சிச்சிசி போகா நற்!சனி
          யன் கட என்றிடவே கிடந்துடல் ...... மங்குவேனோ

மாரோன் முப்புர நீறாயுற்றிட
  அங்கி உமிழ்ந்திடுவோர் இபம்புலி
    தோல் சீயத்தொடெ ஏகாசர்ச்சடை
      கங்கை இளம்பிறையார் அணிந்தவர்
        மாடேறிக் கடல் ஆலாலத்தையும் 
          உண்டவர் எந்தை சிவாநுபங்குறை ...... எந்தன்மாதா

மாலோனுக்கிளையாள் மாபத்தினி
  அம்பிகை சங்கரி மோக சுந்தரி
    வேதாமக்கலை ரூபாள் முக்கண்!நி
      ரம்பிய கொங்கையினாள் பயந்தருள்
        மாஞானக் குமரா தோகைப்!பரி
          யின்பத வண்குருவே எனஞ்சுரர் தொண்டுபாடச்

சூரார் மக்கிட மாமேருக்கிட
  அங்கடலெண் கிரியோடிபம் கொடு
    தீபேழற்றிட பாதாளத்துறை
      நஞ்சரவின் பணமாயிரம்கெட
        சூழ்வாளக்கிரி தூளாகிப்பொடி
          விண்கண் நிறைந்திடவே நடம்புரிகின்ற வேலா

சோர் வேதத்தலை மேலாடிச்!சுக
  பங்கய செங்கரமோடகம் பெற
    வாகானக்குற மாதோடற்புத
      மங்குல் அணங்குடனே மகிழ்ந்துநல்
        தூணோடிச்சுடர் ஆகாசத்தை!அ
          ணைந்து விளங்கருணாசலம் திகழ் ...... தம்பிரானே.

திருப்பாடல் 48:
தானதன தந்ததன தானதன தந்ததன
     தானதன தந்ததன ...... தந்த தனதான

காரு மருவும் பெருகு சோலை மருவும் கொடிய
     காகளம் அடங்கவும் முழங்கும் அதனாலே

கால்அடர வம்பமளி மேல்அடர வந்துபொரு
     காமன்விடு விஞ்சுகணை ...... அஞ்சு மலராலே

ஊரும்உலகும்பழைய பேருகம் விளைந்ததென
     ஓரிரவு வந்தெனது ...... சிந்தை அழியாதே

ஊடியிரு கொங்கை மிசை கூடிவரி வண்டினம் 
     உலாவிய கடம்ப மலர் ...... தந்தருளுவாயே

ஆரும்அரவும் பிறையும் நீரும்அணியும்சடையர் 
     ஆதி பரவும்படி நினைந்த குருநாதா

ஆறுமுகமும் குரவும் ஏறுமயிலும் குறவி
     ஆளும்உரமும் திருவும் ...... அன்பும் உடையோனே

மேருமலையும் பெரிய சூருமலையும் கரிய
     வேலைஅலையும் பகையும் ...... அஞ்ச விடும்வேலா

மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்குதிரு
     வீதியில் எழுந்தருளி ...... நின்ற பெருமாளே.

திருப்பாடல் 49:
தான தனான தத்த ...... தனதான
     தான தனான தத்த ...... தனதான

கீத விநோத மெச்சு ...... குரலாலே
     கீறு மையார் முடித்த ...... குழலாலே

நீதியிலாதழித்து ...... உழலாதே
     நீ மயிலேறிஉற்று ...... வரவேணும்

சூதமர் சூரர்உட்க ...... பொருசூரா
     சோணகிரீயில்உற்ற ...... குமரேசா

ஆதியர் காதொருச் சொல் அருள்வோனே
     ஆனைமுகார் கனிட்ட ...... பெருமாளே.

திருப்பாடல் 50:
தனதனன தனதனன தானத் தாத்தன
     தனதனன தனதனன தானத் தாத்தன
          தனதனன தனதனன தானத் தாத்தன ...... தனதான

குரவநறும்  அளககுழல் கோதிக் காட்டியே 
     குலவும்இரு கயல்கள்விழி மோதித் தாக்கியே 
          குமுதமலர் ஒளிபவள வாயைக் காட்டியே ...... குழையாத

குணம்உறுக இனிதுபயில் கூறிக் காட்டியே 
     குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியே 
          குடவியிடும் அரிவையர்கள் ஆசைப் பாட்டிலே ...... கொடியேன்யான்

பொருள்இளமை கலைமனமும் ஏகப் போக்கிய
     புலையன்இவன் எனஉலகம் ஏசப் போக்கென
          பொறிவழியில் அறிவழிய பூதச் சேட்டைகள் ...... பெருகாதே

புதுமலர்கள் மருவும்இரு பாதத்தாற்றியே 
     பொது வகையில் அருணைநிலை நீள் கர்த்தாஎன
          புகழ்அடிமை தனைஉனது பார்வைக் காத்திட ...... நினையாதோ

அரவமுடன் அறுகு மதியார் மத்தாக்கமும் 
     அணியுமொரு சடைமவுலி நாதர்க்கேற்கவே 
          அறிவரிய ஒருபொருளை போதத்தேற்றிய ...... அறிவோனே

அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்
     தருமமது சரவணையில் வாவித் தேக்கியே 
          அறுசிறுவர் ஒருஉடலமாகித் தோற்றிய ...... இளையோனே

சுரர்உலவ அசுரர்கள் மாளத் தூள்பட
     துயவுமுடல் அயிலைவிடும் மாஉக்ரா க்ரம
          சுவறிஎழும் கடலும் முறையாகக் கூப்பிட ...... முனிவோனே

துடிமுழவு மறவரிட சேவல் காட்டினில்
     துணைமலரின் அணுகிதினை காவல் காத்தனை
          சுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை ...... பெருமாளே.

திருப்பாடல் 51:
தனதன தானான தானன தனதன தானான தானன
     தனதன தானான தானன ...... தனதான

குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய்வீடு காதலி
     குலவனுமாய் நாடு காடொடு ...... தடுமாறிக்

குனிகொடு கூன்நீடு மாகிடு கிழவனுமாய்ஆவி போய்விட
     விறகுடனே தூளியாவதும் ...... அறியா தாய்ப்

பழய சடாதார மேல்திகழ் கழிஉடல் காணா நிராதர
     பரிவிலி வானாலை நாள்தொறும் ...... மடைமாறிப்

பலபலவாம் யோக சாதக உடல்கொடு மாயாத போதக
     பதி அழியாவீடு போயினி ...... அடைவேனோ

எழுகடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும் 
     இரவியும் வாய்பாறி ஓடிட ...... முதுசேடன்

இருளறு பாதாள லோகமும் இமையமும் நீறாக வாள்கிரி
     இருபிளவாய்வீழ மாதிர ...... மலை சாய

அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர்பூத மாறுசெய்
     அவுணர்தம் மா சேனை தூளெழ ...... விளையாடி

அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயுதா உயர்
     அருணையில் வாழ்வாக மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 52:
தானதன தானதத்த தானதன தானதத்த
     தானதன தானதத்த ...... தனதான

கேதகைய பூமுடித்த மாதர்தம் மயலில்உற்று
     கேவலமதான அற்ப ...... நினைவாலே

கேள்வி அதிலாதிருக்கும் ஊழ்வினையினால் மிகுத்த
     கேடுறுகவே நினைக்கும் ...... வினையாலே

வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில்
     மேதினியெலாம் உழற்றும் ...... அடியேனை

வீடுதவி ஆளவெற்றி வேல்கரமதே எடுத்து
     வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே

நீதிநெறியேஅழித்த தாருகனை வேரறுத்து
     நீடுபுகழ் தேவர்இல்கள் ...... குடியேற

நீடருளினால் விடுத்த பாலகுமரா செழித்த
     நீலநிற மால் தனக்கு ...... மருகோனே

சோதிஅனலாய் உதித்த சோணகிரி மாமலைக்குள்
     சோபைவட கோபுரத்தில் உறைவோனே

சோனைமழை போல்எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி
     தோளின் மிசை வாள்எடுத்த ...... பெருமாளே.

திருப்பாடல் 53:
தானான தனதான ...... தனதான

கோடான மடவார்கள் ...... முலைமீதே
கூர்வேலை இணையான ...... விழியூடே
ஊடாடி அவரோடும்  ...... உழலாதே
ஊராகத் திகழ்பாதம் ...... அருள்வாயே
நீடாழி சுழல்தேசம் ...... வலமாக
நீடோடி மயில்மீது ...... வருவோனே
சூடானதொரு சோதி ...... மலைமேவு
சோணாடு புகழ்தேவர் ...... பெருமாளே.

திருப்பாடல் 54:
தானதன தத்த தத்த தானதன தத்த தத்த
     தானதன தத்த தத்த ...... தனதான

கோடுசெறி மத்தகத்தை வீசுபலை தத்தஒத்தி
     கூறு செய்தழித்துரித்து ...... நடை மாணார்

கோளுலவு முப்புரத்தை வாளெரி கொளுத்தி விட்ட
     கோபநுதல் அத் தரத்தர் ...... குருநாதா

நீடு கனகத் தலத்தை ஊடுருவி மற்ற வெற்பு
     நீறெழ மிதித்த நித்த ...... மனதாலே

நீபமலர் பத்தி மெத்த ஓதும்அவர் சித்த மெத்த
     நீலமயில் தத்த விட்டு ...... வரவேணும்

ஆடலணி பொன்சிலைக்கை வேடுவர்புனக் குறத்தி
     ஆரமது மெத்து சித்ர ...... முலைமீதே

ஆதரவு பற்றி மெத்த மாமணி நிறைத்த வெற்றி
     ஆறிரு திருப்புயத்தில் ...... அணைவீரா

தேடிமையொர் புத்தி மெத்தி நீடுற நினைத்த பத்தி
     சீருற உளத்தெரித்த ...... சிவவேளே

தேறருணையில் தரித்த சேண் முகடிடத்தடர்த்த
     தேவர் சிறை வெட்டிவிட்ட ...... பெருமாளே.

திருப்பாடல் 55:
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான

சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும
     திலதமும்இட்டுக் குளிர்ந்த பங்கய
          திருமுக வட்டத்தமர்ந்த மென்குமிழ் ...... தனிலேறிச்

செழுமணி ரத்நத்திலங்கு பைங்குழை
     தனை முனிவுற்றுச் சிவந்து நஞ்சணி
          செயலினை ஒத்துத் தயங்கு வஞ்சக ...... விழிசீறிப்

புலவி மிகுத்திட்டிருந்த வஞ்சியர்
     பத மலருக்குள் பணிந்தணிந்தணி
          புரிவளை கைக்குள் கலின் கலென்றிட ...... அநுராகம்

புகழ்நலம் மெத்தப் புரிந்து கொங்கையில் 
     உருகி அணைத்துப் பெரும் ப்ரியங்கொடு
          புணரினும் நின்பொன் பதங்கள் நெஞ்சினுள் ...... மறவேனே

கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை
     மலைமகள் பக்கத்தமர்ந்திருந்திட
          கணகண கட்கட் கணின்கண்என்றிட ...... நடமாடும் 

கருணையன் உற்றத் த்ரியம்பகன் தரு
     முருக புனத்தில் திரிந்த மென்கொடி
          கனதன வெற்பில் கலந்தணைந்தருள் ...... புயவீரா

அலைகடல் புக்குப் பொரும் பெரும் படை
     அவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்
          அமரர் தொழப்பொன் சதங்கை கொஞ்சிட ...... வருவோனே

அடியவர் அச்சத்தழுங்கிடும் துயர்
     தனை ஒழிவித்துப் ப்ரியங்கள் தந்திடும்
          அருணகிரிக்குள் சிறந்தமர்ந்தருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 56:
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

சிவமாதுடனே அநுபோகம்அதாய்
     சிவஞானமுதே ...... பசியாறித்

திகழ்வோடிருவோர் ஒரு ரூபமதாய்
     திசை லோகமெலாம் ......அநுபோகி

இவனேஎன மால்அயனோடமரோர் 
     இளையோன் எனவே ...... மறையோத

இறையோன் இடமாய் விளையாடுகவே
     இயல் வேலுடன்மா ...... அருள்வாயே

தவலோகமெலாம் முறையோ எனவே
     தழல்வேல் கொடுபோய் அசுராரைத்

தலைதூள் படஏழ் கடல்தூள் பட!மா
     தவம் வாழ்வுறவே ...... விடுவோனே

கவர்பூ வடிவாள் குறமாதுடன் மால்
     கடனாம் எனவே ...... அணை மார்பா

கடையேன் மிடிதூள் படநோய் விடவே
     கனல்மால் வரைசேர் ...... பெருமாளே

திருப்பாடல் 57:
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
     தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
          தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததான

சினமுடுவல் நரிகழுகுடன் பருந்தின்கணம்
     கொடி கெருடன் அலகைபுழு உண்டு கண்டின்புறும் 
          செடம்அளறு மலசலமொடென்பு துன்றும் கலம் ...... துன்பமேவு

செனன வலை மரண வலை இரண்டுமுன் பின் !தொடர்ந்
     தணுகும்உடல் அநெக வடிவிங்கடைந்தம்பரம் 
          சிறுமணலை அளவிடினும் அங்குயர்ந்திங்குலந்தொன்றும் நாயேன்

கனகபுவி நிழல்மருவி அன்புறும் தொண்டர் !பங்
     குறுகஇனி அருள்கிருபை வந்து தந்தென்றுமுன்
          கடன்எனது உடலுயிரும் உன்பரம் தொண்டு கொண்டன்பரோடே

கலவிநலம் மருவி வடிவம் சிறந்துன் பதம்
     புணர் கரணம் மயில் புறமொடின்பு கொண்டண்டரும் 
          கனகமலர் பொழிய உனதன்புகந்தின்று முன் ...... சிந்தியாதோ

தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
     தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடம் 
          தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந் ...... தண்டர்பேரி

தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்
     டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்
          கடையுகம் ஓடொலிய கடலஞ்ச வஞ்சன்குலம் ...... சிந்திமாளச்

சினமுடுகி அயிலருளி உம்பர் அந்தம்பரம் 
     திசைஉரகர் புவிஉளது மந்தரம் பங்கயன்
          செகம்முழுது மகிழஅரி அம்புயன் தொண்டு கொண்டஞ்சல் பாடத்

திருமுறுவல் அருளி எனதெந்தையின் பங்குறும் 
     கவுரி மனமுருக ஒரு கங்கை கண்டன்புறும் 
          திருஅருணகிரி மருவு சங்கரன் கும்பிடும் ...... தம்பிரானே.

திருப்பாடல் 58:
தத்த தத்ததன தத்த தத்ததன
     தத்த தத்ததன தத்த தத்ததன
          தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான

சுக்கிலச் சுரொணிதத்தில் உற்ற!நளி
     னத்தில் அப்புவென ரத்த முற்றி சுக
          சுக்கிலக் குளிகை ஒத்து கெர்ப்ப குகை ...... வந்துகோலத்

தொப்பை இட்டவயிறில் பெருத்துமிக
     வட்டமிட்டுடல் வெப்பமுற்று மதி
          சொற்ற பத்தின்மறி அக்ஷரத்தினுடை ...... விஞ்சையாலே

கக்க நற்புவியில் உற்றரற்றி !முலை
     யைக் கொடுக்க அமுர்தைப் புசித்து !வளர்
          கைக்கசத்தியொடு உழைத்து தத்துநடை ...... அந்தமேவிக்

கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயில் 
     ஒத்த மக்கள் மயலில் குளித்துநெறி
          கட்டிஇப்படி பிறப்பில் உற்றுடலம் ...... மங்குவேனோ

தெற்கரக்கர் பவிஷைக் குலைத்து !விட
     ணற்கு நத்தரசளித்து முத்திகொடு
          சித்திரத் திருஉரத்த சக்கிரி தன் ...... மருகோனே

செக் கரத்தின்மலை முப்புரத்தில்எரி
     இட்ட சத்தி சிவன் உற்று நத்தமிகு
          சித்தனைத்தையும் விழித்த சத்தியுமை ...... தந்தபாலா

தர்க்கமிட்டசுரரைக் கெலித்துமலை
     உக்கெழுக்கடல் கொளுத்தி அட்டதிசை
          தட்ட முட்டை அடையக் கொடிப்புகையின் ...... மண்டும்வேலா

தத்தை வித்ரும நிறத்தி முத்தணி !கு
     றத்தி கற்பக வனத்தி சித்தம்அவை
          தக்கு நத்த அருணைக் கிரிக்குள் மகிழ் ...... தம்பிரானே.

திருப்பாடல் 59:
தந்தத் தந்தத் தனதன தானன
     தந்தத் தந்தத் தனதன தானன
          தந்தத் தந்தத் தனதன தானன ...... தனதான

செஞ்சொல் பண்பெற்றிடு குடமாமுலை
     கும்பத் தந்திக் குவடென வாலிய
          தெந்தப் பந்தித் தரளம்அதாமென ...... இடராவி

சிந்திக் கந்தித்திடு களையாம் !உன
     தங்கத்தம் பொற்பெதுவென ஓதுவ
          திண்துப்பும் தித்திடுகனி தானுமுன் ...... இதழாமோ

மஞ்சொக்கும் கொத்தளகம் எனாமிடை
     கஞ்சத்தின்புற்றிடு திருவேஇள
          வஞ்சிக் கொம்பொப்பெனும் மயிலேஎன ...... முறையேய

வந்தித்திந்தப் படி மடவாரொடு
     கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாள்தொழு
          மந்தப் புந்திக் கசடன்எநாள் உனதடிசேர்வேன்

நஞ்சைக் கண்டத்திடுபவர் ஆரொடு
     திங்கள் பிஞ்சக்கரவணி வேணியர்
          நம்பர்ச் செம்பொன் பெயர்அசுரேசனை ...... உகிராலே

நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர
     நந்திக் கம்பத்தெழு நரகேசரி
          நஞ்சக் குண்டைக்கொரு வழிஏதென ...... மிகநாடி

வெஞ்சச் சிம்புள் சொருபம்அதானவர்
     பங்கில் பெண் கற்புடைய பெணாயகி
          விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் ...... புனமீதே

வெண்டித் தங்கித் திரிகிழவாஅதி
     துங்கத் துங்கக் கிரிஅருணாபுரி
          வெங்கண் சிங்கத்தடி மயிலேறிய ...... பெருமாளே.

திருப்பாடல் 60:
தனதன தனனாத் தனதன தனனத்
     தனதன தனனாத் தனதன தனனத்
          தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான

செயசெய அருணாத்திரி சிவயநமச்
     செயசெய அருணாத்திரி மசிவயநச்
          செயசெய அருணாத்திரி நமசிவயத் ...... திருமூலா

செயசெய அருணாத்திரி யநமசிவச்
     செயசெய அருணாத்திரி வயநமசிச்
          செயசெய அருணாத்திரி சிவய நமஸ்த்தெனமாறி

செயசெய அருணாத்திரி தனில் விழிவைத்து 
     அரகர சரணாத்திரிஎன உருகிச்
          செயசெய குருபாக்கியமென மருவிச் ...... சுடர்தாளைச்

சிவசிவ சரணாத்திரி செய செயெனச்
     சரண்மிசை தொழுதேத்திய சுவை பெருகத்
          திருவடி சிவவாக்கிய கடல்அமுதைக் ...... குடியேனோ

செயசெய சரணாத்திரிஎன முநிவர்க்
     கணம்இது வினை காத்திடுமென மருவச்
          செடமுடி மலை போற்றவுணர்கள் அவியச் ...... சுடும்வேலா

திருமுடிஅடி பார்த்திடுமென !இருவர்க்
     கடிதலை தெரியாப்படி நிண அருணச்
          சிவசுடர் சிகிநாட்டவன்இரு செவியில் ...... புகல்வோனே

செயசெய சரணாத்திரி எனும் !அடியெற்
     கிருவினை பொடியாக்கிய சுடர் வெளியில் 
          திருநடமிது பார்த்திடுமென மகிழ்பொன் ...... குருநாதா

திகழ்கிளி மொழிபால் சுவைஇதழ்அமுதக்
     குறமகள் முலைமேல் புதுமண மருவிச்
          சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ்பொன் ...... பெருமாளே.

திருப்பாடல் 61:
தனன தனந்தனந் தான தத்த தந்த
     தனன தனந்தனந் தான தத்த தந்த
          தனன தனந்தனந் தான தத்த தந்த
          ...... தனதனத் தனதான

தமர குரங்களும் காரிருள் பிழம்பு
     மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து
          தழலுமிழ் கண்களும் காளமொத்த கொம்பும் 
          ...... உளகதக் கடமா மேல்

தனிவரும் அந்தகன் பாசம் விட்டெறிந்து
     அடவருமென்று சிந்தாகுலத்திருந்து
          தமர்அழ மைந்தரும் சோகம் உற்றிரங்க
          ...... மரண பக்குவம்ஆநாள்

கமல முகங்களும் கோமளத்திலங்கு
     நகையும் நெடுங்கணும் காதினில் துலங்கு
          கனக குதம்பையும் தோடும் வஜ்ர !அங்க
          ...... தமும் அடர் சுடர்வேலும் 

கடிதுலகெங்கணும் தாடியிட்டு வந்த
     மயிலும் இலங்கலங்கார பொற்சதங்கை
          கழலொலி தண்டையம் காலும்ஒக்க வந்து
          ...... வரமெனக்கருள் கூர்வாய்

இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி
     அகிலதலம் பெறும் பூவை சத்தி அம்பை
          இளமுலையின் செழும் பால் குடித்திலங்கும் 
          ...... இயல் நிமிர்த்திடுவோனே

இறைவர் இறைஞ்ச நின்றாகம ப்ரசங்கம் 
     உரைசெய்திடும் ப்ரசண்டா விசித்து நின்ற
          ரணமுக துங்க வெஞ்சூர்உடல் பிளந்த
          ...... அயிலுடைக் கதிர்வேலா

அமணர் அடங்கலும் கூடலில்திரண்டு
     கழுவில் உதைந்துதைந்தேற விட்டு நின்ற
          அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த
          ...... அடியவர்க்கெளியோனே

அமரர் வணங்கும் கந்தா குறத்தி கொங்கை
     தனில்முழுகும் கடம்பா மிகுத்த செஞ்சொல் 
          அருணை நெடுந்தடம் கோபுரத்தமர்ந்த
          ...... அறுமுகப் பெருமாளே.

திருப்பாடல் 62:
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்
     தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்
          தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் ...... தனதான

தமிழோதிய குயிலோமயில் ஆண்டலை ஆம்புறவம் 
     கிளிகாடையின் அணில்ஏரளியாம் குரல் வாய்ந்ததிசெம் 
          தகுமா மிடறொலியார் இதழாம்சுளை தேன்கனியின் ...... சுவைசேரும் 

தனபாரமும் மலையாம்என ஓங்கிட மாம்பொறி!சிந்
     திட வேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின்
          சரிரார் குழல்இருளா நகைஓங்கிய வான்கதிரின் ...... சுடர்பாயக்

குமிழ்நாசியின் முகமோ மதியாம் குளிர் சேங்கமலம் 
     சரிதோடிணை செவியாடுசலாம் கள பூங்கமுகம் 
          கொடிநூலிடை உடையார் அனமாம் ப்ரியர் மாண்புரி மின் ...... கொடிமாதர்

குணமோடமளியில் ஆடினும் ஓங்கிய பூங்கமலம் 
     சரண்நூபுர குரலோசையும் ஏந்திடு மாண்டலையின்
          கொடியோடெழுதரிதாம் வடிவோங்கிய பாங்கையும் மன் ...... தகையேனே

திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
     தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
          திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகம் என்றியல் பேரி

திசைமூடுக கடலேழ் பொடியாம்படி ஒங்கிய!வெங்
     கரிதேர்பரி அசுரார்கள் மாண்டிட நீண்டரவின்
          சிரமீள்பட குவடோதுகள் வான்பெற வாங்கியவண் ...... கதிர்வேலா

கமழ் மாஇதழ் சடையார்அடியேன் துயர் தீர்ந்திட!வெண்
     தழல் மாபொடி அருள்வோர்அடல் மான்துடி தாங்கியவண்
          கரர் மாடருள் உமையாள் எமைஈன்றவள் ஈன்றருள்மென் ...... குரவோனே

கடையேன்இரு வினைநோய்மலம் மாண்டிட தீண்டியஒண்
     சுகமோகினி வளிநாயகி பாங்கன் எனாம் பகர்மின்
          கலை நூலுடை முருகா அழலோங்கிய ஓங்கலின்வண் ...... பெருமாளே.

திருப்பாடல் 63:
தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த
     தனன தனத்தத் தனந்த ...... தனதான

தலையை மழித்துச் சிவந்த துணியை அரைக்குப் புனைந்து
     சடையை வளர்த்துப் புரிந்து ...... புலியாடை

சதிரொடுவப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து
     தவமொரு சத்தத்தறிந்து ...... திருநீறு

கலையை மிகுத்திட்டணிந்து கரண வலைக்குள் புகுந்து
     கதறும் நிலைக்கைக்கமர்ந்த ...... எழிலோடே

கனகம்இயற்றித் திரிந்து துவளும்எனைச் சற்றறிந்து
     கவலை ஒழித்தற்கிரங்கி ...... அருள்வாயே

அலைகடலில் கொக்கரிந்தும் அருவரையைப் பொட்டெறிந்தும் 
     அமர்உலகத்தில் புகுந்தும் ...... உயர்ஆனை

அருளொடு கைப்பற்றி வந்தும் அருணகிரிப் புக்கிருந்தும் 
     அறிவுள பத்தர்க்கிரங்கும் ...... இளையோனே

மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து
     வறிது நகைத்திட்டிருந்த ...... சிவனார்தம்

மதலை புனத்தில் புகுந்து நர வடிவுற்றுத் திரிந்து
     மற மயிலைச் சுற்றிவந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 64:
தனத்த தானன தத்தன தத்தன
     தனத்த தானன தத்தன தத்தன
          தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
     மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
          செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் ...... மிகநாணார்

சிலைக்கு நேர்புருவப்பெரு நெற்றிகள் 
     எடுப்பு மார்பிகள் எச்சில்உதட்டிகள்
          சிரித்து மாநுடர் சித்தம்உருக்கிகள் ...... விழியாலே

வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள்
     மிகுத்த பாவிகள் வட்டமுகத்தினை
          மினுக்கி ஓலைகள் பித்தளையில்பணி ...... மிகநீறால்

விளக்கியே குழை இட்ட புரட்டிகள்
     தமக்கு மால்கொடு நிற்கும் மருள்தனை
          விடுத்து நான் ஒருமித்திரு பொற்கழல் ...... பணிவேனோ

தரித்த தோகண தக்கண செக்கண
     குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
          தகுத்த தீதிகு தக்குகு திக்குகு ...... எனதாளந்

தடக்கை தாளமும் இட்டியல் மத்தளம் 
     இடக்கை தாளமும் ஒக்க நடித்தொளி
          தரித்த கூளிகள் தத்திமி தித்தென ...... கணபூதம்

அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் 
     இரத்ந மாமுடியைக் கொடுகக் கழல் 
          அடக்கையாடி நிணத்தை எடுத்துண ...... அறவேதான்

அரக்கர் சேனைகள் பட்டுவிழச் செறி
     திருக்கை வேல்தனை விட்டருளிப் பொரும்
          அருள்குகா அருணைப்பதி உற்றருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 65:
தானன தான தத்த தானன தான தத்த
     தானன தான தத்த ...... தனதான

தேதென வாசமுற்ற கீதவிநோத மெச்சு
     தேனளி சூழ மொய்த்த ...... மலராலே

சீறும்அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட
     சீதநிலா எறிக்கும் அனலாலே

போதனை நீதியற்ற வேதனை வாளி தொட்ட
     போர்மத ராஜனுக்கும் அழியாதே

போகமெலாம் நிறைத்து மோகவிடாய் மிகுத்த
     பூவையை நீயணைக்க ...... வரவேணும்

மாதினை வேணி வைத்த நாதனும்ஓது பச்சை
     மாயனும் ஆதரிக்கும் ...... மயில்வீரா

வானவர் சேனை முற்றும் வாழ்அமராபதிக்குள்
     வாரணமான தத்தை ...... மணவாளா

மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து
     வீதியில் மேவி நிற்கும் ...... முருகோனே

மேருவை நீறெழுப்பி நான்முகனார் பதத்தில்
     வேல்அடையாளமிட்ட ...... பெருமாளே.

திருப்பாடல் 66:
தான தத்த தந்த தான தத்த தந்த
     தான தத்த தந்த ...... தனதான

தோதகப் பெரும் பயோதரத்தியங்கு
     தோகையர்க்கு நெஞ்சம் அழியாதே

சூலை வெப்படர்ந்த வாத பித்தமென்று
     சூழ்பிணிக் கணங்கள் அணுகாதே

பாதகச்சமன் தன் மேதியில் புகுந்து
     பாசம் விட்டெறிந்து ...... பிடியாதே

பாவலற்கிரங்கி நாவலர்க்கிசைந்த
     பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும்

வேதமிக்க விந்து நாத மெய்க்கடம்ப
     வீர பத்ர கந்த ...... முருகோனே

மேருவைப் பிளந்து சூரனைக் கடிந்து
     வேலையில் தொளைந்த ...... கதிர்வேலா

கோதை பொற்குறிஞ்சி மாது கச்சணிந்த
     கோமளக் குரும்பை ...... புணர்வோனே

கோல முற்றிலங்கு சோண வெற்புயர்ந்த
     கோபுரத்தமர்ந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 67:
தான தனதன தத்தம் ...... தனதான

பாண மலரது தைக்கும் ...... படியாலே
பாவி இளமதி கக்கும் ...... கனலாலே
நாணமழிய உரைக்கும் ...... குயிலாலே
நானும் மயலில் இளைக்கும் ...... தரமோதான்
சேணில் அரிவை அணைக்கும் ...... திருமார்பா
தேவர் மகுடம் மணக்கும் ...... கழல்வீரா
காண அருணையில் நிற்கும் ...... கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.

திருப்பாடல் 68:
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
     பாகாய் வாய்சொல் ...... கொடியார்தாம்

பாடா வாடா வேள் தாவாலே
     பாடாய் ஈடற்றிடை பீறும் 

தோலாலே காலாலே !ஊனா
     லேசூழ் பாசக் ...... குடில்மாசு

தோயா மாயா ஓயா நோயால்
     சோர்வாய் மாளக் ...... கடவேனோ

ஞாலா மேலா வேதா போதா
     நாதா சோதிக் ...... கிரியோனே

ஞானாசாரா வானாள் கோனே
     நானா வேதப் ...... பொருளோனே

வேலா பாலா சீலாகாரா
     வேளே வேடக் ...... கொடிகோவே

வீராதாரா ஆறாதாரா
     வீரா வீரப் ...... பெருமாளே.

திருப்பாடல் 69:
தனதன தனந்த தான தனதன தனந்த தான
     தனதன தனந்த தான ...... தனதான

புணர்முலை மடந்தை மாதர் வலையினில் உழன்றநேக
     பொறியுடல் இறந்து போனதளவேதுன்

புகழ் மறையறிந்து கூறும் இனிஎனதகம் பொனாவி
     பொருளென நினைந்து நாயென் இடர்தீர

மணம்உணர் மடந்தை மாரொடு ஒளிர்திரு முகங்களாறு
     மணிகிரி இடங்கொள் பாநு ...... வெயிலாசை

வரிபரவநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத
     மயில்மிசை மகிழ்ந்து நாடி ...... வரவேணும்

பணைமுலை அரம்பை மார்கள் குயில் கிளியினங்கள் போல
     பரிவு கொடுகந்து வேதமது கூறப்

பறை முரசநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர்
     படைகடல் இறந்து போக ...... விடும்வேலா

அணிசுக நரம்பு வீணை குயில் புறவினங்கள் போல
     அமளியில் களங்களோசை ...... வளர்மாது

அரிமகள் மணம்கொடேகி எனதிடர் எரிந்து போக
     அருணையின் விலங்கல் மேவு ...... பெருமாளே.

திருப்பாடல் 70:
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

புலையனான மாவீனன் வினையிலேகும் மாபாதன்
     பொறையிலாத கோபீகன் ...... முழுமூடன்

புகழிலாத தாமீகன் அறிவிலாத காபோதி
     பொறிகளோடி போய்வீழு ...... மதிசூதன்

நிலையிலாத கோமாளி கொடையிலாத ஊதாரி
     நெறியிலாத ஏமாளி ...... குலபாதன்

நினது தாளை நாள்தோறும் மனதிலாசை வீடாமல்
     நினையுமாறு நீமேவி ...... அருள்வாயே

சிலையில் வாளி தானேவி எதிரி ராவணார் தோள்கள்
     சிதையுமாறு போராடி ...... ஒருசீதை

சிறையிலாமலே கூடி புவனி மீதிலேவீறு
     திறமியான மாமாயன் ...... மருகோனே

அலைய மேரு மாசூரர் பொடியதாக வேலேவி
     அமரதாடியே தோகை ...... மயிலேறி

அதிக தேவரேசூழ உலக மீதிலேகூறும்
     அருணை மீதிலே மேவு ...... பெருமாளே.

திருப்பாடல் 71:
தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத்
     தானனத் தத்ததனத் ...... தத்த தனதான

போக கற்பக்கடவுள் பூருகத்தைப் புயலைப்
     பாரியைப் பொற்குவை உச்சிப் பொழுதில்ஈயும்

போதுடைப் புத்திரரைப் போல !ஒப்பிட்டுலகத்
     தோரை மெச்சிப் பிரியப்பட்டு மிடிபோகத்

த்யாக மெத்தத் தருதற்காசு நற்சித்திர !வித்
     தாரம்உட்பட்ட திருட்டுக் கவிகள்பாடித்

தேடியிட்டப்படு பொற் பாவையர்க்கிட்டவர் கண் 
     சேல் வலைப் பட்டடிமைப் பட்டு விடலாமோ

ஆகமப் பத்தரும் மற்றாரணச் சுத்தரும் !உற்
     றாதரிக்கைக்கருணைத் ...... துப்பு மதில்சூழும்

ஆடகச் சித்ரமணிக் கோபுரத்துத்தர !திக்
     காக வெற்றிக் கலபக் ...... கற்கி அமர்வோனே

தோகையைப் பெற்ற இடப் பாகர் ஒற்றைப் பகழித்
     தூணி முட்டச்சுவறத் ...... திக்கில் ஏழுபாரச்

சோதிவெற்பெட்டும் உதிர்த் தூளிதப் பட்டமிழச்
     சூரனைப் பட்டுருவத் ...... தொட்ட பெருமாளே.

திருப்பாடல் 72:
தான தனத்தத் தனத்த தத்தன
     தான தனத்தத் தனத்த தத்தன
          தான தனத்தத் தனத்த தத்தன ...... தனதான

மானை விடத்தைத் தடத்தினில் கயல்
     மீனை நிரப்பிக் குனித்து விட்டணை
          வாளியை வட்டச் சமுத்திரத்தினை ...... வடிவேலை

வாளை வனத்துற்பலத்தினைச் செல
     மீனை விழிக்கொப்பெனப் பிடித்தவர்
          மாய வலைப் பட்டிலைத்துடக்குழல் ...... மணநாறும்

ஊன இடத்தைச் சடக்கெனக் கொழு
     ஊறும் உபத்தக் கருத் தடத்தினை
          ஊது பிணத்தைக் குணத்ரயத்தொடு ...... தடுமாறும்

ஊசலை நித்தத் த்வமற்ற செத்தை!உ
     பாதியை ஒப்பித்துனிப் பவத்தற
          ஓகை செலுத்திப் ப்ரமிக்கும் இப்ரமை ...... தெளியாதோ

சானகி கற்புத் தனைச் சுடத்தன்!அ
     சோக வனத்தில் சிறைப்படுத்திய
          தானை அரக்கர் குலத்தர் அத்தனைவரும் மாளச்

சாலை மரத்துப் புறத்தொளித்தடல்
     வாலிஉரத்தில் சரத்தை விட்டொரு
          தாரை தனைச் சுக்ரிவற்களித்தவன் ...... மருகோனே

சோனை மிகுத்துத் திரள் புனத்தினில் 
     ஆனை மதத்துக் கிடக்கும்அற்புத
          சோணகிரிச் சுத்தர்பெற்ற கொற்றவ ...... மணிநீபத்

தோள் கொடு சக்ரப் பொருப்பினைப் !பொடி
     யாக நெருக்கிச் செருக் களத்தெதிர்
          சூரனை வெட்டித் துணித்தடக்கிய ...... பெருமாளே.

திருப்பாடல் 73:
தனத்த தத்தன தானா தனதன
     தனத்த தத்தன தானா தனதன
          தனத்த தத்தன தானா தனதன ...... தந்ததான

முகத் துலக்கிகள் ஆசாரஇனிகள்
     விலைச் சிறுக்கிகள் நேரா அசடிகள்
          முழுச் சமர்த்திகள் காமா விரகிகள் ...... முந்துசூது

மொழிப் பரத்தைகள் காசாசையில் முலை
     பலர்க்கும் விற்பவர் நானா அநுபவம் 
          முயற்று பொட்டிகள் மோகாவலம் உறுகின்ற மூடர்

செகத்தில் எத்திகள் சார்வாய் மயக்கிகள்
     திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள்
          சிரித்துருக்கிகள் ஆகா எனநகை ...... சிந்தை மாயத்

திரள் பொறிச்சிகள் மாபாவிகள் !அப
     கடத்த சட்டைகள் மூதேவிகளொடு
          திளைத்தல் அற்றிரு சீர்பாதமும்இனி ...... என்றுசேர்வேன்

தொகுத்தொகுத்தொகு தோதோ தொகுதொகு
     செகுச்செகுச்செகு சேசே செககண
          தொகுத்தொகுத்தொகு தோதோ தொகுதொகு ...... தொந்ததீதோ

துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு
     திகுத்தி குத்திகுதீதோ எனவொரு
          துவக்க நிர்த்தனமாடா உறைபவர் ...... தொண்டர்பேணும்

அகத்திஅப்பனும் மால்வேதனும்அறம்
     வளர்த்த கற்பக மாஞாலியும் !மகி
          ழ்வுற்ற நித்தபிரானே அருணையில் ...... நின்றகோவே

அமர்க் களத்தொரு சூரேசனைவிழ
     முறித்துழக்கிய வானோர் குடிபுக
          அமர்த்தி விட்ட சுவாமீ அடியவர் ...... தம்பிரானே.

திருப்பாடல் 74:
தான தத்ததன தான தத்ததன
     தான தத்ததன தான தத்ததன
          தான தத்ததன தான தத்ததன ...... தனதான

மேகமொத்த குழலார் சிலைப்புருவ
     வாளியொத்த விழியார் முகக்கமல
          மீது பொட்டிடழகார் களத்தில்அணி ...... வடமாட

மேருஒத்த முலையார் பளப்பளென
     மார்பு துத்தி புயவார் வளைக்கடகம்
          வீறிடத் துவளும் நூலொடொத்த இடையுடைமாதர்

தோகை பக்ஷி நடையார் பதத்திலிடு
     நூபுரக் குரல்கள் பாடகத் துகில்கள்
          சோர நற்தெருவுடே நடித்துமுலை ...... விலைகூறிச்

சூதகச் சரசமோடெ எத்தி!வரு
     வோரை நத்தி விழியால் மருட்டிமயல்
          தூள் மருத்திடுயிரே பறிப்பவர்கள் உறவாமோ

சேகணச் செகண தோதிமித் திகுட
     டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
          தீத கத்திமித தோஉடுக்கைமணி ...... முரசோதை

தேசம்உட்கஅர ஆயிரச் சிரமும் 
     மூளி பட்டுமக மேரு உக்கவுணர்
          தீவு கெட்டு முறையோ எனக்கதற ...... விடும்வேலா

ஆகமத்தி பல காரணத்தி எனை
     ஈணசத்தி அரி ஆசனத்தி சிவன் 
          ஆகமுற்ற சிவகாமி பத்தினியின் ...... முருகோனே

ஆரணற்கு மறை தேடியிட்ட !திரு
     மால் மகள்சிறுமி மோக சித்ரவளி
          ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ் ...... பெருமாளே.

திருப்பாடல் 75:
தனதன தந்ததத்த தனதன தந்ததத்த
     தனதன தந்ததத்த ...... தனதான

மொழிய நிறம் கறுத்து மகரஇனம் கலக்கி
     முடிய வளைந்தரற்று ...... கடலாலும்

முதிரவிடம் பரப்பி வடவை முகந்தழற்குள்
     முழுகி எழுந்திருக்கும் ...... நிலவாலும்

மழைஅளகம் தரித்த கொடியிடை வஞ்சியுற்ற
     மயல் தணியும் படிக்கு ...... நினைவாயே

மரகத துங்க வெற்றி விகட நடம்கொள் சித்ர
     மயிலினில் வந்துமுத்தி ...... தரவேணும்

அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தின் 
     அமுத தனம் படைத்த ...... திருமார்பா

அமரர் புரம் தனக்கும் அழகிய செந்திலுக்கும் 
     அருணை வளம்பதிக்கும் ...... இறையோனே

எழுபுவனம் பிழைக்க அசுரர் சிரம்தெறிக்க
     எழு சயிலம் தொளைத்த ...... சுடர்வேலா

இரவிகள் அந்தரத்தர் அரியர பங்கயத்தர் 
     இவர்கள் பயம்தவிர்த்த ...... பெருமாளே.

திருப்பாடல் 76:
தனதான தத்ததன தனதான தத்ததன
     தனதான தத்ததன ...... தனதான

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
     வறல்சூலை குட்டமொடு ...... குளிர்தாகம்

மலி நீரிழிச்சல் பெரு வயிறீளை கக்குகளை
     வரு நீரடைப்பினுடன் ...... வெகுகோடி

சிலை நோயடைத்த உடல் புவி மீதெடுத்துழல் கை
     தெளியா எனக்கும் இனி ...... முடியாதே

சிவமார் திருப்புகழை எனுநாவினில் புகழ
     சிவஞான சித்தி தனை ...... அருள்வாயே

தொலையாத பத்தியுள திருமால் களிக்கஒரு
     சுடர்வீசு சக்ரமதை ...... அருள்ஞான

துவர்வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன்மிகு
     சுகவாரி சித்தனருள் ...... முருகோனே

அலைசூரன் வெற்பும்அரி முகன் !ஆனைவத்திரனொ
     டசுரார் இறக்கவிடும்  ...... அழல்வேலா

அமுதாசனத்தி குற மடவாள் கரிப்பெணொடும்
     அருணாசலத்திலுறை ...... பெருமாளே.

திருப்பாடல் 77:
தனதன தானாதன தனதன தானாதன
     தனதன தானாதன ...... தனதான

விடுமத வேள் வாளியின் விசைபெறும் ஆலாகல
     விழிகொடு வாபோஎன ......உரையாடும்

விரகுடன் நூறாயிர மனமுடை மாபாவிகள்
     ம்ருகமத கோலாகல ...... முலைதோய

அடையவும் ஆசா பரவசமுறு கோமாளியை
     அவனியும் ஆகாசமும் ...... வசைபேசும்

அசட அநாசாரனை அவலனை ஆபாசனை
     அடியவரோடாள்வதும்  ...... ஒருநாளே

வடகுல கோபாலர்தம் ஒருபதினாறாயிரம்
     வனிதையர் தோள்தோய்தரு ...... அபிராம

மரகத நாராயணன் மருமக சோணாசல
     மகிப சதா காலமும் இளையோனே

உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற
     உலகுய வாரார்கலி ...... வறிதாக

உயரிய மாநாகமும் நிருதரும் நீறாய்விழ
     ஒருதனி வேலேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 78:
தனன தானன தனன தானனா
     தனன தானனம் ...... தனதான

விதியதாகவெ பருவ மாதரார்
     விரகிலே மனம் ...... தடுமாறி

விவரமானதொர் அறிவு மாறியே
     வினையிலே அலைந்திடு மூடன்

முதிய மாதமிழ் இசையதாகவே
     மொழி செய்தே நினைந்திடுமாறு

முறைமையாக நினடிகள் மேவவே
     முனிவு தீர வந்தருள்வாயே

சதியதாகிய அசுரர் மாமுடீ
     தரணி மீது குஞ்சமராடிச்

சகல லோகமும் வலமதாகியே
     தழையவே வரும்  ...... குமரேசா

அதிக வானவர் கவரி வீசவே
     அரிய கோபுரம் ...... தனில்மேவி

அருணை மீதிலே மயிலிலேறியே
     அழகதாய் வரும் ...... பெருமாளே.

திருப்பாடல் 79:
தந்தத் தனதன தந்தத் தனதன
  தந்தத் தனதன தந்தத் தனதன
    தனத்த தனதன தனத்த தனதன
      தனத்த தனதன தனத்த தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
  தந்தத் தனதன தந்தத் தனதன
    தனத்த தனதன தனத்த தனதன
      தனத்த தனதன தனத்த தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
  தந்தத் தனதன தந்தத் தனதன
    தனத்த தனதன தனத்த தனதன
      தனத்த தனதன தனத்த தனதன ...... தனதான

விந்துப் புளகித இன்புற்றுருகிட
  சிந்திக் கருவினில் உண்பச் சிறுதுளி
    விரித்த கமலமெல் தரித்துள்ஒருசுழி
      இரத்த குளிகையொடுதித்து வளர்மதி
விண்டுற்றருள்பதி கண்டுற்றருள்கொடு
  மிண்டிச் செயலில்நிரம்பித் துருவொடு
    மெழுக்கில் உருவென வலித்து எழுமதி
      கழித்து வயிர்குடம் உகுப்ப ஒருபதில்
விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி
  வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு
    விழுப்பொடுடல் தலை அழுக்கு மலமொடு
      கவிழ்த்து விழுதழுதுகுப்ப அனைவரும்  ...... அருள்கூர

மென்பற்றுருகி முகந்திட்டனைமுலை
  உண்டித் தரகொடு உண்கிச் சொலிவளர்
    வளத்தொடளை மல சலத்தொடுழைகிடை
      துடித்து தவழ்நடை வளர்த்திஎனதகு
வெண்டைப் பரிபுரம் தண்டைச் !சரவட
  மும் கட்டியல்முடி பண்பித்தியல் கொடு
    விதித்த முறைபடி படித்து மயல்கொள
      தெருக்களினில்வரு வியப்ப இளமுலை
விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி
  துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி
    விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென
      நடித்தவர்கள் மயல் பிடித்திடவர்வரு ...... வழியேபோய்ச்

சந்தித் துறவொடு பஞ்சிட்டணை மிசை
  கொஞ்சிப் பலபல விஞ்சைச் !சரசமொ
    டணைத்து மலரிதழ் கடித்து இருகரம் 
      அடர்த்த குவிமுலை அழுத்தி உரமிடர்
சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர்
  சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட
    சரத்தொடிகள் வெயில் எறிப்ப மதிநுதல்
      வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழுமத
சம்பத்திது செயல் இன்பத்திருள் கொடு
  வம்பிற் பொருள்கள் வழங்கிற்றிதுபினை
    சலித்து வெகுதுயர் இளைப்பொடுடல்பிணி
      பிடித்திடனைவரும் நகைப்ப கருமயிர் ...... நரைமேவித்

தன்கைத் தடிகொடு குந்திக் கவியென
  உந்திக்கசனம் மறந்திட்டுள மிக
    சலித்து உடல்சல மிகுத்து மதிசெவி
      விழிப்பும் மறைபட கிடத்தி மனையவள்
சம்பத்துறை முறை அண்டைக் கொளுகையில்
  சண்டக் கருநமன் அண்டிக் கொளும் !கயி
    றெடுத்து விசைகொடு பிடித்து உயிர்தனை
      பதைப்ப தனிவழி அடித்து கொடுசெல
சந்தித்தவர்அவர் பங்குக்கழுது !இ
  ரங்கப் பிணமெடும் என்றிட்டறை பறை
    தடிப்ப சுடலையில் இறக்கி விறகொடு
      கொளுத்தி ஒருபிடி பொடிக்கும் இலையெனும் ...... உடலாமோ

திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
  திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
    திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
      திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
என்பத் துடிகள் தவுண்டைக் கிடுபிடி
  பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை
    திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு
      டிடிக்கு நிகரென உடுக்கை முரசொடு
செம்பொற் குடமுழவும் தப்புடன் மணி
  பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை
    செழித்த மறைசிலர் துதிப்ப முநிவர்கள்
      களித்து வகைமனி முழக்க அசுரர்கள் ...... களமீதே

சிந்திக் குருதிகள் அண்டச் சுவரகம்
  ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ
    சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள்
      சிரத்தொடிரதமும் மிதப்ப நிணமொடு
செம்புள் கழுகுகள் உண்பத் தலைகள்!த
  தும்பக் கருடநடம் கொட்டிட கொடி
    மறைப்ப நரிகணம் மிகுப்ப குறளிகள்
      நடிக்க இருள்மலை கொளுத்தி அலைகடல்
செம்பொற் பவளமும் அடங்கிக் கமர்விட
  வெந்திட்டிக மலை விண்டுத் துகள்பட
    சிமக்கும் உரகனும் முழக்கி விட படம்
      அடைத்த சதமுடி நடுக்கி அலைபட ...... விடும்வேலா

தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி
  பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி
    சுழற்றி நடமிடு நிருத்தர் அயன்முடி
      கரத்தர் அரிகரி உரித்த கடவுள்மெய்
தொண்டர்க்கருள்பவர் வெந்தத் துகளணி
  கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர்
    தொடுத்த மதனுரு பொடித்த விழியினர்
      மிகுத்த புரமதை எரித்த நகையினர்
தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர்
  தொந்திக் கடவுளை தந்திட்டவர்இட
    சுகத்தி மழுவுழை கரத்தி மரகத
      நிறத்தி முயலக பதத்தி அருளிய ...... முருகோனே

துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடை
  ரம்பைக்கரசி எனும்பல் தருமகள்
    சுகிப்ப மணவறை களிக்க அணையறு
      முகத்தொடுறமயல் செழித்த திருபுய
செம்பொற் கர கமலம் பத்திரு தலம்
  அம்பொற் சசியெழ சந்தப் பலபடை
    செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை
      சிறப்பொடொரு குடில் மருத்து வனமகள்
தொந்தப் புணர்செயல் கண்டுற்றடியென்!இ
  டைஞ்சற் பொடிபட முன்புற்றருள் அயில்
    தொடுத்தும் இளநகை பரப்பி மயில்மிசை
      நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 80:
தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தனதான

வீறு புழுகான பனி நீர்கள்மல தோயல்விடு
     மேருகிரியான கொடு ...... தனபார

மீது புரள்ஆபரண சோதி விதமான நகை
     மேகமனு காடுகடல் ...... இருள்மேவி

நாறுமலர் வாசமயிர் நூலிடையதே துவள
     நாணம் அழிவார்களுடன் உறவாடி

நாடி அதுவே கதி எனாசுழலும் மோடனைநின்
     ஞான சிவமான பதம் அருள்வாயே

கூறும்அடியார்கள் வினை நீறுபடவேஅரிய
     கோல மயிலான பதம் அருள்வோனே

கூடஅரனோடு நடமாடரிய காளியருள்
     கூரு சிவகாமி உமை ...... அருள்பாலா

ஆறுமுகமான நதி பால குறமாது தனம் 
     ஆர விளையாடி மணம் ...... அருள்வோனே

ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய
    ஆதி அருணாபுரியில் ...... பெருமாளே.

திருப்பாடல் 81:
ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே
    ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே

கூறும் அடியார்கள்வினை தீர்க்கும் முகம் ஒன்றே
    குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
    வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே

ஆறுமுகமான பொருள் நீஅருளல் வேண்டும்
    ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே.

(2020 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


No comments:

Post a Comment