(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: நடு நாடு
மாவட்டம்: திருவண்ணாமலை
திருக்கோயில்: அருள்மிகு அன்னை பெரியநாயகி சமேத ஸ்ரீகனககிரீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசியிலிருந்து போளூர் செல்லும் மார்க்கத்தில், வந்தவாசியிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கனகமலை (இப்பகுதி 'தேவிகாபுரம்' என்றே பிரசித்தமாய் அறியப் பெற்று வருகின்றது). மிக மிகப் பிரமாண்டமான மலையடிவாரக் கற்கோயிலில் பெரிய நாயகி அம்மையும், மலையுச்சியிலுள்ள கற்கோயிலில் கனககிரீஸ்வரப் பரம்பொருளும் எழுந்தருளியுள்ள அற்புதத் தலம்.
அடிவாரக் கோயிலில் இருவேறு திருவடிவங்களில் வேலாயுத தெய்வம் எழுந்தருளி இருக்கின்றான், உட்பிரகாரத்தில் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க; மயில் மீதமர்ந்த திருக்கோலத்திலும், கொடி மரத்திற்கருகில் ஆறு திருமுகங்களோடு கூடிய மயில் மீதமர்ந்த திருக்கோலத்திலும் காட்சி தந்தருள் புரிகின்றான்.
மலைக்கோயிலில் காலை வேளையில், 2 மணி நேரங்களுக்கு மட்டுமே (8:00 -10:00 மணி வரையில்) நடை திறக்கப் படுகின்றது. மாலையில் தரிசனம் கிடையாது. அடிவாரக் கோயிலுக்கும் மலைக் கோயிலுக்கும் அர்ச்சகர் ஒருவரே, ஆதலின் காலையில் சுமார் 7.30 அளவில் அடிவாரக் கோயிலைத் தரிசித்துப் பின்னர் அர்ச்சக்கரிடம் மலைக்கோயில் நடை திறப்புக்கான நேரத்தை உறுதிப் படுத்திக் கொள்வது அவசியமாகின்றது.
320 படிகளேறிச் சென்று மலைக்கோயிலை அடையலாம், விசாலமான கற்கோயில். கருவறையில் இரு சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசிக்கலாம், முன்னே சற்றே பெரிய திருமேனியோடு எழுந்தருளி இருப்பவர் பின்னாள் பிரதிஷ்டையான 'காசி விஸ்வநாதர்'. இம்மூர்த்திக்குப் பின்புறம் சிறிய திருமேனியராய் ஆதி மூலவரான கனககிரீஸ்வரப் பரம்பொருள் யுகங்களைக் கடந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். இப்பெருமானுக்கு அனைத்து நாட்களிலும் வெந்நீர் அபிஷேகம் நடந்தேறி வருகின்றது. இதன் அற்புத மருத்துவ குணத்தினை அர்ச்சகர் நெடுநேரம் பொறுமையாய் விவரித்துக் கூறுகின்றார். இங்கு திருநீறோடு வெந்நீர் தீர்த்தத்தையும் பிரசாதமாகத் தருகின்றனர்.
மலைக்கோயிலில் திருப்புகழ் தெய்வம் ஆறுதிமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாய் மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் சிறிய திருமேனியனாய் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கு ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளிச் செய்துள்ளார்,
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதனன தனன தந்தத்
தனதனன தனன தந்தத்
தனதனன தனன தந்தத் ...... தனதான
அரிவையர்கள் தொடரும் !இன்பத்
துலகுநெறி மிக !மருண்டிட்
டசடனென மனது நொந்திட்டயராமல்
அநுதினமும் உவகை மிஞ்சிச்
சுகநெறியை விழைவு !கொண்டிட்
டவநெறியின் விழையும் ஒன்றைத் ...... தவிர்வேனோ
பரிதிமதி நிறைய !நின்றஃ
தென ஓளிரும் உனது துங்கப்
படிவ முகம் அவைகள் கண்டுற்றகமேவும்
படர்கள் முழுவதும் அகன்றுள்
பரிவினொடு துதி புகன்றெற்
பதயுகள மிசை வணங்கற்கருள்வாயே
செருவிலகும் அசுரர் மங்கக்
குலகிரிகள் நடுநடுங்கச்
சிலுசிலென வலைகுலுங்கத் ...... திடமான
செயமுதவு மலர் பொருங்கைத்
தலமிலகும் அயில்கொளும் !சத்
தியை விடுதல் புரியுமுன்பிற் குழகோனே
கருணைபொழி கிருபை முந்தப்
பரிவினொடு கவுரி கொஞ்சக்
கலகலென வரு கடம்பத் ...... திருமார்பா
கரிமுகவர் தமையன் !என்றுற்
றிடும்இளைய குமர பண்பில்
கநககிரி இலகு கந்தப் ...... பெருமாளே
(2021 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment