(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: நடு நாடு
மாவட்டம்: கடலூர்
திருக்கோயில்: அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
கடலூர் மாவட்டத்தில், திருப்பாதிரிப்புலியூரிலிருந்து சுமார் 8 கி.மீ பயணத் தொலைவிலும், வைணவ திவ்ய தேசத் தலமான திருவேந்திபுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும், திருவதிகையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது திருமாணிக்குழி. பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு, வாமன அவதாரத்தில், அந்தண பிரம்மச்சாரியாக தோன்றி மகாபலியிடம் மூவடி மண் தானம் கேட்டு அவன் பூவுலக வாழ்வை முற்றுவித்த பழி தீரப் பூசித்த அற்புதத் தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்று தேவாரத் தலமாகவும் திகழ்வது.
*
இத்தல மூர்த்தி, ஆலய வழியே சென்ற வணிகனொருவனைக் கள்ளர்களிடமிருந்துக் காப்பாற்றி உதவி புரிந்த காரணத்தால் 'உதவி மாணிக்குழி' என்றும் இத்தலம் அறியப் பெற்று வந்துள்ளது, சம்பந்த மூர்த்தியும் தம்முடைய தேவாரத் திருப்பாடலில் 'உதவி மாணிக்குழி' என்றே போற்றுகின்றார்.
கருவறையில், முக்கண் முதல்வர் மாணிக்கவரதர்; உதவி நாயகர் எனும் திருநாமங்களில், சிறிய திருமேனியராய், சிறு குழி ஒன்றினுள் எழுந்தருளி இருக்கின்றார், சுவாமி இறைவியுடன் ஏகாந்த நிலையில் எழுந்தருளி இருப்பதால் எந்நேரமும் திரையிடப் பெற்றிருக்கின்றது, ஏகாதச ருத்ரர்களில் ஒருவரான பீம ருத்திரர் திரைச்சீலையாக எழுந்தருளிக் காவல் புரிகின்றார், இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்னரே சுவாமி தரிசனம் செய்தல் வேண்டும், தீபாராதனை சமயத்தில் சில வினாடிகளே திரையை விலக்கி தரிசனம் செய்விக்கின்றனர், காண்பதற்கரிய திருக்கோலம், பரம பாக்கியம். அம்பிகை அம்புஜாக்ஷி எனும் திருநாமத்தில் தனிக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்றாள்.
மூல மூர்த்தியைத் தரிசித்துப் பணிந்த பின்னர் நம் கண்கள் திருப்புகழ் தெய்வமான கந்தக் கடவுளைக் காதலுடன் தேடுகின்றது, வெளிப்பிரகாரத்தினை வலம் வருகையில், மூலக் கருவறையின் பின்புறம், வலது புறத்தில், முருகப் பெருமான் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களுடன், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த ஆச்சரியத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான், அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கென அருளியுள்ள 'மதிக்கு நேரெனும்' எனத் துவங்கும் திருப்புகழில் 'மாணிகொள் குழிக்குள் மேவிய வானோர்களே தொழு ...... தம்பிரானே' என்று போற்றுகின்றார். தரிசித்துப் பயன்பெற வேண்டிய அற்புதத் தலம்.
(Google Maps: Sri Vamanapurieswarar Temple, Thirumanikuzhi Road, Thirumanikuzhi, Tamil Nadu 607401, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனத்த தானன தானான தானன
தனத்த தானன தானான தானன
தனத்த தானன தானான தானன ...... தந்ததான
மதிக்கு நேரெனும் வாள்மூகம் வான்மக
நதிக்கு மேல்வரும் சேலேனும் நேர்விழி
மணத்த வார்குழல் மா மாதரார்இரு ...... கொங்கைமூழ்கி
மதித்த பூதரம் ஆமாம் மனோலயர்
செருக்கி மேல்விழ நாள்தோறுமே மிக
வடித்த தேன்மொழி வாயூறலேநுகர் ...... பண்டநாயேன்
பதித்த நூபுர சீர்பாத மாமலர்
படைக்குள் மேவிய சீராஓடேகலை
பணைத்த தோள்களொடீராறு தோடுகள் ...... தங்குகாதும்
பணக் கலாபமும் வேலொடு சேவலும்
வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
படைத்த வாகையும் நாடாது பாழில் மயங்கலாமோ
கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
நொறுக்கி மாஉயர் தேரோடுமே கரி
கலக்கி ஊர்பதி தீமூளவேவிடும் ...... வஞ்சவேலா
களித்த பேய்கணம் மா காளி கூளிகள்
திரள் பிரேதம் மெலேமேவி மூளைகள்
கடித்த பூதமொடே பாடிஆடுதல் ...... கண்டவீரா
குதித்து வானரம் மேலேறு தாறுகள்
குலைத்து நீள்கமுகூடாடி வாழைகொள்
குலைக்கு மேல்விழவேரேறு போகமும் ...... வஞ்சிதோயும்
குளத்தில்ஊறிய தேனூறல் மாதுகள்
குடித்துலாவியெ சேலோடு மாணிகொள்
குழிக்குள் மேவிய வானோர்களேதொழு ...... தம்பிரானே.
(2020 அக்டோபர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment