(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: நடு நாடு
மாவட்டம்: கடலூர்
திருக்கோயில்: அருள்மிகு பாடலேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
கடலூர் மாவட்டத்தில், திருவதிகையிலிருந்து சுமார் 23 கி.மீ பயணத் தொலைவில் அமைந்துள்ள அற்புதத் தலம். பாடல் வளநகர்; பாடலிபுரம் என்றும் குறிக்கப் பெறும் இப்பதியில் அகத்தியர்; வியாக்ரபாதர்; உபமன்யு முனிவர்; அக்கினி; கங்கை ஆகியோர் பூசித்துப் பேறு பெற்றுள்ளனர், நாவுக்கரசு சுவாமிகளைக் கொடும் சமணர்கள் கல்லில் பிணைத்துக் கடலில் தள்ளும் சமயத்தில்; சுவாமிகள் 'சொற்றுணை வேதியன்' எனும் நமசிவாயப் பதிகம் பாடித் துதிக்க, திருவருளால் தெப்பமாக மாறும் அக்கல் சுவாமிகளைப் பாதிரிப்புலியூர் கரையில் சேர்ப்பிக்க, சுவாமிகள் ஆலயத்துள் சென்று 'ஈன்றாளுமாய்' எனும் திருப்பதிகம் பாடிப் பரவிய தலம். ஞானசம்பந்த மூர்த்தியும் தரிசித்துப் பதிகம் பாடியுள்ளார்.
பிரமாண்டமான திருக்கோயில் வளாகம், ஆதிப்பரம்பொருளான சிவமூர்த்தி இத்தலத்தில் பாடலேஸ்வரர்; தோன்றாத் துணை நாதர் எனும் திருநாமங்களில், நெடிதுயர்ந்த திருக்கோலத்தில் அதி ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார், அப்பர் அடிகள் தனிச்சன்னிதியில் கூப்பிய கரங்களுடன் எழுந்தருளி இருக்கின்றார். அம்பிகை அரிய பெரிய தவம் புரிந்து பாடலேஸ்வரின் அருள் பெற்ற தலம், பிரகாரச் சுற்றில் அருந்தவ நாயகி தவம் புரிந்த பீடத்தினைத் தனிச்சன்னிதியில் தரிசிக்கலாம். அம்பிகை தனிக்கோயிலில் பெரிய நாயகி எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றாள்.
பிரகாரச் சுற்றில், மூலக் கருவறையின் பின் புறம், வலது புறத்தில் திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு; இரு தேவியரும் உடனிருக்க, திருமுகத்தில் புன்முறுவலோடு மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இம்மூர்த்திக்கு 'நிணமொடு குருதி' என்று துவங்கும் திருப்புகழ் பாடலை அருளியுள்ளார். காதலோடு தரிசித்துப் போற்ற வேண்டிய திருத்தலம்,
(Google Maps: Padaleeswarar Temple Ther, Car St, Muthaiya Nagar, Thirupapuliyur, Cuddalore, Tamil Nadu 607002, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன ...... தனதான
நிணமொடு குருதி நரம்பு மாறிய
தசைகுடல் மிடையும் எலும்பு தோலிவை
நிரைநிரை செறியும் உடம்பு நோய்படு ...... முதுகாயம்
நிலைநிலை உருவ மலங்களாவது
நவதொளையுடைய குரம்பையாம் இதில்
நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவம் ...... உயஓரும்
உணர்விலி செபமுதலொன்று தானிலி
நிறையிலி முறையிலி அன்பு தானிலி
உயர்விலி எனினும் எனெஞ்சுதான் நினைவழியாமுன்
ஒருதிரு மரகத துங்க மாமிசை
அறுமுகம்ஒளிவிட வந்து நான்மறை
உபநிடம்அதனை விளங்க நீயருள் ...... புரிவாயே
புணரியில் விரவிஎழுந்த ஞாயிறு
விலகிய புரிசை இலங்கை வாழ்பதி
பொலமணி மகுட சிரங்கள் தாமொருபதுமாறிப்
புவியிடைஉருள முனிந்து கூர்கணை
உறுசிலை வளைய வலிந்து நாடிய
புயலதி விறலரி விண்டு மால்திரு ...... மருகோனே
அணிதரு கயிலை நடுங்க ஓரெழு
குலகிரியடைய இடிந்து தூளெழ
அலையெறி உததி குழம்ப வேல்விடு ...... முருகோனே
அமலை முனரிய தவஞ்செய் பாடல
வளநகர் மருவி அமர்ந்த தேசிக
அறுமுக குறமகள்அன்ப மாதவர் ...... பெருமாளே.
(2020 அக்டோபர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment