(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: நடு நாடு
மாவட்டம்: திருவண்ணாமலை
திருக்கோயில்: அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில் / சோமீசர் திருக்கோயில்
தல வகை: ரேணுகாம்பாள் ஆலயமும், சோமீசர் சிவாலயமும் ஒரே ஆலய வளாகத்தில் அமையப் பெற்றுள்ளது.
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
வேலூரிலிருந்து சுமார் 34 கி.மீ தூரத்திலும், ஆரணியிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும், திருவண்ணாமலையிலிருந்து சுமார் 57 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது 'படவேடு ரேணுகாம்பாள் ஆலயம்' என்று தற்பொழுது அறியப் பெற்று வரும் திருத்தலம்.
பன்னெடுங்காலமாய் 'படைவிடுதி சோமீசர் கோயில்' எனும் திருப்பெயரில் பிரசித்தமாக போற்றப் பெற்று வந்துள்ள இச்சிவாலயம் சுமார் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்திற்குள் 'படவேடு ரேணுகாம்பாள் ஆலயமாக' மாற்றப் பட்டுள்ளது வருத்தத்திற்குரிய செய்தி. மூலக் கருவறையிலிருந்த சோமீசர் லிங்கத் திருமேனியையும், அப்பொழுதிருந்த அம்பிகை திருமேனியையும் முழுவதுமாய் அகற்றி, அருகாமையிலுள்ள சிற்றூரின் நிலப்பரப்பொன்றில் வைத்து விடுகின்றனர். பின்னர் இறைவரின் மூலக்கருவறையில் ரேணுகா தேவியின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்கின்றனர்.
இந்த ரேணுகா தேவியார் பரசுராமரின் தந்தையான ஜமதக்கினி முனிவரின் திருத்துணைவியார் ஆவார். ரிஷி பத்தினியான இந்த அம்மையார் உயிர்குலத் தோன்றலே அன்றி சிவபரம்பொருளின் இடபாகத்துறையும் பராசக்தி அல்லள். எனினும் 'அம்பாள்' எனும் பொதுச் சொல்லாடலால் இந்த தேவியைப் பொதுவில் அம்பிகையென்றே கருதி வழிபட்டு வருகின்றனர்.
பின்னர் திருப்பணி சமயத்தில் பிரசன்னம் பார்க்கையில், 'இவ்வாலயத்தில் சிவலிங்கத் திருமேனியொன்று இருந்திருக்க வேண்டுமே, அதனை மீண்டும் பிரதிஷ்டை செய்வித்த பின்னரே திருப்பணி தொடர்தல் வேண்டும்' எனும் குறிப்பு கிடைக்கின்றது. இதன் தொடர்ச்சியாய், ஆலய வளாகத்திற்குள்ளேயே மற்றுமொரு சிவாலயத்தினைத் தனியே அமைத்து, அதன் கருவறையில்; முன்னர் எழுந்தருளியிருந்த சோமீசர் லிங்கத் திருமேனியை மீண்டும் கொணர்ந்து பிரதிஷ்டை செய்கின்றனர். எனினும் அம்பிகை திருமேனி புதியது என்பதாக அறிகின்றோம். இச்சிவாலய அமைப்பிற்கென்று தனியேயொரு விநாயகர்; முருகன் திருச்சன்னிதிகளையும் அமைக்கின்றனர்.
எனினும் ரேணுகா தேவி சன்னிதிக்கு பின்புறம் எழுந்தருளியுள்ள ஆறுமுகக் கடவுளே புராதனத் திருமேனியர், ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்திலுள்ள இம்மூர்த்தியையே அருணகிரிப் பெருமான் தரிசித்துத் திருப்புகழில் போற்றிப் பரவியுள்ளார். இவரின் திருநாமம் சண்முகர்.
வெகுகாலம் வரையிலும் அறியப் படாதிருந்த இந்த திருப்புகழ் தலத்தின் அமைவிடத்தினைத் தன்னுடைய அரிய பெரிய பிரயத்தினத்தினால் வெளிக்கொணர்ந்த பெருமையாவும் 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியர் மற்றும் திருப்புகழ் தல ஆய்வாளருமான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களையே சாரும்.
திரு.வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் பின்வரும் முறையான தரவுகளைக் கொண்டு இவ்வாலயமே திருப்புகழ் பெற்றுள்ள சோமீசர் கோயில் என்பதை நிறுவியுள்ளார்,
-
(1) 20க்கும் மேற்பட்ட இத்திருக்கோயிலின் கல்வெட்டுகளில் 'மருதரசர் படைவிடுதி' எனும் தெளிவான குறிப்புள்ளது. அருணகிரியாரும் இத்தலத் திருப்புகழில் 'மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக மழவிடையின் மிசையில்வரு சோமீசர் கோயில்தனில்' என்று குறித்துள்ளார்.
(2) 1950களில் இவ்வாலயம் அறநிலையத் துறைக்கு மாற்றப்படும் சமயத்திலிருந்த பதிவேடுகள் அனைத்திலும் 'சிவாலயம்' என்றே குறிக்கப் பெற்றுள்ளது.
(3) ஆலய மதில்களின் அமைப்பு, மூலக் கருவறைக்கு முன்புள்ள நந்தி திருமேனி மற்றும் பின்புறமுள்ள விநாயகர்; முருகன் சன்னிதிகளின் அமைப்பு ஆகியவை ஐயத்திற்கு இடமின்றிச் சிவாலய அமைப்பையே சுட்டுகின்றது.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனனதன தனனதன தானான தானதன
தனனதன தனனதன தானான தானதன
தனனதன தனனதன தானான தானதன ...... தனதான
கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு
களபமுலை புளகமெழ நேரான வேல்விழிகள்
கயல்பொருது செயலதென நீள்பூசலாடநல ...... கனிவாயின்
கமழ்குமுத அதரஇதழ் தேனூறல் பாயமிகு
கடலமுதம் உதவஇரு தோள்மாலை தாழவளை
கலகலென மொழிபதற மாமோக காதலது ...... !கரைகாணா
தெரிஅணுகு மெழுகுபத மாய்மேவி மேவியிணை
இருவருடல் ஒருவரென நாணாது பாயல்மிசை
இளமகளிர் கலவிதனிலே மூழ்கி ஆழுகினும் ......இமையாதே
இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
இளமையும் உனழகுபுனை ஈராறு தோள்நிரையும்
இருபதமும் அறுமுகமும் யானோத ஞானமதை ...... அருள்வாயே
உரியதவ நெறியில்நம நாராயணாய என
ஒருமதலை மொழியளவில் ஓராத கோபமுடன்
உனதிறைவன் எதனிலுளன் ஓதாயடா எனுமுன் உறுதூணில்
உரமுடைய அரிவடிவதாய் மோதி வீழவிரல்
உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையும் ...... உயர்வாக
வரியளிகள் இசைமுரல வாகான தோகையிள
மயிலிடையில் நடனமிட ஆகாசம் ஊடுருவ
வளர்கமுகின் விரிகுலைகள் பூணாரமாகியிட ...... மதில்சூழும்
மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக
மழவிடையின் மிசையில்வரு சோமீசர் கோயில்தனில்
மகிழ்வுபெற உறைமுருகனே பேணு வானவர்கள் ...... பெருமாளே
2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment