Thursday, September 27, 2018

திருவதிகை

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: கடலூர்

திருக்கோயில்: அருள்மிகு பெரிய நாயகி அன்னை சமேத ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது, அஷ்ட வீரட்டான தலங்களுள் திரிபுர சம்ஹாரம் நடந்தேறிய தலம், நாவுக்கரசு சுவாமிகள் சூலை நீங்கித் திருவருள் பெற்றுச் சைவ சமயம் சார்ந்த தலம், திருநாவுக்கரசரின் தமக்கையாரான திலகவதியார் பலகாலும் திருத்தொண்டு புரிந்து வந்த தலம். மிக மிக மிகப் பிரமாண்டமான திருக்கோயில் வளாகம், விண்ணுயர் ராஜகோபுரங்கள் மற்றும் ஏராளமான திருச்சன்னிதிகளோடு அமையப்பெற்றுள்ள அற்புதக் கற்கோயில்.

திலகவதியார் தனிச்சன்னிதியில் எழுந்தருளி இருக்கின்றார், அப்பர் அடிகள் மூலத் திருமேனி; உற்சவத் திருமேனி என்று இருவேறு தனிச்சன்னிதிகளில் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார், ஆலய வளாகத்தின் ஒவ்வொரு அணுவிலும் அற்புத அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள், மூலக் கருவறையில் நெடிதுயர்ந்த பிரமாண்டமான திருமேனியில் வீரட்டானேஸ்வரர் அதி அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார், கண்கொள்ளாத் திருக்காட்சி, சிவலிங்கத் திருமேனியின் பின்னால் அம்மையும் அப்பனுமாய் பிரமாண்டமான உருவத் திருமேனியில் திருக்காட்சி தருகின்றனர், பிறவிப் பயனை நல்கும் அற்புதத் திருக்கோலம்.

அம்பிகை தனிக்கோயிலில், நெடிதுயர்ந்த திருமேனியில் பிரத்யட்சமாய் எழுந்தருளி இருக்கின்றாள், இவளை தரிசிக்கக் கண்கள் கோடி வேண்டும், பிரமிப்பு விலகாத நிலையிலேயே ஆலயப் பிரகாரத்தை வலம் வருகின்றோம், கருவறையின் பின்புறம், வலது புறத்தில், திருப்புகழ் தெய்வமான சிவகுமரன் ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த ஆச்சரியத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான், அருணகிரியார் இம்மூர்த்திக்கென 'பரவுவரிக் கயல்', 'விடமும் வேலென' என்று துவங்கும் இரு திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், காதலுடன் தரிசித்துப் போற்றிப் பயன் பெற வேண்டிய திருத்தலம்.  


(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
     தனதனனத் தனதனனத் ...... தனதான

பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளி ஒத்துரைபதறப்
     பவள நிறத்ததரம் விளைத்தமுதூறல்

பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
     படைமதனக் கலைஅடவிப் ...... பொதுமாதர்

சொருகு மலர்க் குழல் சரியத் தளர்வுறு சிற்றிடை துவளத்
     துகில்அகலக் க்ருபை விளைவித்துருகா முன்

சொரிமலர் மட்டலர்அணை புக்கிதமதுரக் கலவிதனில் 
     சுழலுமனக் கவலை ஒழித்தருள்வாயே

கருகு நிறத்தசுரன் முடித் தலையொரு பத்தற முடுகிக்
     கணைதொடும் அச்சுதன் மருகக் ...... குமரேசா

கயிலைமலைக் கிழவன்இடக் குமரி விருப்பொடு கருதக்
     கவிநிறையப் பெறும் வரிசைப் ...... புலவோனே

திரள்கமுகில் தலைஇடறிப் பலகதலிக் குலைசிதறிச்
     செறியும்வயல் கதிர்அலையத் திரைமோதித்

திமிதிமெனப் பறைஅறையப் பெருகுபுனல் கெடிலநதித்
     திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனன தானன தனதன தனதன
     தனன தானன தனதன தனதன
          தனன தானன தனதன தனதன ...... தனதான

விடமும் வேல்அன மலரன விழிகளும் 
     இரதமேதரும் அமுதெனும் மொழிகளும்
          விரகினால்எழும் இருதன வகைகளும் இதமாடி

மிகவும் ஆண்மையும் எழில்நலமுடையவர்
     வினையும் ஆவியும் உடனிரு வலையிடை
          வெளியிலேபட விசிறிய விஷமிகள் உடன்மேவா

இடருறாதுனை நினைபவர் துணைகொள
     இனிமை போலெழு பிறவியென் உவரியின் 
          இடைகெடாதினி இருவினை இழிவினில் இழியாதே

இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள்
     ககன பூபதி இடர்கெட அருளிய
          இறைநின்ஆறிரு புயமென உரைசெய ...... அருள்வாயே

படரும் மார்பினில் இருபது !புயமதொ
     டரிய மாமணி முடியொளிர் ஒருபது
          படியிலேவிழ ஒருகணை தொடுபவர் இடம்ஆராய்

பரவைஊடெரி பகழியை விடுபவர்
     பரவுவார்வினை கெடஅருள் உதவியெ
          பரவு பால்கடல் அரவணை துயில்பவர் ...... மருகோனே

அடரவேவரும் அசுரர்கள் குருதியை
     அரகராஎன அலகைகள் பலியுண
          அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு ...... மயில்வீரா

அமரர்ஆதியர் இடர்பட அடர்தரு
     கொடிய தானவர் திரிபுரம் எரிசெய்த
          அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.

(2020 அக்டோபர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment