Thursday, September 27, 2018

அத்திப்பட்டு (வில்லுடையான் பட்டு):

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: கடலூர்

திருக்கோயில்: அருள்மிகு சிவ சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

விருத்தாசலத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும், நெய்வேலியிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலும், நெய்வேலி அனல்மின் உற்பத்தி நிலையப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது அத்திப்பட்டு (தற்கால வழக்கில் வில்லுடையான்பட்டு. நெய்வேலியின் புது நகர்ப் பகுதியான இவ்விடத்தில் சாலைகள் அனைத்துமே மிகச் செம்மையாகப் பராமரிக்கப் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது, சிறு குப்பை கூட கண்ணில் தென்படவில்லை, சாலையின் இருபுறங்களிலும் நேர்த்தியான முறையில் பேணப்பெற்று வரும் செடிகளையும் மரங்களையும் கண்டு வியப்புறுகின்றோம்.

சாலையின் துவக்கத்திலேயே பெரியதொரு வேலொடு கூடிய 'வில்லுடையான்பட்டு' எனும் பெயர்ப்பலகை நம்மை வரவேற்கின்றது. ஏகாந்தமான சூழலில் அமையப்பெற்றுள்ள திருத்தலம், மிக நீண்டதொரு ஆலய வளாகம், மூலக் கருவறையில் ஒரே விக்கிரகத் திருமேனியில் திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில், ஒரு திருக்கரத்தில் வில்லும் மற்றொன்றில் அம்புமாய் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான், இம்மூர்த்தி சுவயம்புத் திருமேனியர் என்பர், காண்பதற்கரிய திருக்கோலம். திருப்புகழ் ஆசிரியரான அருணகிரியார் தனிச்சன்னிதியில் எழுந்தருளி இருக்கின்றார்.

ஆலயத்தின் அறங்காவலர் குழுமத்தினரான 'நெய்வேலி இக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் (என்.ஐ.சி)' மிக மிகச் சிறப்பாக திருக்கோயிலைப் பராமரித்தும் நிர்வகித்தும் வருகின்றது. ஆலயத் திருச்சுவற்றில் பல்வேறு இடங்களில் முருகப் பெருமானின் அவதார நிகழ்வுகள் அழகுற பொறிக்கப் பெற்றுள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பெரும்பான்மையான குடும்பங்களுக்கு இம்மூர்த்தியே குலதெய்வம் என்று அர்ச்சகர் மூலம் அறிந்து மகிழ்கின்றோம். அருணகிரியார் இப்பெருமானுக்கு ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார், அவசியம் தரிசித்து வியந்து போற்ற வேண்டிய திருத்தலம். 

(Google Maps: Villudaiyanpattu Shri Murugan Temple, Neyveli T.S, Tamil Nadu 607801, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதனன தனதனன தத்தத் தத்ததன
     தனதனன தனதனன தத்தத் தத்ததன
          தனதனன தனதனன தத்தத் தத்ததன ...... தனதான

கருகிஅறிவகலஉயிர் விட்டுக்கிக் கிளைஞர்
     கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
          கனகமணி சிவிகையில் அமர்த்திக் கட்டையினில் ...இடைபோடாக்

கரமலர் கொடரிசியினை இட்டுச் சித்ரமிகு
     கலையை உரி செய்து மறைகள் பற்றப் பற்றுகனல்
          கணகணென எரியஉடல் சுட்டுக் கக்ஷியவர் ...வழியேபோய்

மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
     மனிதர்தமை உறவுநிலை சுட்டுச் சுட்டியுற
          மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் ...மலராலே

மயல்விளைய அரிவையர்கள் கைப்பட்டெய்த்து மிக
     மனம்அழியும் அடிமையை நினைத்துச் சொர்க்கபதி
          வழியைஇது வழியெனஉரைத்துப் பொற்கழல்கள்...தருவாயே

பொருவில்மலை அரையன்அருள் பச்சைச் சித்ரமயில்
     புரமெரிய இரணிய தனுக்கைப் பற்றிஇயல்
          புதிய முடுகுகரிய தவம் உற்றுக் கச்சியினில் ...உறமேவும்

புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி
     புயம் இருபதறவும் எய்த சக்ரக் கைக்கடவுள்
          பொறியரவின் மிசைதுயிலும் சுத்தப் பச்சைமுகில் ...... மருகோனே

அரிய மரகத மயிலில் உற்றுக் கத்துகடல் 
     அதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற
          அமரர்பதி இனியகுடி வைத்தற்குற்றமிகு ...... இளையோனே

அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகும்
     அழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்
          அணிய கயல்உகளும் வயல் அத்திப்பட்டில்உறை ...... பெருமாளே

(2020 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

1 comment:

  1. அடியேன் இன்று இந்த கோயில் சென்றேன்
    அற்புதமான தரிசனம் தருகிறார் சிவ சுப்ரமணியன் ஓம் முருகா 🙏

    ReplyDelete