Wednesday, October 31, 2018

கரியவனகர் (கொண்டல்):

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: நாகப்பட்டினம் 

திருக்கோயில்: கொண்டல் குமார சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில் மற்றும் வள்ளுவக்குடி வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில், சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்திலும், சீர்காழியிலிருந்து 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது கொண்டல் (அருணகிரிப் பெருமான் இத்தலத்தைக் 'கரியவனகர்' என்று குறிக்கின்றார்). 

கரிய திருமேனியரான திருமாலோடு தொடர்புடைய தலம், தேவார மூவர் காலத்திலிருந்தே 'கொண்டல் வண்ணன் குடி' எனும் இத்தலம் மருவி 'கொண்டல்' என்று அறியப் பெற்று வந்துள்ளது. ஆதலின் கொண்டலையே 'கரியவனகர்' எனும் திருப்புகழ் தலமாக முன்மொழிகின்றார் 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியரான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள்.  

மேலும் 'கொண்டல்' அப்பர் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பாடல்களில் குறிக்கப் பெற்றுத் தேவார வைப்புத் தலமாகத் திகழ்வது. 

'கயிலாய மலையுள்ளார்' என்று துவங்கும் திருவீழிமிழலை திருப்பதிகத்தின் 9ஆம் திருப்பாடலில் 'கொண்டலுள்ளார் கொண்டீச்சரத்தின் உள்ளார்' என்று நாவுக்கரசு சுவாமிகள் பதிவு செய்கின்றார். 

'வீழக் காலனை' என்று துவங்கும் திருநாட்டுத்தொகையின்  2ஆம் திருப்பாடலில் 'கொண்டல் நாட்டுக் கொண்டல் குறுக்கை நாட்டுக் குறுக்கையே' என்று குறிக்கின்றார் வன்தொண்டர்.

வயல்வெளிகள் சூழ்ந்துள்ள பாதை வழியே பயணித்துப் பின் மிகக் குறுகிய சாலைகளில் தொடர்ந்து செல்லும் நமக்கு பெருவியப்பு, 'இந்த சிற்றூரில் நம் கந்தக் கடவுளுக்கு இவ்வளவு பெரிய ஆலயமா?' என்று நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக 'குமார சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்' கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. 

மூலக் கருவறையில் திருப்புகழ் தெய்வமான நம் குமார சுப்பிரமணியன் ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களோடு; மயில் பின்புறம் விளங்கியிருக்க, இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இம்மூர்த்தியை ஒரு திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்.

இங்கு சிவமூர்த்தி 'தாரக பரமேஸ்வரர்' எனும் திருநாமத்தில், 'தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ' என்று அம்பிகையின்றி தனித்து எழுந்தருளி இருக்கின்றார். 

இவ்வாலயத்திலிருந்து சுமார் 1 1/2 கி.மீ தூரத்திலுள்ள வள்ளுவக்குடியில் வேதபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரக் காலத்தில் இப்பகுதியும் கொண்டலின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கக் கூடும் என்பது திண்ணம். 

Google Maps

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதன தனனத் தான தாத்தன
     தனதன தனனத் தான தாத்தன
          தனதன தனனத் தான தாத்தன ...... தனதான

அளிசுழல்அளகக் காடு காட்டவும்
     விழிகொடு கலவித் தீயை மூட்டவும்
          அமளியில் முடியப் போது போக்கவும் ...... இளைஞோர்கள்

அவர்வசமொழுகிக் காசு கேட்கவும்
     அழகிய மயிலின் சாயல் காட்டவும்
          அளவிய தெருவில் போயுலாத்தவும் ...... அதிபார

இளமுலை மிசையில் தூசு நீக்கவும்
     முகமொடு முகம் வைத்தாசைஆக்கவும்
          இருநிதியிலரைத் தூர நீக்கவும் ...... இனிதாக

எவரையும் அளவிப் போயணாப்பவும்
     நினைபவர் அளவில் காதல் நீக்கியென்
          இடரது தொலையத் தாள்கள் காட்டிநின் ...... அருள்தாராய்

நெளிபடு களமுற்றாறு போல்சுழல்
     குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட
          நிணமது பருகிப் பாறு காக்கைகள் ...... கழுகாட

நிரைநிரை அணியிட்டோரி ஆர்த்திட
     அதிர்தரு சமரில் சேனை கூட்டிய
          நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு ...... பொரும்வீரா

களிமயில் தனில் புக்கேறு தாட்டிக
     அழகிய கனகத் தாமம் ஆர்த்தொளிர்
          கனகிரி புய முத்தாரம் ஏற்றருள் ...... திருமார்பா

கரியவனகரின் தேவ பார்ப்பதி
     அருள்சுத குறநற் பாவை தாள்பணி
          கருணைய தமிழில் பாடல் கேட்டருள் ...... பெருமாளே

கொண்டல் குமார சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்


வள்ளுவக்குடி வேதபுரீஸ்வரர் திருக்கோயில் 



No comments:

Post a Comment