Sunday, October 28, 2018

திருமயேந்திரம் (மகேந்திரபள்ளி):

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: நாகப்பட்டினம் 

திருக்கோயில்: அருள்மிகு திருமேனி அழகர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும், சீகாழியிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது திருமயேந்திரம் (தற்கால வழக்கில் மகேந்திரப்பள்ளி).

ஞானசம்பந்த மூர்த்தியால் பாடல் பெற்றுள்ள திருத்தலம், 
(திருப்பாடல் 1)
திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை அடியிணை பணிமினே!

சிவமாம் பரம்பொருள் திருமேனிஅழகராகவும், பராசத்தி வடிவாம்பிகையாகவும் எழுந்தருளியுள்ள புண்ணியப் பதி.

வெளிப்பிரகாரச் சுற்றின் பின்புறம் திருப்புகழ் தெய்வமான நம் வேலாயுதக் கடவுள் ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களோடு; இரு தேவியரும் உடனிருக்க; நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தருகின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியை 'மயேந்த்ர மேவிய பெருமாளே' என்று பணிந்தேத்துகின்றார்,

(Google Maps: Sri Tirumeni Azhagar Temple, Mahendrapalli, Tamil Nadu 609101, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தந்தன தந்தன தாந்த தானன
     தந்தன தந்தன தாந்த தானன
          தந்தன தந்தன தாந்த தானன ...... தனதான

வண்டணியும் கமழ் கூந்தலார்விழி
     அம்பியலும் சிலை போந்த வாள்நுதல்
          வண்தரளம் திகழ் ஆய்ந்த வார்நகை ...... குயில்போல

வண்பயிலும் குவடாண்ட மார்!முலை
     யின்பொறி அங்குமிழ் ஆம்பல் தோள்கரம் 
          வஞ்சியெனும் கொடி சேர்ந்த நூலிடை ...... மடவார்பொன்

கண்டவுடன் களி கூர்ந்து பேசிகள்
     குண்டுணியும் குரல் சாங்கம்ஓதிகள்
          கண்சுழலும்படி தாண்டியாடிகள் ...... சதிகாரர்

கஞ்சுளியும் தடி ஈந்து போவென
     நஞ்சையிடும் கவடார்ந்த பாவிகள்
          கம்பையிலும் சட மாய்ந்து நாயனும் உழல்வேனோ

அண்டருடன் தவசேந்து மாதவர்
     புண்டரிகன்திரு பாங்கர் கோவென
          அஞ்சலெனும்படி போந்து வீரமொடசுராரை

அங்கமொடுங்கிட மாண்டொடாழிகள் 
     எண்கிரியும்பொடி சாம்பர் நூறிட
          அந்தகனும் கயிறாங்கை வீசிட ...... விடும்வேலா

செண்டணியும் சடை பாந்தள் நீர்மதி
     என்பணியன் கன சாம்பல் பூசிய
          செஞ்சடலன் சுத சேந்த வேலவ ...... முருகோனே

திங்கள் முகம்தன சாந்து மார்பினள் 
     எந்தனுளம்புகு பாங்கி மானொடு
          சிந்தை மகிழ்ந்து மயேந்த்ர மேவிய ...... பெருமாளே.


2023 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)



1 comment:

  1. அருமை அண்ணா.புகைப்படங்கள் ஏன் பதிவு செய்யவில்லை!??

    ReplyDelete