Sunday, October 28, 2018

பழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: நாகப்பட்டினம் 

திருக்கோயில்: அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 14 கி.மீ தூரத்திலும், சீகாழியிலிருந்து 7 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது பழமண்ணிப் படிக்கரை (தற்கால வழக்கில் இலுப்பைப்பட்டு). இத்தலத்திற்குச் செல்லும் வழியில், படிக்கரைக்குச் சுமார் 3 கி.மீ முன்னர் மற்றொரு தேவார மற்றும் திருப்புகழ் தலமான திருவாளப்புத்தூர் (திருவாழ்கொளிப்புத்தூர்) அமைந்துள்ளது. 

சுந்தரரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது படிக்கரை, 
-
(சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 1)
முன்னவன் எங்கள்பிரான் முதல் காண்பரிதாய பிரான்
சென்னியில் எங்கள்பிரான் திருநீலமிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறைநான்கும் கல்லால் நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே!!

ஆலய வளாகத்தில் சிவபரம்பொருள் வெவ்வேறு தனிச்சன்னிதிகளில் ஐந்து சிவலிங்கத் திருமேனிகளில் எழுந்தருளி இருக்கின்றார் (நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதீஸ்வரர், படிக்கரைநாதர்). பிரதான மூலவர் நீலகண்டேஸ்வரர். 

பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட திருத்தலம், தருமர் நீலகண்டேஸ்வரப் பரம்பொருளையும் மற்ற நால்வரும் மற்றுமுள்ள நான்கு சிவலிங்கத் திருமேனிகளையும் வழிபட்டதாக தலபுராணம் அறிவிக்கின்றது. உமையன்னை இருவேறு திருச்சன்னிதிகளில் 'அமிர்தகரவல்லி; மங்களநாயகி' எனும் திருநாமங்களில் திருக்காட்சி தருகின்றாள். 

திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் வெளிப்பிரகாரச் சுற்றின் முடிவில் பெரியதொரு தனிக்கோயில் போன்றதொரு அமைப்பில், ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க; நின்ற திருக்கோலத்தில் 'சுப்பிரமணியர்' எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றான். 

பிரகாரச் சுற்றின் பின்புறமுள்ள அமிர்தகரவல்லி அம்மையின் திருச்சன்னிதிக்கு உட்புறம், முருகக் கடவுள் சிறிய திருமேனியனாய் இரு தேவியரோடும் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். இங்கு சன்னிதியின் உயரம் மிகக் குறைவு, ஆதலின் முழங்காலிட்டு அமர்ந்த நிலையிலேயே இம்மூர்த்தியைத் தரிசிக்க இயலும்.

அருணகிரியார் இத்தலத்துறை கந்தக் கடவுளை 'முத்தமிழ்த் திருப்படிக்கரைப் பெருமாளே' என்று போற்றிப் பரவுகின்றார்,

(Google Maps: Sri Neelakandeswarar Temple, Eluppaipattu, Manalmedu, Tamil Nadu 609202, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனத்த தத்தனத் தனத்த தத்தனத்
     தனத்த தத்தனத் ...... தனதான

அருக்கி மெத்தெனச் சிரித்து !மைக்கணிட்
     டழைத்திதப்படச் ...... சிலகூறி

அரைப் பணத்தை விற்றுடுத்த !பட்டவிழ்த்
     தணைத்திதழ்க் கொடுத்தநுராகத்

துருக்கி மட்டறப் பொருள் !பறிப்பவர்க்
     குளக் கருத்தினில் ...... ப்ரமை!கூரா

துரைத்து செய்ப்பதித் தலத்தினைத் !துதித்
     துனைத் திருப்புகழ்ப் ...... பகர்வேனோ

தருக்கு மற்கடப் படைப் பலத்தினில் 
     தடப் பொருப்பெடுத்தணையாகச்

சமுத்திரத்தினைக் குறுக்கடைத்ததில் 
     தரித்தரக்கர் பொட்டெழவே போர்

செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
     செயித்த உத்தமத் ...... திருமாமன்

திருத்தகப்பன் மெச்சொருத்த முத்தமிழ்த்
     திருப்படிக்கரைப் ...... பெருமாளே.



No comments:

Post a Comment