Sunday, October 28, 2018

வைத்தீசுவரன் கோயில் (புள்ளிருக்கு வேளூர்)

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: நாகப்பட்டினம் 

திருக்கோயில்: அருள்மிகு வைத்யநாத சுவாமி திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

சிதம்பரத்திலிருந்து 27 கி.மீ தொலைவிலும், சீர்காழியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது வைத்தீஸ்வரன் கோயிலில் (புராதனப் பெயர் 'புள்ளிருக்கு வேளூர்'). மிகப் பிரசித்தி பெற்ற இத்திருத்தலம் தருமை ஆதீனப் பராமரிப்பில் சிறப்புற விளங்கி வருகின்றது.

ஆதிமுதற் பொருளான சிவமூர்த்தி வைத்தியநாத சுவாமியாகவும், உமையன்னை தையல் நாயகியாகவும் எழுந்தருளியுள்ள பரம புண்ணிய ஷேத்திரம். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வழிபட்டு மகிழ்ந்த புராதனத் திருத்தலம். 

(1)
ஞானசம்பந்த மூர்த்தி; அப்பர் சுவாமிகள் இருவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. இராமாயண காலத்து சடாயுவும்; அவர்தம் தமையனார் சம்பாதியும் பலகாலும் பூசித்துப் பேறு பெற்ற திருத்தலம், சம்பந்த மூர்த்தி இச்செய்தியினைத் தம்முடைய திருப்பாடல் தோறும் பதிவு செய்து போற்றுகின்றார் 
-
'சம்பாதி சடா(யு) என்பார் தாமிருவர் புள்ளானார்க்(கு) அரையன்இடம் புள்ளிருக்கு வேளூரே'

(2)
சடாயு, அன்னை சீதையைக் காக்கும் பொருட்டு, இராவணனோடு கடும் யுத்தம் புரிந்து தன் இன்னுயிரைத் துறந்த நிகழ்வினையும் சம்பந்தச் செல்வர் பதிவு செய்கின்றார் ('மெய் சொல்லா இராவணன்' என்று இராவணனின் துர்குணங்களை இகழ்கின்றார்),
-
மெய்சொல்லா இராவணனை மேலோடி ஈடழித்துப்
பொய்சொல்லா(து) உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே!!

(3)
கொடிமரத்தைக் கடந்து செல்லும் முன்னரே, இடது புறம் 2ஆம் பிரகாரச் சுற்றின் துவக்கத்திலேயே திருப்புகழ் தெய்வமான கந்தப் பெருமான் தனிச்சன்னிதியில் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு; இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த பேரானந்தத் திருக்கோலத்தில், 'ஷண்முகர்' எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றான். சிவசக்தியரைப் போலவே நம் ஷண்முகக் கடவுளும் இத்தலத்தில் மிகமிகப் பிரசித்தம்.

(4)
மூலக் கருவறையில் வைத்தியநாதப் பரம்பொருள் அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார், அபிஷேக சமயங்களில் மட்டுமே இறைவரின் சிவலிங்கத் திருமேனியைக் கவசமின்றித் தரிசிக்க இயலும். 

உட்பிரகாரச் சுற்றின் துவக்கத்திலேயே ஷண்முகரின் உற்சவ மூர்த்தியான 'முத்துக்குமார சுவாமி' பெரியதொரு  சன்னிதியொன்றில் இரு தேவியரோடு எழுந்தருளி இருக்கின்றான், இத்தலத்தில் மூலவரான ஷண்முகரைக் காட்டிலும் உற்சவ மூர்த்தி மிகமிகப் பிரசித்தம், இவருக்கென பிள்ளைத்தமிழே உள்ளது. சன்னிதி நீளவாக்கில் மிகவும் உள்வாங்கி இருப்பதால் கந்தப் பெருமானின் திருமுக வடிவழகினை நன்கு தீர்க்கமாய்த் தரிசிக்க இயலவில்லை, ஏக்கத்துடன் அனுமதிக்கப் பெற்ற இடத்திலிருந்து பணிந்துப் போற்றி மகிழ்ந்தோம்.

உட்பிரகாரச் சுற்றின் பின்புறம் வேலாயுதக் கடவுள் மற்றுமொரு ஆறுமுகத் திருக்கோலத்தில் தேவியருடன் திருக்காட்சி தருகின்றான்.

(5)
தையல் நாயகி அம்மை தனிக்கோயிலில் அற்புதமாய்த் திருக்காட்சி தருகின்றாள், இச்சன்னிதியும் நீளவாக்கில் மிகநீண்டு உள்வாங்கி இருப்பதால், அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியான நம் அம்மையின் திருமுகத்தையும் நன்கு தீர்க்கமாய்த் தரிசிக்க இயலவில்லை, இங்கும் சிறிது ஏக்கத்துடன் வழிபட்டுப் பணிந்தோம். 

அம்மையின் திருச்சன்னிதிக்கு நேரெதிரில் பிரசித்தி பெற்ற பரந்து விரிந்த ஆலயத் திருக்குளம், இதன் வலது கோடிகளின் இருபுறமும் விநாயகப் பெருமானும்; கந்தக் கடவுளும் எழுந்தருளி இருக்கின்றனர். 

இங்கு வள்ளி மணாளன் தேவியரின்றி மயில் பின்புறம் விளங்கியிருக்க, நின்ற திருக்கோலத்தில்; திருமுகத்தில் புன்முறுவலோடு அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். 

(Google Maps: Vaitheeswaran Temple, West street, Vaitheeswarankoil, Tamil Nadu 609117, India )

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 6.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனத்தன தானத் ...... தனதான

உரத்துறை போதத் ...... தனியான
உனைச் சிறிதோதத் ...... தெரியாது
மரத்துறை போலுற்றடியேனும்
மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ
பரத்துறை சீலத்தவர் வாழ்வே
பணித்தடி வாழ்வுற்றருள்வோனே
வரத்துறை நீதர்க்கொருசேயே
வயித்தியநாதப் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தத்தன தான தான தத்தன தான தான
     தத்தன தான தான ...... தனதான

எத்தனை கோடி கோடி விட்டுடல் ஓடியாடி
     எத்தனை கோடி போனதளவேதோ

இப்படி மோக போகம் இப்படி ஆகியாகி
     இப்படிஆவதேது ...... இனி!மேலோ

சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
     சிக்கினில் ஆயுமாயும் அடியேனைச்

சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணரோது
     சித்திர ஞானபாதம் அருள்வாயே

நித்தமும் ஓதுவார்கள் சித்தமெ வீடதாக
     நிர்த்தமதாடும் ஆறுமுகவோனே

நிட்கள ரூபர் பாதி பச்சுருவான மூணு
     நெட்டிலை சூலபாணி ...... அருள்பாலா

பைத்தலை நீடும் ஆயிரத்தலை மீது பீறு
     பத்திர பாத நீல ...... மயில்வீரா

பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
     பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தான தத்தனம் தான தத்ததன
     தான தத்தனம் தான தத்ததன
          தான தத்தனம் தான தத்ததன ...... தனதான

பாடகச் சிலம்போடு செச்சைமணி
     கோவெனக் கலந்தாடு பொற்சரணர்
          பாவை சித்திரம் போல்வர் பட்டுடையின் இடைநூலார்

பார பொன்தனம் கோபுரச்!சிகர
     மாமெனப் படர்ந்தேமலிப்பர் இத
          பாகு நற்கரும்போடு சர்க்கரையின் ...... மொழிமாதர்

ஏடகக்குலம் சேரு மைக்!குழலொ
     டாடளிக்குலம் பாட நல்தெருவில் 
          ஏகி புட்குலம் போல பற்பலசொல் இசைபாடி

ஏறி இச்சகம் பேசி எத்தியிதம்
     வாருமுன் பணம் தாரும் இட்டமென
          ஏணி வைத்து வந்தேற விட்டிடுவர் ...... செயலாமோ

சேடனுக்க சண்டாளரக்கர் குல
     மாள அட்ட குன்றேழலைக் கடல்கள்
          சேர வற்ற நின்றாட இல்கரமிரறு தோள்மேல்

சேணிலத்தர்பொன் பூவை !விட்டிருடி
     யோர்கள் கட்டியம் பாட எட்டரசர்
          சேசெயொத்த செந்தாமரைக்கிழவி ...... புகழ்வேலா

நாடகப் புனம்காவலுற்ற சுக
     மோகனத்தி மென்தோளி சித்ரவளி
          நாயகிக்கிதம் பாடி நித்தமணி ...... புனைவோனே

ஞான வெற்புகந்தாடும் அத்தர்தையல்
     நாயகிக்கு நன் பாகர்அக்கணியும்
          நாதர் மெச்சவந்தாடு முத்தமருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தான தான தத்த தந்த தான தான தத்த தந்த
     தான தான தத்த தந்த ...... தனதான

மாலினாலெடுத்த கந்தல் சோறினால் வளர்த்த பொந்தி
     மாறியாடெடுத்த சிந்தை ...... அநியாய

மாயையாலெடுத்து மங்கினேனையா எனக்கிரங்கி
     வாரையாய் இனிப்பிறந்து ...... இறவாமல்

வேலினால் வினைக்கணங்கள் தூளதாஎரித்து உந்தன் 
     வீடு தாபரித்த அன்பர் ...... கணமூடே

மேவியான்உனைப்பொல் சிந்தையாகவே களித்து!கந்த
     வேளெ யாமெனப் பரிந்து ...... அருள்வாயே

காலினாலெனப் பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
     கால பாநு சத்திஅங்கை ...... முருகோனே

காம பாணம் அட்டநந்த கோடி மாதரைப் புணர்ந்த
     காளையேறு கர்த்தன் எந்தை ...... அருள்பாலா

சேலை நேர்விழிக்குறம் பெணாசை தோளுறப்புணர்ந்து
     சீரையோது பத்தர் அன்பிலுறைவோனே

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளுருக்குகந்த
     சேவல் கேது சுற்றுகந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தானா தானன தாத்த தந்தன
     தானா தானன தாத்த தந்தன
          தானா தானன தாத்த தந்தன ...... தனதானா

மூலாதாரமொடேற்றி அங்கியை
     ஆறாதாரமொடோட்டி அந்திர
          மூலா வாயுவையேற்று நன்சுழி ...... முனையூடே

மூதாதார மரூப்பில் அந்தர
     நாதாகீதம் அதார்த்திடும் பரம் 
          ஊடே பாலொளி ஆத்துமன் தனை ...... விலகாமல்

மாலாடூனொடு சேர்த்திதம்பெற
     நானா வேதம சாத்திரம் சொலும்
          வாழ் ஞானாபுரி ஏற்றி மந்திர...... தவிசூடே

மாதா நாதனும் வீற்றிருந்திடும்
     வீடே மூணொளி காட்டி சந்திர
          வாகார் தேனமுதூட்டி எந்தனை ..... உடனாள்வாய்

சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி
     மாதா ராபகல் காத்தமைந்தனை
          சூடோடீர்வினை வாட்டி மைந்தர் எனெமையாளும் 

தூயாள் மூவரை நாட்டும் எந்தையர்
     வேளூர் வாழ்வினை தீர்த்த சங்கரர்
          தோய் சாரூபரொடேற்றிருந்தவள் அருள்பாலா

வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக
     மூடார் சூரரை வாட்டி அந்தகன்
          வீடூடேவிய காத்திரம் பரி ...... மயில்வாழ்வே

வேதா நால்தலை சீக்கொளும்படி
     கோலாகாலமதாட்டு மந்திர
          வேலா மால்மகளார்க்கிரங்கிய ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தான தானதன தானதன தானதன
     தான தானதன தானதன தானதன
          தான தானதன தானதன தானதன ...... தனதான

மேக வார்குழலதாட தன பாரமிசை
     ஆரமாடகுழையாட விழியாடபொறி
          மேனி வாசனைகள் வீசஅல்குல் மோதி பரிமளமேற

மீனுலாடைஇடையாடமயில் போலநடை
     ஓலம்ஓலம்என பாதமணி நூபுரமும் 
          மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் ...... முழவோசை

ஆகவேஅவைகள் கூடிடுவர் !வீதிவரு
     வோரை வாருமெனவே சரசமோடுருகி
          ஆசை போலமனையே கொடணைவார்கள் குவடதிபார

ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு
     வேர்வை பாயஅணையூடமளி ஆடி!இட
          ரான சூலைபல நோய்கள் கடலாடியுடல் உழல்வேனோ

நாகலோகர் மதிலோகர் பகலோகர்விதி
     நாடுளோர்கள் அமரோர்கள்கண நாதர்விடை
          நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் ...... முநிவோர்கள்

நாதரே நரர் மனாரணர் புராணவகை
     வேத கீதவொலி பூரையிது பூரையென
          நாசமாயசுரர் மேவுகிரி தூளிபட ...... விடும்வேலா

தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்
     தோழி மாதுவளி நாயகி மினாளைசுக
          சோகமோடிறுகி மார்முலைவிடாமல்அணை ...... புணர்வோனே

தோள்இராறுமுகம் ஆறுமயில் வேலழகு
     மீதெய் வானவடிவா தொழுதெணா வயனர்
          சூழு காவிரியும் வேளூர் முருகாஅமரர் ...... பெருமாளே.


(2023 நவம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)































































No comments:

Post a Comment