Sunday, October 28, 2018

சீகாழி

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: நாகப்பட்டினம் 

திருக்கோயில்: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (திருத்தோணியப்பர், சட்டைநாதர்) திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்), மணிவாசகர் (திருவாசகம்)


தலக் குறிப்புகள்

சிதம்பரத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலம், ஞானசம்பந்த மூர்த்தி தம்முடைய 3ஆம் வயதில் அம்மையப்பரால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற புண்ணிய ஷேத்திரம். தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது.

மிகமிக விசாலமான திருக்கோயில் வளாகம். இவ்வருடம் (2023) மே மாதம் நடந்தேறிய குடமுழுக்குச் சிறப்பினால் திருக்கோயிலின் ஒவ்வொரு அங்குலமும் தனித்துவமான புதுப்பொலிவோடு மிளிர்கின்றது. கோபுரம் மற்றும் மதிற் சிறபங்களின் நேர்த்தியும் அழகும் கண்கொள்ளாக் காட்சி.

தரைத் தளத்தில் பிரம்மபுரீஸ்வரப் பரம்பொருளும், முதல் தளத்தில் நெடிதுயர்ந்த உருவத் திருமேனியில் திருநிலைநாயகி சமேத தோணியப்பரும், 2ஆம் தலத்தில் சட்டைநாதப் பெருமானும் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றனர், காண்பதற்கரிய திருக்காட்சி.

உலகீன்ற திருநிலை நாயகி அம்மை தனிக்கோயிலில் பேரழகு பொருந்திய நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தருகின்றாள்.

இனி திருப்புகழ் நாயகனான நம் கந்தப் பெருமான் இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள பல்வேறு திருக்கோலங்களைக் காண்போம்,

(1)
பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ள மூலக் கருவறையின் வெளிப்பிரகாரச் சுற்றில் 'மலைக்குமாரர்' (ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களோடு; மயில் பின்புறம் விளங்கியிருக்க, இருதேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலம்)

(2)
தெற்கு கோபுர வாயிலின் வெளிப்புறச் சன்னிதியில் தேவியரோடு நின்ற திருக்கோலம் (ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்கள்; மயில் பின்புறம் விளங்கி இருக்கின்றது)

(3)
மேற்கு கோபுர வாயிலின் உட்புறத்திலுள்ள தனிச்சன்னிதியில் 'சிங்கார வடிவேலர்' (ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, மயில் பின்புறம் விளங்கியிருக்க நின்ற திருக்கோலம் - இங்கு தேவியர் இல்லை).

(4)
திருநிலை நாயகியம்மை ஆலயப் பிரகாரச் சுற்றில் பால சுப்பிரமணியர் (அம்பிகை ஆலயக் கருவறைக்குப் பின்புறம் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, மயில் பின்புறம் விளங்கியிருக்க, நின்ற திருக்கோலம் - இங்கும் தேவியர் இல்லை).

(5)
அம்பிகை திருக்கோயில் முகப்பிலுள்ள மண்டபக் கருவறையில் 'மண்டப குமாரர்' (வடக்கு கோபுர பக்கமாக அமைந்துள்ள இம்மண்டபத்தில் ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களோடு; மயில் பின்புறம் விளங்கியிருக்க, இருதேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலம்)


(Google Maps: Shri Sattainathar Temple, 106 D, Pidari South Street, Thenpathi, Sirkazhi, Tamil Nadu 609111, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 14.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதன தனதன தந்த தானன
     தனதன தனதன தந்த தானன
          தனதன தனதன தந்த தானன ...... தந்ததான

அலைகடல் சிலைமதன் அந்தி ஊதையும்
     அரிவையர் வசையுடன் அங்கி போல்வர
          அசைவன விடைமணி அன்றில் கோகிலம் ...... அஞ்சிநானும்

அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ
     அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற
          அணிபணி மணிபல வெந்து நீறெழ ...... அங்கம்வேறாய்

முலைகனல் சொரிவர முன்பு போல்நினை
     வழிவசம் அறஅற நின்று சோர்வுற
          முழுதுகொள் விரகனல் மொண்டு வீசிட ...... மங்கிடாதே

முருகவிழ் திரள்புய முந்து வேலணி
     முளரியொடழகிய தொங்கல் தாரினை
          முனிவற நினதருள் தந்தென் மாலைமுனிந்திடாதோ

சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி
     திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
          திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கமேறி

திரள்படை அலகைகள் பொங்கு கோடுகள்
     திமிலையொடறை பறை நின்று மோதிட
          சிவனுடன்நடம்வரு மங்கை மாதுமை ...... தந்தவேளே

மலைதனிலொருமுநி தந்த மாதுதன்
     மலரடி வருடியெ நின்று நாள்தொறும் 
          மயில்பயில் குயில்கிளி வம்பிலே கடி ...... தொண்டினோனே

மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர
     மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்
          வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் ...... தம்பிரானே.

திருப்பாடல் 2:
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

இரதமான தேனூறல் அதரமான மாமாதர் 
     எதிரிலாத பூணார ...... முலைமீதே

இனிது போடும் ஏகாச உடையினாலும் ஆலால
     விழியினாலும் மாலாகி ...... அநுராக

விரகமாகியே பாயல் இடைவிடாமல் நாள்தோறும் 
     ம்ருகமதாதி சேர்ஓதி ...... நிழல்மூழ்கி

விளையுன் மோக மாமாயை கழலுமாறு நாயேனும்
     விழலனாய் விடாதேநின் அருள்தாராய்

அரகரா எனாமூடர் திருவெணீறிடாமூடர்
     அடிகள் பூசியாமூடர் ...... கரையேற

அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர்
     அறம்விசாரியா மூடர் ...... நரகேழில் 

புரள வீழ்வர் ஈராறு கரவிநோத சேய்சோதி
     புரண பூரணாகார ...... முருகோனே

புயலுலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு
     புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த
     தானத்தன தான தனந்த ...... தனதான

ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
     ஊசற்சுடு நாறும் குரம்பை ...... மறைநாலும்

ஓதப்படு நாலுமுகன் தனால்உற்றிடும் கோலமெழுந்து
     ஓடித்தடுமாறி உழன்று ...... தளர்வாகிக்

கூனித்தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
     கூளச்சடம் ஈதை உகந்து ...... புவிமீதே

கூசப்பிரமாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்களகன்று
     கோலக்கழலேபெற இன்று ...... அருள்வாயே

சேனக்குரு கூடலிலன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
     சேனைச் சமணோர் கழுவின்கண் ...... மிசையேறத்

தீரத் திருநீறு புரிந்து மீனக்கொடியோனுடல் துன்று
     தீமைப்பிணி தீர உவந்த ...... குருநாதா

கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீதுநடந்து
     காதற்கிளியோடு மொழிந்து ...... சிலைவேடர்

காணக்கணியாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
     காழிப்பதி மேவியுகந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தய்யா தத்தன தானன தானன
     தய்யா தத்தன தானன தானன
          தய்யா தத்தன தானன தானன ...... தனதான

ஒய்யாரச்சிலை ஆமென வாசனை
     மெய்யாரப்பணி பூஷண மாலைகள் 
          உய்யா நற்கலையேகொடு மாமத ...... இதமாகி

ஒவ்வார் இப்படியோர் எனவேயிரு
     கையாரக்கணை மோதிரம் ஏய்பல
          உள்ளார் செப்பிட ஏமுற நாளிலும் உடல்பேணிச்

செய்வார் இப்படியேபல வாணிபம் 
     இய்யாரில் பணமேயொரு காசிடை
          செய்யார் சற்பனைகாரர் பிசாசர் உனடிபேணாச்

செய்வாரிற்படு நானொரு பாதகன்
     மெய்யா எப்படியோர் கரை சேர்வது
          செய்யாய் அற்புதமே பெறவோர்பொருள் அருள்வாயே

மையாரக்கிரியே பொடியாய்விட
     பொய் சூரப்பதியே கெட வானவர்
          வையாய் பொற்சரணா எனவேதொழ ...... விடும்வேலா

வையாளிப்பரி வாகனமாகொளும் 
     துவ்வாழிக்கடலேழ் மலை தூளிசெய்
          மைபோலக் கதிரேய் நிறமாகிய ...... மயில்வாழ்வே

தெய்வானைக்கரசே குறமான்மகிழ்
     செய்யா முத்தமிழாகரனேபுகழ்
          தெய்வீகப் பரமா குருவேயென ...... விருதூதத்

திய்யாரக் கழுவேறிட நீறிடு
     கையா அற்புதனே பிரமாபுர
          செய்காழிப்பதி வாழ்முருகா சுரர் ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான

கள்காம க்ரோதத்தே கண்!சீ
     மிழ்த்தோர்கட்குக் ...... கவிபாடிக்

கச்சா பிச்சாகத் !தாவித்தா
     ரத்தே அக்கொட்களை நீளக்

கொள்கால் அக்கோலக் கோணத்தே
     இட்டாசைப் பட்டிடவே வை

கொள்தானக்கூனுக்காய் எய்த்தேன் 
     இத்தீதத்தைக் ...... களைவாயே

வெட்காமல் பாய் சுற்றூமர்ச்சேர்
     விக்கானத்தைத் ...... தரிமாறன்

வெப்பாறப் பாடிக் காழிக்கே
     புக்காய் வெற்பில் ...... குறமானை

முள்கானில் கால் வைத்தோடிப் போய்
     முற்சார் செச்சைப் ...... புயவீரா

முத்தா முத்தீ அத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தந்த தானன தனதன தனதன
     தந்த தானன தனதன தனதன
          தந்த தானன தனதன தனதன ...... தனதான

கொங்குலாவிய குழலினும் நிழலினும் 
     நஞ்சளாவிய விழியினும் இரணிய
          குன்று போல்வளர் முலையினும் நிலையினும் ...... மடமாதர்

கொம்பு சேர்வன இடையினும் நடையினும் 
     அன்பு கூர்வன மொழியினும் எழில்குடி
          கொண்ட சேயிதழழ் அமுதினும் நகையினும் ...... மனதாய

சங்கையாளியை அணுவிடை பிள!அள
     வின்சொல் வாசக மொழிவன இவையில
          சம்ப்ரதாயனை அவலனை ஒளிதிகழ் இசைகூரும் 

தண்டை நூபுரம் அணுகிய இருகழல்
     கண்டு நாளவம் மிகையற விழியருள்
          தந்த பேரருள் கனவிலும் நனவிலும் ...... மறவேனே

வங்க வாரிதி முறையிட நிசிசரர்
     துங்க மாமுடி பொடிபட வடஅனல்
          மங்கி நீறெழ அலகைகள் நடமிட ...... மயிலேறி

வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய
     சண்பை மாநகர் உறையுமொர் அறுமுக
          வந்த வானவர் மனதினில் இடர்கெட ...... நினைவோனே

பங்க வீரியர் பறிதலை விரகினர்
     மிஞ்சு பாதகர் அறநெறி பயனிலர்
          பந்தமேவிய பகடிகள் கபடிகள் ...... நிலைகேடர்

பண்பிலாதவர் கொலைசெயு மனதினர் 
     இங்கெணாயிரர் உயரிய கழுமிசை
          பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ...... பெருமாளே.

திருப்பாடல் 7:
தந்த தந்தன தனதன தனதன
     தந்த தந்தன தனதன தனதன
          தந்த தந்தன தனதன தனதன ...... தனதான

சந்தனம்பரிமள புழுகொடுபுனை
     கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை
          தங்கு செங்கையர் அனமென வருநடை ...... மடமாதர்

சந்ததம் பொலிஅழகுள வடிவினர்
     வஞ்சகம் பொதி மனதினர் அணுகினர்
          தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர ...... அவர்மீதே

சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்
     தந்த்ர மந்த்ரிகள் தரணியில் அணைபவர்
          செம்பொன் இங்கினி இலையெனில் மிகுதியும் ...... முனிவாகித்

திங்களொன்றினில் நெனல்பொருள் உதவிலன் 
     என்று சண்டைகள் புரிதரு மயலியர்
          சிங்கியும்கொடு மிடிமையும் அகலநின் அருள்கூர்வாய்

மந்தரம்குடை எனநிரை உறுதுயர்
     சிந்த அன்றடர் மழைதனிலுதவிய
          மஞ்செனும்படி வடிவுறும் அரிபுகழ் ...... மருகோனே

மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ
     துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல்
          வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி ...... மணவாளா

தந்தனந்தன தனதன தனவென
     வண்டு விண்டிசை முரல்தரு மணமலர்
          தங்கு சண்பக முகிலள உயர்தரு ...... பொழில்மீதே

சங்கு நன்குமிழ் தரளமும் எழில்பெறு
     துங்க ஒண்பணி மணிகளும் வெயில்விடு
          சண்பையம்பதி மருவிய அமரர்கள் ...... பெருமாளே.

திருப்பாடல் 8:
தனதன தந்தன தந்தன தந்தன
     தனதன தந்தன தந்தன தந்தன
          தனதன தந்தன தந்தன தந்தன ...... தனதான

சருவியிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
     சமயமும் ஒன்றிலை என்றவரும் பறி
          தலையரும் நின்று கலங்க விரும்பிய ...... தமிழ்கூறும் 

சலிகையும் நன்றியும் வென்றியும் மங்கள
     பெருமைகளும் கனமும் குணமும் பயில்
          சரவணமும் பொறையும் புகழும்திகழ் ...... தனிவேலும்

விருது துலங்க சிகண்டியில் அண்டரும் 
     உருகி வணங்க வரும் பதமும்பல
          விதரணமும் திறமும் தரமும்தினை ...... புனமானின்

ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி
     வருடிமணந்து புணர்ந்ததுவும் பல
          விஜயமும் அன்பின் மொழிந்து மொழிந்தியல் ...... மறவேனே

கருதிஇலங்கை அழிந்து விடும்படி
     அவுணர்அடங்க மடிந்து விழும்படி
          கதிரவன்இந்து விளங்கி வரும்படி ...... விடுமாயன்

கடகரி அஞ்சி நடுங்கி வருந்திடு
     மடுவினில் வந்துதவும் புயலிந்திரை
          கணவனன் அரங்கன் முகுந்தன் வரும் சகடறமோதி

மருது குலுங்கி நலங்க முனிந்திடு
     வரதன் அலங்கல் புனைந்தருளும்குறள்
          வடிவனெடும்கடல் மங்கவொர் அம்பு கை ...... தொடுமீளி

மருக புரந்தரனும் தவமொன்றிய
     பிரமபுரம்தனிலும் குகனென்பவர்
          மனதினிலும் பரிவொன்றி அமர்ந்தருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 9:
தந்தத்தன தானன தந்தத் ...... தனதான

சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே
தென்றல்தரு வாசமிகுந்துற்றெழலாலே
அந்திப் பொழுதாகிய கங்குல் திரளாலே
அன்புற்றெழு பேதை மயங்கித் ...... தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை உந்திப் ...... பொருவேளே
சந்தக்கவி நூலினர் தம்சொற்கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே

திருப்பாடல் 10:
தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்
     தத்தனா தத்தனத் ...... தனதான

செக்கர் வானப் பிறைக்கிக்கு மாரற்கலத்
     தெற்கில் ஊதைக்கனல் தணியாத

சித்ர வீணைக்கலர்ப் பெற்ற தாயர்க்கவச்
     சித்தம் வாடிக் கனக் ...... கவிபாடிக்

கைக் கபோலக் கிரிப் பொன்கொள் ராசிக் கொடைக்
     கற்பதாருச் செகத் ...... த்ரயபாநு

கற்றபேர் வைப்பெனச் செத்தை யோகத்தினர்க்
     கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய்

சக்ரபாணிக்கும் அப் பத்மயோனிக்கும் !நித்
     த ப்ரதாபர்க்கும் எட்டரிதாய

தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த!அத்
     தத்வ ரூபக் கிரிப் ...... புரைசாடிக்

கொக்கிலே புக்கொளித்திட்டசூர் பொட்டெழக்
     குத்து ராவுத்த பொற் ...... குமரோனே

கொற்றவா உற்பலச் செச்சை மாலைப் புயக்
     கொச்சைவாழ் முத்தமிழ்ப் ...... பெருமாளே.

திருப்பாடல் 11:
தனதன தாந்த தான தனதன தாந்த தான
     தனதன தாந்த தான ...... தனதான

தினமணி சார்ங்க பாணி எனமதிள் நீண்டு சால
     தினகரனேய்ந்த மாளிகையில்ஆரம் 

செழுமணி சேர்ந்த பீடிகையில்இசை வாய்ந்த பாடல்
     வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும்

இனவளை பூண்கையார் கவரியிட வேய்ந்து மாலை
     புழுககில் சாந்து பூசி ...... அரசாகி

இனிதிறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம் 
     ஒருபிடி சாம்பலாகி ...... விடலாமோ

வனசரர் ஏங்க வான முகடுறவோங்கி ஆசை
     மயிலொடு பாங்கி மார்கள் அருகாக

மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கையாகி
     மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே

கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
     கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக்

கவிதரு காந்த பால கழுமல பூந்தராய
     கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே.

திருப்பாடல் 12:
தானாதன தானன தானன
     தானாதன தானன தானன
          தானாதன தானன தானன ...... தந்ததான

பூமாதுரமேஅணி மான்மறை
     வாய்நாலுடையோன் மலிவானவர்
          கோமான் முநிவோர் முதல் யாரும் இயம்புவேதம்

பூராயமதாய் மொழி நூல்களும்
     ஆராய்வதிலாத அடலாசுரர்
          போரால்மறை வாயுறு பீதியின் ...... வந்துகூடி

நீமாறருளாயென ஈசனை
     பாமாலைகளால் தொழுதேதிரு
          நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு

நீரேர்தரு சானவி மாமதி
     காகோதர மாதுளை கூவிளை
          நேரோடம் விளாமுதலார்சடை ...... எம்பிரானே

போமாறினி வேறெதுவோதென
     வே ஆரருளாலவர் ஈதரு
          போர்வேலவ நீலகலாவி இவர்ந்துநீடு

பூலோகமொடே அறுலோகமும் 
     நேரோர் நொடியே வருவோய் சுர
          சேனாபதியாயவனே உனை ...... அன்பினோடும் 

காமாவறு சோமசமானன
     தாமாமண மார்தரு நீப!சு
          தாமாவெனவே துதியாதுழல் ...... வஞ்சனேனைக்

காவாயடி நாள் !அசுரேசரை
     யே சாடிய கூர்வடி வேலவ
          காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே.

திருப்பாடல் 13:
தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன
     தனனத்தத் தானத் தானன ...... தனதான

மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப்பாடச் சீறிகள்
     மருளப் பட்டாடைக் காரிகள் அழகாக

மவுனச்சுட்டாடிச் சோலிகள் இசலிப் பித்தாசைக் காரிகள்
     வகைமுத்துச் சாரச் சூடிகள் ...... விலைமாதர்

குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சில் சாடிப் பீடிகள்
     குசலைக்கொள் சூலைக் காலிகள் ...... மயல்மேலாய்க்

கொளுவிக்கட்டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை
     குமுதப்பொற் பாதச் சேவையில் அருள்வாயே

கதறக்கல் சூரைக் கார்கடல் எரியத்திக் கூறிற் பாழ்பட
     ககனக் கட்டாரிக்கா இரை ...... இடும்வேலா

கதிர் சுற்றிட்டாசைப் பால்கிரி உறைபச்சைப் பாசக் கோகில
     கவுரிப்பொற் சேர்வைச் சேகர ...... முருகோனே

திதலைப்பொற் பாணிக் கார்குயில் அழகில் பொன்தோகைப் பாவையை
     தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... அணைவோனே

திலதப் பொட்டாசைச் சேர்முக மயில்உற்றிட்டேறிக் காழியில்
     சிவன் மெச்சக் காதுக்கோதிய ...... பெருமாளே.

திருப்பாடல் 14:
தனதனன தத்ததன தனதனன தத்ததன
     தனதனன தத்ததன ...... தனதான

விடமென மிகுத்தவட அனலென உயர்த்துரவி
     விரிகதிர் எனப்பரவு ...... நிலவாலே

விதனமிக உற்றுவரு ரதிபதி கடுத்துவிடு
     விரைதரு இதழ்கமல ...... கணையாலே

அடலமர் இயற்று திசையினில்மருவி மிக்கஅனல்
     அழலொடு கொதித்துவரு ...... கடைநாளில்

அணுகி நமனெற்றமயல் கொளுமநிலை சித்தமுற
     அவசமொடணைத்தருள ...... வரவேணும்

அடவிதனில் மிக்கபருவரையவர் அளித்ததிரு
     அனையமயில் முத்தமணி ...... சுரயானை

அழகிய மணிக்கலச முலைகளில் மயக்கமுறு
     மதிவிரக சித்ரமணி ...... மயில்வீரா

கடதட களிற்றுமுகர் இளையவ கிரிக்குமரி
     கருணையொடளித்த திற ...... முருகோனே

கமலமலரொத்தவிழி அரிமருக பத்தர்பணி
     கழுமல நகர்க் குமர ...... பெருமாளே.


(2023 நவம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


































































No comments:

Post a Comment