Saturday, October 27, 2018

கடம்பூர் (மேலக் கடம்பூர்)

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: கடலூர்

திருக்கோயில்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

சிதம்பரத்திலிருந்து சுமார் 35 கி.மீ பயணத் தொலைவில் அமைந்துள்ளது மேலக் கடம்பூர். ஞானசம்பந்த மூர்த்தி; அப்பர் சுவாமிகள் இருவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. சிவமூர்த்தி அமிர்தகடேஸ்வரராகவும், இறைவி சோதி மின்னம்மையாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். 
-
(அப்பர் சுவாமிகள் அருளியுள்ள கடம்பூர் தேவாரம் - திருப்பாடல் 9):
நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன்கடன் அடியேனையுன் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே

இந்திரன், தன் அன்னை சுவர்கலோகத்தில் வழிபடும் பொருட்டு, இத்திருக்கோயிலைப் பெயர்த்தெடுத்துச் செல்ல முற்பட, 'ஆரவார விநாயகர்' எனும் திருநாமத்தோடு இங்கு எழுந்தருளியுள்ள வேழமுகத்துக் கடவுள் அதனைத் தடுத்தருளிய அற்புத நிகழ்வினைத் தலபுராணம் அறிவிக்கின்றது. 

ஆலயத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் காணப்பெறும் சிற்ப வேலைப்பாடுகள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. இங்குள்ள தெய்வங்களும் திருத்தமான விக்கிரகத் திருமேனிகளில் எழுந்தருளி இருக்கின்றனர். திருக்கோயில் முழுமையுமே தேர்ச்சக்கரத்தோடு பிணைக்கப் பெற்ற நிலையில் அமைந்துள்ளது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு. வெளிப்பிரகாரச் சுற்றை வலம் வருகையில், அற்புத அற்புதமான தெய்வத் திருமேனிகளைத் தரிசித்து மகிழலாம், குறிப்பாக அர்தநாரீஸ்வரரின் திருக்கோலம் காண்பதற்கரியது.

வெளிப்பிரகாரச் சுற்றில், மூலக் கருவறையின் பின்புறம் சிவகுமரன் ஆறு திருமுகம்; பன்னிரு திருக்கரங்களோடு மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்கத் திருக்காட்சி தருகின்றான். அருணகிரியார் இம்மூர்த்தியை 'வாருமிங்கே'எனும் திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்.

(Google Maps: NCN034- Amirthakadeshwara Temple, Melakadambur, Tamil Nadu 608304, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தானனம் தானான தானனம் தானான
     தானனம் தானான ...... தனதான

வாருமிங்கே வீடிதோ பணம் பாஷாண
     மால்கடந்தே போமென் இயலூடே

வாடிபெண்காள் பாயை போடுமென்றாசார
     வாசகம் போல்கூறி ...... அணைமீதே

சேருமுன் காசாடை வாவியும் போதாமை
     தீமை கொண்டே போமெனட மாதர்

சேரிடம் போகாமல் ஆசு வந்தேறாமல்
     சீதளம் பாதாரம் அருள்வாயே

நாரணன் சீராம கேசவன் கூராழி
     நாயகன் பூவாயன் ...... மருகோனே

நார தும்பூர்கீதம் ஓத நின்றேயாடு
     நாடகம் செய் தாளர் அருள்பாலா

சூரணம் கோடாழி போய் கிடந்தேஆட
     சூரியன் தேரோட ...... அயிலேவீ

தூநறும் காவேரி சேருமொள் சீறாறு
     சூழ்கடம்பூர் தேவர் ...... பெருமாளே


(2023 நவம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
























No comments:

Post a Comment