Monday, October 29, 2018

திருவையாறு

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: தஞ்சாவூர் 

திருக்கோயில்: அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில்.

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

தஞ்சாவூரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

Google Maps: Sri Aiyarappar Temple, SH 22, Thiruvaiyaru, Tamil Nadu 613204, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

சொரியு மாமுகிலோ இருளோகுழல்
     சுடர்கொள் வாளிணையோ பிணையோவிழி
          சுரர்தம் ஆரமுதோ குயிலோமொழி ...... இதழ்கோவை

துவரதோ இலவோ தெரியாஇடை
     துகளிலா அனமோ பிடியோநடை
          துணைகொள் மாமலையோ முலை தானென ...... உரையாடிப்

பரிவினால் எனையாளுக நானொரு
     பழுதிலானென வாணுதலாரொடு
          பகடியே படியா ஒழியாஇடர் ...... படுமாயப்

பரவை மீதழியா வகை ஞானிகள்
     பரவு நீள்புகழே அதுவாமிகு
          பரம வீடது சேர்வதும் ஆவதும் ஒருநாளே

கரிய மேனியன் ஆனிரை ஆள்பவன்
     அரிய ராவணை மேல்வளர் மாமுகில்
          கனகன் மார்பது பீறிய வாளரி ...... கனமாயக்

கபடன் மாமுடி ஆறுடன் நாலுமொர்
     கணையினால் நிலமீதுற நூறிய
          கருணை மால்கவி கோப க்ருபாகரன் ...... மருகோனே

திரிபுராதிகள் தூளெழ வானவர்
     திகழவே முனியாஅருள் கூர்பவர்
          தெரிவை பாதியர் சாதியிலாதவர் ...... தருசேயே

சிகர பூதர நீறுசெய் வேலவ
     திமிர மோகர வீர திவாகர
          திருவையாறுறை தேவ க்ருபாகர ...... பெருமாளே

திருப்பாடல் 2:
தனன தானன தான தனத்தன
     தனன தானன தான தனத்தன
          தனன தானன தான தனத்தன ...... தனதான

மருவுலாவிடு ஓதி குலைப்பவர்
     சமர வேலெனும் நீடு விழிச்சியர்
          மனதிலே கபடூரு பரத்தையர் அதிகேள்வர்

மதனனோடுறழ் பூசல்இடைச்சியர்
     இளைஞர் ஆருயிர் வாழு முலைச்சியர்
          மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே

சருவி யாரையும் வாஎனழைப்பவர்
     பொருளிலேவெகு ஆசை பரப்பிகள்
          சகல தோதக மாயை படிப்பரை ...... அணுகாதே

சலச மேவிய பாத நினைத்துமுன்
     அருணை நாடதிலோது திருப்புகழ்
          தணிய ஓகையில்ஓத எனக்கருள் ...... புரிவாயே

அரிய கானக மேவு குறத்திதன்
     இதணிலேசில நாளும் மனத்துடன்
          அடவி தோறுமெ வாழியல்பத்தினி ...... மணவாளா

அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட
     உழவர் சாகரம் ஓடிஒளித்திட
          அமரர் நாடுபொன்மாரி மிகுத்திட ...... நினைவோனே

திருவின் மாமரமார் பழனப்பதி
     அயிலுஞ் சோறவை ஆளும் துறைப்பதி
          திசையில் நான்மறை தேடிய முற்குடி ...... விதியாதிச்

சிரமும் மாநிலம் வீழ் தருமெய்ப்பதி
     பதும நாயகன் வாழ்பதி நெய்ப்பதி
          திருவையாறுடன் ஏழு திருப்பதி ...... பெருமாளே

No comments:

Post a Comment