Monday, October 29, 2018

திருப்பனந்தாள்

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: தஞ்சாவூர் 

திருக்கோயில்: அருள்மிகு அருணஜடேஸ்வரர் திருக்கோயில்.

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், பந்தணைநல்லூரிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது திருப்பனந்தாள். ஞானசம்பந்த மூர்த்தியாலும், அப்பர் சுவாமிகளாலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. 

சிவபரம்பொருள் நெடிதுயர்ந்த பிரமாண்டமான சிவலிங்கத் திருமேனியில் அருணஜடேஸ்வரர் (செஞ்சடையப்பர்) எனும் திருநாமத்திலும், அம்பிகை பெரிய நாயகியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர், காண்பதற்கரிய திருக்கோலம். 

இவ்வாலயத்தில் தாடகை எனும் பக்தைக்காக சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்து விளங்கிய தன்மையினையும், பின்னர் குங்கிலியக் கலய நாயனாரின் அரிய முயற்சியால் இறைவர் மீண்டும் முந்தைய நிலையில் எழுந்தருளிய அற்புத நிகழ்வினையும் பெரிய புராணம் விவரித்துப் போற்றுகின்றது. 

தருமை ஆதீனத் திருக்கோயில். விசாலமான ஆலய வளாகம், கடந்த வருடம் நடந்தேறியிருந்த கும்பாபிஷேக நிகழ்வினால் ஆலயம் முழுமையுமே புதுப் பொலிவுடன் மிளிர்கின்றது. 

திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களுடன், இரு தேவியரும் உடன் எழுந்தருளியிருக்க, மயிலருகில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமானார் இம்மூர்த்தியை ஒரு திருப்புகழ் திருப்பாடலால் போற்றிப் பரவியுள்ளார்.

(Google Maps: Shri Arunajadeswarar Temple, Sannathi Street, Thirupananthal, Tamil Nadu 612504, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தந்தா தத்தன தந்தா தத்தன
     தந்தா தத்தன ...... தனதான

கொந்தார் மைக்குழல் இந்தார் சர்க்கரை
     என்றே செப்பிய ...... மொழிமாதர்

கொங்கார் முத்து வடந்தான் இட்ட!த
     னந்தான் இத்தரை ...... மலைபோலே

வந்தே சுற்றி வளைந்தால் அற்ப!ம
     னந்தான் இப்படி ...... உழலாமல்

மங்கா நற்பொருள் இந்தா அற்புதம்
     என்றே இப்படி ...... அருள்வாயே

இந்தோடக் கதிர் கண்டோடக் கடம் 
     மண்டா நற்றவர் ...... குடியோட

எங்கே அக்கிரி எங்கே இக்கிரி
     என்றே திக்கென ...... வருசூரைப்

பந்தாடித்தலை விண்டோடக் களம்
     வந்தோரைச் சில ...... ரணகாளிப்

பங்காகத்தரு கந்தா மிக்க!ப
     னந்தாள் உற்றருள் ...... பெருமாளே


(2024 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

































No comments:

Post a Comment