(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)
மாவட்டம்: தஞ்சாவூர்
திருக்கோயில்: அருள்மிகு தயாநிதீஸ்வரர் (அழகு சடைநாதர்) திருக்கோயில்.
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
திருவையாறிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலம். இராமாயண வாலி வழிபட்டுப் பேறு பெற்றுள்ள திருத்தலம். ஞானசம்பந்த மூர்த்தியால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது,
(ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரையடை குரங்காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளார் இடமென விரும்பினாரே
சிவபரம்பொருள் தயாநிதீஸ்வரர் எனும் திருநாமத்திலும், அம்பிகை ஜடாமகுட நாயகியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர்.
வெளிப்பிரகாரச் சுற்றின் பின்புறம் நம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களுடன், இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இம்மூர்த்தியை 3 திருப்பாடல்களால் போற்றிப் பரவுகின்றார்.
Sri Dayanidheeswarar Shiva Temple, SH 22, Vadakurangaduthurai, Tamil Nadu 614202, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்
தனந்தான தனத்தனனத் ...... தனதான
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு !முகத்தழகிற்
கசைந்தாடு குழைக்கவசத் திரள்தோளும்
அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்த !கரத்
தணிந்தாழி வனைக்கடகச் ...... சுடர்வேலும்
சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச்
சிவந்தேறி மணத்தமலர்ப் ...... புனைபாதம்
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
தினந்தோறும் நடிப்பதுமற் ...... புகல்வேனோ
இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி அழற்!புகையிட்
டிளந்தாது மலர்த்திருவைச் ...... சிறைமீளும்
இளங்காள முகில் கடுமைச் சரங்கோடு !கரத்திலெடுத்
திருங்கான நடக்கும் அவற்கினியோனே
குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை அழிக்கமுனைக்
கொடுந்தாரை வெயிற்கயிலைத் ...... தொடும்வீரா
கொழுங்காவின் மலர்ப்பொழிலில் கரும்பாலை புணர்க்குமிசைக்
குரங்காடுதுறைக் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனத்தனந் தான தனதன
தனத்தனந் தான தனதன
தனத்தனந் தான தனதன ...... தனதான
குறித்த நெஞ்சாசை விரகிகள்
நவிற்று சங்கீத மிடறிகள்
குதித்தரங்கேறு நடனிகள் ...... எவரோடும்
குறைப்படும் காதல் குனகிகள்
அரைப்பணம் கூறு விலையினர்
கொலைக்கொடும் பார்வை நயனிகள் ...... நகரேகை
பொறித்த சிங்கார முலையினர்
வடுப்படும் கோவை இதழிகள்
பொருள் தினம் தேடு கபடிகள் ...... தவர்சோரப்
புரித்திடும் பாவ சொருபிகள்
உருக்கு சம்போக சரசிகள்
புணர்ச்சி கொண்டாடு மருளது ...... தவிர்வேனோ
நெறித்திருண்டாறு பதமலர்
மணத்த பைங்கோதை வகைவகை
நெகிழ்க்கும் மஞ்சோதி வனசரி ...... மணவாளா
நெருக்கும் இந்த்ராதி அமரர்கள்
வளப்பெரும் சேனையுடையவர்
நினைக்கும்என் போலும் அடியவர் ...... பெருவாழ்வே
செறித்த மந்தாரை மகிழ்புனை
மிகுத்ததண் சோலை வகைவகை
தியக்கியம்பேறு நதியது ...... பலவாறும்
திரைக்கரங்கோலி நவமணி
கொழித்திடும் சாரல் வயலணி
திருக்குரங்காடு துறையுறை ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனந்த தனத்தான தனந்த தனத்தான
தனந்த தனத்தான ...... தனதான
குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார
வடங்கள் அசைத்தார ...... செயநீலம்
குதம்பை இடத்தேறு வடிந்த குழைக்காது
குளிர்ந்த முகப்பார்வை ...... வலையாலே
உடம்பும் அறக்கூனி நடந்து மிகச்சாறி
உலந்து மிகக்கோலும் அகலாதே
உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனும்
உரங்கொள பொற்பாதம் அருள்வாயே
விடங்கள் கதுப்பேறு படங்கண் நடித்தாட
விதங்கொள் முதற்பாயல் உறைமாயன்
விலங்கை முறித்தோடி இடங்கள் வளைத்தேறு
விளங்கு முகிற்கான ...... மருகோனே
தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை
தழங்கும் இயல்பாடி ...... அளிசூழத்
தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு
தலங்கள் இசைப்பான ...... பெருமாளே
(2024 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment