Monday, October 29, 2018

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: தஞ்சாவூர் 

திருக்கோயில்: அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில்.

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருவையாறிலிருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

Google Maps: Sri Neyyadiyappar Temple, அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில் தில்லைஸ்தானம் அஞ்சல் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613203, Thillaisthanam, Tamil Nadu 613203, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனனத் தானத் தனதன தனதன
     தனனத் தானத் தனதன தனதன
          தனனத் தானத் தனதன தனதன ...... தனதான

முகிலைக் காரைச் சருவிய குழலது
     சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர
          முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் ...... முகம்வேர்வ

முனையில் காதிப் பொருகணை இனையிள
     வடுவைப் பானல் பரிமள நறையிதழ்
          முகையைப் போலச் சமர்செயும் இருவிழி ...... குழைமோதத்

துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ்
     பருகிக் காதல் துயரற வளநிறை
          துணை பொற்தோளில் குழைவுற மனமது ...... களிகூரச்

சுடர்முத்தாரப் பணியணி ம்ருகமத
     நிறைபொன் பாரத்திளகிய முகிழ்முலை
          துவளக் கூடித் துயில்கினும் உனதடி ...... மறவேனே

குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென
     திமிதித் தீதித் திமிதியென் முரசொடு
          குழுமிச் சீறிச் சமர்செயும் அசுரர்கள் ...... களமீதே

குழறிக் கூளித் திரளெழ வயிரவர்
     குவியக் கூடிக் கொடுவர அலகைகள்
          குணலிட்டாடிப் பசிகெட அயில்விடு ...... குமரேசா

செகசெச் சேசெச் செகவென முரசொலி
     திகழச் சூழத் திருநடமிடுபவர்
          செறிகண் காளப் பணியணி இறையவர் ...... தருசேயே

சிகரப் பாரக் கிரியுறை குறமகள்
     கலசத் தாமத் தனகிரி தழுவிய
          திருநெய்த்தானத்துறைபவ சுரபதி ...... பெருமாளே.

No comments:

Post a Comment