(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)
மாவட்டம்: தஞ்சாவூர்
திருக்கோயில்: அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்.
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறிலிருந்து 4 கி.மீ தொலைவிலும், திருநெய்த்தானத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது பெரும்புலியூர்.
புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் பூசித்துப் பேறு பெற்றுள்ள திருத்தலம். சிவபரம்பொருள் வியாக்ரபுரீஸ்வரராகவும், அம்பிகை சௌந்தர நாயகியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர்.
ஞானசம்பந்த மூர்த்தி இத்தலத்திற்கென ஒரு திருப்பதிகத்தை அருளிச் செய்துள்ளார்,
-
மண்ணுமோர் பாகமுடையார் மாலுமோர் பாகமுடையார்
விண்ணுமோர் பாகமுடையார் வேதமுடைய விமலர்
கண்ணுமோர் பாகமுடையார் கங்கை சடையில் கரந்தார்
பெண்ணுமோர் பாகமுடையார் பெரும்புலியூர் பிரியாரே
முருகப் பெருமான் பிரகாரச் சுற்றின் பின்புறம் இரு தேவியரோடு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.
(இங்கு மாலையில் மட்டுமே அர்ச்சகர் வருகின்றார். காலை வேளைகளில் திருக்கோயில் அறங்காவலரே அர்ப்பணிப்போடு திருமஞ்சனம்; தீபாராதனை கைங்கர்யங்களைப் புரிந்து வருகின்றார். சுவாமி; அம்பாள்; திருநந்திதேவர்; விநாயகப் பெருமான் ஆகியோருக்கு மட்டுமே நித்ய திருமஞ்சனம் என்றும், முருகப் பெருமான் உள்ளிட்ட ஏனைய 55 திருச்சன்னிதிகளுக்கும் (மாதத்தில்) என்றேனும் ஒரு நாள் திருமஞ்சனம் நடந்தேறினாலே அரிது என்றறிந்து மிக வருந்தினோம்.
அறங்காவலரிடம் அன்றைய தினம் அவசியம் தேவியருடன் கூடிய குமரக் கடவுளுக்கு திருமஞ்சனமும், அபிஷேகமும் செய்துவிக்குமாறு கேட்டுக் கொண்டு அதற்கான பொருளையும் சமர்ப்பித்தோம்)
Google Maps: NCN053 - viyakkrapureeswarar Perumbuliyur Shiva Temple, Perumbuliyur, Tamil Nadu 613204, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனந்தனன தானத் தனந்தனன தானத்
தனந்தனன தானத் ...... தனதான
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
சரங்களொளி வீசப் ...... புயமீதே
தனங்கள் குவடாடப் படர்ந்தபொறி மால்பொற்
சரங்கள்மறி காதில் ...... குழையாட
இதங்கொள் மயிலேர்ஒத்துகந்த நகை !பேசுற்
றிரம்பை அழகார் மைக் ...... !குழலாரோ
டிழைந்தமளியோடுற்றழுந்தும் எனை !நீசற்
றிரங்கி இரு தாளைத் ...... தருவாயே
சிதம்பர குமாரக் கடம்பு தொடையாடச்
சிறந்தமயில் மேலுற்றிடுவோனே
சிவந்த கழுகாடப் பிணங்கள்மலை சாயச்
சினந்தசுரர் வேரைக் ...... களைவோனே
பெதும்பையெழு கோலச் செயங்கொள் சிவகாமிப்
ப்ரசண்ட அபிராமிக்கொருபாலா
பெரும் புனமதேகிக் குறம்பெணொடு கூடிப்
பெரும்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே
No comments:
Post a Comment