Saturday, October 27, 2018

சிதம்பரம் - மேற்கு கோபுர வாயில்:

 (சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)

திருப்புகழ் குறிப்புகள்

தாண்டக வேந்தரான நம் அப்பர் சுவாமிகள் (அடியவர்கள் எதிர்கொள்ள) ஆடல்வல்லானை வழிபடச் சென்ற சிறப்புப் பொருந்தியது இம்மேலை வாயில். இந்நிகழ்வினைக் குறிக்கும் சுதைச் சிற்பத்தினை இத்திருவாயில் சுவற்றில் தரிசித்து மகிழலாம்.
-
(அப்பர் தேவாரத் திருப்பாடல் - தில்லை)
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்பொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!!!

மேற்கு வாயிலின் வெளிப்புறத்தில் கற்பக விநாயகப் பெருமான் எழுந்தருளி இருக்கின்றார். அருணகிரியார் 'கைத்தருண சோதி அத்திமுக வேத கற்பக சகோதரப் பெருமாள் காண்' என்று இம்மூர்த்தியைப் போற்றுவார். 

மேற்கு வாயிலின் உட்புறத்தில், இடது பக்கத்தில், கோபுரத்தின் மீதிலேயே, சிறு திருமேனியராய்; மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் வெற்றி வேலாயுதப் பெருமாள் எழுந்தருளி இருக்கின்றான். காண்பதற்கரிய அற்புதத் திருக்காட்சி (இப்பதிவில் இணைத்துள்ள 3ஆவது படத்தில் இம்மூர்த்தியைத் தரிசிக்கலாம்).

மேற்கு வாயிலின் உட்புறத்தில், வலது பக்கத்தில், தனிக்கோயிலொன்றில் குமாரக் கடவுள் ஆறு திருமுகங்களும்; பன்னிரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், நெடிதுயர்ந்த திருமேனியில் எழுந்தருளி இருக்கின்றான். நவவீரர்கள்; பிரமன்; சரஸ்வதி திருச்சன்னிதிகளும் இங்கு உண்டு. திருப்புகழ் மாமுனிவரான நம் அருணகிரிப் பெருமான் நின்ற திருக்கோலத்தில், சிறிய திருமேனியராய்; கூப்பிய திருக்கரங்களோடு எழுந்தருளி இருக்கின்றார். 

மேற்கு கோபுர வாயிலில் எழுந்தருளியுள்ள மயில்வாகனக் கடவுளுக்கு அருணகிரியார் 4 திருப்புகழ் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார். வள்ளி மணாளளின் திருமுன்பு, இத்திருப்பாடல்களைப் பாராயணம் புரிந்து வணங்குதல் சிறப்பு

மேற்கு வாயில் திருப்புகழ்:


(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


(திருப்பாடல் 1)
தானத் தானன தானன தானன
   தானத் தானன தானன தானன
      தானத் தானன தானன தானன ...... தனதான

ஆரத்தோடணி மார்பிணை யானைகள்
   போருக்காமென மாமுலையே கொடு
      ஆயத் தூசினை மேவிய நூலிடை ...... மடமாதர்

ஆலைக் கோதினில் ஈரமிலா மன
   நேசத்தோடுறவானவர் போலுவர்
      ஆருக்கே பொருளாம் எனவே நினைவதனாலே

காருக்கே நிகராகிய ஓதிய
   மாழைத் தோடணி காதொடு மோதிய
      காலத் தூதர்கை வேலெனு(ம்) நீள்விழி ...... வலையாலே

காதல் சாகர மூழ்கிய காமுகர்
   மேலிட்டேஎறி கீலிகள் நீலிகள்
      காமத்தோடுறவாகையிலா அருள் ...... புரிவாயே

சூரர்க்கே ஒரு கோளரியாம் என
   நீலத் தோகை மயூரம்அதேறிய
      தூளிக்கே கடல் தூர நிசாசரர் ...... களமீதே

சோரிக்கே வெகு ரூபமதாய்அடு
   தானத் தானன தானன தானன
      சூழிட்டே பல சோகுகள்ஆடவெ ...... பொரும்வேலா

வீரத்தால் வல ராவணனார்முடி
   போகத்தான்ஒரு வாளியை ஏவிய
      மேகத்தே நிகராகிய மேனியன் ...... மருகோனே

வேதத்தோன் முதலாகிய தேவர்கள்
   பூசித்தே தொழ வாழ் புலியூரினில்
      மேலைக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.

(திருப்பாடல் 2)
தானத் தான தத்த தானத் தான தத்த
     தானத் தான தத்த ...... தனதான

காதைக் காதி மெத்த மோதிக் கேள்வியற்ற
     காமப் பூசலிட்டு ...... மதியாதே

கார்ஒத்தேய் நிறத்த ஓதிக் காவனத்தின் 
     நீழற்கே தருக்கி ...... விளையாடிச்

சேதித்தே கருத்தை நேருற்றே பெருத்த
     சேலொத்தே வருத்தும் ...... விழிமானார்

தேமல் பார வெற்பில் மூழ்கித் தாபமிக்க
     தீமைக்காவி தப்ப ...... நெறிதாராய்

மாதைக் காதலித்து வேடக் கானகத்து
     வாசத் தாள்சிவப்ப ...... வருவோனே

வாரிக்கே ஒளித்த மாயச் சூரை வெட்டி
     மாளப் போர் தொலைத்த ...... வடிவேலா

வீதித்தேர் நடத்து தூள்அத்தால் அருக்கன்
     வீரத்தேர் மறைத்த ...... புலியூர்வாழ்

மேலைக் கோபுரத்து மேவிக் கேள்வி மிக்க
     வேதத்தோர் துதித்த ...... பெருமாளே.

(திருப்பாடல் 3):
தய்ய தானத் தானன தானன
   தய்ய தானத் தானன தானன
      தய்ய தானத் தானன தானன ...... தனதான

கொள்ளை ஆசைக்காரிகள் பாதக
   வல்ல மாயக்காரிகள் சூறைகள்
      கொள்ளும் ஆயக்காரிகள் வீணிகள் ...... விழியாலே

கொல்லும் லீலைக்காரிகள் யாரையும்
   வெல்லும் மோகக்காரிகள் சூதுசொல்
      கொவ்வை வாய் நிட்டூரிகள் மேல்விழும் அவர்போலே

உள்ள நோவைத்தே உறவாடியர்
   அல்லை நேரொப்பா மனதோஷிகள்
      உள் விரோதக்காரிகள் மாயையில் உழல்நாயேன்

உய்யவே பொற்தோள்களும் ஆறிரு
   கையு(ம்) நீபத்தார் முகம்ஆறு முன்
      உள்ள ஞானப் போதமும் நீதர ...... வருவாயே

கள்ள மாயத் தாருகன் மாமுடி
   துள்ள நீலத் தோகையின் மீதொரு
      கையின் வேல் தொட்டேவிய சேவக ...... முருகோனே

கல்லிலே பொற்தாள் படவேஅது
   நல்ல ரூபத்தே வர கானிடை
      கெளவை தீரப் போகும் இராகவன் ...... மருகோனே

தெள்ளி ஏமுற்றீரம் முனோதிய
   சொல் வழாமல் தானொரு வானுறு
      செல்வி மார்பில் பூஷணமாய் அணை ...... மணவாளா

தெள்ளும் ஏனல் சூழ்புன மேவிய
   வள்ளி வேளைக்கார மனோகர
      தில்லை மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே.

(திருப்பாடல் 4):
தான தானன தனனா தானன
     தான தானன தனனா தானன
          தான தானன தனனா தானன ...... தனதான

தாது மாமலர் முடியாலே!பத
     றாத நூபுர அடியாலே கர
          தாளமாகிய நொடியாலே மடி ...... பிடியாலே

சாடை பேசிய வகையாலே மிகு
     வாடை பூசிய நகையாலே பல
          தாறுமாறு சொல் மிகையாலேஅன ...... நடையாலே

மோதி மீறிய முலையாலே முலை
     மீதிலேறிய கலையாலே வெகு
          மோடி நாணய விலையாலே மயல் ...... தரு மானார்

மோக வாரிதி தனிலே நாள்தோறும் 
     மூழ்குவேன் உனதடியாராகிய
          மோன ஞானிகளுடனே சேரவும் அருள்வாயே

காதலாய்அருள் புரிவாய் நான்மறை
     மூலமே எனவுடனே மாகரி
          காண நேர்வரு திருமால் நாரணன் ...... மருகோனே

காதல் மாதவர் வலமே சூழ்சபை
     நாதனார் தமதிடமே வாழ்!சிவ
          காம நாயகி தருபாலா புலிசையில் வாழ்வே

வேத நூல்முறை வழுவாமே தினம்
     வேள்வியால்எழில் புனை மூவாயிர
          மேன்மை வேதியர் மிகவே பூசனை ...... புரிகோவே

வீறு சேர்வரை அரசாய் மேவிய
     மேரு மால்வரை எனநீள் கோபுர
          மேலை வாயிலின் மயில் மீதேறிய ...... பெருமாளே.


மேற்கு கோபுர வாயில் காட்சிகள்
















No comments:

Post a Comment