Saturday, October 27, 2018

சிதம்பரம் - தெற்கு கோபுர வாயில்:

 (சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)

திருப்புகழ் குறிப்புகள்

ஞானசம்பந்தப் பெருமான் (அடியவர்கள் எதிர்கொள்ள) சென்று வழிபட்ட சிறப்புப் பொருந்திய திருவாயில். இந்நிகழ்வினைக் குறிக்கும் சுதைச் சிற்பத்தினை இத்திருவாயில் சுவற்றில் தரிசித்து மகிழலாம்.
-
(திருஞானசம்பந்தர் தேவாரத் திருப்பாடல்)
ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்; அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய்; இடமா நறும் கொன்றை நயந்தவனே;
பாடினாய் மறையோடு பல்கீதமும்; பல்சடைப் பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாய்; அருளாய் சுருங்கஎம் தொல்வினையே

தெற்கு வாயிலின் உட்புறத்தில் நம் வேலவன் தனிசன்னிதியொன்றில், ஆறு திருமுகங்களும்; பன்னிரு திருக்கரங்களுமாய், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் (தேவியர் இல்லாமல்) தனியே எழுந்தருளி இருக்கின்றான். நெடிதுயர்ந்த திருமேனியில் இம்மூர்த்தியின் திருக்கோல தரிசனம் காண்பதற்கரிய திருக்காட்சியாக அமைந்துள்ளது.  

அருணகிரிப் பெருமான் 'தெற்குக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே' என்று இம்மூர்த்தியைப் பணிந்தேத்துகின்றார். இங்கு குமாரக் கடவுளின் திருமுன்பு, இவ்வாயிலுக்கென அமைந்துள்ள திருப்பாடலைப் பாராயணம் புரிந்து வணங்குதல் சிறப்பு.

தெற்கு வாயில் திருப்புகழ்:


(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தத்தத் தானன தானன தானன
     தத்தத் தானன தானன தானன
          தத்தத் தானன தானன தானன ...... தனதான
-
அக்குப் பீளை முளாஇளை !மூளையொ
     டுப் புக்காய்பனி நீர்மயிர் !தோல்குடி 
          லப் புச்சீ புழுவோடடையார் தசை ...... உறமேவி
-
அத்திப் பால்பல நாடிகுழாயள்!வ
     ழுப்புச் சார்வலமே விளை ஊளைகொள் 
          அச்சுத் தோல்குடிலாம் அதிலே பொறி ...... விரகாளர்
-
சுக்கத்தாழ் கடலே சுகமாம்என
     புக்கிட்டாசை பெணாசை மணாசைகள்
          தொக்குத் தீவினை ஊழ்வினை காலமொடதனாலே
-
துக்கத்தே பரவாமல் சதாசிவ
     முத்திக்கே சுகமாக பராபர
          சொர்க்கப் பூமியிலேறிடவே பதம் அருள்வாயே
-
தக்கத் தோகிட தாகிட தீகிட
     செக்கச் சேகண தாகண தோகண
          தத்தத் தானன டீகுட டாடுடு ...... எனதாளம் 
-
தத்திச் சூரர் குழாமொடு தேர்பரி
     கெட்டுக் கேவலமாய் கடல் மூழ்கிட
          சத்திக்கே இரையாம்எனவே விடு ...... கதிர்வேலா
-
திக்கத் தோகண தாவெனவே பொரு
     சொச்சத் தாதையர் தாமெனவே திரு
          செக்கர்ப் பாதமதே பதியா சுதி ...... அவைபாடச்
-
செம்பொன் பீலியுலா மயில் மாமிசை
     பக்கத்தே குறமாதொடு சீர்பெறு
          தெற்குக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.


தெற்கு கோபுர வாயில் காட்சிகள்:















No comments:

Post a Comment