Saturday, October 27, 2018

சிதம்பரம் கோபுர வாயில் - பொதுத் திருப்பாடல்கள்:

 (சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)

திருப்புகழ் குறிப்புகள்

தில்லைப் பரம்பொருளான நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள சிதம்பரத் திருக்கோயிலின் நான்கு கோபுர வாயில்களுக்கென அமைந்துள்ள தனித்தனி திருப்பாடல்களைக் கடந்த 4 பதிவுகளில் சிந்தித்து மகிழ்ந்தோம். இனி இப்பதிவில் 'எத்திசை கோபுர வாயில்' என்று குறிக்காமல் பொதுவாக 'கோபுரத்தமர்ந்த பெருமாளே' என்று அருணகிரியார் போற்றிப் பரவும் திருப்பாடல்களைச் சிந்திப்போம்.
-
(1) 'முல்லைமலர் போலும்' என்று துவங்கும் திருப்புகழில் 'தில்லைநகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு பெருமாளே' என்று போற்றுகின்றார். 

(2) 'அடப்பக்கம் பிடித்துத் தோளொடு' என்று துவங்கும் திருப்புகழில் 'திருச்சிற்றம்பலத்துள் கோபுர மேவிய பெருமாளே' என்று பணிந்தேத்துகின்றார். 

(3) 'வாத பித்தமொடு சூலை' என்று துவங்கும் திருப்புகழில் 'ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே' என்று உளமுருகத் துதிக்கின்றார்.

(4) 'நீல மாமுகில் போலும்' என்று துவங்கும் திருப்புகழில், நாலு வாயில்களுக்கும் பொதுவாக 'நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே' என்று நயம்படப் போற்றிப் பணிகின்றார்.

'எந்த கோபுர வாயில்' என்று குறிக்கப் பெறாமையால், தில்லைத் திருக்கோயில் வளாகத்தின் எப்பகுதியில் அமர்ந்திருந்தும் மேற்குறித்துள்ள திருப்பாடல்களைப் பாராயணம் புரிந்து மகிழலாம். 

சிவகாமியம்மை திருச்சன்னிதிக்குச் செல்லும் வழியில், நான்கு கோபுர வாயில்களையும் ஒருசேர தரிசிப்பதெற்கென ஒரு இடம் குறிக்கப் பெற்றுள்ளது. இங்கிருந்த வண்ணமே நம் அருணகிரியார் 'நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே' என்று போற்றியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 

ஆதலின் இவ்விடத்திற்கு அருகாமையில், 4 வாயில்களையும் தரிசித்தவாறே மேற்குறித்துள்ள 4 திருப்பாடல்களையும் பாராயணம் புரிவது சிறப்பு. 

கோபுர வாயில் - பொதுத் திருப்புகழ்:


திருப்பாடல் 1:
தய்யதன தானனத் தானனந் தானதன
     தய்யதன தானனத் தானனந் தானதன
          தய்யதன தானனத் தானனந் தானதன ...... தனதான

முல்லைமலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை
     வள்ளைகொடி போலுநற் காதிலங்காடு குழை
          முல்லைமலர் மாலைசுற்றாடு கொந்தாருகுழல் அலைபோதம்

மொள்குசிலை வாணுதற் பார்வை அம்பான கயல்
     கிள்ளை குரலார் இதழ்ப் பூவெனும் போதுமுகம் 
          முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காயமுலை ...... மலையானை

வல்ல குவடாலிலைப் போலு சந்தான!வயி
     றுள்ளதுகில் நூலிடைக் காமபண்டார அல்குல்
          வழ்ழை தொடையார் மலர்க் கால்அணிந்தாடு பரிபுரஓசை

மல்லி சலியாட பட்டாடை கொண்டாட மயல்
     தள்ளுநடையோடு சற்றே மொழிந்தாசை கொடு
          வல்லவர்கள் போலபொற் சூறைகொண்டார்கள் மயல் உறவாமோ

அல்லல்வினை போகசத்தாதி விண்டோட நய 
     உள்ளம்உறவாக வைத்தாளும் எந்தாதை மகிழ் 
          அள்அமைய ஞானவித்தோது கந்தா குமர ...... முருகோனே

அன்னநடையாள் குறப் பாவை பந்தாடுவிரல்
     என்னுடைய தாய்வெண் முத்தார் கடம்பாடுகுழல்
          அன்னைவலி சேர்தனக் கோடிரண்டான வளி ...... மணவாளா

செல்லுமுக ஏழ்கடல் பாழி விண்டோடதிர
     வல்லசுரர் சேனை பட்டே மடிந்தே குருதி
          செல்லதிசையோடு விட்டாடு சிங்காரமுக ...... வடிவேலா

தெள்ளுதமிழ் பாடியிட்டாசை கொண்டாட சசி
     வல்லியொடு கூடி திக்கோர்கள் கொண்டாடஇயல்
          தில்லைநகர் கோபுரத்தே மகிழ்ந்தேகுலவு ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனத்தத் தந்தனத்தத் தானன தானன
     தனத்தத் தந்தனத்தத் தானன தானன
          தனத்தத் தந்தனத்தத் தானன தானன ...... தனதான

அடப்பக்கம் பிடித்துத் தோளொடு தோள்பொர
     வளைத்துச் செங்கரத்தில் சீரொடு பாவொடு
          அணுக்கிச் செந்துணுக்கில் கோஇதழூறல்கள் அதுகோதி

அணிப்பொன் பங்கயத்துப் பூண்முலை மேகலை
     நெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபணமேஎன
          அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்கள் உறவோடே

படிச்சித்தம் களித்துத் தான்மிக மாயைகள்
     படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள
          பசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிகள் அவமாயப்

பரத்தைக் குண்டுணர்த்துத் தோதக பேதைகள்
     பழிக்குள் சஞ்சரித்துப் போடிடு மூடனை
          பரத்துற்றண் பதத்துப் போதகம் ஈதென ...... அருள் தாராய்

தடக்கைத் தண்டெடுத்துச் சூரரை வீரரை
     நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழ
          தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண ...... கலைவீரா

தகட்டுப் பொன்சுவட்டுப் பூஅணை மேடையில்
     சமைப்பித்தங்கொருத்திக் கோதில மாமயில்
          தனிப்பொற் பைம்புனத்தில் கோகில மாவளி ...... மணவாளா

திடத்தில் திண்பொருப்பைத் தோள்கொடு சாடிய
     அரக்கத் திண்குலத்தைச் சூறைகொள் வீரிய
          திருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர் ...... அறியாமல்

திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய
     சமர்த்தர்ப் பொன்புவிக்குள் தேவர்கள் நாயக
          திருச்சிற்றம்பலத்துள் கோபுர மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தான தத்ததன தான தத்ததன
     தான தத்ததன தான தத்ததன
          தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான

வாத பித்தமொடு சூலை விப்புருதி
     ஏறு கற்படுவன் ஈளை பொக்கிருமல்
          மாலை புற்றெழுதல் ஊசல் பற்சனியொடந்தி மாலை

மாசடைக் குருடு காதடைப்பு !செவி
     டூமை கெட்டவலி மூல முற்றுதரு
          மாலையுற்ற தொணுறாறு தத்துவர்கள் உண்ட காயம்

வேத வித்துபரி கோலமுற்று!விளை
     யாடு வித்த கடலோட மொய்த்தபல
          வேடமிட்டு பொருளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே

வீடு கட்டி மயலாசை பட்டுவிழ
     ஓசை கெட்டு மடியாமல் முத்திபெற
          வீடளித்து மயிலாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ

ஓத அத்தி முகிலோடு சர்ப்பமுடி
     நீறு பட்டலற சூர !வெற்பவுண
          ரோடு பட்டுவிழ வேலை விட்டபுகழ் அங்கிவேலா

ஓநமச்சிவய சாமி சுத்த!அடி
     யார்களுக்கும் உபகாரி பச்சையுமை
          ஓர்புறத்தருள் சிகாமணிக் கடவுள் ...... தந்தசேயே

ஆதி கற்பக விநாயகர்க்கு!பிற
     கான பொற்சரவணா பரப்பிரமன் 
          ஆதி உற்றபொருள் ஓதுவித்தமை அறிந்தகோவே

ஆசை பெற்றகுற மாதை நித்தவனம் 
     மேவிசுத்த மணம்ஆடி நற்புலியுர் 
          ஆடகப் படிக கோபுரத்தின்மகிழ் ...... தம்பிரானே.

(திருப்பாடல் 4)
தான தானன தான தானன
   தான தானன தான தானன
      தான தானன தான தானன ...... தனதான

நீல மாமுகில் போலும் வார்!குழ
   லார்கள் மாலை குலாவ வேல்கணை
      நீள வாள்விழி பார்வை காதிரு ...... குழையாட

நீடு மார்பணி ஆட ஓடிய
   கோடு போல் இணையாட நூலிடை
      நேச பாளித சோலை மாமயில் எனஏகிக்

காலில் நூபுர ஓசை கோவென
   ஆடி மால்கொடு நாணியே வியர்
      காயமோடணு பாகு பால்மொழி ...... விலைமாதர்

காதலாய் அவரோடு பாழ்வினை
   மூழ்கிஏழ் நரகாழு மூடனை
      காரிர் பாருமையா சிவாபதம் அருள்வாயே

கோல மாமயிலேறி வார்!குழை
   யாட வேல்கொடு வீர வார்கழல்
      கோடி கோடிடிஓசை போல்மிக ...... மெருதூளாய்க்

கோடு கோவென ஆழி பாடுகள்
   தீவு தாடசுரார் குழாமொடு
      கூளமாக விணோர்கள் வாழ்வுற ...... விடும்வேலா

நாலு வேதம் உடாடு வேதனை
   ஈண கேசவனார் சகோதரி
      நாதர் பாகம் விடாள் சிகாமணி ...... உமைபாலா

ஞான பூமியதான பேர்!புலி
   யூரில் வாழ் தெய்வயானை மானொடு
      நாலு கோபுர வாசல் மேவிய ...... பெருமாளே









No comments:

Post a Comment