(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)
மாவட்டம்: தஞ்சாவூர்
திருக்கோயில்: அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்.
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது சுவாமிமலை. சிவகுமரனின் அறுபடை வீட்டுத் தலங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுவது. திருவேரகம்; குருமலை எனும் திருப்பெயர்களால் அருணகிரியார் போற்றிப் பரவும் பரம புண்ணிய ஷேத்திரம்.
மிக விசாலமான ஆலய வளாகம், அடிவாரக் கோயிலில் மீனாட்சி அம்மையும் , சொக்கநாதப் பரம்பொருளும் எழுந்தருளி இருக்கின்றனர். இங்கிருந்து 60 படிகள் மேலேறிச் சென்று மலைக் கோயிலைத் தரிசிக்கலாம். எண்ணிறந்த திருச்சன்னிதிகளோடு கூடிய அற்புத திருத்தலம்.
மலைக்கோயிலில் வேலாயுதக் கடவுள் தண்டமேந்திய திருக்கோலத்தில் சிவகுருநாதனாய் எழுந்தருளி இருக்கின்றான். நெடிதுயர்ந்த திருக்கோலம், அபிஷேக காலங்களில் இடையில் கௌபீனம் போன்றதொரு சிறு இடைக் கவசத்துடன் மட்டுமே திருக்காட்சி தருவதால், இச்சமயங்களில் சுவாமிநாதப் பெருமானின் திருமேனி வடிவழகினை முழுவதுமாய்த் தரிசித்துச் சிவானந்த வெள்ளத்தில் அமிழ்ந்துத் திளைக்கலாம், காண்பதற்கரிய திருக்காட்சி.
அருணகிரியார் இம்மூர்த்திக்கு 38 திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார் (40 திருப்பாடல்கள் என்று 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியர் சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் குறித்துள்ளார்கள். பதிப்புகளில் உள்ள வேறுபாடு காரணமாக இருக்கக் கூடும். விடுபட்டுள்ளவை எவை என்று கண்டறிதல் வேண்டும்).
(Google Maps: Swamimalai Murugan Temple Rd, Swamimalai, Kumbakonam, Tamil Nadu 612302, India)
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 39.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதனன தானந் ...... தனதானா
அவாமருவினா வசுதை காணு மடவாரெனும்
அவார் கனலில் வாழ்வென்றுணராதே
அராநுகர வாதையுறு தேரைகதி நாடும்
அறிவாகியுள மால் கொண்டதனாலே
சிவாயஎனும் நாமம் ஒருகாலும் நினையாத!தி
மிராகரனை வா என்றருள்வாயே
திரோத மலமாறும் அடியார்கள் அருமாதவர்
தியானமுறு பாதம் ...... தருவாயே
உவாஇனிய கானுவில் நிலாவும் மயில் வாகனம்
உலாசமுடன் ஏறும் ...... கழலோனே
உலாஉதய பாநுசத கோடிஉருவான!ஒ
ளிவாகும் அயில் வேல் அங்கையிலோனே
துவாதச புயாசல ஷடாநந வரா!சிவ
சுதா எயினர் மான் அன்புடையோனே
சுராதிபதி மால்அயனு மாலொடு சலாமிடும்
சுவாமிமலை வாழும் ...... பெருமாளே
திருப்பாடல் 2:
தானதன தந்த தானன தானதன தந்த தானன
தானதன தந்த தானன ...... தனதான
ஆனனம் உகந்து தோளொடு தோளிணை கலந்து பாலன
ஆரமுது கண்டு தேனென ...... இதழூறல்
ஆதரவின் உண்டு வேல்விழி பூசலிட நன்று காணென
ஆனை உரமெங்கும் மோதிட ...... அபிராம
மானனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடமில்
மாயும் மனுஇன்ப ஆசையதறவே உன்
வாரிஜ பதங்கள் நாயடியேன் முடிபுனைந்து போதக
வாசகம் வழங்கி ஆள்வதும் ஒருநாளே
ஈனஅதி பஞ்ச பாதக தானவர் ப்ரசண்ட சேனைகள்
ஈடழிய வென்று வானவர் ...... குலசேனை
ஏவல்கொளும் இந்த்ர லோக வசீகர அலங்க்ருதாகர
ராசதமறிந்த கோமள ...... வடிவோனே
சோனைசொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறிரு
தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே
சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொனிஞ்சி சூழ்தரு
ஸ்வாமிமலை நின்றுலாவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தானான தனதனத் தான தனதன
தானான தனதனத் தான தனதன
தானான தனதனத் தான தனதன ...... தந்ததான
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
மாமாய இருளும்அற்றேகி பவமென
ஆகாச பரமசிற்சோதி பரையை அடைந்துளாமே
ஆறாறின் அதிகம்அக்க்ராயம் அநுதினம்
யோகீசர் எவரும்எட்டாத !பரதுரி
யாதீதம் அகளம்எப்போதும் உதயம் அநந்தமோகம்
வானாதி சகலவிஸ்த்தார விபவரம்
லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
மாலீசர் எனும்அவற்கேது விபுலம் அசங்கையால் நீள்
மாளாத தனிசமுற்றாயதரிய !நி
ராதாரம் உலைவில்சற் சோதி நிருபமும்
மாறாத சுகவெளத் தாணுவுடன் இனிதென்று சேர்வேன்
நானாவித கருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடல்அடைத்தேறி நிலைமையில் அங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனைஅடு
சீராமன் மருக மைக்காவில் பரிமள
நாவீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா
கானாளும் எயினர்தற் சாதி வளர்குற
மானொடு மகிழ் கருத்தாகி மருள்தரு
காதாடும் உனதுகண் பாணம் எனதுடை ...... நெஞ்சுபாய்தல்
காணாது மமதை விட்டாவி உயஅருள்
பாராய் எனுரை வெகுப் ப்ரீதி இளையவ
காவேரி வடகரைச் சாமி மலையுறை ...... தம்பிரானே.
திருப்பாடல் 4:
தனாதனன தானம் தனாதனன தானம்
தனாதனன தானம் ...... தனதான
இராவின்இருள் போலும் பராவு குழலாலும்
இராம சரமாகும் ...... விழியாலும்
இராக மொழியாலும் பொறாத முலையாலும்
இராத இடையாலும் ...... இளைஞோர் !நெஞ்
சராவியிரு போதும் பராவி விழவே!வந்
தடாத விலை கூறும் ...... மடவார்!அன்
படாமல்அடியேனும் சுவாமியடி தேடும்
அநாதி மொழி ஞானம் ...... தருவாயே
குராவினிழல் மேவும் குமாரனென நாளும்
குலாவி இனிதோது அன்பினர் வாழ்வே
குணாலமிடு சூரன் பணாமுடிகள் தோறும்
குடாவியிட வேல்அங்கெறிவோனே
துராலுமிகு தீ முன்பிராதவகை போலும்
தொடாமல் வினையோடும் ...... படிநூறும்
சுபானமுறு ஞானத் தபோதனர்கள் சேரும்
சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
திருப்பாடல் 5:
தனதன தனந்த தான தனதன தனந்த தான
தனதன தனந்த தான ...... தனதான
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயின்
இருவினை இடைந்து போக ...... மலமூட
இருளற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம்
இலையென இரண்டு பேரும் அழகான
பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
பணியவிண் மடந்தை பாத ...... மலர்தூவப்
பரிவு கொடநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பரு மயிலுடன் குலாவி ...... வரவேணும்
அரிஅயன் அறிந்திடாத அடியிணை சிவந்த பாதம்
அடியென விளங்கியாடு ...... நடராஜன்
அழலுறும் இரும்பின் மேனி மகிழ்மரகதம் பெணாகம்
அயலணி சிவன் புராரி ...... அருள் சேயே
மருவலர்கள் திண் பணார முடியுடல் நடுங்க ஆவி
மறலிஉண வென்ற வேலை ...... உடையோனே
வளைகுலம் அலங்கு காவிரியின்வட புறம் சுவாமி
மலை மிசை விளங்கு தேவர் ...... பெருமாளே.
திருப்பாடல் 6:
தந்தத் தனதன தனதன தனதன
தந்தத் தனதன தனதன தனதன
தந்தத் தனதன தனதன தனதன ...... தனதான
எந்தத் திகையினும் மலையினும் உவரியின்
எந்தப் படியினும் முகடினும் உளபல
எந்தச் சடலமும் உயிரியை பிறவியின் உழலாதே
இந்தச் சடமுடன் உயிர்நிலை பெற!நளி
னம்பொற் கழலிணைகளில் மரு மலர்கொடு
என்சித்தமு(ம்) மனம் உருகிநல் சுருதியின் ...... முறையோடே
சந்தித்தரஹர சிவசிவ சரணென
கும்பிட்டிணையடி அவையென தலைமிசை
தங்கப் புளகிதம் எழஇரு விழிபுனல் ...... குதிபாயச்
சம்பைக் கொடியிடை விபுதையின் அழகுமுன்
அந்தத் திருநடமிடு சரண் அழகுற
சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் ...... வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
தந்தத் தனதன டுடுடுடு டமடம
துங்கத் திசைமலை உவரியும் மறுக சலரிபேரி
துன்றச் சிலைமணி கலகல கலினென
சிந்தச் சுரர் மலர் அயன்மறை புகழ்தர
துன்புற்றவுணர்கள் நமன்உலகுறவிடும் ...... அயில்வேலா
கந்தச் சடைமுடி கனல் வடிவடலணி
எந்தைக்குயிரெனும் மலைமகள் மரகத
கந்தப் பரிமள தனகிரி உமையருள் இளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணர்அரி மருகநல்
கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 7:
தனதனன தனதனன தான தந்தனம்
தனதனன தனதனன தான தந்தனம்
தனதனன தனதனன தான தந்தனம் ...... தனதான
ஒருவரையும் ஒருவர் அறியாமலும்!திரிந்
திரு வினையின் இடர்கலியொடாடி நொந்து!நொந்
துலையிலிடு மெழுகதென வாடி முன்செய் வஞ்சனையாலே
ஒளிபெறவெ எழுபு மர பாவை துன்றிடும்
கயிறு விதமென மருவி ஆடி விண்!பறிந்
தொளிரும் மினலுருவதென ஓடி அங்கம் வெந்திடுவேனைக்
கருதியொரு பரமபொருள் ஈது என்றுஎன்
செவியிணையில் அருளிஉருவாகி வந்தஎன்
கருவினையொடரு மலமும் நீறு கண்டுதண் தருமாமென்
கருணைபொழி கமலமுகம் ஆறும் இந்துளம்
தொடைமகுட முடியும்ஒளிர் நூபுரம்சரண்
கலகலென மயிலின்மிசை ஏறி வந்துகந்தெனை ஆள்வாய்
திரிபுரமும் மதனுடலும் நீறு கண்டவன்
தருணமழ விடையன் நடராஜன் எங்கணும்
திகழ்அருண கிரிசொருபன் ஆதி அந்தம்அங்கறியாத
சிவயநம நமசிவய காரணன்!சுரந்
தமுதம்அதை அருளி எமையாளும் எந்தை தன்
திருஉருவின் மகிழ்எனது தாய் பயந்திடும் ...... புதல்வோனே
குருகு கொடியுடன் மயிலில் ஏறி மந்தரம்
புவனகிரி சுழலமறை ஆயிரங்களும்
குமரகுரு எனவலிய சேடனஞ்ச வந்திடுவோனே
குறமகளின் இடைதுவள பாத செஞ்!சிலம்
பொலியஒரு சசிமகளொடே கலந்துதிண்
குருமலையின் மருவு குருநாத உம்பர்தம் ...... பெருமாளே.
திருப்பாடல் 8:
தனாதனன தானம் தனாதனன தானம்
தனாதனன தானம் ...... தனதான
கடாவினிடை வீரம் கெடாமல் இனிதேறும்
கடாவின் நிகராகும் ...... சமனாரும்
கடாவிவிடு தூதன் கெடாதவழி போலும்
கனாவில் விளையாடும் ...... கதைபோலும்
இடாதுபல தேடும் கிராதர் பொருள் !போலிங்
கிராமல் உயிர் கோலிங்கிதமாகும்
இதாம்எனிரு போதும் சதாஇன்மொழியால்!இன்
றியானும்உனை ஓதும் ...... படிபாராய்
விடாதுநட நாளும் பிடாரியுடன்ஆடும்
வியாகரண ஈசன் ...... பெருவாழ்வே
விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
விநாசமுற வேல் அங்கெறிவோனே
தொடாதுநெடு தூரம் தடாது மிகஓடும்
சுவாசமது தான் ஐம்புலனோடும்
சுபானமுறு ஞானத் தபோதனர்கள் சேரும்
சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
திருப்பாடல் 9:
தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த
தனனா தனத்த தந்த ...... தனதான
கடிமா மலர்க்குள் இன்பமுள வேரி கக்கு நண்பு
தரு மா கடப்பமைந்த ...... தொடைமாலை
கனமேரு ஒத்திடும் பனிருமா புயத்தணிந்த
கருணாகர ப்ரசண்ட ...... கதிர்வேலா
வடிவார் குறத்தி தன்பொனடிமீது நித்தமும்தண்
முடியானதுற்றுகந்து ...... பணிவோனே
வளவாய்மை சொற் ப்ரபந்தமுள கீரனுக்குகந்து
மலர்வாயில் இலக்கணங்கள் இயல்போதி
அடிமோனை சொற்கிணங்க உலகாம் உவப்ப என்றுன்
அருளால் அளிக்கும் கந்த ...... பெரியோனே
அடியேனுரைத்த புன்சொலதுமீது நித்தமும்!த
ணருளே தழைத்துகந்து ...... வரவேணும்
செடிநேர் உடற்குடம்பை தனின்மேவி உற்றிடிந்த
படிதான் அலக்கண் இங்கண் உறலாமோ
திறமாதவர்க்கனிந்துன் இருபாத பத்மம் உய்ந்த
திருஏரகத்தமர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 10:
தனதனன தந்த தான தனதனன தந்த தான
தனதனன தந்த தான ...... தனதான
கதிரவன் எழுந்துலாவு திசையளவு கண்டு மோது
கடலளவு கண்டு மாய ...... மருளாலே
கணபண புயங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
கவினற நடந்து தேயும் ...... வகையே போய்
இதமிதம்இதென்று நாளும் மருகருகிருந்து கூடும்
இடமிடம்இதென்று சோர்வு ...... படையாதே
இசையொடு புகழந்த போது நழுவிய ப்ரசண்டர் வாசல்
இரவுபகல் சென்று வாடி ...... உழல்வேனோ
மதுகர மிடைந்து வேரி தருநறவம்உண்டு பூக
மலர்வள நிறைந்த பாளை ...... மலரூடே
வகைவகை எழுந்த சாம அதிமறை வியந்து பாட
மதி நிழலிடும் சுவாமிமலை வாழ்வே
அதிரவரு சண்ட வாயு எனவரும் கருங்கலாப
அணிமயில் விரும்பிஏறும் இளையோனே
அடைவொடுலகங்கள் யாவும் உதவிநிலை கண்ட பாவை
அருள் புதல்வ அண்ட ராஜர் ...... பெருமாளே.
திருப்பாடல் 11:
தனதனன தந்த தானனத்
தனதனன தந்த தானனத்
தனதனன தந்த தானனத் தனதான
கறைபடும் உடம்பிராதெனக்
கருதுதல்ஒழிந்து வாயுவைக்
கரும வசனங்களால் மறித்தனல்ஊதிக்
கவலைபடுகின்ற யோக!கற்
பனை மருவு சிந்தை போய்விடக்
கலகமிடும் அஞ்சும் வேரறச் ...... செயல்மாளக்
குறைவற நிறைந்த மோன!நிர்க்
குணமது பொருந்தி வீடுறக்
குருமலை விளங்கு ஞானசற் ...... குருநாதா
குமர சரணென்று கூதளப்
புதுமலர் சொரிந்து கோமளப்
பதயுகள புண்டரீகம் உற்றுணர்வேனோ
சிறைதளை விளங்கு பேர்முடிப்
புயலுடன் அடங்கவே !பிழைத்
திமையவர்கள் தங்களூர் புகச் ...... சமராடித்
திமிரமிகு சிந்து வாய்விடச்
சிகரிகளும் வெந்து நீறெழத்
திகிரிகொள் அநந்த சூடிகைத் ...... திருமாலும்
பிறைமவுலி மைந்த கோவெனப்
பிரமனை முனிந்து !காவலிட்
டொரு நொடியில் மண்டு சூரனைப் ...... பொருதேறிப்
பெருகுமத கும்ப லாளிதக்
கரியென ப்ரசண்ட வாரணப்
பிடிதனை மணந்த சேவகப் ...... பெருமாளே.
திருப்பாடல் 12:
தானனத் தனந்த ...... தனதான
தானனத் தனந்த ...... தனதான
காமியத்தழுந்தி ...... இளையாதே
காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓமெழுத்தில்அன்பு ...... மிகஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே
தூமமெய்க்கணிந்த ...... சுகலீலா
சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா
ஏமவெற்புயர்ந்த ...... மயில்வீரா
ஏரகத்தமர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 13:
தனதனன தனதனன தனனா தனத்ததன
தனதனன தனதனன தனனா தனத்ததன
தனதனன தனதனன தனனா தனத்ததன ...... தனதான
குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
கணவ சரவண நிருதர் கலகா பிறைச்சடையர்
குருவெனநல் உரைஉதவு மயிலா எனத்தினமும் உருகாதே
குயில்மொழிநன் மடவியர்கள் விழியால் உருக்குபவர்
தெருவில் அநவரதம்அனம் எனவே நடப்பர் நகை
கொளுமவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் அனைவோரும்
தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள்
முலையிலுறு துகில்சரிய நடுவீதி நிற்பவர்கள்
தனமிலியர் மனமுறிய நழுவா உழப்பியர்கண் ...... வலையாலே
சதிசெய்தவர் அவர்மகிழ அணை மீதுருக்கியர்கள்
வசமொழுகி அவரடிமை எனமாதர் இட்டதொழில்
தனிலுழலும் அசடனைஉன் அடியே வழுத்தஅருள் ...... தருவாயே
சமரமொடும் அசுரர்படை கள மீதெதிர்த்த !பொழு
தொருநொடியில் அவர்கள்படை கெட வேலெடுத்தவனி
தனில் நிருதர் சிரம்உருள ரணதூள் படுத்திவிடு ...... செருமீதே
தவனமொடும் அலகை நடமிட வீரபத்திரர்கள்
அதிரநிணமொடு குருதி குடிகாளி கொக்கரி செய்
தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத் திரள்கள் ...... பலகோடி
திமிதமிட நரிகொடிகள் கழுகாட ரத்தவெறி
வயிரவர்கள் சுழலஒரு தனிஆயுதத்தைவிடு
திமிரதினகர அமரர் பதிவாழ்வு பெற்றுலவு ...... முருகோனே
திருமருவு புயன்அயனொடயிராவதக் குரிசில்
அடிபரவு பழநிமலை கதிர்காமம் உற்றுவளர்
சிவசமய அறுமுகவ திருவேரகத்திலுறை ...... பெருமாளே.
திருப்பாடல் 14:
தனன தனதன தனன தனதன
தனன தனதன ...... தனதான
குமர குருபர முருக சரவண
குகசண்முக கரி ...... பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவன்அருள்குரு ...... மணியே !என்
றமுத இமையவர் திமிர்தம் இடு!கட
லதென அநுதினம் உனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடும்
அபயமிடு குரல் அறியாயோ
திமிர எழுகடல் உலக முறிபட
திசைகள் பொடிபட ...... வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழஉயிர்
திறை கொடமர் பொரு ...... மயில்வீரா
நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல்
நதிகொள் சடையினர் ...... குருநாதா
நளின குருமலை மருவி அமர்தரு
நவிலு மறைபுகழ் ...... பெருமாளே.
திருப்பாடல் 15:
தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன ...... தனதான
கோமள வெற்பினை ஒத்த தனத்தியர்
காமனை ஒப்பவர் சித்தம் உருக்கிகள்
கோவை இதழ்க்கனி நித்தமும் விற்பவர் ...... மயில் காடை
கோகிலநற் புறவத்தொடு குக்குட
ஆரணியப்புள் வகைக்குரல் கற்றிகல்
கோல விழிக்கடை இட்டு மருட்டிகள் ...... விரகாலே
தூமமலர்ப்பளி மெத்தை படுப்பவர்
யாரையும் எத்தி மனைக்குள் அழைப்பவர்
சோலை வனக்கிளி ஒத்த மொழிச்சியர் ...... நெறிகூடா
தூசு நெகிழ்த்தரை சுற்றி உடுப்பவர்
காசுபறிக்க மறித்து முயக்கிகள்
தோதக வித்தை படித்து நடிப்பவர் உறவாமோ
மாமரம்ஒத்து வரிக்குள் நெருக்கிய
சூரனை வெட்டி நிணக் குடலைக் கொடி
வாரண மெச்சஅளித்த அயிற்குக ...... கதிர்காம
மாமலையில் பழநிப் பதியில்தனி
மாகிரியில் தணிகைக் கிரியில் பர
மாகிரியில் திரைசுற்றி வளைத்திடும் ...... அலைவாயில்
ஏமவெயில்பல வெற்பினில் நற்!பதி
னாலுலகத்தினில் உற்றுறு பத்தர்கள்
ஏது நினைத்தது மெத்த அளித்தருள் இளையோனே
ஏரக வெற்பெனும் அற்புத மிக்க!சு
வாமிமலைப் பதி மெச்சிய சித்த!இ
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் ...... பெருமாளே.
திருப்பாடல் 16:
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
சரண கமலாலயத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையிலே சனித்த
தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ
கருணை புரியாதிருப்பதென குறைஇவேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணி பொன் மாலே செச்சை
கமழு மணமார் கடப்பம் அணிவோனே
தருணம்இதையா மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞானமுத்தி பரகதியும் நீ!கொடுத்து
தவிபுரிய வேணும் நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க
அரிய தமிழ் தானளித்த ...... மயில்வீரா
அதிசயம் அநேகமுற்ற பழநிமலை மீதுதித்த
அழக திருவேரகத்தின் ...... முருகோனே.
திருப்பாடல் 17:
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தந்ததான
சுத்திய நரப்புடன் எலுப்புறு தசைக்!குடலொ
டப்புடன் நிணச்சளி வலிப்புடன் இரத்தகுகை
சுக்கிலம் விளைப் புழுவொடக்கையும் அழுக்குமயிர் ...... சங்குமூளை
துக்கம் விளைவித்த பிணையற் கறை முனைப் பெருகு
குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி
துச்சி பிளவைப் பொருமல் பித்தமொடுறக்க மிக ...... வங்கமூடே
எத்தனை நினைப்பையும் விளைப்பையும் மயக்கமுறல்
எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடற்பெருமை
எத்தனை கசத்தையும் மலத்தையும் அடைத்தகுடில் ...... பஞ்சபூதம்
எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மனக் கவலை
எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர்க் குழுமல்
எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்துலகில் ...... மங்குவேனோ
தத்தன தனத்தன தனத்தன எனத் திமிலை
ஒத்த முரசத்துடி இடக்கை முழவுப் பறைகள்
சத்த மறையத் தொகுதி ஒத்தசெனி ரத்தவெள ...... மண்டியோடச்
சக்கிரி நெளிப்ப அவுணப் பிண மிதப்பமரர்
கைத்தலம் விரித்தரஹரச் சிவ பிழைத்தொமென
சக்கிர கிரிச் சுவர்கள் அக்கணமே பக்குவிட ...... வென்ற வேலா
சித்தமதில் எத்தனை செகத்தலம் விதித்துடன்
அழித்து கமலத்தனை மணிக்குடுமி பற்றி மலர்
சித்திர கரத்தலம் வலிப்பபல குட்டி நடனம் கொள்வேளே
செட்டி வடிவைக்கொடு தினைப் புனமதிற் !சிறுகு
றப்பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பிலுறை
சிற்பரமருக்கொரு குருக்களென முத்தர்புகழ் ...... தம்பிரானே.
திருப்பாடல் 18:
தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த ...... தனதான
செகமாயை உற்றென் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறித்
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த ...... பொருளாகி
மகவாவின்உச்சி விழிஆநநத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி
மடிமீதடுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குற மாதினுக்கு
முலைமேல் அணைக்க ...... வருநீதா
முதுமா மறைக்குள் ஒருமா பொருட்குள்
மொழியே உரைத்த ...... குருநாதா
தகையாதெனக்குன் அடிகாண வைத்த
தனிஏரகத்தின் ...... முருகோனே
தரு காவிரிக்கு வட பாரிசத்தில்
சமர் வேலெடுத்த ...... பெருமாளே.
திருப்பாடல் 19:
தானதன தந்த தத்த தானதன தந்த தத்த
தானதன தந்த தத்த ...... தனதான
சேலும்அயிலும் தரித்த வாளை அடரும் கடைக்கண்
மாதரை வசம் படைத்த ...... வசமாகிச்
சீல மறையும் பணத்தில் ஆசையிலை என்றவத்தை
காலமும் உடன் கிடக்கும் அவர்போலே
காலு மயிரும் பிடித்து மேவு சிலுகும் பிணக்கு
நாளுமிக நின்றலைத்த ...... விதமாய
காம கலகம் பிணித்த தோதகமெனும் !துவக்கி
லே அடிமையும் கலக்கம் உறலாமோ
ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை
பூகமருதம் தழைத்த ...... கரவீரம்
யாவும்அலை கொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும்
ஏரகம் அமர்ந்த பச்சை ...... மயில்வீரா
சோலை மடல் கொண்டு சக்ர மால்வரை அரிந்த வஜ்ர
பாணியர் தொழும் திருக்கை ...... வடிவேலா
சூர்முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த
சூரன்உடலும் துணித்த ...... பெருமாளே.
திருப்பாடல் 20:
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
தருவர்இவர் ஆகுமென்று பொருள் நசையில் நாடி வண்டு
தனை விடுசொல் தூது தண்ட ...... முதலான
சரசகவி மாலை சிந்து கலிதுறைகள் ஏசலின்ப
தரு முதலதான செஞ்சொல் ...... வகைபாடி
மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து
வரினும் இவர் வீதம் எங்களிடமாக
வரும்அதுவொ போதுமென்று ஒருபணம் உதாசினம் சொல்
மடையரிடமே நடந்து ...... மனம் வேறாய்
உருகி மிகவாக வெந்து கவிதை சொலியே திரிந்து
உழல்வதுவுமே தவிர்ந்து ...... விடவேநல்
உபய பத மால் விளங்கி இகபரமும்ஏவ இன்பம்
உதவியெனை ஆள அன்பு ...... தருவாயே
குருகினொடு நாரைஅன்றில் இரைகளது நாடிடங்கள்
குதிகொள்இள வாளை கண்டு ...... பயமாகக்
குரை கடல்களே அதிர்ந்து வருவதெனவே விளங்கு
குருமலையின் மேலமர்ந்த ...... பெருமாளே
திருப்பாடல் 21:
தனதன தனனா தனனா
தனந்த தத்தம் ...... தனதான
தெருவினில் நடவா மடவார்
திரண்டொறுக்கும் ...... வசையாலே
தினகரன் என வேலையிலே
சிவந்துதிக்கும் ...... மதியாலே
பொரு சிலை வளையா இளையா
மதன் தொடுக்கும் ...... கணையாலே
புளகித முலையாள் அலையா
மனம் சலித்தும் ...... விடலாமோ
ஒருமலை இருகூறெழவே
உரம் புகுத்தும் ...... வடிவேலா
ஒளிவளர் திருவேரகமே
உகந்து நிற்கும் ...... முருகோனே
அருமறை தமிழ்நூல் அடைவே
தெரிந்துரைக்கும் ...... புலவோனே
அரியரி பிரமாதியர் கால்
விலங்கவிழ்க்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 22:
தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான
தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான
நாசர்தம் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி
ஞானமும் கெடஅடைய வழுவி ஆழத்தழுந்தி ...... மெலியாதே
மாசகம் தொழும்உனது புகழினோர் சொல்பகர்ந்து ...... சுகமேவி
மாமணம் கமழும்இரு கமல பாதத்தை நின்று ...... பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தாம் மெச்சுகின்ற ...... குருநாதா
வாசவன் தருதிருவை ஒரு தெய்வானைக்கிரங்கு ...... மணவாளா
கீசகம் சுரர் தருவு மகிழுமா அத்தி சந்து ...... புடைசூழும்
கேசவன் பரவு குருமலையில் யோகத்தமர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 23:
தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த ...... தனதான
நாவேறு பாமணத்த பாதாரமே நினைத்து
நாலாறு நாலு பற்று ...... வகையான
நாலாரும் ஆகமத்தின் நூலாய ஞான முத்தி
நாள்தோறும் நானுரைத்த ...... நெறியாக
நீ வேறெனாதிருக்க நான் வேறெனாதிருக்க
நேராக வாழ்வதற்குன் அருள்கூர
நீடார் ஷடாதரத்தின் மீதே பராபரத்தை
நீகாண்என் ஆவனைச் சொல் அருள்வாயே
சேவேறும் ஈசர் சுற்ற மாஞானபோத புத்தி
சீராகவே உரைத்த ...... குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீரா குகா குறத்தி ...... மணவாளா
காவேரி நேர் வடக்கிலே வாவி பூமணத்த
காவார் சுவாமி வெற்பின் ...... முருகோனே
கார்போலும் மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே
திருப்பாடல் 24:
தனதன தான தந்த தனதன தான தந்த
தனதன தான தந்த ...... தனதான
நிலவினிலேஇருந்து வகைமலரே தெரிந்து
நிறைகுழல் மீதணிந்து ...... குழைதாவும்
நிகரறு வேலினங்கள் வரிதர வாசகங்கள்
நினைவறவே மொழிந்து ...... மதனூலின்
கலப மனோகரங்கள் அளவறவே புரிந்து
கனிஇதழே அருந்தி ...... அநுராகக்
கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு
கபடனை ஆள உந்தன் அருள்கூராய்
உலகமொரேழும் அண்டர் உலகமும் ஈசர் தங்கும்
உயர் கயிலாயமும் பொன் ...... வரை தானும்
உயிரொடு பூதம் ஐந்தும் ஒருமுதலாகி நின்ற
உமையருளால் வளர்ந்த ...... குமரேசா
குலைபடு சூரனங்கள் அழிபட வேலெறிந்த
குமர கடோர வெங்கண் ...... மயில்வாழ்வே
கொடுமுடியாய் வளர்ந்து புயல்நிலை போலுயர்ந்த
குருமலை மீதமர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 25:
தனதன தனதன ...... தனதான
தனதன தனதன ...... தனதான
நிறைமதி முகமெனும் ஒளியாலே
நெறிவிழி கணையெனும் ...... நிகராலே
உறவுகொள் மடவர்கள் உறவாமோ
உனதிருவடிஇனி அருள்வாயே
மறை பயிலரிதிரு ...... மருகோனே
மருவலர் அசுரர்கள் ...... குலகாலா
குறமகள் தனைமணம் அருள்வோனே
குருமலை மருவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 26:
தனதன தானன, தனதன தானன
தனதன தானன ...... தனதான
பரவரிதாகிய வரையென நீடிய
பணைமுலை மீதினில் உருவான
பணிகள்உலாவிட இழையிடை சாய்தரு
பயிலிகள் வாள்விழி ...... அயிலாலே
நிர வரியோடியல் குழல்களின் நாண்மலர்
நிரைதரு மூரலின் நகைமீது
நிலவியல் சேர்முகம் அதிலுயர் மாமயல்
நிலையெழவே அலைவதுவாமோ
அரவணையார் குழை பரசிவ ஆரண
அரன்இட பாகமதுறை சோதி
அமைஉமை டாகினி திரிபுரை நாரணி
அழகிய மாதருள் ...... புதல்வோனே
குரவணி பூஷண சரவண தேசிக
குக கருணாநிதி ...... அமரேசா
குறமகள் ஆனைமின் மருவிய பூரண
குருகிரி மேவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 27:
தனதான தத்ததன தனதான தத்த
தனதான தத்ததன ...... தனதான
பலகாதல் பெற்றிடவும் ஒருநாழிகைக்குள்ஒரு
பலனே பெறப் பரவு ...... கயவாலே
பலபேரை மெச்சிவரு தொழிலே செலுத்திஉடல்
பதறாமல் வெட்கமறு ...... வகைகூறி
விலகாத லச்சைதணி மலையாம் முலைச்சியர்கள்
வினையே மிகுத்தவர்கள் ...... தொழிலாலே
விடமே கொடுத்து வெகு பொருளே பறித்தருளும்
விலைமாதர் பொய்க் கலவி ...... இனிதாமோ
மலையே எடுத்தருளும் ஒரு வாளரக்கன் உடல்
வடமேரெனத் தரையில் ...... விழவே தான்
வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு
மருகா கடப்பமலர் அணி மார்பா
சில காவியத் துறைகள் உணர்வோர் படித்த தமிழ்
செவியார வைத்தருளும் ...... முருகோனே
சிவனார் தமக்குரிய உபதேச வித்தையருள்
திருவேரகத்தில்வரு ...... பெருமாளே.
திருப்பாடல் 28:
தான தனதன தான தனதன
தான தனதன ...... தனதான
பாதி மதிநதி போதும் அணிசடை
நாதர் அருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா
காதும் ஒருவிழி காகமுற அருள்
மாயன் அரிதிரு ...... மருகோனே
காலன் எனை அணுகாமல் உனதிரு
காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரர்!உல
காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வர வரும் இளையோனே
சூத மிகவளர் சோலை மருவு!சு
வாமி மலைதனில் உறைவோனே
சூரன் உடலற வாரி சுவறிட
வேலை விடவல ...... பெருமாளே
திருப்பாடல் 29:
தனன தான தத்த தனன தான தத்த
தனன தான தத்த ...... தனதான
மகர கேதனத்தன் உருவிலான் எடுத்து
மதுர நாணியிட்டு ...... நெறி சேர்வார்
மலையவே வளைத்த சிலையின் ஊடொளித்த
வலிய சாயகக் கண் ...... மடமாதர்
இகழ வாசமுற்ற தலையெலாம் வெளுத்து
இளமை போயொளித்து ...... விடுமாறு
இடைவிடாதெடுத்த பிறவி வேரறுத்துன்
இனிய தாள் அளிப்பதொரு நாளே
அகிலமேழும் எட்டு வரையின் மீது முட்ட
அதிரவே நடத்து ...... மயில்வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு
அடைய வாழ்வளிக்கும் இளையோனே
மிகநிலா எறித்த அமுத வேணி நிற்க
விழை சுவாமி வெற்பில் உறைவோனே
விரைய ஞான வித்தை அருள்செய் தாதை கற்க
வினவ ஓதுவித்த ...... பெருமாளே
திருப்பாடல் 30:
தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த ...... தனதான
மருவே செறித்த குழலார் மயக்கி
மதனாகமத்தின் ...... விரகாலே
மயலே எழுப்பி இதழே அருத்த
மலைபோல் முலைக்குள் உறவாகிப்
பெரு காதலுற்ற தமியேனை நித்தல்
பிரியாது பட்ச ...... மறவாதே
பிழையே பொறுத்துன் இருதாளில்உற்ற
பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே
குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த
குகனே குறத்தி ...... மணவாளா
குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து
குட காவிரிக்கு ...... வடபாலார்
திருஏரகத்தில் உறைவாய் உமைக்கோர்
சிறுவா கரிக்கும் இளையோனே
திருமால் தனக்கு மருகா அரக்கர்
சிரமே துணித்த ...... பெருமாளே
திருப்பாடல் 31:
தனன தான தனன தந்த, தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த ...... தனதான
முறுகு காள விடம் அயின்ற இருகண் வேலின் உளம் மயங்கி
முளரி வேரி முகையடர்ந்த ...... முலைமீதே
முழுகு காதல் தனைமறந்து பரம ஞான ஒளிசிறந்து
முகம்ஒராறு மிகவிரும்பி ...... அயராதே
அறுகு தாளி நறைஅவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை
அடைய வாரி மிசை பொழிந்துன் அடிபேணி
அவசமாகி உருகு தொண்டர் உடனதாகி விளையும் அன்பில்
அடிமையாகும் முறைமை ஒன்றை ...... அருள்வாயே
தறுகண் வீரர் தலைஅரிந்து பொருத சூரன் உடல்பிளந்து
தமர வேலை சுவற வென்ற ...... வடிவேலா
தரள மூரல் உமை மடந்தை முலையிலார அமுதமுண்டு
தரணிஏழும் வலம் வரும்திண் ...... மயில்வீரா
மறுவிலாத தினை விளைந்த புனம்விடாமல் இதணிருந்து
வலிய காவல் புனைஅணங்கின் ...... மணவாளா
மருவு ஞாழல் அணிசெருந்தி அடவி சூத வனநெருங்கி
வளர் சுவாமி மலைஅமர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 32:
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து
மாவலி வியாதி குன்மமொடு காசம்
வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின்
மாதர்தரு பூஷணங்கள் எனவாகும்
பாதக வியாதி புண்கள் ஆனதுடனே தொடர்ந்து
பாயலை விடாது மங்க ...... இவையால் நின்
பாத மலரானதின் கண் நேயம்அறவே மறந்து
பாவ மதுபானம் உண்டு ...... வெறிமூடி
ஏதமுறு பாச பந்தம் ஆன வலையோடுழன்று
ஈனமிகு சாதியின் கண்அதிலே யான்
ஈடழிதல் ஆனதின்பின் மூடனென ஓது முன்புன்
ஈரஅருள் கூர வந்து ...... எனை ஆள்வாய்
சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி
சூழமதில் தாவி மஞ்சின் அளவாகத்
தோரணநல் மாடமெங்கும் நீடுகொடியே தழைந்த
சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே
திருப்பாடல் 33:
தான தத்த தந்த தான தத்த தந்த
தான தத்த தந்த ...... தனதான
வாரமுற்ற பண்பின் மாதமுற்ற நண்பின்
ஈடு மெய்த்துயர்ந்து ...... வயதாகி
வாலையில் திரிந்து கோல மைக்கண் மங்கை
மார்களுக்கிசைந்து ...... பொருள்தேடி
ஆரமிக்க பொன்களால் அமைத்தமர்ந்த
மா பணிக்கள் விந்தை ...... அதுவான
ஆடகொப்பமைந்த ஓலை முத்தமும்!கொ
டாவி மெத்த நொந்து ...... திரிவேனோ
சூரனைத் துரந்து வேரறப் பிளந்து
சூழ் சுரர்க்கண் அன்பு ...... செயும்வீரா
சூகரத்தொடம்பு தானெடுத்து வந்த
சூதனுக்கிசைந்த ...... மருகோனே
ஏரெதிர்த்து வந்து நீர்கள் கட்டிஅன்று
தானிறைக்க வந்ததொரு!சாலி
யே மிகுத்துயர்ந்த மா வயற்கள் மிஞ்சும்
ஏரகத்தமர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 34:
தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன ...... தந்ததான
வார்குழலைச் சொருகிக் கருவில் குழை
காதொடிணைத்தசையக் கதிர் பல்கொடு
வாயிதழ் பொற்க மலர்க் குமிழ் ஒத்துளதுண்ட க்ரீவ
வார் கமுகில்புய நற்கழை பொற்!குவ
டாடிள நிர்ச்சுரர் பொற்குடம் ஒத்திணை
மார்பழகில் பொறி முத்தொளிர் சித்திர ...... ரம்பை மாதர்
காருறும் வித்திடையில் கதலித் தொடை
சேரல்குல் நல் பிரசத் தடமுள் கொடு
கால் மறையத் துவளச்செறி பொற்கலை ...... ஒண்குலாவக்
கார் குயிலைக் குரலைக் கொடு நல்தெரு
மீதில்நெளித்து நகைத்து நடிப்பவர்
காமன் உகப்பமளிச் சுழல் குத்திரர் ...... சந்தம்ஆமோ
சூரர் பதைக்கர உட்கி நெளித்துயர்
ஆழிஇரைப்ப நிணக் குடலைக் கழு
சூழ நரிக் கெருடக் கொடி பற்பல ...... சங்கமாகச்
சூழ்கிரியைக் கை தடித்து மலைத்திகை
யானை உழற்றி நடுக்கி மதப்பொறி
சோர நகைத்தயிலைக் கொடு விட்டருள் ...... செங்கை வேலா
ஏரணி நற்குழலைக் ககனச் சசி
மோகினியைப் புணர் சித்தொரு அற்புத
வேடமுதச் சொருபத்த குறத்தி மணம் கொள்வோனே
ஏரக வெற்பெனும் அற்புத மிக்க!சு
வாமி மலைப்பதி நிற்கும் இலக்ஷண
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் ...... தம்பிரானே
திருப்பாடல் 35:
தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த ...... தனதான
வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து
வாவென நகைத்துத் தோட்டு ...... குழையாட
வாசகம்உரைத்துச் சூத்ர பாவையென் உறுப்பைக் காட்டி
வாசனை முலைக்கச் சாட்டி ...... அழகாகச்
சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டி
தீதெய நடித்துப் பாட்டு ...... குயில்போலச்
சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட்டாட்டி
சீர்பொருள் பறிப்பொய்க் கூத்தர் உறவாமோ
சூரர்கள் பதைக்கத் தேர்க்கள் ஆனைகள் அழித்துத் தாக்கி
சூர்கிரி கொளுத்திக் கூற்றுர் இடும்வேலா
தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட உதைத்துக் கோத்த
தோலுடை என்அப்பர்க்கேற்றி ...... திரிவோனே
ஏரணி சடைச்சிப் பால்சொல் ஆரணி சிறக்கப் போற்றும்
ஏரெழில் நிறத்துக் கூர்த்த ...... மகவோனே
ஏடணி குழைச்சித் தூர்த்த ஆடகி குறத்திக்கேற்ற
ஏரக பொருப்பில் பூத்த ...... பெருமாளே.
திருப்பாடல் 36:
தனதனன தான தனதன தந்தன
தனதனன தான தனதன தந்தன
தனதனன தான தனதன தந்தன ...... தனதான
விடமும் வடிவேலும் மதன சரங்களும்
வடுவு நிகரான மகர நெடுங்குழை
விரவியுடன் மீளும் விழிகளும் என்புழுகது தோயும்
ம்ருகமத படீர பரிமள குங்குமம்
அணியும் இளநீரும் வடகுல குன்றமும்
வெருவுவன பார புளக தனங்களும் ...... வெகுகாம
நடனபத நூபுரமும் முகில் கெஞ்சிட
மலர் சொருகு கேச பரமும்இலங்கிய
நளின மலர் சோதி மதிமுக விம்பமும் ...... அன நேராம்
நடையும் நளிர் மாதர் நிலவு தொழும் தனு
முழுதும் அபிராம அரி வய கிண்கிணெ
நகையுஉள மாதர் கலவியின் நைந்துருகிடலாமோ
வடிவுடைய மானும் இகல்கரனும் திகழ்
எழுவகை மராமரமும் நிகரொன்றுமில்
வலியதிறல் வாலி உரமும் நெடுங்கடல் அவையேழும்
மறநிருதர் சேனை முழுதும் இலங்கை மன்
வகையிரவி போலும் அணியும் அலங்க்ருத
மணிமவுலியான ஒருபதும் விஞ்சிருபது தோளும்
அடைவலமும் மாள விடுசர அம்புடை
தசரத குமார ரகுகுல புங்கவன்
அருள்புனை முராரி மருக விளங்கிய ...... மயிலேறி
அடையலர்கள் மாள ஒருநிமிடம்தனில்
உலகை வலமாக நொடியினில் வந்துயர்
அழகிய சுவாமி மலையில் அமர்ந்தருள் ...... பெருமாளே
திருப்பாடல் 37:
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
விரித்த பைங்குழல் ஒளிர்மலர் அளிதன
தனத்தனந்தன தனதன எனஒலி
விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடும் ...... அலைபாய
மிகுத்த வண்சிலை நுதல்மிசை !திலதமொ
டசைத்த பொன்குழை அழகெழ முகஒளி
வெயில் பரந்திட நகையிதழ் முருகலர் ...... வரிபோதத்
தரித்த தந்திரி மறிபுய மிசைபல
பணிக்கிலங்கிய பரிமள குவடிணை
தனக் கொழுந்துகள் ததைபட கொடியிடை ...... படுசேலை
தரித்து சுந்தரம் எனஅடர் பரிபுர
பதச் சிலம்பொடு நடமிடு கணிகையர்
சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவதொழியாதோ
உரித்த வெங்கய மறியொடு புலிகலை
தரித்த சங்கரர் மதிநதி சடையினர்
ஒருத்தி பங்கினர் அவர்பணி குருபர ...... முருகோனே
உவட்டி வந்திடு மவுணரொடெழுகடல்
குவட்டையும் பொடி படசத முடிவுற
உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வுற ...... விடும்வேலா
வரித் தரம் துளவணிதிரு மருவிய
உரத்த பங்கயர் மரகதம் அழகிய
வணத்தர் அம்பரம் உறவிடு கணையினர் ...... மருகோனே
வனத்தில் வந்தொரு பழையவன் எனவொரு
குறத்தி மென்புன மருவிய கிளிதனை
மயக்கி மந்திர குருமலை தனிலமர் ...... பெருமாளே.
திருப்பாடல் 38:
தனதான தத்த தந்த தனதான தத்த தந்த
தனதான தத்த தந்த ...... தனதான
விழியால் மருட்டி நின்று முலை தூசகற்றி மண்டு
விரகானலத்தழுந்த ...... நகையாடி
விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச
விளையாடலுக்கிசைந்து ...... சிலநாள் மேல்
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த
முழுமாயையில் பிணங்கள் ...... வசமாகி
முடியாது பொற்சதங்கை தருகீத வெட்சி துன்று
முதிராத நற்பதங்கள் ...... தருவாயே
பொழிகார் முகிற்கிணைந்த யமராஜன் உட்க அன்று
பொரு தாளெடுத்த தந்தை ...... மகிழ்வோனே
புருகூதன்உள் குளிர்ந்த கனகாபுரி ப்ரசண்ட
புனிதா ம்ருகக் கரும்பு ...... புணர்மார்பா
செழு வாரிசத்தில் ஒன்று முதுவேதன் வெட்க அன்று
திருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனே
திரளா மணிக் குலங்கள் அருணோதயத்தை வென்ற
திருவேரகத்த மர்ந்த ...... பெருமாளே
(2022 நவம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment