Monday, October 29, 2018

கொட்டையூர்

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: தஞ்சாவூர் 

திருக்கோயில்: அருள்மிகு பந்தாடு நாயகி அம்மை சமேத ஸ்ரீகோடீஸ்வர சுவாமி திருக்கோயில்.

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 1/2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கொட்டையூர் (அருணகிரியார் கொட்டை நகர் என்று குறிக்கின்றார்). இங்குள்ள சிவாலயம் கோடீச்சரம் என்று போற்றப் பெறுகின்றது. நாவுக்கரசு சுவாமிகளால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. 

முக்கண் முதல்வரான சிவமூர்த்தி 'கோடீஸ்வரர்' எனும் திருநாமத்திலும், அம்பிகை 'பந்தாடு நாயகி' எனும் திருநாமத்திலும் எழுந்தருளி இருக்கும் புண்ணிய ஷேத்திரம். 'பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்' என்பார் நம் அப்பர் சுவாமிகள். 
-
(திருநாவுக்கரசர் தேவாரம் - திருப்பாடல் 1)
கருமணிபோல் கண்டத்தழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக் குன்றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணி போல் அழகமரும் கொட்டையூரில் 
கோடீச்சரத்துறையும் கோமான் தானே!!

வெளிப்பிரகாரச் சுற்றில், மூலக்கருவறையின் பின்புறம் நம் கந்தப் பெருமான் ஒரு திருமுகமும்; நான்கு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்தருள்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியை ஒரு திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார். 

Google Maps: 
NCN044 - Kottaiyur Kodiswaran Kovil,Padal Petra Temple

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத்
     தத்ததனத் தத்ததனத் ...... தனதான

பட்டுமணிக் கச்சிருகக் கட்டியவிழ்த்துத்தரியப்
     பத்தியின் முத்துச்செறி வெற்பிணையாம் என்

பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்
     பட்டுருகிக் கெட்ட வினைத் ...... தொழிலாலே

துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
     சுற்றுமறச் சித்தனெனத் ...... திரிவேனைத்

துக்கமறுத்துக் கமலப் பொற்பதம் வைத்துப் பதவிச்
     சுத்திஅணைப் பத்தரில் வைத்தருள்வாயே

சுட்டபொருள் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
     துக்கமுறச் சொர்க்கமுறக் ...... கொடியாழார்

சுத்தரதத்தில் கொடுபுக்குக் கடுகித் தெற்கடைசிச்
     சுற்று வனத்தில் சிறைவைத்திடு தீரன்

கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
     குற்றமறச் சுற்றமறப் ...... பலதோளின்

கொற்றமறப் பத்துமுடிக் கொத்தும் அறுத்திட்டதிறல் 
     கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் ...... பெருமாளே.


2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

















No comments:

Post a Comment