Saturday, October 27, 2018

சிதம்பரம்

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: கடலூர்

திருக்கோயில்: அருள்மிகு நடராஜர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்), மணிவாசகர் (திருவாசகம்), திருவிசைப்பா (திருமாளிகைத் தேவர், கருவூர்த்தேவர், பூந்துருத்தி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர்), திருப்பல்லாண்டு (சேந்தனார்)


தலக் குறிப்புகள்

தனிப்பெரும் தெய்வமான கூத்தர் பெருமான் எழுந்தருளியுள்ள, பஞ்சாட்சரப் படிகளோடு கூடிய மூலக் கருவறை 'சிற்சபை; சிற்றம்பலம்' எனும் திருப்பெயர்களால் போற்றப் பெறுகின்றது. சிற்றம்பலத்திற்கு முன்பாக, ஸ்படிக லிங்க அபிஷேக ஆராதனை நடந்தேறும் மண்டபம் 'பொன்னம்பலம்; கனகசபை' எனும் திருப்பெயர்களால் குறிக்கப் பெறுகின்றது. பொன்னம்பலத்திற்கு நேரெதிரில் அமைந்துள்ள மண்டபம் பேரம்பலம்.

தில்லைப் பரம்பொருளின் இடபாகத்துறையும் நம் சிவகாமியம்மை நடராஜப் பெருமானின் இடது புறத்தில் சிறிய திருமேனியாளாகவும், வெளிப்பிரகாரச் சுற்றில் தனிக்கோயிலொன்றிலும் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றாள்.

உட்பிரகாரச் சுற்றில் முருகப் பெருமான் ஆறு திருமுகங்களும்; பன்னிரு திருக்கரங்களுமாய்; இரு தேவியரும் உடனிருக்க, சுப்பிரமணியர் எனும் திருநாமத்தோடு, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.  

2ஆம் பிரகாரத்தினை வலம் வருகையில், சிறிய திருமேனியனாய்; மயில் மீது சற்று சாய்ந்துள்ள; நின்ற திருக்கோலத்தில் 'பால தண்டாயுதபாணியாய்' எழுந்தருளி இருக்கின்றான். 

சிவகாமியம்மை எழுந்தருளியுள்ள தனிக்கோயிலின் உட்பிரகாரச் சுற்றில், மூலக் கருவறையின் பின்புறம், ஒரு முகம் நான்கு திருக்கரங்களுடன், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். இங்கும் கந்தவேளின் திருநாமம் சுப்பிரமணியரே.

திருப்புகழ் மாமுனிவரான அருணகிரிப் பெருமான் இத்தலத்திற்கென 67 திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார்.


அவற்றுள் கோபுர வாயில்களுக்கான திருப்புகழ் திருப்பாடல்கள் பின்வரும் நான்கு பக்கங்களில் தனித்தனியே தொகுக்கப் பெற்றுள்ளது,
மேற்குறித்துள்ள 11 கோபுரத் திருப்புகழ் நீங்கலாக, மீதமுள்ள 56 திருப்புகழ் திருப்பாடல்கள் இப்பக்கத்தில் தொகுக்கப் பெற்றுள்ளது.


(Google Maps: Thillai Nataraja Temple, Chidambaram, Chidambaram, Tamil Nadu 608001, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது) 


திருப்புகழ் பாடல்கள்:


(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா

கனகசபை மேவும் எனது குருநாத
     கருணை முருகேசப் ...... பெருமாள் காண்

கனகநிற வேதன் அபயமிட மோது
     கரகமல சோதிப் ...... பெருமாள் காண்

வினவும் அடியாரை மருவி விளையாடு
     விரகுரச மோகப் ...... பெருமாள் காண்

விதிமுநிவர் தேவர் அருணகிரி நாதர்
     விமலசர சோதிப் ...... பெருமாள் காண்

சனகி மணவாளன் மருகனென வேத
     சதமகிழ் குமாரப் ...... பெருமாள் காண்

சரண சிவகாமி இரணகுல காரி
     தருமுருக நாமப் ...... பெருமாள் காண்

இனிது வன மேவும் அமிர்தகுற !மாதொ
     டியல் பரவு காதல் ...... பெருமாள் காண்

இணையில் இபதோகை மதியின் மகளோடும் 
     இயல் புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தத்ததன தான தத்ததன தான
     தத்ததன தான ...... தனதான

கைத்தருண சோதி அத்திமுக வேத
     கற்பக சகோதரப் ...... பெருமாள் காண்

கற்பு சிவகாமி நித்ய கலியாணி
     கத்தர் குருநாதப் ...... பெருமாள் காண்

வித்துருப ராமருக்கு மருகான
     வெற்றிஅயில் பாணிப் ...... பெருமாள்காண்

வெற்புள கடாகம் உட்குதிர வீசு
     வெற்றிமயில் வாகப் ...... பெருமாள் காண்

சித்ர முகம்ஆறு முத்துமணி மார்பு
     திக்கினில் இலாதப் ...... பெருமாள் காண்

தித்திமிதி தீதென் ஒத்திவிளையாடு
     சித்திர குமாரப் ...... பெருமாள் காண்

சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
     தொட்ட கவிராஜப் ...... பெருமாள் காண்

துப்பு வளியோடும் அப்புலியுர் மேவு
     சுத்த சிவஞானப் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனதனன தனன தந்தத் ...... தனதானா
     தனதனன தனன தந்தத் ...... தனதானா

இருவினையின் மதிமயங்கித் ...... திரியாதே
     எழுநரகில் உழலும் நெஞ்சுற்றலையாதே

பரமகுரு அருள் நினைந்திட்டுணர்வாலே
     பரவு தரிசனையை என்றெற்கருள்வாயே

தெரிதமிழை உதவு சங்கப் ...... புலவோனே
     சிவன்அருளும் முருக செம்பொற் ...... கழலோனே

கருணைநெறி புரியும் அன்பர்க்கெளியோனே
     கனகசபை மருவும் கந்தப் ...... பெருமாளே

திருப்பாடல் 4:
தனன தனதன தானன தந்தத்
     தனன தனதன தானன தந்தத்
          தனன தனதன தானன தந்தத் ...... தனதான

குகனெ குருபரனேஎன நெஞ்சில் 
     புகழ அருள்கொடு நாவினில் இன்பக்
          குமுளி சிவஅமுதூறுக உந்திப் ...... பசியாறிக்

கொடிய இருவினை மூலமும் வஞ்சக்
     கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்
          குலைய நமசிவ ஓமென கொஞ்சிக் ...... களிகூரப்

பகலும் இரவுமிலா வெளி இன்புக்
     குறுகி இணையிலி நாடக செம்பொன்
          பரம கதிஇதுவாமென சிந்தித்தழகாகப்

பவளம்அன திருமேனியுடன் பொன்
     சரண அடியவரார் மன அம்பொன் 
          தருண சரண்மயிலேறி உன்அம்பொன் ...... கழல் தாராய்

தகுட தகுதகு தாதக தந்தத்
     திகுட திகுதிகு தீதக தொந்தத்
          தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டியல் தாளம்

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
     கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
          தடிஅழனம்உக மாருத சண்டச் ...... சமரேறிக்

ககன மறைபட ஆடிய செம்புள் 
     பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்
          கடல்கள் எறிபட நாகமும் அஞ்சத் ...... தொடும் வேலா

கயிலை மலை தனில்ஆடிய தந்தைக்
     குருக மனமுனம் நாடியெ கொஞ்சிக்
          கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
     தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
          தந்தனத் தத்தன தந்தனத் தத்தன ...... தந்ததான

வண்டையொத்துக் கயல் கண்சுழற்றுப்!புரு
     வம் சிலைக்குத்தொடு அம்பை ஒத்துத் தொடை
          வண்டு சுற்றுக்குழல் கொண்டலொத்துக் கமுகென்ப க்ரீவம்

மந்தரத்தைக் கடம் பொங்கிபத்துப் பணை
     கொம்பை ஒத்துத்தனம் முந்து குப்பத் தெரு
          வந்து எத்திப் பொரு மங்கையர்க் கைப் பொருள் அன்பினாலே

கொண்டழைத்துத் தழுவும் கைதட்டிற் பொருள்
     கொண்டு தெட்டிச் சரசம் புகழ்க்குக்!குன
          கும் குழற்கிப்படி நொந்து கெட்டுக் குடில் ...... மங்குறாமல்

கொண்டு சத்திக்கடல் உண்டுகுப்பத் துனின் 
     அன்பருக்குச் செயல் தொண்டு பட்டுக்கமழ்
          குங்குமத்திற் சரணம் பிடித்துக் கரை ...... என்று சேர்வேன்

அண்ட மிட்டிக்குட டிண்டிமிட்டிக்கு!கு
     டந்த கொட்டத்தகு டிங்கு தொக்கத்!தம
          டம் சகட்டைக்குண கொம்புடக்கைக்கிடல் என்ப தாளம்

அண்டமெட்டுத் திசை உம்பல் சர்ப்பத்திரள்
     கொண்டல் பட்டுக் கிரியும் பொடித்துப் புலன் 
          அஞ்சவித்துத் திரள் அண்டமுட்டத் துகள் ...... வந்த சூரர்

கண்டம் அற்றுக் குடல் என்பு நெக்குத்!தச
     னம் கடித்துக் குடிலம் சிவப்பச் செநிர்
          கண் தெறிக்கத் தலை பந்தடித்துக் கையில் அங்கு வேலால்

கண் களிக்கக் ககனம் துளுக்கப் புகழ் 
     இந்திரற்குப் பதம் வந்தளித்துக்!கன
          கம்பலத்திற் குற மங்கை பக்கத்துறை ...... தம்பிரானே.

திருப்பாடல் 6:
தந்த தந்தனத் தான தந்தன
     தந்த தந்தனத் தான தந்தன
          தந்த தந்தனத் தான தந்தன ...... தந்ததான

கங்குலின் குழல் கார் முகம்சசி
     மஞ்சளின் புயத்தார் சரம்பெறு
          கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக ...... செம் பொனாரம்

கந்தரம் தரித்தாடு கொங்கைகள் 
     உம்பலின் குவட்டாமெனும் கிரி
          கந்தமும்சிறுத் தேமலும்பட ...... சம்பைபோல

அங்கமைந்திடைப் பாளிதம் கொடு
     குந்தியின் குறைக் கால் மறைந்திட
          அண் சிலம்பொலிப் பாடகம்சரி ...... கொஞ்ச மேவும்

அஞ்சுகம் குயில் பூவையின் குரல்
     அங்கை பொன் பறிக்கார !பெண்களொ
          டண்டி மண்டையர்க்கூழியம் செய்வதென்று போமோ

சங்கு பொன்தவில் காளமும்!துரி
     யங்கள் துந்துமிக் காடதிர்ந்திட
          சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட ...... அண்டகோசம்

சந்திரன் பதத்தோர் வணங்கிட
     இந்திரன் குலத்தார் பொழிந்திட
          தந்திரம் புயத்தார் புகழ்ந்திட ...... வந்தசூரைச்

செங்கையும் சிரத்தோடு பங்கெழ
     அந்தகன் புரத்தேற வஞ்சகர்
          செஞ்சரம் தொடுத்தே நடம்புரி ...... கந்தவேளே

திங்கள் ஒண்முகக் காமர் கொண்டவன்
     கொங்கை மென்குறப் பாவையும் கொடு
          செம்பொன் அம்பலத்தே சிறந்தருள் ...... தம்பிரானே.

திருப்பாடல் 7:
தந்த தந்தன தந்த தந்தன
     தந்த தந்தன தந்த தந்தன
          தந்த தந்தன தந்த தந்தன ...... தனதான

கொந்தளம் புழுகெந்த வண் பனிர் 
     ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர
          கொங்கை வெண்கரி கொம்பிணங்கிய ...... மடமாதர்

கொந்தணங்குழல் இன்ப !மஞ்சள 
     ணிந்து சண்பக வஞ்சிளங்கொடி
          கொஞ்சு பைங்கிளி என்பெனும்குயில் ...... மயில்போலே

வந்து பஞ்சணை இன்பமும் கொடு
     கொங்கையும் புயமும் தழும்புற
          மஞ்சு ஒண்கலையும் குலைந்தவ ...... மயல் மேலாய்

வஞ்சினங்கள் திரண்டு கண்!செவி
     யும் சுகங்கள் திரும்பி முன்செய்த
          வஞ்சினங்களுடன் கிடந்துடல் அழிவேனோ

தந்த னந்தன தந்த னந்தன
     திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
          சங்கு வெண்கல கொம்பு துந்துமி ...... பலபேரி

சஞ்சலஞ்சல கொஞ்சு கிண்கிணி
     தங்கு டுண்டுடு டுண்டுடன் பல
          சந்திரம்பறை பொங்கு வஞ்சகர் ...... களமீதே

சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு
     செம்புளம் கருடன் பருந்துகள்
          செங்களம்திகை எங்கு மண்டிட ...... விடும்வேலா

திங்கள் இந்திரன் உம்பர் !அந்தர 
     ரும் புகழ்ந்துருகும் பரன்சபை
          செம்பொன் அம்பலம் அங்கொள் அன்பர்கள் ...... பெருமாளே.

திருப்பாடல் 8:
தந்தன தந்தன தான தந்தன
  தான தனந்தன தான தந்தன
    தந்தன தந்தன தான தந்தன
      தான தனந்தன தான தந்தன
        தந்தன தந்தன தான தந்தன
          தான தனந்தன தான தந்தன ...... தந்ததான

மந்தரம் என்குவடார் தனங்களில் 
  ஆரம் அழுந்திடவே மணம் பெறு
    சந்தன குங்கும சேறுடன் பனி
      நீர்கள் கலந்திடுவார் முகம்சசி
        மஞ்சுறையும் குழலார் சரங்கயல்
          வாள்விழி செங்கழு நீர்ததும்பிய ...... கொந்தள்ஓலை

வண்சுழலும் செவியார் நுடங்கிடை
  வாட நடம் புரிவார் மருந்திடு
    விஞ்சையர் கொஞ்சிடு வாரிளங்குயில்
      மோகன வஞ்சியர் போல்அகம் பெற
        வந்தவர் எந்தவுர் நீர்அறிந்தவர்
          போல இருந்ததெனா மயங்கிட ...... இன்சொல் கூறிச்

சுந்தர வங்கணமாய் நெருங்கி நிர்
  வாருமெனும் படி ஆலகம் கொடு
    பண்சரசம் கொள வேணும் என்றவர்
      சேம வளந்துறு தேன்அருந்திட
        துன்று பொனங்கையின் மீது!கண்டவ
          ரோடு விழைந்துமெ கூடி இன்புறு ...... மங்கையோரால்

துன்பமுடன் கழி நோய் சிரங்கொடு
  சீபுழுவும் சலமோடிறங்கிய
    புண்குடவன் கடியோடிளம் சனி
      சூலை மிகுந்திடவே பறந்துடல்
        துஞ்சிய மன்பதியே புகுந்துயர்
          ஆழி விடும்படி சீர்பதம் பெறு ...... விஞ்சை தாராய்

அந்தர துந்துமியோடுடன்! கண
  நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர் 
    இந்திர சந்திரர் சூரியன்கவி
      வாணர் தவம் புலியோர் பதஞ்சலி
        அம்புயனம் திருமாலொடிந்திரை
          வாணி அணங்கவளோடருந்தவர் ...... தங்கள் மாதர்

அம்பர ரம்பையரோடுடன் திகழ்
  மாஉரகன் புவியோர்கள் மங்கையர்
    அம்புவி மங்கையரோடருந்ததி
      மாதர் புகழ்ந்திடவே நடம்புரி
        அம்புய செம்பதர் மாடகம்!சிவ
          காம சவுந்தரியாள் பயந்தருள் ...... கந்தவேளே

திந்திமி திந்திமி தோதிமிந்திமி
  தீத திதிந்தித தீதி திந்திமி
    தந்தன தந்தன னாத னந்தன
      தான தனந்தன னாவெனும் பறை
        செந்தவில் சங்குடனே முழங்க!சு
          ரார்கள் சிரம் பொடியாய் விடும்செயல் ...... கண்டவேலா

செந்தினையின் புனமேர் குறிஞ்சியில்
  வாழும்இளம் கொடியாள் பதங்களில்
    வந்து வணங்கி நிணே முகம்பெறு
      தாள்அழகங்கையின் வேலுடன்புவி
        செம்பொனின் அம்பலமேல் அகம்!பிர
          கார சமந்திர மீதமர்ந்தருள் ...... தம்பிரானே.

திருப்பாடல் 9:
தனத்தத்தம் தனத்தத்தத்
     தனத்தத்தம் தனத்தத்தத்
          தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான

கதித்துப் பொங்கலுக்கொத்துப்
     பணைத்துக் கொம்பெனத் தெற்றிக்
          கவித்துச் செம்பொனைத் துற்றுக் ...... குழலார்பின்

கழுத்தைப் பண்புறக் கட்டிச்
     சிரித்துத் தொங்கலைப் பற்றிக்
          கலைத்துச் செங்குணத்தில் பித்திடுமாதர்

பதித்துத் தம் தனத்தொக்கப்
     பிணித்துப் பண்புறக் கட்டிப்
          பசப்பிப் பொன் தரப் பற்றிப் ...... பொருள் மாளப்

பறித்துப்பின் துரத்துச் சொல் 
     கபட்டுப் பெண்களுக்கிச்சைப்
          பலித்துப் பின் கசுத்திப் பட்டுழல்வேனோ

கதித்துக் கொண்டெதிர்த்துப்பின் 
     கொதித்துச் சங்கரித்துப் பல் 
          கடித்துச் சென்றுழக்கித் துக்கசுரோரைக்

கழித்துப் பண்டமர்க்குச்!செம் 
     பதத்தைத் தந்தளித்துக்!கைக்
          கணிக் குச்சம் தரத்தைச் சுத்தொளிர் வேலா

சிதைத்திட்டம்புரத்தைச் சொல் 
     கயத்தைச் சென்றுரித்துத் தன் 
          சினத் தக்கன் சிரத்தைத் தள் ..... சிவனார் தம் 

செவிக்குச்செம் பொருள் கற்கப்
     புகட்டிச் செம்பரத்தில் செய்த்
          திருச்சிற்றம்பலச் சொக்கப் ...... பெருமாளே.

திருப்பாடல் 10:
தனத்தத் தந்தன தானன தானன
     தனத்தத் தந்தன தானன தானன
          தனத்தத் தந்தன தானன தானன ...... தனதான

சிரித்துச் சங்கொளியாம் மினலாமென
     உருக்கிக் கொங்கையினால் உற மேல்விழு
          செணத்தில் சம்பளமே பறிகாரிகள் ...... சிலபேரைச்

சிமிட்டிக் கண்களினால் உறவே மயல்
     புகட்டிச் செந்துகிலால் வெளியாய் இடை
          திருத்திப் பண்குழலேய் முகிலோவிய ...... மயில் போலே

அருக்கிப் பண்புறவே கலையால் முலை
     மறைத்துச் செந்துவர் வாய்அமுதூறல்கள் 
          அளித்துப் பொன் குயிலாமெனவே குரல் ...... மிடறோதை

அசைத்துக் கொந்தள ஓலைகளார் பணி
     மினுக்கிச் சந்தன வாசனை சேறுடன் 
          அமைத்துப் பஞ்சணை மீதணை மாதர்கள் உறவாமோ

இரைத்துப் பண்டமராவதி வானவர் 
     ஒளித்துக் கந்த சுவாமி பராபரம் 
          எனப் பட்டெண்கிரி ஏழ்கடல் தூள்பட ...... அசுரார்கள்

இறக்கச் சிங்கம தேர்பரி !யானையொ
     டுறுப்பில் செங்கழுகோரிகள் !கூளியொ
          டிரத்தச் சங்கமதாடிட வேல்விடு ...... மயில்வீரா

சிரித்திட்டம் புரமே மதனார்உடல்  
     எரித்துக் கண்ட கபாலியர் பாலுறை
          திகழ்ப்பொற் சுந்தரியாள் சிவகாமி நல்கிய சேயே

திருச்சித்தம் தனிலே குறமானதை
     இருத்திக் கண்களி கூர்திகழ் ஆடக
          திருச்சிற்றம்பல மேவி உலாவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 11:
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
     தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
          தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன ...... தந்ததான

தத்தை என்றொப்பிடும் தோகை நட்டம் கொளுவர்
     பத்திரம் கண்கயல் காரியொப்பும் குழல்கள்
          சச்சையம் கெச்சையும் தாளஒத்தும் பதுமை ...... என்ப நீலச்

சக்கரம் பொற்குடம் பாலிருக்கும்!தனமொ
     டொற்றி நன் சித்திரம் போல எத்தும் பறியர்
          சக்களம் சக்கடம் சாதி துக்கம் கொலையர் ...... சங்கமாதர்

சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர்
     முற்பணம் கைக்கொடுந்தாரும் இட்டம் கொளுவர்
          சொக்கிடும் புக்கடன் சேரு மட்டும் தனகும் ...... விஞ்சையோர் பால்

தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை
     விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு
          துப்படங்கிப் படும் சோரனுக்கும் பதவி ...... எந்த நாளோ

குத்திரம் கற்ற சண்டாளர் சத்தம் குவடு
     பொட்டெழுந்திட்டு நின்றாட எட்டம் திகையர்
          கொற்றமும் கட்டியம் பாட நிர்த்தம் பவுரி ...... கொண்டவேலா

கொற்றர் பங்குற்ற சிந்தாமணிச் செங்குமரி
     பத்தர் அன்புற்ற எந்தாய் எழில் கொஞ்சுகிளி
          கொட்புரம் தொக்க வெந்தாட விட்டங்கிவிழி ...... மங்கைபாலா

சித்திரம் பொற்குறம் பாவை பக்கம் புணர
     செட்டி என்றெத்தி வந்தாடி நிர்த்தங்கள் புரி
          சிற்சிதம் பொற்புயம்  சேரமுற்றும் புணரும் எங்கள் கோவே

சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர்
     ருத்திரன் பத்திரம் சூலகர்த்தன் சபையில்
          தித்தி என்றொத்தி நின்றாடு சிற்றம்பலவர் ...... தம்பிரானே .

திருப்பாடல் 12:
தனத்தத்தந் தனத்தத்தந்
   தனத்தத்தந் தனத்தத்தந்
      தனத்தத்தந் தனத்தத்தந்
         தனத்தத்தந் தனத்தத்தந்
            தனத்தத்தந் தனத்தத்தந்
               தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான

தனத்தில் குங்குமத்தைச்!சந்
   தனத்தைக் கொண்டணைத்துச் !சங்
      கிலிக் கொத்தும் பிலுக்குப் பொன்
         தனில் கொத்தும் தரித்துச்!சுந்
            தரத்தில் பண்பழித்துக் கண்
               சுழற்றிச் சண்பகப் புட்பம் ...... குழல் மேவித்

தரத்தைக் கொண்டசைத்துப் பொன்
   தகைப்பட்டும் தரித்துப் பின்
      சிரித்துக் கொண்டழைத்துக் !கொந்
         தளத்தைத் தண் குலுக்கிச்!சங்
            கலப்புத் தன் கரத்துக் !கொண்
               டணைத்துச் சம்ப்ரமித்துக் கொண்டுறவாடிப்

புனித்தப் பஞ்சணைக் கண்திண்
   படுத்துச் சந்தனப் பொட்டும் 
      குலைத்துப் பின் புயத்தைக்!கொண்
         டணைத்துப் பின் !சுகித்திட்டின்
            பு கட்டிப் பொன் சரக்கொத்தும் 
               சிதைப்பப் பொன் தரப் பற்றும் ...... பொதுமாதர்

புணர்ப்பித்தும் பிடித்துப் பொன்
   கொடுத்துப் பின் பிதிர்ச் சித்தன்
      திணிக் கட்டும் சிதைத்துக் கண்
         சிறுப்பப் புண் பிடித்தப்புண்
            புடைத்துக் கண் பழுத்துக்!கண்
               டவர்க்குக் கண் புதைப்பச் சென்றுழல்வேனோ

சினத்துக் கண் சிவப்பச்!சங்
   கொலிப்பத் திண் கவட்டுச்!செங்
      குவட்டைச் சென்றிடித்துச் செண்
         தரைத் துக்கம் பிடிக்கப் பண்
            சிரத்தைப் பந்தடித்துக்!கொண்
               டிறைத்துத் தெண் கடல்திட்டும் ...... கொளை போகச்

செழித்துப் பொன் சுரர்ச் சுற்றம் 
   களித்துக் கொண்டளிப் புட்பம் 
      சிறக்கப் பண் சிரத்தில்!கொண்
         டிறைத்துச் செம் பதத்தில் கண்
            திளைப்பத் தந்தலைத் தழ்த்தம்
               புகழ்ச் செப்பும் சயத்துத் திண் ...... புயவேளே

பனித்துட்கங்கசற்குக் கண்
   பரப்பித்தன் சினத்தில் திண்
      புரத்தைக் கண்டெரித்துப் பண்
         கயத்தைப் பண்டுரித்துப்பன்
            பகைத் தக்கன் தவத்தைச் !சென்
               றழித்துக் கொன்றடற்பித்தன் ...... தருவாழ்வே

படைத் துப்பொன்றுடைத் திட்பன்
   தனைக் குட்டும் படுத்திப் பண்
      கடிப் புட்பம் கலைச் சுற்றும்
         பதத்தப் பண்புறச் !சிற்றம்
            பலத்தில் கண் களித்தப் பைம்
               புனத்தில் செங்குறத்திப் பெண் ...... பெருமாளே.

திருப்பாடல் 13:
தனதன தனத்தத் தந்த தந்தன
     தனதன தனத்தத் தந்த தந்தன
          தனதன தனத்தத் தந்த தந்தன ...... தனதான

திருடிகள் இணக்கிச் சம்பளம் பறி
     நடுவிகள் மயக்கிச் சங்கம் உண்கிகள்
          சிதடிகள் முலைக் கச்சும்பல் கண்டிகள் ...... சதிகாரர்

செவிடிகள் மதப்பட்டுங்கும் குண்டிகள்
     அசடிகள் பிணக்கிட்டும் புறம்பிகள்
          செழுமிகள் அழைத்திச் சங்கொளும் செயர் ...... வெகுமோகக்

குருடிகள் நகைத்திட்டம் புலம்பு கள் 
     உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள்
          குசலிகள் மருத்திட்டும் கொடும்குணர் ...... விழியாலே

கொளுவிகள் மினுக்குச் சங்கிரங்கிகள்
     நடனமும் நடித்திட்டொங்கு சண்டிகள்
          குணமதில் முழுச் சுத்தசங்க்ய சங்கிகள் உறவாமோ

இருடியர் இனத்துற்றும் பதம்கொளும் 
     மறையவன் நிலத்தொக்கும் சுகம்பெறும் 
          இமையவர் இனக்கட்டும் குலைந்திட ...... வருசூரர்

இபமொடு வெதித்தச் சிங்கமும்பல
     இரதமொடெந்தத் திக்கும் பிளந்திட
          இவுளி இரதத்துற்றங்கம் மங்கிட ...... விடும்வேலா

அரிகரி உரித்திட்டங்கசன் புரம் 
     எரிதர நகைத்துப் பங்கயன் சிரம் 
          அளவொடும் அறுத்துப் பண்டணிந்தவர் அருள்கோனே

அமரர் தமகட்கிட்டம் புரிந்துநல்
     குறவர் தமகள் பக்கம் சிறந்துற
          அழகிய திருச்சிற்றம்பலம் புகு ...... பெருமாளே.

திருப்பாடல் 14:
தந்த தந்தன தந்த தந்தன
     தந்த தந்தன தந்த தந்தன
          தந்த தந்தன தந்த தந்தன ...... தந்ததான

கொந்தரம் குழல் இந்து வண்!புரு
     வங்கள் கண் கயலும் சரம்கணை
          கொண்ட ரம்பையர் அந்தமும்சசி ...... துண்டமாதர்

கொந்தளம் கதிரின் குலங்களில் 
     உஞ்சுழன்றிரசம் பலம் கனி
          கொண்ட நண்பிதழின் சுகம்குயில் இன்சொல் மேவும் 

தந்த அந்தரளம் சிறந்தெழு
     கந்தரம் கமுகென்ப பைங்கழை
          தண்புயம் தளிரின் குடங்கையர் அம்பொனாரம் 

தந்தியின் குவடின் தனங்கள்!இ
     ரண்டையும் குலை கொண்டு விண்டவர்
          தம்கடம் படியும் கவண்தீய ...... சிந்தையாமோ

மந்தரம் கடலும் !சுழழன்றமிர்
     தம் கடைந்தவன் அஞ்சு மங்குலி
          மந்திரம் செல்வமும் சுகம்பெற ...... எந்த வாழ்வும்

வந்தரம்பை எணும் பகிர்ந்து!ந
     டம் கொளும்திரு மங்கை பங்கினன்
          வண்டர் லங்கைஉளன் சிரம்பொடி ...... கண்ட மாயோன்

உந்தியின் புவனங்கள் எங்கும்!அ 
     டங்க உண்ட குடங்கையன் புகழ் 
          ஒண்புரம் பொடி கண்ட எந்தையர் ...... பங்கின் மேவும்

உம்பலின் கலை மங்கை சங்கரி
     மைந்தன் என்றயனும் புகழ்ந்திட
          ஒண்பரம்திரு அம்பலம்திகழ் ...... தம்பிரானே

திருப்பாடல் 15:
தனந்தந்தம் தனந்தந்தம்
   தனந்தந்தம் தனந்தந்தம்
      தனந்தந்தம் தனந்தந்தம் ...... தனதான

தியங்கும் சஞ்சலம் துன்பம் 
   கடம் தொந்தம் !செறிந்தைந்திந்
      த்ரியம் பந்தம் தரும்துன்பம் ...... படும்ஏழை

திதம் பண்பொன்றிலன் பண்டன்
   தலன் குண்டன் சலன் கண்டன்
      தெளிந்துந்தன் பழம் தொண்டென்றுயர்வாகப்

புயங்கம் திங்களின் துண்டம் 
   குருந்தின் கொந்தயன் தன்கம்
      பொருந்தும்கம் கலந்தம் செஞ்சடைசூடி

புகழ்ந்தும் கண்டுகந்தும் !கும்
   பிடும் செம்பொன் சிலம்பென்றும்
      புலம்பும் பங்கயம் தந்தென் ...... குறை தீராய்

இயம்பும் சம்புகம் துன்றும் 
   சுணங்கன்செம் !பருந்தங்கங்
      கிணங்கும் செந்தடம் கண்டும்  ...... களிகூர

இடும்பைகண் சிரம் கண்டம்
   பதம் தம்தம் கரம்!சந்தொன்
      றெலும்பும் சிந்திடும் பங்கம் ...... செயும் வேலா

தயங்கும் பைஞ் சுரும்பெங்கும் 
   தனந்தந்தம் தனந்தந்தம் 
      தடந்தண் பங்கயம் கொஞ்சும் சிறுகூரா

தவம் கொண்டும் செபம் கொண்டும் 
   சிவம் கொண்டும் ப்ரியம் கொண்டும் 
      தலம் துன்றம்பலம் தங்கும் ...... பெருமாளே.

திருப்பாடல் 16:
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
     தனனந் தனத்த தந்த ...... தனதான

பருவம் பணைத்திரண்டு கரி கொம்பெனத் திரண்டு
     பவளம் பதித்த செம்பொன் நிற மார்பில் 

படரும் கனத்த கொங்கை மினல் கொந்தளித்து சிந்த
     பல விஞ்சையைப் புலம்பி ...... அழகான

புருவம் சுழற்றி இந்த்ர தநு வந்துதித்ததென்று
     புளகம் செலுத்திரண்டு ...... கயல் மேவும்

பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
     பொடி கொண்டழிக்கும் வஞ்சர் உறவாமோ

உருவம் தரித்துகந்து கரமும் பிடித்து வந்து
     உறவும் பிடித்தணங்கை ...... வன மீதே

ஒளிர் கொம்பினைச் சவுந்தரிய உம்பலைக் கொணர்ந்து
     ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த ...... மணிமார்பா

செரு வெங்களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
     சிவம் அஞ்செழுத்தை முந்த ...... விடுவோனே

தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்திறைஞ்சு
     திருஅம்பலத்தமர்ந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 17:
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
     தனனந் தனத்த தந்த ...... தனதான

மத வெங்கரிக்கிரண்டு வலு கொம்பெனத் திரண்டு
     வளரும் தனத்தணிந்த ...... மணியாரம்

வளை செங்கையில் சிறந்த ஒளிகண்டு நித்திலங்கு
     வரரும் திகைத்திரங்க ...... வரு மானார்

விதஇங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள்
     மிகை கண்டுறக் கலங்கி ...... மருளாதே

விடுசங்கை அற்றுணர்ந்து வலம் வந்துனைப் புகழ்ந்து
     மிகவிஞ்சு பொற்பதங்கள் ...... தருவாயே

நதியும் திருக்கரந்தை மதியும் சடைக்கணிந்த
     நட நம்பர் உற்றிருந்த ...... கயிலாய

நகம்அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடங்கம்
     நவதுங்க ரத்நம் உந்து ...... திரள்தோளும் 

சிதையும் படிக்கொர்அம்பு தனைமுன் தொடுத்த கொண்டல்
     திறல் செங்கண் அச்சுதன் தன் ...... மருகோனே

தினமும் கருத்துணர்ந்து சுரர் வந்துறப் பணிந்த
     திருஅம்பலத்தமர்ந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 18:
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
     தனதந்தன தனதந்தன தனதந்தன தான
          தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான

முகசந்திர புருவம்சிலை விழியும்கயல் நீல
     முகில்அங்குழல் ஒளிர்தொங்கலொடிசை வண்டுகள் பாட
          மொழியும்கிளி இதழ்பங்கய நகை சங்கொளி காதில் ...... குழையாட

முழவங்கர சமுகம் பரிமள குங்கும வாச
     முலையின்ப ரசகுடம் குவடிணை கொண்டுநல் மார்பில்
          முரணும்சிறு பவளம்தரள வடம்தொடையாடக் ...... கொடிபோலத்

துகிரின்கொடி ஒடியும்படி நடனம்தொடை வாழை
     மறையும்படி துயல்சுந்தர சுக மங்கையரோடு
          துதை பஞ்சணை மிசை அங்கசன் ரதிஇன்பமதாகச் ...... செயல்மேவித்

தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகம் சுழலாட
     விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும்
          சுக சந்திர முகமும்பத அழகும் தமியேனுக்கருள்வாயே

அகரம்திரு உயிர்பண்புற அரிஎன்பதும் ஆகி
     உறையும்சுடர் ஒளிஎன்கணில் வளரும் சிவகாமி
          அமுதம்பொழி பரைஅந்தரி உமைபங்கரனாருக்கொரு சேயே

அசுரன்சிரம் இரதம்பரி சிலையும்கெட கோடு
     சரமும்பல படையும்பொடி கடலும்கிரி சாய
          அமர்கொண்டயில் விடுசெங்கர ஒளிசெங்கதிர் போலத் ...... திகழ்வோனே

மகரம்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை
     மருகென்றணி விருதும்பல முரசம்கலை ஓத
          மறையன்தலை உடையும்படி நடனம்கொளும் மாழைக் ...... கதிர்வேலா

வடிவிந்திரன் மகள்சுந்தர மணமும்கொடு மோக
     சரசம்குற மகள் பங்கொடு வளர்தென் புலியூரில்
          மகிழும்புகழ் திருஅம்பல மருவும்குமரேசப் ...... பெருமாளே.

திருப்பாடல் 19:
தந்தன தானன தான தந்தன
     தந்தன தானன தான தந்தன
          தந்தன தானன தான தந்தன ...... தந்ததான

சந்திர ஓலை குலாவ கொங்கைகள்
     மந்தரம் ஆல நனீர் ததும்ப நல்
          சண்பக மாலை குலாவிளம் குழல் ...... மஞ்சுபோலத்

தண்கயல் வாளி கணார் இளம்பிறை
     விண்புருவார் இதழ் கோவையின் கனி
          தன்செயலார் நகை சோதியின் கதிர் ...... சங்குமேவும் 

கந்தரர் தேமலும் மார் பரம்பநல்
     சந்தன சேறுடனார் கவின்பெறு
          கஞ்சுகமாம் மிடறோதை கொஞ்சிய ...... ரம்பையாரைக்

கண்களி கூர வெகாசை கொண்டவர்
     பஞ்சணை மீது குலாவினும் திரு
          கண்கள்இராறும் இராறு திண்புயமும் கொள்வேனே

இந்திர லோகம் உளார் இதம்பெற
     சந்திர சூரியர் தேர் நடந்திட
          எண்கிரி சூரர் குழாம் இறந்திட ...... கண்டவேலா

இந்திரை கேள்வர் பிதாமகன் கதிர் 
     இந்து சடாதரன் வாசவன் தொழு
          தின்புறவே மனு நூல் விளம்பிய ...... கந்தவேளே

சிந்துர மால் குவடார் தனம்சிறு
     பெண்கள் சிகாமணி மோக வஞ்சியர்
          செந்தினை வாழ்வளி நாயகொண்குக ...... அன்பர்ஓது

செந்தமிழ் ஞானதடாகம் என்சிவ
     கங்கை அளாவும் மகா சிதம்பர
          திண்சபை மேவும் மனா சவுந்தர ...... தம்பிரானே.

திருப்பாடல் 20:
தான தான தான தானன தான தந்த
     தத்த தந்த தத்த தந்த ...... தந்ததான

காயமாய வீடு மீறிய கூடு நந்து
     புற்புதம் தனில் குரம்பை ...... கொண்டுநாளும் 

காசிலாசை தேடி வாழ்வினை நாடி !இந்த்ரி
     ய ப்ரமம் தடித்தலைந்து ...... சிந்தைவேறாய்

வேயிலாய தோள மாமடவார்கள் !பங்க
     யத்து கொங்கை உற்றிணங்கி ...... நொந்திடாதே

வேத கீத போத மோனமெய் ஞான நந்த
     முற்றிடின்ப முத்தியொன்று ...... தந்திடாயோ

மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
     விக்ரமம்கொள் வெற்பிடந்த ...... செங்கைவேலா

வாகை வேடர் பேதை காதல வேழ !மங்கை
     யைப் புணர்ந்த வெற்பகந்த ...... செந்தில்வேளே

ஆயும் வேத கீதம் ஏழிசை பாட !அஞ்செ
     ழுத்தழங்க முட்ட நின்று ...... துன்றுசோதீ

ஆதி நாதர்ஆடு நாடக சாலை !அம்ப
     லச் சிதம்பரத்தமர்ந்த ...... தம்பிரானே.

திருப்பாடல் 21:
தனதன தனதன தானான தானன
     தனதன தனதன தானான தானன
          தனதன தனதன தானான தானன ...... தந்ததான

அவகுண விரகனை வேதாள ரூபனை
     அசடனை மசடனை ஆசார ஈனனை
          அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம்

அடைசிய சவடனை மோடாதி மோடனை
     அழிகரு வழிவரு வீணாதி வீணனை
          அழுகலை அவிசலை ஆறான ஊணனை ...... அன்பிலாத

கவடனை விகடனை நானா விகாரனை
     வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
          கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பி வீழும் 

களியனை அறிவுரை பேணாத மாநுட
     கசனியை அசனியை மாபாதனாகிய
          கதியிலி தனையடி நாயேனை ஆளுவதெந்தநாளோ

மவுலியில் அழகிய பாதாள லோகனும் 
     மரகத முழுகிய காகோத ராஜனும் 
          மநுநெறி உடன்வளர் சோணாடர் கோனுடன் உம்பர் சேரும்

மகபதி புகழ்புலியூர் வாழு நாயகர்
     மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
          மலைமகள்உமைதரு வாழ்வே மனோகர ...... மன்றுளாடும்

சிவசிவ ஹரஹர தேவா நமோநம
     தெரிசன பரகதியானாய் நமோநம
          திசையினும் இசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல் சேரும் 

திருதரு கலவி மணாளா நமோநம
     திரிபுரம்எரிசெய்த கோவே நமோநம
          ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே.

திருப்பாடல் 22:
தத்த தந்ததன தான தந்ததன
     தத்த தந்ததன தான தந்ததன
          தத்த தந்ததன தான தந்ததன ...... தனதான

கட்டி முண்டகரபாலி அங்கிதனை
     முட்டி அண்டமொடு தாவி விந்துஒலி
          கத்த மந்திரவதான வெண்புரவி ...... மிசையேறிக்

கற்பகம் தெருவில் வீதி கொண்டுசுடர்
     பட்டி மண்டபம் ஊடாடி இந்துவொடு
          கட்டி விந்துபிசகாமல் வெண்பொடி கொடசையாமல் 

கட்டு வெம்புரம் நிறாக விஞ்சைகொடு
     தத்துவங்கள் விழ சாடி எண்குணவர்
          சொர்க்கம் வந்து கையுளாக எந்தைபதம் உறமேவித்

துக்கம் வெந்துவிழ ஞானமுண்டு குடில்
     வச்சிரங்களென மேனி தங்கமுற
          சுத்தகம் புகுத வேத விந்தையொடு ...... புகழ்வேனோ

எட்டிரண்டும்அறியாத என்செவியில் 
     எட்டிரண்டும் இதுவாம் இலிங்கமென
          எட்டிரண்டும்வெளியா மொழிந்த குரு ...... முருகோனே

எட்டிரண்டு திசையோட செங்குருதி
     எட்டிரண்டும் உருவாகி வஞ்சகர்மெல் 
          அட்டிரண்டு திசையோர்கள் பொன்றஅயில் ...... விடுவோனே

செட்டியென்று சிவகாமி தன்பதியில்
     கட்டு செங்கை வளை கூறும் எந்தையிடம் 
          சித்தமும் குளிர்அநாதி வண்பொருளை ...... நவில்வோனே

செட்டியென்று வனமேவி இன்பரச
     சத்தியின் செயலினாளை அன்புருக
          தெட்டி வந்து புலியூரின் மன்றுள் வளர் ...... பெருமாளே.

திருப்பாடல் 23:
தந்தனத் தானதன தந்தனத் தானதன
     தந்தனத் தானதன ...... தந்ததான

நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
     நம்புதல் தீதென நினைந்துநாயேன்

நண்புகப் பாதமதில் அன்புறத் தேடியுனை
     நங்களப்பா சரணமென்றுகூறல்

உன்செவிக்கேறலை கொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
     உன்சொலைத் தாழ்வு செய்து மிஞ்சுவாரார்

உந்தனக்கே பரமும் எந்தனக்கார் துணைவர்
     உம்பருக்காவதினின் ...... வந்து தோணாய்

கஞ்சனைத் தாவிமுடி முன்பு குட்டேய மிகு
     கண்களிப்பாக விடு ...... செங்கையோனே

கண்கயல் பாவைகுற மங்கை பொற்தோள் தழுவு
     கஞ்சுகப் பான்மை புனை ...... பொன்செய் தோளாய்

அஞ்ச வெற்பேழு கடல் மங்க நிட்டூரர் குலம்
     அந்தரத்தேற விடு ...... கந்தவேளே

அண்டமுற் பார்புகழும் எந்தை பொற்பூர் புலிசை
     அம்பலத்தாடும் அவர் ...... தம்பிரானே.

திருப்பாடல் 24:
தந்ததன ...... தனதான
     தந்ததன ...... தனதான

செங்கலச ...... முலையார் பால்
     சிந்தை பல ...... தடுமாறி

அங்கமிக ...... மெலியாதே
     அன்புருக ...... அருள்வாயே

செங்கைபிடி ...... கொடியோனே
     செஞ்சொல் தெரி ...... புலவோனே

மங்கை உமை ...... தருசேயே
     மன்றுள் வளர் ...... பெருமாளே.

திருப்பாடல் 25:
தனன தான தனந்தன தானன
     தனன தான தனந்தன தானன
          தனன தான தனந்தன தானன ...... தந்ததான

கரிய மேகம்எனும் குழலார்பிறை
     சிலைகொள் வாகுஎனும் புருவார்விழி
          கயல்கள் வாளிஎனும் செயலார்மதி ...... துண்டமாதர்

கமுக க்ரீவர் புயம் கழையார் தன
     மலைகளா இணையும் குவடார் கர
          கமல வாழை மனும் தொடையார் சர ...... சுங்க மாடை

வரிய பாளிதம் உந்துடையார்இடை
     துடிகள் நூலியலும் கவினார்அல்குல்
          மணம்உலாவிய ரம்பையினார் பொருள் ...... சங்கமாதர்

மயில்கள் போல நடம்புரி வாரியல்
     குணமிலாத வியன் செயலார் வலை
          மசகி நாயென் அழிந்திடவோ உனதன்பு தாராய்

சரியிலாத சயம்பவியார் முகில் 
     அளக பார பொனின் சடையாள் சிவை
          சருவலோக சவுந்தரியாள் அருள் ...... கந்தவேளே

சதபணா மகுடம் பொடியாய்விட
     அவுணர் சேனை மடிந்திடவே ஒரு
          தழல்கொள் வேலை எறிந்திடு சேவக ...... செம்பொன் வாகா

அரிய மேனி இலங்கை இராவணன்
     முடிகள் வீழ சரந்தொடு மாயவன்
          அகிலம் ஈரெழும் உண்டவன் மாமருகண்டரோதும்

அழகு சோபித அங்கொளும் ஆனன
     விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி
          அருள் கொடாடி சிதம்பரம் மேவிய ...... தம்பிரானே.

திருப்பாடல் 26:
தாந்த தானன தந்த தனந்தன
     தாந்த தானன தந்த தனந்தன
          தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான

கூந்தலாழ விரிந்து சரிந்திட
     காந்து மாலை குலைந்து பளிங்கிட
          கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட ...... கொங்கைதானும் 

கூண்களாமென பொங்க நலம்பெறு
     காந்தள் மேனி மருங்கு துவண்டிட
          கூர்ந்த ஆடை குலைந்து புரண்டிரசங்கள் பாயச்

சாந்து வேர்வின்அழிந்து மணந்தப
     ஓங்கவாவில் கலந்து முகம் கொடு
          தான்பலா சுளையின்சுவை கண்டிதழ் உண்டுமோகம் 

தாம்புறா மயிலின்குரல் கொஞ்சிட
     வாஞ்சை மாதருடன் புளகம்கொடு
          சார்ந்து நாயென்அழிந்து விழுந்துடல் ...... மங்குவேனோ

தீந்த தோதக தந்தன திந்திமி
     ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
          சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்கு சூரைச்

சேண்சுலா மகுடம் பொடிதம் பட
     ஓங்க ஏழ்கடலும் சுவறங்கையில்
          சேந்த வேலது கொண்டு நடம்பயில் ...... கந்தவேளே

மாந்தணாரும் வனம்குயில் கொஞ்சிட
     தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு
          வான் குலாவு சிதம்பரம் வந்தமர் ...... செங்கை வேலா

மாண் ப்ரகாச தனங்கிரி சுந்தரம் 
     ஏய்ந்த நாயகி சம்பை மருங்குபொன்
          வார்ந்த ரூபி குறம்பெண் வணங்கிய ...... தம்பிரானே.

திருப்பாடல் 27:
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
     தத்த தன்ன தய்ய ...... தனதான

அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி
     அத்தை நண்ணு செல்வர் உடனாகி

அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் 
     அற்று நின்னை வல்ல ...... படிபாடி

முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி
     முத்தன் என்ன உள்ளம் உணராதே

முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் 
     முட்டன் இங்ஙன் நைவதொழியாதோ

தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணினுள்!உ 
     தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய
     சித்ர வண்ண வல்லி ...... அலர்சூடும்

பத்தர் உண்மை சொல்லுள் உற்ற செம்மல் வெள்ளி
     பத்தர் கன்னி புல்லும் ...... மணிமார்பா

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.

திருப்பாடல் 28:
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
     தனதாத்த தய்ய ...... தனதான

இருள்காட்டு செவ் விததிகாட்டி வில்லின் 
     நுதல் காட்டி வெல்லும் இருபாண

இயல்காட்டு கொல் குவளை காட்டி முல்லை
     நகைகாட்டு வல்லி ...... இடைமாதர்

மருள்காட்டி நல்குரவு காட்டும் இல்ல
     இடுகாட்டின் எல்லை ...... நடவாத

வழிகாட்டி நல்லறிவு காட்டி மெல்ல
     வினை வாட்டி அல்லல் ...... செயலாமோ

தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
     மொழிகாட்டு தில்லை ...... இளையோனே

தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
     குறவாட்டி புல்லு ...... மணிமார்பா

அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
     அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா

அடிபோற்றி அல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.

திருப்பாடல் 29:
தனந்தத்த தனதான தனந்தத்த தனதான
     தனந்தத்த தனதான ...... தனதான

சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
     துரந்துற்ற குளிர் வாடை ...... அதனாலும் 

துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால
     தொடர்ந்துற்று வருமாதர் ...... வசையாலும்

அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலும் 
     அடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும்

அழிந்துற்ற மடமானை அறிந்தற்றம் அதுபேணி
     அசைந்துற்ற மதுமாலை ...... தரவேணும்

கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி
     கரந்துற்ற மடமானின் உடனே சார்

கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில்
     களம்பற்றி நடமாடும் அரன்வாழ்வே

இருந்துற்று மலர்பேணி இடும் பத்தர் துயர்தீர
     இதம்பெற்ற மயிலேறி ...... வருகொவே

இனந்துற்ற வருசூரன் உருண்டிட்டு விழவேல்!கொ
     டெறிந்திட்டு விளையாடு ...... பெருமாளே.

திருப்பாடல் 30:
தனந்தத் தத்தன தானன தானன
   தனந்தத் தத்தன தானன தானன
      தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான

இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்
   மணந்திட்டுச் சுகமாய் விளையாடிகள்
      இளஞ்சொல் செப்பிகள் சாதனை வீணிகள் ...... கடிதாகும்

இடும்பைப் பற்றிய தாமென மேயினர்
   பெருஞ்சொல் பித்தளை தானும் வையாதவர்
      இரும்பில் பற்றிய கூர்விழி மாதர்கள் ...... எவரேனும்

பணம் சுற்றிக் கொள் உபாய உதாரிகள்
   மணம் கட்டுக் குழல் வாசனை வீசிகள்
      பலம் செப்பித்தர மீளழையாதவர் ...... அவரோடே

பதம் துய்த்துக் கொடு தீமைய மா!நர
   கடைந்திட்டுச் சவமாகி விடாதுன
      பதம் பற்றிப் புகழானது கூறிட ...... அருள்வாயே

வணங்கச் சித்தமிலாத இராவணன்
   சிரம்பத்துக் கெட வாளி கடாவியெ
      மலங்கப் பொக்கரை ஈடழி மாதவன் ...... மருகோனே

மதம் பட்டுப் பொரு சூரபன்மாதியர்
   குலம் கொட்டத்திகல் கூறிய மோடரை
      வளைந்திட்டுக் கள மீதினிலே கொல ...... விடும்வேலா

பிணம் பற்றிக் கழுகோடு பல் கூளிகள்
   பிடுங்கிக் கொத்திடவே அமராடியெ
      பிளந்திட்டுப் பல மாமயிலேறிய ...... முருகோனே

பிரிந்திட்டுப் பரிவாகிய ஞானிகள்
   சிலம்பத்தக் கழல் சேரவெ நாடிடு
      பெரும்பற்றப் புலியூர்தனில் மேவிய ...... பெருமாளே

திருப்பாடல் 31:
தனந்தத் தத்தன தானன தானன
     தனந்தத் தத்தன தானன தானன
          தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான

விடுங்கைக்கொத்த கடாஉடையானிடம் 
     அடங்கிக் கைச்சிறையான அநேகமும்
          விழுங்கப் பட்டறவே அறல்ஓதியர் ...... விழியாலே

விரும்பத் தக்கன போகமு(ம்) மோகமும்
     விளம்பத் தக்கன ஞானமு(ம்) மானமும்
          வெறும்சுத்தச் சலமாய் வெளியாய்உயிர் ...... விடுநாளில்

இடும் கட்டைக்கிரையாய் அடியேனுடல்
     கிடந்திட்டுத் தமரானவர் கோவென
          இடங்கட்டிச் சுடுகாடு புகாமுனம்  ...... மனதாலே

இறந்திட்டுப் பெறவே கதியாயினும்
     இருந்திட்டுப் பெறவே மதியாயினும்
          இரண்டில் தக்கதொர் ஊதியம் நீதர ...... இசைவாயே

கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன்
     நடுங்கச் சுக்ரிவனோடமர்ஆடிய
          குரங்கைச் செற்று மகோததி தூளெழ ...... நிருதேசன்

குலங்கண் பட்ட நிசாசரர் கோவென
     இலங்கைக்குள் தழலோன்எழ நீடிய
          குமண்டைக் குத்திர ராவணனார்முடி ...... அடியோடே

பிடுங்கத் தொட்ட சராதிபனார்அதி
     ப்ரியம்கொள் தக்கநல் மாமருகா இயல்
          ப்ரபஞ்சத்துக்கொரு பாவலனார்என ...... விருதூதும்

ப்ரசண்டச் சொற்சிவ வேத சிகாமணி
     ப்ரபந்தத்துக்கொரு நாத சதாசிவ
          பெரும்பற்றப் புலியூர்தனில் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 32:
தந்தன தானன தானத்தம்
     தந்தன தானன தானத்தம்
          தந்தன தானன தானத்தம் ...... தனதான

கொந்தள ஓலைகளாடப் பண்
     சங்கொளி போல்நகை வீசித்தண்
          கொங்கைகள் மார்பினிலாடக் கொண்டையென் மேகம்

கொங்கெழு தோள் வளையாடக்கண்
     செங்கயல் வாளிகள் போலப்பண்
          கொஞ்சிய கோகிலமாகப் பொன் ...... பறிகாரர்

தந்திரமாமென ஏகிப்பொன்
     தொங்கலொடாரமும் ஆடச்செம் 
          தம்பல வாயொடு பேசிக் கொண்டுறவாடிச்

சம்பளம் ஈதென ஓதிப்பின்
     பஞ்சணை மேல் மயலாடச்சம் 
          சங்கையில் மூளியர் பால்வைக்கும் ...... செயல்தீராய்

அந்தகனார்உயிர் போகப்பொன்
     திண்புரமோடெரி பாயப்!பண்
          டங்கசனார் உடல் வேகக் கண்டழல் மேவி

அண்டர்களோடடலார் தக்கன்
     சந்திர சூரியர் வீழச்!சென்
          றம்பலம் மீதினில் ஆடத்தன் ...... குருநாதா

சிந்துரமோடரி தேர் வர்க்கம்
     பொங்கமொடேழ் கடல் சூர்பத்மன்
          சிந்திட வேல்விடு வாகைத்திண் ...... புயவேளே

செங்குற மாது மினாளைக்!கண்
     டிங்கிதமாய் உறவாடிப்பண்
          செந்தமிழ் மால் புலியூர் நத்தும் ...... பெருமாளே.

திருப்பாடல் 33:
தனனா தத்தன தானத்தம்
     தனனா தத்தன தானத்தம்
          தனனா தத்தன தானத்தம் ...... தனதான

நகையால்எத்திகள் வாயில்!தம்
     பலமோடெத்திகள் நாணற்றின்
          நயனால்எத்திகள் நாறல்புண் ...... தொடைமாதர்

நடையால்எத்திகள் ஆரக்!கொங்
     கையினால்எத்திகள் மோகத்தின்
          நவிலால்எத்திகள் தோகைப்பைங் ...... குழல்மேகச்

சிகையால்எத்திகள் ஆசைச்!சங்
     கடியால்எத்திகள் பாடிப்பண்
          திறனால்எத்திகள் பாரத்திண் ...... தெருவூடே

சிலர்கூடிக்கொடு ஆடிக்!கொண்
     டுழல்வாருக் குழல் நாயெற்குன்
          செயலால் அற்புத ஞானத்திண் ...... கழல்தாராய்

பகையார்உட்கிட வேலைக்!கொண்
     டுவர்ஆழிக்கிரி நாகத்தின்
          படமோடிற்றிட சூரைச் சங்கரிசூரா

பண நாகத்திடை சேர்முத்தின்
     சிவகாமிக்கொரு பாகத்தன்
          பரிவால் சத்துபதேசிக்கும் ...... குரவோனே

சுகஞானக் கடல் மூழ்கத்!தந்
     தடியேனுக்கருள் பாலிக்கும் 
          சுடர்பாதக் குகனே முத்தின் ...... கழல்வீரா

சுக ரேசத் தனபாரச் செம் 
     குறமாதைக் களவால் நித்தம் 
          சுகமூழ்கிப் புலியூர் நத்தும் ...... பெருமாளே.

திருப்பாடல் 34:
தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான

எழுகடல் மணலை அளவிடின் அதிகம் 
     எனதிடர் பிறவி ...... அவதாரம்

இனி உனதபயம் எனதுயிர்உடலும் 
     இனியுடல் விடுக ...... முடியாது

கழுகொடு நரியும் எரிபுவி மறலி
     கமலனும் மிகவும் அயர்வானார்

கடன்உனதபயம் அடிமைஉன் அடிமை
     கடுகிஉனடிகள் ...... தருவாயே

விழுதிகழ் அழகி மரகத வடிவி
     விமலி முனருளும் ..... முருகோனே

விரிதலம் எரிய குலகிரி நெரிய
     விசைபெறு மயிலில் ...... வருவோனே

எழுகடல் குமுற அவுணர்கள் உயிரை
     இரைகொளும் அயிலை ......உடையோனே

இமையவர் முநிவர் பரவிய !புலியு 
     ரினில் நட மருவு ...... பெருமாளே.

திருப்பாடல் 35:
தனதன தனன தனதன தனன
     தனதன தனனாத் ...... தனதான

தறுகணன் மறலி முறுகிய கயிறு
     தலைகொடு விசிறீக் ...... கொடுபோகும் 

சளமது தவிர அளவிடு சுருதி
     தலைகொடு பலசாத்திரம்ஓதி

அறுவகை சமய முறைமுறை சருவி
     அலைபடு தலைமூச்சினையாகும்

அருவரு ஒழிய வடிவுள பொருளை
     அலம்வர அடியேற்கருள்வாயே

நறுமலர் இறைவி அரிதிரு மருக
     நகமுதவிய பார்ப்பதி வாழ்வே

நதிமதி இதழி பணியணி கடவுள்
     நடமிடு புலியூர்க் ...... குமரேசா

கறுவிய நிருதர் எறிதிரை பரவு
     கடலிடை பொடியாப் ...... பொருதோனே

கழலிணை பணியும் அவருடன் முனிவு
     கனவிலும் அறியாப் ...... பெருமாளே.

திருப்பாடல் 36:
தனதனா தத்ததன தனதனா தத்ததன
  தனதனா தத்ததன தானனந் தனன
    தனதனா தத்ததன தனதனா தத்ததன
      தனதனா தத்ததன தானனந் தனன
        தனதனா தத்ததன தனதனா தத்ததன
          தனதனா தத்ததன தானனந் தனன ...... தந்ததான

இரசபாகொத்த மொழி அமுர்த மாணிக்கநகை
   இணையிலா சத்திவிழியார் பசும் பொனிரர்
      எழிலி நேரொத்த இருள் அளக பாரச்செயல்கள் 
         எழுதொணாதப் பிறையினார் அரும்புருவர்
            எழுது தோடிட்ட செவி பவளநீலக் கொடிகள் 
               இகலியாடப் படிகமோடடும் பொனுரு ...... திங்கள்மேவும்

இலவு தாவித்த இதழ் குமிழை நேரொத்த எழில் 
   இலகுநாசிக் கமுகு மால சங்கினொளி
      இணைசொல் க்ரீவத் தரள இனஒள் தாலப் பனையின் 
         இயல்கலா புத்தகமொடேர் சிறந்தஅடி
            இணையிலானைக் குவடென்ஒளிநிலா துத்திபடர் 
               இகலியாரத் தொடையும் ஆரும் இன்பரச ...... தங்கமார்பில் 

வரிகள் தாபித்தமுலை இசைய ஆலிற் தளிரின்
   வயிறுநாபிக் கமலமாம்எனும்  சுழிய
      மடுவு ரோமக் கொடியென் அளிகள் சூழ்வுற்ற நிரை
         மருவு நூலொத்தஇடை ஆரசம்பை அல்குல்
            மணமெலாம் உற்றநறை கமலபோதுத் தொடையென்
               வளமையார் புக்கதலி சேரு செம்பொனுடை ...... ரம்பைமாதர்

மயலதால் இற்றடியென் அவர்கள் பாலுற்று வெகு
   மதன பாணத்தினுடன் மேவி மஞ்சமிசை
      வதனம் வேர்வுற்றவிர முலைகள் பூரிக்க மிடர்
         மயில்புறா தத்தைகுயில் போல்இலங்கமளி
            வசனமாய் பொத்திஇடை துவளமோகத்துள் அமிழ்
               வசமெலாம் விட்டுமற வேறுசிந்தனையை ...... தந்துஆள்வாய்

முரசு பேரித்திமிலை துடிகள் பூரித்தவில்கள்
   முருடு காளப்பறைகள் தாரை கொம்பு வளை
      முகடுபேர் உற்றவொலி இடிகள் போலொத்த மறை
         முதுவர் பாடிக் குமுறவே இறந்தசுரர்
            முடிகளோடெற்றி அரி இரதமானைப் !பிணமொ
               டிவுளி வேலைக்குருதி நீர் மிதந்து திசை ...... எங்குமோட

முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர்
   முநிவராடிப் புகழவேத விஞ்சையர்கள்
      முழவு வீணைக் கினரி அமுர்த கீதத்தொனிகள்
         முறையதாகப் பறைய ஓதி ரம்பையர்கள்
            முலைகள் பாரிக்கவுடன் நடனம் ஆடிற்றுவர
               முடிபதாகைப் பொலியவே நடம்குலவு ...... கந்தவேளே

அரசுமா கற்பகமொடகில் பலா இர்ப்பைமகிழ் 
   அழகுவேய் அத்தி கமுகோடரம்பையுடன்
      அளவி மேகத்தில் ஒளிர் வன மொடாடக் குயில்கள் 
         அளிகள் தோகைக் கிளிகள் கோவெனம் பெரிய
            அமுர்த வாவிக் கழனி வயலில் வாளைக் கயல்கள் 
               அடையும் ஏரக்கனக நாடெனும் புலியுர் ...... சந்தவேலா

அழகு மோகக் குமரி விபுதை ஏனல் புனவி
   அளிகுலா உற்றகுழல் சேர்கடம்பு தொடை
      அரசிவேதச் சொருபி கமல பாதக் கரவி
         அரிய வேடச் சிறுமியாள் அணைந்தபுகழ்
            அருணரூபப் பதமொடிவுளி தோகைச் செயல்!கொ
               டணை தெய்வானைத் தனமுமே மகிழ்ந்துபுணர் ...... தம்பிரானே.

திருப்பாடல் 37:
தனன தானன தனன தானன
     தனன தானன ...... தனதான

இருளும்ஓர் கதிர் அணுகொணாத!பொ
     னிடமதேறி எனிருநோயும்

எரியவே மலம் ஒழியவே சுடர் 
     இலகு மூலக ஒளிமேவி

அருவி பாய இனமுதம்ஊறஉன்
     அருளெலாம் எனதளவாக

அருளியேசிவ மகிழவேபெற
     அருளியேஇணை அடிதாராய்

பரம தேசிகர் குருவிலாதவர்
     பரவை வான்மதி ...... தவழ்வேணிப்

பவள மேனியர் எனது தாதையர்
     பரமராசியர் ...... அருள்பாலா

மருவி நாயெனை அடிமையாமென
     மகிழ்மெய் ஞானமும் அருள்வோனே

திருப்பாடல் 38:
தான தனத்தம் தான தனத்தம்
     தான தனத்தம் ...... தனதான

காவி உடுத்தும் தாழ்சடை வைத்தும் 
     காடுகள் புக்கும் ...... தடுமாறிக்

காய்கனி துய்த்தும் காயமொறுத்தும் 
     காசினி முற்றும்  ...... திரியாதே

சீவன்ஒடுக்கம் பூதஒடுக்கம்
     தேற உதிக்கும் ...... பரஞான

தீப விளக்கம் காண எனக்குன்
     சீதள பத்மம் ...... தருவாயே

பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
     பாழ்பட உக்ரம்  ...... தருவீரா

பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
     பாடலை மெச்சும் ...... கதிர்வேலா

தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும் 
     சோலை சிறக்கும் ...... புலியூரா

சூரர் மிகக் கொண்டாட நடிக்கும் 
     தோகை நடத்தும் ...... பெருமாளே

திருப்பாடல் 39:
தானத் தானத் தாந்தன தானன
     தானத் தானத் தாந்தன தானன
          தானத் தானத் தாந்தன தானன ...... தனதான

கோதிக் கோதிக் கூந்தலிலே மலர்
     பாவித்தாகச் சாந்தணிவார் முலை
          கோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழி ...... குயில்போலக்

கூவிக் கூவிக் காண்டிசை போலவெ
     நாணிக் கூனிப் பாய்ந்திடுவார் சிலர்
          கூடித் தேறிச் சூழ்ந்திடுவார் பொருள் ...... வருமோ!என்

றோதித் தோளில் பூந்துகிலால் முலை
     மூடிச் சூதில் தூங்கமிலார் தெரு
          ஓடித் தேடிச் சோம்பிடுவார்சில ...... விலைமாதர்

ஓருச் சேரச் சேர்ந்திடுவார் கலி
     சூளைக்காரச் சாங்கமிலார் !சில
          வோரைச் சாகத் தீம்பிடுவார் செயல் உறவாமோ

வேதத்தோனைக் காந்தள் கையால் தலை
     மேல்குட்டாடிப் பாந்தள் சதாமுடி
          வீரிட்டாடக் காய்ந்தசுரார்கள் மெல் ...... விடும்வேலா

வேளைச் சீறித் தூங்கலொடே!வய
     மாவைத் தோலைச் சேர்ந்தணிவார்இட
          மீதுற்றாள்பொன் சாம்பவி மாதுமை ...... தருசேயே

நாதத்தோசைக் காண்துணையே சுடர்
     மூலத்தோனைத் தூண்டிடவேஉயிர்
          நாடிக் காலில் சேர்ந்திடவேஅருள் ...... சுரமானை

ஞானப் பால் முத்தேன் சுருபாள்!வளி
     மாதைக் கானில் சேர்ந்தணைவாய் சிவ
          ஞானப் பூமித் தேன்புலியூர்மகிழ் ...... பெருமாளே.

திருப்பாடல் 40:
தனதந்தத் தனனா தனதன
     தனதந்தத் தனனா தனதன
          தனதந்தத் தனனா தனதன ...... தனதான

சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல்
     மதஇன்பத்துடனே பலபணி
          தனிதம் பட்டுடையோடிகல் முரசொலி வீணை

தவளம் தப்புடனே கிடுகிடு
     நடைதம்பட்டம் இடோல் பலஒலி
 சதளம்பொன் தடிகாரரும்இவை ...... புடைசூழ

வெகு கும்பத்துடனே பலபடை
     கரகம் சுற்றிடவே வரஇசை
          வெகு சம்பத்துடனே அழகுடன் இதமேவும்

விருமம் சித்திரமாம் இதுநொடி
     மறையும் பொய்ப் பவுஷோடுழல்வது
          விட உம்பர்க்கரிதாம் இணையடி ...... தருவாயே

திகுதந்தித் திகுதோ திகுதிகு
     திகுதந்தித் திகுதோ திகுதிகு
          திகுர்தஞ்செச் செகசே செககண ...... எனபேரித்

திமிர்தம் கற்குவடோடெழு கடல் 
     ஒலி கொண்டற்றுருவோடலறிட
          திரள் சண்டத்தவுணோர் பொடிபட ...... விடும்வேலா

அகரம் பச்சுருவோடொளி உறை
     படிகம்பொற் செயலாள் அரனரி
          அயன் அண்டர்க்கரியாள் உமையருள் ...... முருகோனே

அமுர்தம்பொற் குவடோடிணை முலை
     மதிதுண்டப் புகழ்மான் மகளொடும்
          அருள் செம்பொற் புலியூர் மருவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 41:
தனனதந்தம் தனனதந்தம்
     தனனதந்தம் தானந்தம்
          தனனதந்தம் தனனதந்தம்
               தனனதந்தம் தானந்தம்
                    தனனதந்தம் தனனதந்தம்
                         தனனதந்தம் தானந்தம் ...... தனதான

சகுடம்உந்தும் !கடலடைந்துங் 
     குள மகிழ்ந்தும் தோய்சங்கம் 
          கமுகடைந்தண்டமுத கண்டம் 
               தரள கந்தம் தேர் கஞ்சம் 
                    சரமெனும்கண் குமிழ துண்டம்
                         புருவெனும்செஞ் சாபம்பொன் ...... திகழ்மாதர்

சலச கெந்தம் புழுகுடன்!சண்
     பக மணம் கொண்டேய் ரண்டம் 
          தனகனம் பொன் கிரி வணங்கும்
               பொறிபடும்செம் பேர்வந்தண்
                    சலன சம்பொன்றிடை பணங்கின்
                         கடிதடம் கொண்டார்அம்பொன் ...... தொடர் பார்வை

புகலல் கண்டம் சரிகரம் பொன்
     சரண பந்தம் தோதிந்தம்
          புரமுடன் கிண்கிணி சிலம்பும்
               பொலிஅலம்பும் தாள்ரங்கம்
                    புணர்வணைந்தண்டுவரொடும் !தொண்
                         டிடர் கிடந்துண்டேர் கொஞ்சும்  ...... கடைநாயேன்

புகழடைந்துன் கழல் பணிந்தொண்
     பொடியணிந்தங்காநந்தம்
          புனல் படிந்துண்டவச மிஞ்சும் 
               தவசர் சந்தம் போலும்திண்
                    புவனி கண்டின்றடி வணங்கும் 
                         செயல்கொளம் செஞ் சீர்செம்பொன் ...... கழல்தாராய்

திகுடதிந்திந் தகுடதந்தந்
     திகுடதிந்திந் தோதிந்தம்
          டகுடடண்டண் டிகுடடிண்டிண்
               டகுடடண்டண் டோடிண்டிண்
                    டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண்
                         டிமுடடிண்டென்றே சங்கம் ...... பலபேரி

செககணஞ்சஞ் சலிகை பஞ்சம்
     பறை முழங்கும் போரண்டம் 
          சிலையிடிந்தும் கடல்வடிந்தும்
               பொடி பறந்துண்டோர் சங்கம் 
                    சிரமுடைந்தண்டவுணர் அங்கம்
                         பிணமலைந்தன்றாடும்செங் ...... கதிர்வேலா

அகிலஅண்டம் சுழலஎங்கும்
     பவுரி கொண்டங்காடும் கொன்
          புகழ்விளங்கும் கவுரிபங்கன்
               குருவெனும் சிங்காரம் !கொண்
                    டறுமுகம்பொன் சதிதுலங்கும் 
                         திருபதம் கந்தா என்றென்றமரோர் பால்

அலர் பொழிந்தங்கர முகிழ்ந்தொண்
     சரணமும் கொண்டோதந்தம்
          புனை குறம்பெண் சிறுமியங்கம்
               புணர் செயம் கொண்டே அம்பொன்
                    அமைவிளங்கும் புலிசரம் பொன்
                         திருநடம் கொண்டார் கந்தம் ...... பெருமாளே.

திருப்பாடல் 42:
தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான

சாந்துடனே புழுகு தோய்ந்தழகார் குழலை
     மோந்து பயோதரம் அதணையாகச்

சாய்ந்து ப்ரதாபமுடன் வாழ்ந்தநுராக சுக
     காந்தமொடூசியென ...... மடவார் பால்

கூர்ந்த க்ருபா மனது போந்துன தாள் குறுகி
     ஓர்ந்துணரா உணர்வில் அடிநாயேன்

கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை
     பூண்டுறவாடு தினம் உளதோதான்

பாந்தளின் மீதினிதின் ஓங்கு கணே துயில்கொள்
     நீண்டிடு மாலொடயன் அறியாது

பாம்புருவான முநி வாம் புலியான பதன்
     ஏய்ந்தெதிர் காண நடமிடு பாதர்

பூந்துணர் பாதிமதி வேய்ந்த சடா!மகுட
     மாம் கனகாபுரியில் அமர்வாழ்வே

பூங்கமுகார்வு செறியூம் கநகா புரிசை
     சூழும் புலியூரில்உறை பெருமாளே

திருப்பாடல் 43:
தனதனன தனதான தனதனன தனதான
     தனதனன தனதான ...... தனதான

சுடரனைய திருமேனி உடையழகு முதுஞான
     சொருபகிரி இடமேவு ...... முகம்ஆறும்

சுரர்தெரியல் அளிபாட மழலைகதி நறைபாய
     துகிர்இதழின் மொழிவேத ...... மணம்வீச

அடர்பவள ஒளிபாய அரிய பரிபுரமாட
     அயில் கரமொடெழில் தோகை ...... மயிலேறி

அடியனிரு வினைநீறு படஅமரர் இதுபூரை
     அதிசயமெனருள் பாட ...... வரவேணும்

விடைபரவி அயன்மாலொடமரர் முநி கணமோட
     மிடறடைய விடம்வாரி ...... அருள்நாதன்

மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
     மிகமகிழ அநுபூதி ...... அருள்வோனே

இடர்கலிகள் பிணியோட எனையும்அருள் குறமாதின் 
     இணைஇளநிர் முலைமார்பின் அணைமார்பா

இனிய முது புலிபாதன் உடன்அரவு சதகோடி
     இருடியர்கள் புகழ்ஞான ...... பெருமாளே.

திருப்பாடல் 44:
தத்ததன தானதன தானதன தானதன
     தத்ததன தானதன தானதன தானதன
          தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான

தத்தைமயில் போலும்இயல் பேசிபல மோக!நகை
     இட்டும்உடன் நாணிமுலை மீதுதுகில் மூடிஅவர்
          சற்றவிடம் வீடும்இனி வாரும்என ஓடிமடி ...... பிடிபோல

தைச் சரசமோடுறவெ ஆடிஅகமே கொடுபொய் 
     எத்திஅணை மீதில்இது காலம்எனிர் போவதென
          தட்டு புழுகோடுபனி நீர்பல சவாதைஅவர் ...உடல்பூசி

வைத்து முகமோடிரச வாயிதழின் ஊறல்!பெரு
     கக்குழல் அளாவசுழல் வாள் விழிகளே பதற
          வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி ...... உடைசோர

மச்சவிழி பூசலிட வாய்புலி உலாசமுடன் 
     ஒப்பிஇருவோரு(ம்) மயல் மூழ்கியபின் ஆபரணம்
          வைத்தடகு தேடுபொருள் சூறைகொளுவார் கலவி ...... செயலாமோ

சத்தி சரசோதி திருமாது வெகு ரூபி சுக
     நித்திய கல்யாணிஎனை ஈணமலை மாதுசிவை
          தற்பரனொடாடும் அபிராமி சிவகாமிஉமை ...... அருள்பாலா

சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட
     ரத்ந மயிலேறி விளையாடிய சுராரைவிழ
          சத்தியினை ஏவி அமரோர்கள்சிறை மீள நடமிடுவோனே

துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு
     சித்ரமுக ரூபி எனதாயி வளி நாயகியை
          சுத்தஅணையூடு வட மாமுலை விடாத கர ...... மணிமார்பா

சுத்தவ மகாதவ சிகாமணியென்ஓதுமவர்
     சித்தமதிலே குடியதா உறையும் ஆறுமுக
          சுப்ரமணியா புலியுர் மேவியுறை தேவர்புகழ் ...... பெருமாளே.

திருப்பாடல் 45:
தத்த தத்தன தான தானன
     தத்த தத்தன தான தானன
          தத்த தத்தன தான தானன ...... தனதான

துத்தி பொன்தன மேருவாம்என
     ஒத்திபத்திரள் வாகுவாய்அவிர்
          துப்பு முத்தொடு மார்பினாடிட ...... மயில்போலே

சுக்கை மைக்குழலாட நூலிடை
     பட்டு விட்டவிர் காமனார்அல்குல்
          சுற்று வித்துறு வாழை சேர்தொடை ...... விலைமாதர்

தத்தை புட்குரலோசை நூபுரம் 
     ஒத்த நட்டமொடாடி மார்முலை
          சற்றசைத்து குலாவும் வேசியர் அவரோடே

தர்க்கமிட்டுறவாடி ஈளைநொய்
     கக்கல் விக்கல் கொளூளை நாயென
          சிச்சி சிச்சிஎனால்வர் கூறிட ...... உழல்வேனோ

தித்தி மித்திமி தீத தோதக
     தத்தனத்தன தான தீதிமி
          திக்கு முக்கிட மூரி பேரிகை ...... தவில்போடச்

சித்ர வித்தையராட வானவர்
     பொற்பு விட்டிடு சேசெசேயென
          செக்கு விட்ட சுரோர்கள் தூள்பட ...... விடும்வேலா

செத்திடச் சமனார் கடாபட
     அற்றுதைத்த சுவாமியார்இட
          சித்திரச் சிவகாமியார் அருள் ...... முருகோனே

தெற்கரக்கர்கள் தீவு நீறிட
     விட்ட அச்சுதர் ஈன மானொடு
          சித்திரப் புலியூரில் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 46:
தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...... தனதான

நாடா பிறப்பு முடியாதோ எனக்கருதி
     நாயேன் அரற்றுமொழி ...... வினையாயின்

நாதா திருச்சபையின் ஏறாது சித்தமென
     நாலா வகைக்கும் உனதருள்பேசி

வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
     வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
     வாரேன் எனக்கெதிர் முன் ...... வரவேணும்

சூடா மணிப்பிரபை ரூபா கனத்தஅரி
     தோல்ஆசனத்தி உமை ...... அருள்பாலா

தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த
     தோழா கடப்பமலர் ...அணிவோனே

ஏடார் குழற்சுருபி ஞானாதனத்தி மிகு
     மேராள் குறத்திதிரு ...... மணவாளா

ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த் திரளை
     ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.

திருப்பாடல் 47:
தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன
     தானதன தத்த தந்தன ...... தந்ததான

நாலுசதுரத்த பஞ்சறை மூல கமலத்தில் அங்கியை
     நாடியில் நடத்தி மந்திர ...... பந்தியாலே

நாரணபுரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன்சுடர்
     நாறிசை நடத்தி மண்டல ...... சந்திஆறில் 

கோலமும்உதிப்ப கண்டுள நாலினை மறித்திதம்பெறு
     கோவென முழக்கு சங்கொலி ...... விந்துநாதம் 

கூடிய முகப்பில் இந்திர வானஅமுதத்தை உண்டொரு
     கோடிநடனப் பதம்சபை என்றுசேர்வேன்

ஆல மலருற்ற சம்பவி வேரிலி குலக் கொழுந்திலி
     ஆரணர் தலைக்கலம் கொளி ...... செம்பொன்வாசி

ஆணவ மயக்கமும் கலி காமியம்அகற்றி எந்தனை 
     ஆளுமை பரத்தி சுந்தரி ...... தந்தசேயே

வேலதை எடுத்தும் இந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர்
     வீடெரி கொளுத்தி எண்கடல் உண்டவேலா

வேத சதுரத்தர் தென்புலியூருறை ஒருத்தி பங்கினர்
     வீறு நடனர்க்கிசைந்தருள் ...... தம்பிரானே.

திருப்பாடல் 48:
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
     தானத்தன தானத்தன ...... தனதான

நீலக்குழலார் முத்தணி வாய் சர்க்கரையார் தைப்பிறை
     நீளச் சசியார் பொட்டணி ...... நுதல்மாதர்

நீலக் கயலார் பத்திர வேல்ஒப்பிடுவார் நற்கணி
     நேமித்தெழுதா சித்திர ...... வடிவார்தோள்

ஆலைக் கழையார் துத்திகொள் ஆரக்குவடார் !கட்டளை
     யாகத் தமியேன் நித்தமும் உழல்வேனோ

ஆசைப் பதமேல் புத்திமெய் ஞானத்துடனே !பத்திர
     மாகக் கொளவே முத்தியை ...... அருள்வாயே

மாலைக் குழலால் அற்புத வேதச் சொருபாள் அக்கினி
     மார்பில் பிரகாசக் கிரி ...... தனபார

வாசக்குயிலாள் நல்சிவகாமச் செயலாள் பத்தினி
     மாணிக்க மினாள் நிஷ்கள ...... உமைபாகர்

சூலக் கையினார் அக்கினி மேனிப் பரனாருக்கொரு
     சோதிப்பொருள் கேள்விக்கிடு ...... முருகோனே

சோதிப் பிரகாசச் செயலாள் முத்தமிழ் மானைப் புணர்
     சோதிப் புலியூர் நத்திய ...... பெருமாளே.

திருப்பாடல் 49:
தனனா தத்தன தனனா தத்தன
     தனனா தத்தன ...... தனதான

பனிபோலத் துளி சலவாயுள் கரு
     பதின் மாதத்திடை ...... தலைகீழாய்ப்

படி மேவிட்டுடல் தவழ்வார் தத்தடி
     பயில்வார் உத்தியில் ...... சிலநாள் போய்த்

தனமாதர்க் குழி விழுவார் தத்துவர்
     சதிகாரச் சமன் ...... வருநாளில் 

தறியாரில் சடம் விடுவார் இப்படி
     தளர்மாயத் துயர் ஒழியாதோ

வினைமாயக் கிரி பொடியாகக் கடல்
     விகடார்உக்கிட .... விடும்வேலா

விதியோனைச் சது முடிநால் பொட்டெழ
     மிகவே குட்டிய ...... குருநாதா

நினைவோர் சித்தமொடகலாமல் புகு
     நிழலாள் பத்தினி ...... மணவாளா

நிதியாம் இப்புவி புலியூருக்கொரு
     நிறைவே பத்தர்கள் ...... பெருமாளே.

திருப்பாடல் 50:
தனதன தனதன தான தாத்தன
     தனதன தனதன தான தாத்தன
          தனதன தனதன தான தாத்தன ...... தனதான

மகரமொடுறு குழை ஓலை காட்டியும் 
     மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்
          வரவர வரஇதழ் ஊறல்ஊட்டியும் ...... வலைவீசும்

மகரவிழி மகளிர் பாடல் வார்த்தையில்
     வழிவழி ஒழுகும் உபாய வாழ்க்கையில்
          வளமையில் இளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே

இகலிய பிரம கபால பாத்திரம் 
     எழில்பட இடு திருநீறு சேர்த்திறம் 
          இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் ...... விருதாக

எழில்பட மழுவுடன் மானும்ஏற்றதும் 
     மிசைபட இசைதரு ஆதி தோற்றமும் 
          இவையிவை எனஉபதேசம் ஏற்றுவதொருநாளே

ஜகதலம் அதிலருள் ஞான வாள்கொடு
     தலைபறிஅமணர் சமூக மாற்றிய
          தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி

தரிகிட தரிகிட தாகுடாத்திரி
     கிடதரி கிடதரி தாவெனாச்சில
          சபதமொடெழுவன தாள வாச்சியம் உடனேநீள்

அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல
     அலகைகள் அடைவுடனாடும் ஆட்டமும் 
          அரன்அவன் உடனெழு காளி கூட்டமும் அகலாதே

அரிதுயில் சயன வியாள மூர்த்தனும் 
     மணிதிகழ் மிகுபுலியூர் வியாக்ரனும் 
          அரிதென முறைமுறைஆடல் காட்டிய ...... பெருமாளே.

திருப்பாடல் 51:
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
     தத்த தத்த தாத்த ...... தனதான

மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம்
     வைச்சிறைச்ச பாத்ரம் அநுபோகம்

மட்க விட்ட சேக்கை உள்புழுத்த வாழ்க்கை
     மண்குலப் பதார்த்தம் இடிபாறை

எய்ச்சிளைச்ச பேய்க்கும் மெய்ச்சிளைச்ச நாய்க்கும் 
     மெய்ச்சிளைச்ச ஈக்கும் ...... இரையாகும்

இக்கடத்தை நீக்கி அக்கடத்துளாக்கி
     இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே

பொய்ச் சினத்தை மாற்றி மெய்ச் சினத்தையேற்றி
     பொற்பதத்துள்ஆக்கு ...... புலியூரா

பொக்கணத்து நீற்றை இட்டொருத்தனார்க்கு
     புத்தி மெத்த காட்டு ...... புனவேடன்

பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு
     பைச்சிலைக்கும் ஆட்கொள் அரன்வாழ்வே

பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட
     பத்தருக்கு வாய்த்த ...... பெருமாளே.

திருப்பாடல் 52:
தனன தந்தன தந்த தானன
     தனன தந்தன தந்த தானன
          தனன தந்தன தந்த தானன ...... தந்ததான

மதிய மண்குணம் அஞ்சு நால்முகம் 
     நகர முன்கலை கங்கை நால்குணம் 
          மகர முன் சிகரங்கி மூணிடை ...... தங்குகோணம் 

மதன முன்தரி சண்ட மாருதம் 
     இருகுணம் பெறில் அஞ்செலோர்தெரு
          வகர மிஞ்சி அகன்படாகமொர் என்றுசேரும் 

கதிர்அடங்கிய அண்ட கோளகை
     அகர நின்றிடும் ரண்டு கால்மிசை
          ககன மின்சுழி ரண்டு கால்பரி ...... கந்துபாயும் 

கருணை இந்திரியங்கள் சோதிய
     அருண சந்திர மண்டலீகரர்
          கதிகொள் அந்திர விந்து நாதமொடென்று சேர்வேன்

அதிர பம்பைகள் டங்கு டாடிக
     முதிர அண்டமொடைந்து பேரிகை
          டகுட டண்டட தொந்த தோதக ...... என்றுதாளம்

அதிக விஞ்சையர் தும்ப்ரு !நார்தரோ
     டிதவிதம் பெறு சிந்து பாடிட
          அமரர் துந்துமி சங்கு தாரைகள் ...... பொங்கவூடு

உதிர மண்டலம் எங்குமாய்ஒளி
     எழ குமண்டி எழுந்து சூரரை
          உயர் நரம்பொடெலும்பு மாமுடி ...... சிந்திவீழ

உறுசினம் கொடெதிர்ந்த சேவக
     மழை புகுந்துயர் அண்டம் வாழ்வுற
          உரகனும்புலி கண்டஊர் மகிழ் ...... தம்பிரானே.

திருப்பாடல் 53:
தனன தனதன தனன தனதன
   தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
         தத்தத் தத்தன தத்தத் தத்தன
தனன தனதன தனன தனதன
   தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
         தத்தத் தத்தன தத்தத் தத்தன
தனன தனதன தனன தனதன
   தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
         தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தனதான.

மருவு கடல்முகில் அனைய குழல்மதி
   வதன நுதல்சிலை பிறையதெணும் விழி
      மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமிழ் 
         ஒப்பக் கத்தரி ஒத்திட்டச் செவி
குமுத மலரிதழ் அமுத மொழிநிரை
   தரளம்எனுநகை மிடறு கமுகென
      வைத்துப் பொற்புய பச்சைத் !தட்டையொ
         டொப்பிட்டுக் கமலக்கைப் பொன்துகிர்
வகைய விரலொடு கிளிகள் முகநகம் 
   எனவும் இகலிய குவடும் இணையென
      வட்டத்துத்தி முகிழ்ப்பச் சக்கிரம்
         வைத்தப் பொற்குடம் ஒத்திட்டுத் திகழ் ...... முலைமேவும்

வடமும் நிரைநிரை தரள !பவளமொ
   டசைய பழுமர இலைவயிறுமயிர் 
      அற்பத்திக்கிணை பொற்புத் தொப்புளும்
         அப்புக்குள் சுழி ஒத்துப் பொற்கொடி
மதனன்உருதுடி இடையும் மினலென
   அரிய கடிதடம் அமிர்த கழைரசம் 
      மட்டுப் பொற்கமலத்தில் சக்கிரி
         துத்திப் பைக்கொருமித்துப் பட்டுடை
மருவு தொடையிணை கதலி பரடுகொள்
   கணையும் முழவென கமடம்எழுதிய
      வட்டப் புத்தகம்ஒத்துப் !பொற்சர
         ணத்திற் பிற்புறம் மெத்துத் தத்தைகள் ...... மயில்போலே

தெருவில் முலைவிலை உரைசெய்தவர்அவர்
   மயல்கொடணைவர மருள்செய் தொழில்கொடு
      தெட்டிப் பற்பல சொக்கிட்டுப் பொருள்
         பற்றிக் கட்டில் அணைக்கொப்பிப் புணர்
திலதம் அழிபட விழிகள் சுழலிட
   மலர்கள்அணைகுழல் இடைகொள் துகில்பட
      தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு
         கட்டிக் குத்து முலைக்குள் கைப்பட
திரையில்அமுதென கழையில் ரசமென
   பலவில் சுளையென உருக உயர்மயல்
      சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும்
         வெட்கித் துக்கமும் முற்றுக் கொக்கென ...... நரைமேவிச்

செவியொடொளிர் விழி மறைய மலசலம் 
   ஒழுக பலவுரை குழற தடிகொடு
      தெத்திப் பித்தமும் முற்றித் தற்செயல் 
         அற்றுச் சிச்சியெனத் துக்கப்பட
சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினில் 
   உவரி நிறமுடை நமனும் உயிர்கொள
      செப்பற்றுப் பிணம் ஒப்பித்துப் பெயர் 
         இட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு
செனனம் இதுவென அழுது முகமிசை
   அறைய அணைபவர் எடென சுடலையில்
      சிற்றிக் குக்கிரை இட்டிட்டிப்படி
         நித்தத் துக்கம்எடுத்திட்டுச் சடம் உழல்வேனோ

குருவின் உருவென அருள்செய் துறையினில்
   குதிரை கொளவரு நிறை தவசி தலை
      கொற்றப் பொற்பதம் வைத்திட்டற்புதம் 
         எற்றிப் பொற்பொருள்இட்டுக் கைக்கொளும் 
முதல்வர் இளகலை மதியம் அடைசடை
   அருண உழைமழு மருவு திருபுயர்
      கொட்டத்துப் புரர் கெட்டுப் பொட்டெழ
         விட்டத் திக்கணை நக்கர்க்கற்புத
குமரனென விருதொலியும் முரசொடு
   வளையும் எழுகடல்அதிர முழவொடு
      கொட்டத் துட்டரை வெட்டித் தண்கடல் 
         ஒப்பத் திக்கு மடுத்துத் தத்திட ...... அமர்மேவிக்

குருகு கொடிசிலை குடைகள் மிடைபட
   மலைகள் பொடிபட உடுகள்உதிரிட
      கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி
         எட்டுத் திக்கும் எடுத்திட்டுக் குரல்
குமர குருபர குமர குருபர
   குமர குருபர எனவொதமரர்கள்
      கொட்பப் புட்பம் இறைத்துப் !பொற்சர
         ணத்தில்கைச்சிரம் வைத்துக் குப்பிட
குலவு நரிசிறை கழுகு கொடிபல
   கருடன் நடமிட குருதி பருகிட
      கொற்றப் பத்திரமிட்டுப் !பொற்கக
         னத்தைச் சித்தம் இரக்ஷித்துக் கொளும் ... மயில்வீரா

சிரமொடிரணியன் உடல் கிழியவொரு
   பொழுதில் உகிர்கொடு அரியெ நடமிடு
      சிற்பர்த் திண்பதம் வைத்துச் !சக்கிர
         வர்த்திக்குச் சிறையிட்டுச் சுக்கிரன்
அரிய விழிகெட இருபதமும்!உல
   கடைய நெடியவர் திருவும் அழகியர்
      தெற்குத் திக்கில் அரக்கர்க்குச் சினம் 
         உற்றுப் பொற் தசர்தற்குப் புத்திர
செயமும் மனவலி சிலைகை கொடுகரம் 
   இருபதுடை கிரி சிரம்ஒர்பதும் விழ
      திக்கெட்டைக் ககனத்தர்க்குக் கொடு
         பச்சைப் பொற்புயலுக்குச் சித்திர ...... மருகோனே

திலத மதிமுக அழகி மரகத
   வடிவி பரிபுர நடனி மலர்பத
      சித்தர்க்குக்குறி வைத்திட்டத் தன
         முத்தப் பொற்கிரி ஒத்தச் சித்திர
சிவைகொள் திரு சரசுவதி வெகுவித
   சொருபி முதுவிய கிழவி இயல்கொடு
      செட்டிக்குச் சுகமுற்றத் தத்துவ
         சித்தில் சிற்பதம் வைத்தக் கற்புறு
திரையில் அமுதென மொழிசெய் கவுரியின் 
   அரிய மகனென புகழ்புலி நகரில்
      செப்புப் பொற்தன முற்றப் பொற்குற
         தத்தைக்குப் புளகித்திட்டொப்பிய ...... பெருமாளே.

திருப்பாடல் 54:
தனனா தனத்ததன தனனா தனத்ததன
     தனனா தனத்ததன ...... தனதானா

மனமே உனக்குறுதி புகல்வேன் எனக்கருகில்
     வருவாய் உரைத்தமொழி ...... தவறாதே

மயில்வாகனக் கடவுள் அடியார் தமக்கரசு
     மனமாயை அற்றசுகம் அதிபாலன்

நினைவேதுனக்கமரர் சிவலோகம் இட்டுமல
     நிலைவேர் அறுக்கவல ...... பிரகாசன்

நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம
     நிழல்ஆளியைத் தொழுது ...... வருவாயே

இனம் ஓதொருத்தி ருபி நலமேர் மறைக்கரிய
     இளையோள்ஒர் ஒப்புமிலி ...... நிருவாணி

எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கமுறை
     இதழ்வேணி அப்பனுடை ...... குருநாதா

முனவோர் துதித்து மலர் மழைபோல் இறைத்துவர
     முதுசூர் அரைத்தலை கொள் ...... முருகோனே

மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு
     முருகா தமிழ்ப் புலியுர் ...... பெருமாளே.

திருப்பாடல் 55:
தத்த தானன தத்தன தானன
     தத்த தானன தத்தன தானன
          தத்த தானன தத்தன தானன ...... தனதான

முத்த மோகன தத்தையினார் குரல் 
     ஒத்த வாயித சர்க்கரையார் நகை
          முத்து வாரணி பொற்குவடார் முலை ...... விலைமாதர்

மொக்கை போக செகுத்திடுவார் பொருள்
     பற்றி வேறும் அழைத்திடுவார் சிலர்
          முச் சலீலிகை சொக்கிடுவார் இடர் ...... கலிசூழச்

சித்திலாட அழைத்திடுவார் !கவ
     டுற்ற மாதர் வலைப்புகு நாயெனை
          சித்தி ஞானம் வெளிப்படவே சுடர் ...... மடமீதே

சித்தெலாம் ஒருமித்துனதாறினம்
     வைத்து நாயெனருள் பெறவேபொருள்
          செப்பி ஆறுமுகப் பரிவோடுணர்வருள்வாயே

தத்தனானத னத்தன தானெனும் 
     உடுக்கைபேரி முழக்கிடவே கடல்
          சத்த தீவு தயித்தியர் மாளிட ...... விடும்வேலா

சத்தி லோக பரப் பரமேசுர
     நிர்த்தமாடு கழற் கருணாகர
          தற்பராபர நித்தனொர் பாலுறை ...... உமைபாலா

துத்தி மார்முலை முத்தணி மோகன
     பொற் ப்ரகாசம் உளக்குற மான்மகள்
          துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன் ...... மணிமார்பா

சுட்டி நீல இரத்தின மாமயில் 
     உற்று மேவிஅருள் புலியூர்வளர்
          சுத்தனே சசி பெற்ற பெணாயகி ...... பெருமாளே.

திருப்பாடல் 56:
தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா

பரமகுருநாத கருணைஉபதேச
     பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண்

பகல்இரவிலாத ஒளிவெளியில் மேன்மை
     பகரும் அதிகாரப் ...... பெருமாள்காண்

திருவளரும் நீதி தின மனொகராதி
     செகபதியை ஆளப் ...... பெருமாள்காண்

செகதலமும் வானும் மருவை அவைபூத
     தெரிசனை சிவாயப் ...... பெருமாள்காண்

ஒருபொருளதாகி அருவிடையை ஊரும் 
     உமைதன் மணவாளப் ...... பெருமாள்காண்

உகமுடிவு காலம் இறுதிகள் இலாத
     உறுதிஅநுபூதிப் ...... பெருமாள்காண்

கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய
     கலவிபுகுதா மெய்ப் ...... பெருமாள்காண்

கனகசபை மேவி அன வரதமாடும் 
     கடவுள்செக சோதிப் ...... பெருமாளே


2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

































































No comments:

Post a Comment