(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (தென்கரை)
மாவட்டம்: காரைக்கால் (புதுவை மாநிலம்)
திருக்கோயில்: அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருத்தலம். தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. சனி தோஷத்திற்கான பரிகாரத் தலம் என்று மிகமிகப் பிரசித்தமாக அறியப் பெற்று வரும் ஷேத்திரம். மிக விசாலமான ஆலய வளாகம்.
சிவபரம்பொருள் தர்பாரண்யேஸ்வரராகவும், அம்மை போகமார்த்த பூண்முலையாளாகவும் எழுந்தருளி இருக்கின்றனர், காண்பதற்கரிய திருக்கோலம்.
'இங்கு நளராஜன் சிவபரம்பொருளின் திருவருளால் சனிதோஷம் நீங்கப் பெற்றுள்ளானே அன்றி சனி தேவரால் அன்று' என்பது முக்கியக் குறிப்பு (இறைவரின் திருவருளால் மட்டுமே வினைநீக்கம் நிகழும், எந்தவொரு கிரக அதிபதிகளுக்கும் வினைப் பலன்களை மாற்றியமைக்கும் அதிகாரம் இறைவரால் வழங்கப் படவில்லை).
சனி தேவருக்கு சனைச்சரன் எனும் நாமம் உண்டு, இன்றோ அது தவறாக 'சனீஸ்வரன்' என்று வழங்கப் பெற்று வருகின்றது ('இனி இதனை மாற்றவே இயலாது' எனும் அளவிற்கு, அர்ச்சகர் உள்ளிட்ட யாவராலும் இப்பிரயோகம் வழக்கில் இடம்பெற்றுள்ளது. 'திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில்' என்று குறிக்கும் அளவிற்கு இந்நிலை சென்று விட்டது வருந்தத் தக்கது). காசியில் விஸ்வநாதப் பரம்பொருளை வழிபட்டு கிரக பதவியை வரமாகப் பெற்ற அடியவர் சனிதேவர்.
இத்தலத்திற்கென ஞானசம்பந்த மூர்த்தி 3 தனித் திருப்பதிகங்களையும், ஆலவாயோடு இணைத்து ஒரு திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளார். அப்பர் சுவாமிகள் இரு திருப்பதிகங்களையும், சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஒரு திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளனர். 'நள்ளாரா என நம் வினை நாசமே' என்பது அப்பர் சுவாமிகளின் அற்புதத் திருவாக்கு.
உட்பிரகாரச் சுற்றின் பின்புறம் வேலாயுதக் கடவுள் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.
(Google Maps: Sri Dharbaranyeswara Swamy Temple, Kumbakonam - Karaikkal Main Rd, ONGC Colony, Thirunallar, Puducherry 609607, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தத்த தந்தன தானன தானன
தத்த தந்தன தானன தானன
தத்த தந்தன தானன தானன ...... தனதான
பச்சை ஒண்கிரி போலிரு மாதனம்
உற்றிதம்பொறி சேர்குழல் வாளயில்
பற்று புண்டரிகாமென ஏய்கயல் ...... விழிஞான
பத்தி வெண் தரளாமெனும் வாணகை
வித்ருமஞ்சிலை போல் நுதலாரிதழ்
பத்ம செண்பகமாம் அநுபூதியின் !அழகாளென்
றிச்சை அந்தரி பார்வதி மோகினி
தத்தை பொன்கவின் ஆலிலை !போல்வயி
றிற் பசுங்கிளியான மினூலிடை ...... அபிராமி
எக்குலங் குடிலோடுலகி யாவையும்
இற்பதிந்திரு நாழி நெலால்அறம்
எப்பொதும் பகிர்வாள் குமராஎன ...... உருகேனோ
கச்சையும் திருவாளும் ஈராறுடை
பொற்புயங்களும் வேலும்இராறுள
கட்சிவங் கமலா முகமாறுள ...... முருகோனே
கற்பகந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென
கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...... விடும்வேலா
நச்சு வெண்பட மீதணைவார்முகில்
பச்சை வண்புயனார் கருடாசனர்
நற்கரம்தநு கோல்வளை நேமியர் ...... மருகோனே
நற்புனந்தனில் வாழ்வளி நாயகி
இச்சை கொண்டொரு வாரண மாதொடு
நத்தி வந்து நளாறுறை தேவர்கள் ...... பெருமாளே
No comments:
Post a Comment