(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: திருவாரூர்
திருக்கோயில்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூரிலிருந்து 31 கி.மீ தொலைவிலும்; நன்னிலத்திலிருந்து 22 கி.மீ தொலைவிலும்; பேரளத்திலிருந்து 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது கந்தன்குடி.
மதுவனம் எனும் புராதனப் பெயராலும் அறியப்பெற்று வரும் இவ்வாலயக் கருவறையில் நம் வேலாயுத தெய்வம் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களுடன், இரு தேவியரும் உடனிருக்க, திருமுகத்தில் அற்புதப் புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். தெய்வயானை அம்மை தவக் கோலத்தில் மற்றொரு தனிச்சன்னிதியிலும் எழுந்தருளி இருக்கின்றாள்.
அருணகிரிப் பெருமான் இத்தலத்திற்கு 'கந்தன்குடி' எனும் நேரடித் திருப்பெயரால் ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியிருப்பினும், 'விந்து பேதித்த வடிவங்களாய்' எனும் 'கந்தனூர்' திருப்புகழையும் 'இத்தலத் திருப்பாடலெனவே கொள்வது ஏற்புடையது' என்று 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியர் திரு.வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தெளிவுறுத்தி உள்ளார்கள்.
(Google Maps: Sri Murugan Temple, Kovil Kanthankudi, Tamil Nadu 609608, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
தந்தந்தன தந்தந்தன ...... தனதான
எந்தன் சடலங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
என்றும்துயர் பொன்றும்படி ...... ஒருநாளே
இன்பம்தரு செம்பொன்கழல் உந்தும்கழல் தந்தும்பினை
என்றும்படி பந்தம்கெட ...... மயிலேறி
வந்தும்பிரசண்டம் பகிரண்டம் புவியெங்கும்திசை
மண்டும்படி நின்றும்சுடர் ஒளிபோலும்
வஞ்சம்குடி கொண்டும்திரி நெஞ்சன்துகள் என்றும்கொளும்
வண்டன் தமியன் தன்பவம் ...... ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி என்றும்பல சஞ்சம்கொடு
தஞ்சம்புரி கொஞ்சும்சிறு ...... மணியாரம்
சந்தம்தொனி கண்டும்புயல் அங்கன் சிவனம்பன்பதி
சம்பும்தொழ நின்றும்தினம் ...... விளையாடும்
கந்தன்குகன் எந்தன்குரு என்றும்தொழும் அன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே
கண்டின்கனி சிந்தும்சுவை பொங்கும்புனல் தங்கும்சுனை
கந்தன்குடியில் தங்கிய ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தந்தனா தத்தனா தந்தனா தத்தனா
தந்தனா தத்தனா ...... தந்ததான
விந்துபேதித்த வடிவங்களாய் எத்திசையும்
மின்சரா சர்க்குலமும் ...... வந்துலாவி
விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதான் உற்றறியும்
மிஞ்சநீ விட்ட வடிவங்களாலே
வந்துநாயிற் கடையன் நொந்து ஞானப்பதவி
வந்துதா இக்கணமெ ...... என்றுகூற
மைந்தர் தாவிப்புகழ தந்தைதாய் உற்றுருகி
வந்து சேயைத் தழுவல் ...... சிந்தியாதோ
அந்தகாரத்திலிடி என்பவாய் விட்டுவரும்
அங்கி பார்வைப் பறையர் ...... மங்கிமாள
அங்கைவேல் விட்டருளி இந்த்ரலோகத்தின் மகிழ்
அண்டரேறக் கிருபை ...... கொண்ட பாலா
எந்தன்ஆவிக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்
எந்தை பாகத்துறையும் அந்தமாது
எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்
எந்தை பூசித்துமகிழ் ...... தம்பிரானே.
No comments:
Post a Comment