(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: நாகப்பட்டினம்
திருக்கோயில்: அருள்மிகு உக்த வேதீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
கும்பகோணத்திலிருந்து சுமார் 27 கி.மீ தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 11 கி.மீ பயணத் தொலைவிலும் அமைந்துள்ளது திருத்துருத்தி (தற்கால வழக்கில் குத்தாலம்).
சிவபரம்பொருள் உக்தவேதீஸ்வரர்; சொன்னவாறறிவார் எனும் திருநாமங்களிலும், இறைவி அரும்பன்ன வனமுலையாள்; அமிர்த முகிழாம்பிகை எனும் திருநாமங்களிலும் எழுந்தருளியுள்ள புண்ணியப் பதி. தேவார மூவராலும் அருணகிரிப் பெருமானாலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது.
அம்மை பூசிக்க இறைவர் திருமண வரமருளிய ஷேத்திரம். எண்ணிறந்தோர் இத்தல இறைவரைப் பூசித்துப் பேறு பெற்றுள்ளனர்.
சுந்தரனார் சரும நோய் நீங்கப் பெற்ற திருக்குளம் ஆலயத்தின் துவக்கப் பகுதியிலேயே, இடது புறத்தில் அமைந்துள்ளது. இங்கு வன்தொண்டர் தனிச்சன்னிதியில் கூப்பிய கரங்களுடன் எழுந்தருளி இருக்கின்றார்.
பிரகாரச் சுற்றின் பின்புறம் திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் ஆறுமுகங்கள் பன்னிரு திருக்கரங்களோடு மயில் மீதமர்ந்து, இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டவாறு, இரு தேவியரும் உடனிருக்க, தனித்துவமான அற்புதத் திருக்கோலத்தில் பிரத்யட்சமாய் எழுந்தருளி இருக்கின்றான். காண்பதற்கரிய விவரிப்பதற்கரிய திருக்கோலம்.
-
அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கென ஒரு திருப்பாடலை அருளிச் செய்துள்ளார்.
(Google Maps: Sri Utha Vedheeswarar Temple,Padal Petra Temple, Kuttalam, Tamil Nadu 609801, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன ...... தனதான
மலைக் கனத்தென மார்பினிலேயிரு
முலைக் கனத்துறவேஇடை நூலென
வளைத்துகுப்ப மையார்குழல் தோளொடும் ...... அலைமோத
மயிற் குலத்தவராமென நீள்கலை
நெகிழ்த்துவித்திருவார் விழி வேல்கொடு
மயக்கி நத்தினர் மேல்மறு பாடுமவிழிஏவி
விலைக்கெனத் தனம்ஆயிரமாயிரம்
முலைக்களப்பினும் ஆசை பொதாதென
வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் ...... மயல்மேலாய்
வெடுக்கெடுத்து மகாபிணி மேலிட
முடக்கி வெட்கும் அதாமத வீணனை
மினல் பொலிப்பதமோடுறவே அருள் ...... புரிவாயே
அலைக்கடுத்த சுரார்பதி கோவென
விடப் பணச்சிரம்ஆயிர சேடனும்
அதிர்த்திடக் கதிர் வேல்விடு சேவக ...... மயில்வீரா
அடைக்கலப் பொருளாமென நாயெனை
அழைத்து முத்தியதாம் அநுபூதியெ
அருள் திருப்புகழோதுக வேல்மயில் அருள்வோனே
சிலைக்கை முப்புர நீறெழவேதிரு
உளத்தில் அற்பமெனா நினை தேசிகர்
சிறக்க முத்தமிழாலொரு பாவகம் அருள்பாலா
திருக் கடப்பலர் சூடிய வார்குழல்
குறத்தி கற்புடனே விளையாடியொர்
திருத்துருத்தியில் வாழ்முருகா சுரர் ...... பெருமாளே
(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment