(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)
மாவட்டம்: நாகப்பட்டினம்
திருக்கோயில்: அருள்மிகு முருகன் திருக்கோயில், அருள்மிகு விஷ்ணு வல்லபேசர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து சுமார் 17 கி.மீ தூரத்திலும், சீர்காழியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது மாதானம்.
அப்பர் சுவாமிகள் 'தில்லைச் சிற்றம்பலமும்' என்று துவங்கும் பொதுத் திருப்பதிகத்தின் 8ஆம் திருப்பாடலில் ('மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும்') மாதானத்தைத் தேவார வைப்புத் தலமாகப் பதிவு செய்து போற்றுகின்றார்.
இங்கு முத்துமாரியம்மன் கோயில் மிகப் பிரசித்தம், இதற்கு நேரெதிரில் குமாரக் கடவுளுக்கு சிறு ஆலயமொன்று அமையப் பெற்றுள்ளது. இங்கு சிவகுமரன் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு; இரு தேவியரும் உடனிருக்க; நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இம்மூர்த்தியை ஒரு திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்.
தேவார வைப்புத் தலமெனில் அவசியம் சிவாலயமொன்று அமைந்திருத்தல் வேண்டுமே? எனில் மாதனத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் 'பச்சைபெருமாநல்லூர்' எனும் சிற்றூரில் 'விஷ்ணுவல்லபேசர் திருக்கோயில்' அமைந்துள்ளது. 'தேவாரக் காலத்தில் இவ்வூரும் மாதானையின் ஒரு பகுதியாக விளங்கியிருக்க வேண்டும்' என்று 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியர் சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தெளிவுறுத்தி உள்ளார்கள்.
இவ்வாலயத்தில் திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு; இரு தேவியரும் உடனிருக்க; சுப்பிரமணியன் எனும் திருநாமத்தில்; அற்புதப் புன்முறுவலோடு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.
அவசியம் இவ்விரு ஆலயங்களையும் ஒருசேர தரிசித்துப் போற்றுதல் வேண்டும்.
Google Maps:
திருப்புகழ் பாடல்:
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தானான தானதனத் ...... தனதான
கோடான மேருமலைத் ...... தனமானார்
கோமாளமான வலைக்குழலாதே
நாள்தோறு(ம்) மேன்மை படைத்திடவேதான்
நாயேனை ஆள நினைத்திடொணாதோ
ஈடேற ஞானம் உரைத்தருள்வோனே
ஈராறு தோள்கள் படைத்திடுவோனே
மாடேறும் ஈசர் தமக்கினியோனே
மாதானை ஆறுமுகப் ...... பெருமாளே.
மாதானம் முருகன் திருக்கோயில்
பச்சைப்பெருமாநல்லூர் விஷ்ணுவல்லபேசர் திருக்கோயில்
No comments:
Post a Comment