Sunday, October 28, 2018

வாகை மாநகர் (வாழ்கொளிப்புத்தூர், வாளப்புத்தூர்)

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: நாகப்பட்டினம் 

திருக்கோயில்: அருள்மிகு இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

சீகாழியிலிருந்து 17 கி.மீ தொலைவிலும், வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும்,  அமைந்துள்ளது திருவாழ்கொளிப்புத்தூர் (தற்கால வழக்கில் திருவாளப்புத்தூர்). 

இத்தலத்திற்கு ஞானசம்பந்த மூர்த்தி இரு திருப்பதிகங்களையும், சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஒரு திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளனர். 

(ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
சாகை ஆயிரமுடையார் சாமமும் ஒதுவதுடையார்
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபலஉடையார்
தோகை மாமயிலனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண்துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே!

அருணகிரியார் குறித்திருந்த 'வாகை மாநகர்' எனும் திருத்தலமே 'வாழ்கொளிபுத்தூர்' எனும் அரிய குறிப்பு நெடுநாட்கள் வரையிலும் கண்டறியப்படாதிருந்தது. இதனைத் தம்முடைய அரிய பெரிய ஆய்வினாலும், பிரயத்தனத்தினாலும் சமய உலகிற்கு வெளிக்கொணர்ந்தவர் 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியர் சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள். 

திரு.வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய நூலில் இரு முக்கியக் குறிப்புகளை இம்முடிவிற்கான அகச் சான்றாக முன்வைக்கின்றார், 

(1) 'சாகை ஆயிரமுடையார்' எனும் இத்தலத்திற்கான திருப்பாடலில் சம்பந்தச் செல்வர் 'வாகை நுண்துளி வீசும்' என்று தல விருட்சத்தின் பெயரைப் பதிவு செய்துள்ளார். 

(2)
மகாவித்வான் சிவத்திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் தம்முடைய தலபுராணத்தில் இத்தலத்தினை 'வாகை மாநகர்' என்றே பதிவு செய்துள்ளார்.

இறைவர் இரத்தினபுரீஸ்வரராகவும், அம்பிகை வண்டமர் குழலியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். வெளிப்பிரகாரச் சுற்றின் பின்புறம் நம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களோடு; இரு தேவியரும் உடனிருக்க; மயில் பின்புறம் விளங்கியிருக்க; திருமுகத்தில் அற்புதப் புன்முறுவலோடு கூடிய நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியை 'வாகை மாநகர் பற்று பெருமாளே' என்று போற்றிப் பரவுகின்றார்,

(Google Maps: NCN029 - Sri Manikka Vannar Temple, Sri Manikkavannar Siva temple, near Vaitheeswaran koil,, Thiruvalaputhur, Tamil Nadu 609205, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தான தான தனத்த தான தான தனத்த
     தான தான தனத்த ...... தனதான

ஆலையான மொழிக்கும் ஆளையூடு கிழிக்கும் 
     ஆலகால விழிக்கும் உறுகாதல்

ஆசை மாதர்அழைக்கும் ஓசையான தொனிக்கும் 
     ஆரபார முலைக்கும் அழகான

ஓலைமேவு குழைக்கும் ஓடையானை நடைக்கும் 
     ஓரை சாயும் இடைக்கும் ...... மயல்மேவி

ஊறு பாவுவறுப்பில் ஊறல் தேறும் கரிப்பில் 
     ஊரஓடு விருப்பில் உழல்வேனோ

வேலையாக வளைக்கை வேடர் பாவை தனக்கு
     மீறு காதல்அளிக்கும்  ...... முகமாய

மேவு வேடையளித்து நீடு கோலமளித்து
     மீள வாய்மை தெளித்தும் இதண்மீது

மாலையோதி முடித்து மாதுதாள்கள் பிடித்து
     வாயிலூறல் குடித்து ...... மயல்தீர

வாகுதோளில் அணைத்து மாகமார் பொழிலுற்ற
     வாகை மாநகர்பற்று ...... பெருமாளே.



No comments:

Post a Comment