Sunday, November 25, 2018

திருப்பராய்த்துறை

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி தென்கரை)

மாவட்டம்: திருச்சி 

திருக்கோயில்: அருள்மிகு பராய்த்துறை நாதர் (தாருகாவனேஸ்வரர்) திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருச்சியிலிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம். ஞானசம்பந்த மூர்த்தி; அப்பர் சுவாமிகள் இருவராலும் பாடல் பெற்றுள்ள பதி.

சிவபரம்பொருள் பராய்த்துறை நாதர் எனும் திருநாமத்துடன் சிறிய திருமேனியராய் எழுந்தருளி இருக்கின்றார், அம்மை பசும்பொன் மயிலாம்பிகையாகத் திருக்காட்சி தருகின்றாள்.  

(ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1) 
நீறு சேர்வதொர் மேனியர், நேரிழை
கூறு சேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர் தலைக்கையர் பராய்த்துறை
ஆறுசேர் சடை அண்ணலே

(அப்பர் சுவாமிகள் தேவாரம் - திருப்பாடல் 3)
பட்ட நெற்றியர், பால்மதிக் கீற்றினர்
நட்டமாடுவர் நள்ளிருள் ஏமமும்
சிட்டனார் தென்பராய்த்துறைச் செல்வனார்
இட்டமாய் இருப்பாரை அறிவரே

பிரகாரச் சுற்றில் அழகேயுருவான திருமேனி அமைப்பில் எழுந்தருளியுள்ள நால்வர் பெருமக்களையும், தனித்துவமான அழகிய திருமேனிகளில் அர்த்தநாரீஸ்வரப் பரம்பொருள், நான்முகக் கடவுள், அன்னை ஸ்ரீதுர்க்கை ஆகிய மூர்த்தங்களையும் தரிசித்து மகிழலாம். 

கருவறைச் சுற்றின் பின்புறம் - நடுவில் - (சன்னிதிக்கு வெளியில்) கந்தப்பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, தேவியரும் உடனிருக்க நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். இப்பெருமானே திருப்புகழ் பாடல் பெற்றுள்ள ஆதி மூர்த்தி.  

இதற்கடுத்ததாய், வலது மூலையில் அமைந்துள்ள தனிச்சன்னிதியில் எழுந்தருளியுள்ள ஆறுமுகக் கடவுள் பிற்காலப் பிரதிஷ்டை. இங்கு ஆறுதிருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு; மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்கத் திருக்காட்சி தருகின்றான். 

அருணகிரிப் பெருமானார் இத்தலத்துறை கந்தப் பெருமானைப் பின்வரும் திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்.

(Google Maps: SCN003-Sri Paraithurainathar Temple, Tiruparaithurai)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தானன தந்தன தாத்த தத்தன
     தானன தந்தன தாத்த தத்தன
          தானன தந்தன தாத்த தத்தன ...... தனதான

வாசனை மங்கையர் போற்று சிற்றடி
     பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட
          மாமலை ரண்டென நாட்டு மத்தக ...... முலையானை

வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை
     நூலிடை நன்கலை தேக்க இக்குவில்
          மாரன் விடுங்கணை போல்சிவத்திடு ...... விழியார்கள்

நேசிகள் வம்பிகள் ஆட்டமிட்டவர்
     தீயர்விரும்புவர் போல்சுழற்றியெ
          நீசனெனும்படி ஆக்கி விட்டொரு ...... பிணியான

நீரின் மிகுந்துழல் ஆக்கையிற்றிட
     யோக மிகுந்திட நீக்கியிப்படி
          நீஅகலந்தனில் வீற்றிருப்பதும் ஒருநாளே

தேசமடங்கலும் ஏத்து மைப்புயல் 
     ஆய நெடுந்தகை வாழ்த்த வச்சிர
          தேகமிலங்கிய தீர்க்க புத்திர ...... முதல்வோனே

தீரனெனும்படி சாற்று விக்ரம
     சூரனடுங்கிட வாய்த்த வெற்புடல்
          தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு ...... கதிர்வேலா

மூசளி பம்பிய நூற்றிதழ்க்!கம
     லாசனன் வந்துலகாக்கி வைத்திடு
          வேதன்அகந்தையை மாற்றி முக்கணர் அறிவாக

மூதறிவுந்திய தீக்ஷை செப்பிய
     ஞானம்விளங்கிய மூர்த்தி அற்புத
          மூவரிலங்கு பராய்த்துறைப் பதி ...... பெருமாளே

(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)























No comments:

Post a Comment