Sunday, November 25, 2018

திருக்குடமூக்கு

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: தஞ்சாவூர்

திருக்கோயில்: அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

கும்பகோணத்திற்கென அருணகிரிப் பெருமான் 7 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார். கும்பகோணத்தின் பிரதான ஆலயம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் என்றிருப்பினும் மற்ற இரு முக்கியத் தலங்களான குடந்தைக் காரோணம் (சோமேசுவர சுவாமி திருக்கோயில்) மற்றும் குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவர சுவாமி திருக்கோயில்) ஆகிய சிவாலயங்களுக்காகவும் அருணகிரியார் (அவ்வேழு பனுவல்களிலிருந்து) சில திருப்பாடல்களை நிச்சயம் அருளியிருப்பார் என்று திரு.வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய 'அருணகிரியாரின் அடிச்சுவட்டில்' எனும் ஆதார நூலில் தெளிவுறுத்தி உள்ளார்.

ஆதலின் மேற்குறித்துள்ள மூன்று திருக்கோயில்களையும் ஒன்றன்பின் ஒன்றாகத் தரிசித்து முடித்தால் 'கும்பகோணம்' எனும் திருப்புகழ் தல தரிசனத்தினை நிறைவு செய்ததாகக் கொள்ளலாம். மேலும் இம்மூன்று சிவாலயங்களும் திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் சுவாமிகளின் தேவாரத் திருப்பாடல்களையும் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. இனி இப்பதிவில் முதல் ஆலயமான ஆதி கும்பேசுவரர் ஆலயத்தினைக் காண்போம்.

பிரமாண்டமான திருக்கோயில், திருப்புகழ் தெய்வமான கந்தக் கடவுள் இவ்வாலயத்தில் இருவேறு திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான், ஆலய முகப்பில் பால தண்டாயுதபாணியாய் எழுந்தருளி உள்ளான். ஆதிப்பரம்பொருளான ஸ்ரீகும்பேஸ்வரர் பிரம சிருஷ்டி துவங்கப் பேரருள் புரிந்த தலம், பிற ஆலயங்களிலுள்ள திருமேனி போலல்லாமல் இத்தல இறையவர் கும்பம் போன்ற திருவடிவுடன் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார். உலகீன்ற உமையவள் இவ்வாலயத்தில் மங்காளாம்பிகை எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். சிவபரம்பொருள் 'கிராத மூர்த்தி' எனும் திருவுருவத்துடன் கூடிய மற்றொரு திருக்கோலத்திலும் இங்கு எழுந்தருளி இருக்கின்றார்.

சிவசன்னிதியின் பின்புறம் நமையாளும் திருப்புகழ் தெய்வம், ஆறு திருமுகங்களுடனும், ஆறு திருக்கரங்களுடனும், இருமருங்கிலும் தேவியர் எழுந்தருளியிருக்க, மயில் பின்புறம் விளங்க, கார்த்திகேயன் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.

(Google Maps: Adhi Kumbeshwarar Temple, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 7.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
     தந்ததனத் தானதனத் ...... தனதான

இந்துகதிர்ச் சேர்அருணப் பந்திநடுத் தூண்!ஒளிபட்
     டின்ப ரசப் பாலமுதச் ...... சுவைமேவு

எண்குணம்உற்றோன் நடனச் சந்த்ரஒளிப் பீடகம் !உற்
     றெந்தை நடித்தாடு மணிச் ...... சபையூடே

கந்தம் எழுத்தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்
     கண்டு களித்தே அமுதக் ...... கடல் மூழ்கிக்

கந்த மதித்தாயிர வெட்டண்டமதைக் கோல்புவனக்
     கண்டமதைக் காண எனக்கருள்வாயே

திந்ததிமித் தீதகுடட் டுண்டு மிடட்டாடுடுடிட்
     டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை

சிந்தை திகைத்தேழுகடல் பொங்கஅரிச் சூர்மகுடச்
     செண்டு குலைத்தாடு மணிக் ...... கதிர்வேலா

குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்
     கொண்டல் நிறத்தோன் மகளைத் ...... தரைமீதே

கும்பிட கைத்தாளம் எடுத்தம்பொனுருப் பாவைபுகழ்க்
     கும்பகொணத்தாறுமுகப் ...... பெருமாளே

திருப்பாடல் 2:
தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
     தந்ததனத் தானதனத் ...... தனதான

தும்பி முகத்தானை பணைக் கொம்பதெனத் தாவிமயல்
     தொந்தமெனப் பாயும் முலைக் ...... கனமாதர்

தும்பிமலர்ச் சோலைமுகில் கங்குலிருள் காரின்நிறத்
     தொங்கல் மயில் சாயலெனக் ...... குழல்மேவிச்

செம்பொன் உருக்கான மொழிச் சங்கின்ஒளிக் காமநகைச்
     செங்கயலைப் போலும்விழிக் ...... கணையாலே

சிந்தை தகர்த்தாளும் இதச் சந்த்ரமுகப் பாவையர் !தித்
     திந்திம் எனுற்றாடும் அவர்க்குழல்வேனோ

தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச்
     சந்தமயில் சாய்விலகிச் ...... சிறைபோகச்

சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தி அரக்கோர்கள் விழத்
     தங்க நிறத்தாள் சிறையைத் ......தவிர் மாயோன்

கொம்புகுறிக் காளம் மடுத் திந்தம் எனுற்றாடி நிரைக்
     கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன்ஈண

கொஞ்சுசுகப் பாவைஇணைக் கொங்கைதனில் தாவிமகிழ்க்
     கும்பகொணத்தாறுமுகப் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
     தந்தனா தத்ததன ...... தனதான

கெண்டை நேரொத்தவிழி மங்கை மோகக் கலவை
     கெந்த வாசப்புழுகு ...... மணநாறும்

கிம்புரீசக் களபம் கொங்கை யானைச் சிறிது
     கிஞ்சு காணப் பெருகி ...... அடியேனும்

மண்டி மோசக் கலவி கொண்டு காமித்துருகி
     வண்டனாகப் புவியில்உழலாமல்

வந்து ஞானப் பொருளில் ஒன்று போதித்துனது
     மஞ்சு தாளைத் தினமும்  ......அருள்வாயே

அண்டர் வாழப் பிரபை சண்ட மேருக் கிரி!இ
     ளைந்து வீழப்பொருத ...... கதிர்வேலா

அஞ்சுவாயில் பரனை நெஞ்சில்ஊறித் தவசில்
     அன்புளாரைச் சிறையிட்டசுரோரைக்

கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலேறக் கழுகு
     கொந்திஆடத் தலையை ...... அரிவோனே

கொண்டல் சூழ்அக்கழனி சங்குலாவிப் பரவு
     கும்பகோணத்தில் உறை ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தந்தனா தத்தத் ...... தனதான

பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர்
பங்கமார் தொக்கில் ...... படியாமல்
செஞ்சொல் சேர் சித்ரத் ...... தமிழால்உன்
செம்பொன் ஆர்வத்தைப் ...... பெறுவேனோ
பஞ்சபாணத்தற்  ...... பொருதேவர்
பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா
குஞ்சரீ வெற்புத் ...... தனநேயா
கும்பகோணத்தில் ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த ...... தனதான

மாலைதனில் வந்து வீதிதனில் நின்று
     வாசமலர் சிந்து ...... குழல்கோதி

வாரிரு தனங்கள் பூணொடு குலுங்க
     மால்பெருகி நின்ற ...... மடவாரைச்

சாலைவழி வந்து போமவர்கள் நின்று
     தாழ்குழல்கள் கண்டு ...... தடுமாறித்

தாக மயல் கொண்டு மாலிருள் அழுந்தி
     சாலமிக நொந்து ...... தவியாமல்

காலையில் எழுந்துன் நாமமெ மொழிந்து
     காதலுமை மைந்த ...... எனஓதிக்

காலமும்உணர்ந்து ஞானவெளி கண்கள்
     காண அருளென்று ...... பெறுவேனோ

கோலமுடன்அன்று சூர்படையின் முன்பு
     கோபமுடன் நின்ற ...... குமரேசா

கோதைஇரு பங்கின் மேவ வளர் !கும்ப
     கோண நகர் வந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தனத்த தந்தன தனதன தந்தத்
     தனத்த தந்தன தனதன தந்தத்
          தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான

கறுத்த குஞ்சியும் வெளிறிஎழும்!கொத்
     துருத்த வெண்பலும் அடைய விழுந்துள் 
          கருத்துடன் திகழ்மதியும் மருண்டுச் ...... சுருள்நோயால்

கலக்கமுண்டலம் அலமுற வெண்டிப்
     பழுத்தெழும்பிய முதுகு முடங்கக்
          கழுத்தில் வந்திளை இருமல் ஒதுங்கக் ...... கொழுமேனி

அறத்திரங்கிஒர் தடிகை நடுங்கப்
     பிடித்திடும்புறு மனைவியும் !நிந்தித்
          தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் ...... சடமாகி

அழுக்கடைந்திடர் படுமுடல் பங்கப்
     பிறப்பெனும் கடல்அழியல் !ஒழிந்திட்
          டடுத்திரும் திருவடிதனை என்றுற்றிடுவேனோ

புறத்தலம் பொடிபட மிகவும்!கட்
     டறப் பெருங்கடல் வயிறு குழம்பப்
          புகட்டரங்கிய விரக துரங்கத் ...... திறல்வீரா

பொருப்புரம் படர் கிழிபட !வென்றட்
     டரக்கர் வன்தலை நெரிய நெருங்கிப்
          புதைக்குறும்தசை குருதிகள் பொங்கப் ...... பொரும்வேலா

சிறுத்த தண்டைய மதலையொர் அஞ்சச்
     சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
          தினைப்புனம்திகழ் குறமகள் கொங்கைக் ...... கிரிமேவிச்

செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்
     பரிச் சுமந்திடு குமர கடம்பத்
          திருக்குடந்தையில் உறைதரு கந்தப் ...... பெருமாளே.

திருப்பாடல் 7:
தனத்த தந்தன தானன தானன
     தனத்த தந்தன தானன தானன
          தனத்த தந்தன தானன தானன ...... தனதான

செனித்திடும் சலம் சாழலும் ஊழலும்
     விளைத்திடும் குடல் பீறியும் மீறிய
          செருக்கொடும் சதை பீளையும் ஈளையும் ...... உடலூடே

தெளித்திடும்பல சாதியும் வாதியும்
     இரைத்திடும் குலமேசில கால்படர்
          சினத்திடும் பவ நோயெனவேஇதை ...... அனைவோரும்

கனைத்திடும் கலிகாலம் இதோஎன
     எடுத்திடும் சுடுகாடு புகாஎன
          கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும் ...... உடல்பேணிக்

கடுக்கனும்சில பூடணம் ஆடைகள்
     இருக்கிடும் கலையேபல ஆசைகள்
          கழித்திடும்சிவ யோகமும் ஞானமும் ...... அருள்வாயே

தனத்த னந்தன தானன தானன
     திமித்தி திந்திமி தீதக தோதக
          தகுத்து துந்துமி தாரை விராணமொடடல் பேரி

சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை
     வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக
          சமத்துணர்ந்திடு மாதவர் பால்அருள் ...... புரிவோனே

தினைப்புனம் தனிலே மயலால்ஒரு
     மயில் பதம்தனிலே சரண்நானென
          திருப்புயம்தரு மோகன மானினை ...... அணைவோனே

சிவக்கொழும் சுடரே பரனாகிய
     தவத்தில் வந்தருள் பால க்ருபாகர
          திருக்குடந்தையில் வாழ்முருகா சுரர் ...... பெருமாளே.

(2019 டிசம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment