Sunday, November 25, 2018

திருவலஞ்சுழி

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: தஞ்சாவூர்

திருக்கோயில்: அருள்மிகு கபர்தீஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், சுவாமிமலையிலிருந்து 2 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திருவலஞ்சுழி. திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. 

நான்மறை முதல்வரான சிவபெருமான் இத்தலத்தில் வலஞ்சுழி நாதர்; கபர்தீஸ்வரர் எனும் திருநாமங்களிலும், அம்பிகை பெரிய நாயகியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர்.

(திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே.

இங்கு இறைவரைக் காட்டிலும் சிவசக்தி குமாரரான விநாயக மூர்த்தி மிகப் பிரசித்தம், வெள்ளை விநாயகர்; வலஞ்சுழி விநாயகர்; சுவேத விநாயகர் என்று அன்பர்கள் வரப்பிரசாதியான இம்மூர்த்தியைக் காதலோடு போற்றிப் பணிந்து மகிழ்வர். அமுதம் வெளிப்படுவதில் ஏற்பட்டிருந்த தடை நீங்க, பாற்கடல் நுரையினால் இந்திரன் உருவாக்கி வழிபட்ட மூர்த்தி இப்பிள்ளையார். 

பரந்து விரிந்த திருக்கோயில் வளாகம். முதலில் தனிக்கோயில் போன்றதொரு அமைப்பில் வெள்ளை விநாயகப் பெருமான் எழுந்தருளி இருக்கின்றார். பின்னர் மேலும் உட்செல்ல, தனித்தனி கோயில்களில் எழுந்தருளியுள்ள இறைவர்; இறைவியைத் தரிசித்துப் பணியலாம். 

வலஞ்சுழிப் பரம்பொருளின் உட்பிரகாரச் சுற்றில், மூலக் கருவறையின் பின்புறம் ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய்; மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில்; இரு தேவியரும் உடனிருக்கத் திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இம்மூர்த்தியை 'மகர குண்டல' எனும் திருப்பாடலால் போற்றிப் பரவியுள்ளார், 

(Google Maps: Thiruvalanchuzhi,Padal Petra Temple, thiruvalanchuli pincode-612302, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனன தந்தன தானா தானன
     தனன தந்தன தானா தானன
          தனன தந்தன தானா தானன ...... தனதான

மகர குண்டல மீதே மோதுவ
     அருண பங்கயமோ பூஓடையில்
          மருவு செங்கழு நீரோ நீவிடு ...... வடிவேலோ

மதன் விடும் கணையோ வாளோ சில
     கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை
          மறலி என்பவனோ மானோ மது ...... நுகர்கீத 

முகர வண்டினமோ வான் மேலெழு
     நிலவருந்து புளோ மாதேவர் உண்
          முதிய வெங்கடுவோ தேமாவடு ...... வகிரோ பார்

முடிவெனும் கடலோ யாதோ என
     உலவு கண்கொடு நேரே சூறை கொள்
          முறையறிந்த பசாசே போல்பவர் உறவாமோ

நிகரில் வஞ்சக மாரீசாதிகள்
     தசமுகன் படை கோடா கோடிய
          நிருதரும் படஓரேய் ஏவியெ ...... அடுபோர்செய்

நெடியன் அங்கனுமானோடே !எழு
     பதுவெளம் கவி சேனா சேவித
          நிருபன் அம்பரர் கோமான் ராகவன் ...... மருகோனே

சிகர உம்பர்கள் பாகீராதிகள்
     பிரபை ஒன்று பிராசாதாதிகள்
          சிவ சடங்கமொடீசானாதிகள் ...... சிவ மோனர்

தெளியுன் மந்த்ர கலாபா யோகிகள்
     அயல் விளங்கு சுவாமீ காமரு
          திருவலஞ்சுழி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே


2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)














































No comments:

Post a Comment