Saturday, October 27, 2018

சிதம்பரம் - வடக்கு கோபுர வாயில்:

  (சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)

திருப்புகழ் குறிப்புகள்

தம்பிரான் தோழரான நம் சுந்தரனார் இவ்வாயிலுள் புகுந்து சென்றே சிற்சபேசப் பரம்பொருளைத் தரிசித்துப் பரவியுள்ளார். இதனைக் குறிக்கும் வன்தொண்டரின் சுதைச் சிற்பத்தினை திருவாயில் திருச்சுவற்றில் தரிசித்து மகிழலாம்.
-
(சுந்தரர் தேவாரத் திருப்பாடல் - தில்லை)
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழு நாளும் 
தடுத்தாட்டித் தருமனார் தமர் செக்கிலிடும்போது தடுத்தாட்கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலும்  கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே!
*
வடக்கு வாயிலின் உட்புறத்தில், 'பாண்டி நாயகம்' எனும் தனிக்கோயில் அமையப் பெற்றுள்ளது. கொடிமரத்தோடு கூடிய இவ்வாலயத் திருச்சுவர் முழுவதிலும் கந்தபுராண ஓவியங்கள் அற்புதக் கலைநயத்துடன் வரையப் பெற்றுள்ளன. இதன் கருவறையில் ஆறு திருமுகங்களும்; பன்னிரு திருக்கரங்களுமாய், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில்; இருதேவியரும் உடனிருக்க, நெடிதுயர்ந்த திருமேனியில்; 'சுப்பிரமணிய சுவாமி' எனும் திருநாமத்தில் நம் கந்தப் பெருமான் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான். 

எவ்வளவு நேரம் தரிசித்தாலும் திகட்டாத திருமேனி வடிவழகுடன் கோயில் கொண்டருளும் இம்மூர்த்தியை அருணகிரியார் 'வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பிரானே' என்று போற்றிப் பரவுகின்றார். இங்கு குமாரக் கடவுளின் திருமுன்பு, இவ்வாயிலுக்கென அமைந்துள்ள பின்வரும் திருப்பாடலைப் பாராயணம் புரிந்து வணங்குதல் சிறப்பு, 

வடக்கு வாயில் திருப்புகழ்:


(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனத்தத் தானன தானன தானன
     தனத்தத் தானன தானன தானன
          தனத்தத் தானன தானன தானன ...... தந்ததான
-
எலுப்புத் தோல்மயிர் நாடி குழாமிடை
     இறுக்குச் சீபுழுவோடடை மூளைகள்
          இரத்தச் சாகர நீர்மல மேவிய ...... கும்பியோடை
-
இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி
     உளைப்புச் சூலையொடே வலுவாகிய
          இரைப்புக் கேவல மூலவியாதியொடண்ட வாதம் 
-
குலைப்புக் காய்கனல் நீரிழி !வீளையொ
     டளைப்புக் காதடை கூனல் விசூசிகை
          குருட்டுக் கால்முடம் ஊமையுள் ஊடறு ...... கண்டமாலை
-
குடிப் புக்கூனமிதே சதமாமென
     எடுத்துப் பாழ்வினையால் உழல் நாயெனுன் 
          இடத்துத் தாள்பெற ஞானசதாசிவ ...... அன்பு தாராய்
-
கெலிக்கப் போர்பொரு சூரர் குழாம்உமிழ் 
     இரத்தச் சேறெழ தேர் பரி யாளிகள்
          கெடுத்திட்டே கடல் சூர்கிரி தூள்பட ...... கண்டவேலா
-
கிளர்ப்பொன் தோளி சராசரம் மேவியெ
     அசைத்துப் பூசைகொள் ஆயி பராபரி
          கிழப்பொற் காளை மெலேறுஎம்நாயகி ...... பங்கின்மேவும்
-
வலித்துத் தோள்மலை ராவணன்ஆனவன்
     எடுத்தப் போதுடல் கீழ்விழவே செய்து
          மகிழ்ப்பொன் பாத சிவாய நமோஅர ...... சம்பு பாலா
-
மலைக்கொப்பா முலையாள் குறமாதினை
     அணைத்துச் சீர்புலியூர் பரமாகிய
          வடக்குக் கோபுர வாசலில் மேவிய ...... தம்பிரானே.


வடக்கு கோபுர வாயில் காட்சிகள்
































No comments:

Post a Comment