Monday, November 26, 2018

வலிவலம்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு இருதயகமல நாதர் (மனத்துணை நாதர்) திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

நாகப்பட்டினத்திலிருந்து 27 கி.மீ தொலைவிலும், திருவாரூரிலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள திருத்தலம்.

கோச்செங்க சோழ நாயனார் கட்டுவித்த மாடக் கோயில்களுள் ஒன்று, வலியன் பறவை பூசித்துப் பேறு பெற்றதால் வலிவலம். சிவபரம்பொருள் நெடிதுயர்ந்த திருமேனியுடன் மனத்துணை நாதராக எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகை வாளையங்கண்ணி; மாழையொண்கண்ணி; அங்கயற்கண்ணி எனும் திருநாமங்களுடன் பிரத்யட்சத் திருக்கோலத்தில், அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாய்த் திருக்காட்சி தருகின்றாள். 

விநாயகப் பெருமானின் திருஅவதாரத்தைக் குறிக்கும் பிரசித்தமான ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பாடல் இடம்பெற்றுள்ள திருத்தலம், 
-
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில் வலிவல முறை இறையே

கந்தப் பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களுடன், இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இம்மூர்த்தியை பின்வரும் திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்.

(Google Maps: SCN121 Arulmigu Iruthayakamalanathar Temple, Valivalam.)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனத்த தானன தனதன தனதன
     தனத்த தானன தனதன தனதன
          தனத்த தானன தனதன தனதன ...... தனதான

தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
     இருக்க வேறொரு பெயர் தமதிடமது
          துவட்சியே பெறில் அவருடன் மருவிடு ...... பொதுமாதர்

துவக்கிலே அடிபடநறு மலரயன்
     விதித்த தோதக வினையுறு தகவது
          துறக்க நீறிட அரகர எனவுளம் அமையாதே

அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள்
     பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறும் 
          அசட்டன்ஆதுலன் அவமது தவிரநின்!அடியாரோ

டமர்த்தி மாமலர் கொடுவழிபட எனை
     இருத்தியே பரகதிபெற மயில்மிசை
          அரத்த மாமணி அணிகழல் இணைதொழ ...... அருள்தாராய்

எடுத்த வேல்பிழை புகலரிதென எதிர்
     விடுத்து ராவணன் மணிமுடி துணிபட
          எதிர்த்துமோர் கணை விடல்தெரி கரதலன் ...... மருகோனே

எருக்கு மாலிகை குவளையின் நறுமலர்
     கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை
          எலுப்பு மாலிகை புனைசடில் அவனருள் ...... புதல்வோனே

வடுத்த மாவென நிலைபெறு நிருதனை
     அடக்க ஏழ்கடல்எழுவரை துகளெழ
          வடித்த வேல்விடு கரதல ம்ருகமத ...... புயவேளே

வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய
     கடப்ப மாலிகை அணிபுய அமரர்கள்
          மதித்த சேவக வலிவல நகருறை ...... பெருமாளே

(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


















No comments:

Post a Comment