Monday, November 26, 2018

கோடிநகர் (கோடியக்கரை - குழகர் கோயில்)

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருமறைக்காடு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திலுள்ள தேவாரத் தலமான அகத்தியன்பள்ளியைத் தரிசித்துப் போற்றிப் பின்னர் அதே சாலை மார்க்கத்தில் இன்னமும் 7 கி.மீ தூரம் பயணித்தால் கோடியக்கரை சிவாலயத்தை அடையலாம். ஆலயத் திருப்பணி நடைபெற்று வருகின்றது.

கடற்கரைக்கு மிகஅருகில் அமைந்துள்ள திருத்தலம். சுந்தரனார் சேரமான் பெருமாள் நாயனாருடன் தரிசித்துப் பரவிய புண்ணியப் பதி. இறைவர் கடற்கரைப் பகுதியில் தனியே எழுந்தருளி இருப்பதைக் கண்ணுற்று வன்தொண்டர் வருந்திப் பாடுகின்றார், 
-
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்
குடிதான் அயலே இருந்தால் குற்றமாமோ
கொடியேன் கண்கள் கண்டன, கோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையா இருந்தீரே

சிவபரம்பொருள் அமிர்தகடேஸ்வரராகவும், இறைவி அஞ்சனாட்சி; மைத்தடங்கண்ணி எனும் திருநாமங்களிலும் எழுந்தருளி இருக்கின்றனர்.  

இங்கு திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம் ஆறு திருக்கரங்களுடன், திருக்கரங்களில் அமிர்த கலசம்; நீலோற்பலம்; பத்மம் ; அபயம்; வச்சிரம்; வேல் இவைகளோடும், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் 'அமிர்தகர சுப்பிரமணியர்' எனும் திருநாமத்துடன் எழுந்தருளி இருக்கின்றான். மிகவும் அரிதான; தனித்துவமான திருத்தமான திருமேனி அமைப்பு, தரிசிக்கக் கண்கள் கோடி வேண்டும்.

அருணகிரியார் இம்மூர்த்தியை ஒரு திருப்புகழ் திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்.

(Google Maps: SCN127 - Kodiyakarai Shiva Temple)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தனதான

நீலமுகிலான குழலான மடவார்கள்தன
     நேயமதிலே தினமும் உழலாமல்

நீடுபுவியாசை பொருளாசை மருளாகியலை
     நீரிலுழல் மீனதென ...... முயலாமல் 

காலனது நாஅரவ வாயிலிடு தேரையென
     காய மருவாவி விழ ...... அணுகாமுன்

காதலுடனோதும் அடியார்களுட(ன்) நாடியொரு
     கால்முருக வேளெனவும் அருள்தாராய்

சோலைபரண் மீதுநிழலாக தினை காவல்புரி
     தோகைகுற மாதினுடன் உறவாடிச்

சோரனென நாடிவருவார்கள் வன வேடர்விழ
     சோதிகதிர் வேலுருவு ...... மயில்வீரா

கோலஅழல் நீறுபுனை ஆதி சருவேசரொடு
     கூடிவிளையாடும் உமை ...... தருசேயே

கோடுமுக ஆனைபிறகான துணைவா குழகர்
     கோடிநகர் மேவிவளர் ...... பெருமாளே

(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)









No comments:

Post a Comment