(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
திருக்கோயில்: அருள்மிகு அன்னை குங்கும சௌந்தரி சமேத ஸ்ரீமூலநாதர் திருக்கோயில்.
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
திருச்சியிலிருந்து 25 கி.மீ தூரத்திலும், லால்குடியிலிருந்து 3 கி.மீ தூரத்திலும் அமையப்பெற்றுள்ள திருப்புகழ் தலம். அடிப்படையில் சிவத்தலம், சிவபரம்பொருள் திருமூலநாத சுவாமி எனும் திருநாமத்துடனும், உமையன்னை குங்கும சௌந்தரி எனும் திருநாமத்துடனும் எழுந்தருளி இருக்கின்றனர்.
(Google Maps: Kunguma Sowndari Samedha Thirumoolanathar Temple, Old NH Rd, Puvalur, Tamil Nadu 621712, India)
ஆறுமுக தெய்வம் இத்திருக்கோயிலில் மூன்று திருக்கோலங்களில் அதி ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான். முதலாவது, சிவசன்னிதியின் நேர்பின்புறம், வெளிப்பிரகாரத்தில், தனிச்சன்னிதியில், தெய்வயானைத் தாயார் உடனிருக்க, ஆறு திருமுகங்கள் பன்னிரு திருக்கரங்களுடன், மயில் மயில் மீதமர்ந்த பேரழகுத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். இச்சன்னிதிக்கு மிக அருகிலேயே பால தண்டாயுதபாணியாய் மற்றொரு திருக்கோலத்தில் திருக்காட்சி தந்தருள்கின்றான். மூன்றாவது, அம்பிகையின் திருச்சன்னிதிக்குள், வலது புறம், ஆறு திருமுகங்கள் மற்றும் பன்னிரு திருக்கரங்களோடு கூடிய மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளித் தரிசிப்போருக்குச் சிவானந்தப் பேற்றினை அளித்தருள்கின்றான்.
ஏகாந்தமான சூழலில் அமைந்துள்ள விசாலமான இத்திருக்கோயில் தரிசிப்போருக்கு நிறைவானதொரு ஆன்மீக அனுபவத்தினை நல்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இத்தலத்திற்கென அருணகிரியார் ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார். இப்பனுவலில், திருஞானசம்பந்த மூர்த்தி மதுரையில் சமணர்களை வாதில் வென்று, சைவப் பெருஞ்சமயத்தினை மீண்டும் நிலைபெறச் செய்தருளிய பெரிய புராண நிகழ்வுகளை நினைவு கூர்ந்துப் போற்றியுள்ளார் திருப்புகழ் ஆசிரியர்.
(Google Maps: Kunguma Sowndari Samedha Thirumoolanathar Temple, Old NH Rd, Puvalur, Tamil Nadu 621712, India)
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தான தாத்தன தானா தானன
தான தாத்தன தானா தானன
தான தாத்தன தானா தானன ...... தனதான
காலன் வேற்கணை ஈர்வாள் ஆலமும்
நேர்கணால் கொலை சூழ்மாபாவிகள்
காம சாத்திர வாய்ப்பாடேணிகள் ...... எவரேனும்
காதலார்க்கும் வினாவாய் கூறிகள்
போக பாத்திர மாமூதேவிகள்
காசு கேட்டிடு மாயாரூபிகள் ...... அதிமோக
மாலை மூட்டிகள் வானூடே நிமிர்
ஆனை போல்பொர நேரே போர்முலை
மார்பு காட்டிகள் நானா பேதகம் ...... எனமாயா
மா பராக்கிகளோடே சீரிய
போது போக்குதலாமோ நீஇனி
வாஎனாப் பரிவாலே ஆள்வதும் ...... ஒருநாளே
பாலறாத்திரு வாயாலோதிய
ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய்
பாடல் தோற்றிரு நாலாம்ஆயிரம் ...... சமண்மூடர்
பாரின் மேல் கழுமீதே ஏறிட
நீறிடாத் தமிழ் நாடீடேறிட
பாதுகாத்தருளாலே கூன்நிமிர் ...... இறையோனும்
ஞாலமேத்தியதோர் மாதேவியும்
ஆலவாய்ப்பதி வாழ்வாமாறெணும்
ஞான பாக்கிய பாலா வேலவ ...... மயில்வீரா
ஞான தீக்ஷித சேயே காவிரி
ஆறு தேக்கிய கால்வாய் மாமழ
நாடு போற்றிய பூவாளுர்உறை ...... பெருமாளே.
(2019 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
அற்புதம் ஐய்யா ..உங்கள் தொண்டு மேல் ஓங்குக.. முருகன் அருள் புரிகிறான் ..
ReplyDelete