Wednesday, November 28, 2018

திருவாஞ்சியம்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (தென்கரை)

மாவட்டம்: திருவாரூர்

திருக்கோயில்: அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருவாரூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவாஞ்சியம். காசிக்கு நிகராகப் போற்றப் பெறும் ஆறு புண்ணியத் தலங்களுள் ஒன்றாகத் திகழ்வது. யமன் வழிபட்டுப் பேறு பெற்ற பதி. பரமபத நாயகரான ஸ்ரீமகாவிஷ்ணு (இத்தல இறைவரை வழிபட்டு) திருமகளான ஸ்ரீமகாலக்ஷ்மி தேவியோடு மீண்டும் இணைந்து எழுந்தருளும் பேறு பெற்ற பதி (திருமகளை வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம் - அல்லது ஸ்ரீவாஞ்சியம்).

எளிதில் இத்தல தரிசனம் கைகூடி விடாது என்பர், ஏதேனும் தடைகள் வந்த வண்ணமிருக்கும் - எதனையும் பொருட்படுத்தாது உறுதியோடு முயன்று (திருவருளின் துணை கொண்டு) இத்தல தரிசனத்தினைப் பெறுதல் வேண்டும் 

விசாலமான ஆலய வளாகம். ஆதிப் பரம்பொருளான சிவமூர்த்தி வாஞ்சிநாத சுவாமியாகவும், உலகீன்ற உமையன்னை மங்களாம்பிகையாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். தேவார மூவரும் இத்தலத்திற்கென ஓரோர் திருப்பதிகங்களை அருளிச் செய்துள்ளனர். 

இங்கு கார்த்திகை மாத ஞாயிறுகள் விசேடம் (அதிலும் குறிப்பாக இறுதி ஞாயிறு பெருவிழாவாகக் கொண்டாடப் பெறுகின்றது). இந்நாட்களின் அதிகாலையில் வாஞ்சிநாத சுவாமி ஆலய தீர்த்தத்தில் தீர்த்தவாரி கண்டருள்வார், அன்பர்கள் பெருந்திரளெனக் கூடியிருந்து புண்ணிய நீராடி வாஞ்சிநாதப் பரம்பொருளைப் போற்றிப் பணிந்து இன்புறுவர். 

வெளிப்பிரகாரச் சுற்றின் பின்புறம் கந்தப் பெருமான் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடும் மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், இரு தேவியரோடும், சுப்பிரமணியன் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளிச் செய்துள்ளார்,

(Google Maps: Thiruvanjiyam Arulmigu Vanchinadha Swamy Thirukovil, Srivanchiyam, Tamil Nadu 610105, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதாந்த தத்த தனதன
     தனதாந்த தத்த தனதன
          தனதாந்த தத்த தனதன ...... தனதான

இபமாந்தர் சக்ர பதிசெறி
     படையாண்டு சக்ர !வரிசைக
          ளிட வாழ்ந்து திக்கு விசயமண் அரசாகி

இறுமாந்து வட்ட வணைமிசை
     விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
          எழிலார்ந்த பட்டி வகை பரிமள லேபம் 

தபனாங்க ரத்ந அணிகலன் 
     இவைசேர்ந்த விச்சு வடிவது
          தமர்சூழ்ந்து மிக்க உயிர்நழுவிய போது

தழல்தான் கொளுத்தியிடஒரு
     பிடிசாம்பல் பட்டதறிகிலர்
          தனவாஞ்சை மிக்குன் உனடிதொழ ...... நினையாரே

உபசாந்த சித்த குருகுல
     பவபாண்டவர்க்கு வரதன்!மை
          உருவோன் ப்ரசித்த நெடியவன் ...... ரிஷிகேசன்

உலகீன்ற பச்சை உமையணன்
     வடவேங்கடத்தில் உறைபவன் 
          உயர்சார்ங்க சக்ர கரதலன் ...... மருகோனே

த்ரிபுராந்தகற்கு வரசுத
     ரதிகாந்தன் மைத்துன முருக
          திறல்பூண்ட சுப்ரமணிய ஷண்முகவேலா

திரைபாய்ந்த பத்ம தட!வய
     லியில் வேந்த முத்தியருள் தரு
          திருவாஞ்சியத்தில் அமரர்கள் ...... பெருமாளே


(2024 டிசம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


































No comments:

Post a Comment