(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: திருவாரூர்
திருக்கோயில்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (பிரம்மபுரீஸ்வர் திருக்கோயில் என்றும் குறிப்பர்)
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
திருவாரூரிலுருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது எண்கண். அடிப்படையில் சிவத்தலமாக இருப்பினும் இங்குள்ள முருகப் பெருமான் மிகமிகப் பிரசித்தம் - பிரதானம் என்று கூறினும் மிகையில்லை.
சிவபரம்பொருள் பிரமாண்டமான சிவலிங்கத் திருமேனியில் பிரம்மபுரீஸ்வரராய் எழுந்தருளி இருக்கின்றார். உமையன்னை தனிச்சன்னிதியில் பிரஹந்நாயகியாய், நெடிதுயர்ந்த அதி அற்புதமான பிரத்யட்சத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். அர்த்த மண்டபத்திலிருந்து தரிசிக்கையில் நேரிலேயே திருக்காட்சி தருவது போன்ற உணர்வு தோன்றுவது திண்ணம்.
இறைவர் இறைவி திருச்சன்னிதிகளுக்கு நடுநாயகமாய் மூலக் கருவறையில் கந்தப் பெருமான் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு, இடது திருக்காலை மடித்தும் - வலது திருக்காலை தொங்க விட்டவாறும், மயில் மீதமர்ந்த ஆனந்தத் திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்க எழுந்தருளி இருக்கின்றான். அர்த்த மண்டபத்திலிருந்து திருமுகத்தை இன்னமும் நன்றாக தரிசிக்க முடிகின்றது.
இனி இத்தலத்தில் வேலவன் எழுந்தருளிய அற்புத வரலாற்றினைக் காண்போம்,
சிக்கல் வேலவனின் சிலை வடித்த சிற்பியின் கட்டை விரலை அப்பகுதி மன்னன் தானமாகப் பெறுகின்றான் (பிறிதொரு அற்புதச் சிலையை இதுபோல வடித்துவிடக் கூடாது எனும் எண்ணத்துடன்). எனினும் அச்சிற்பி (கட்டை விரலின்றியே) எட்டுக்குடி வேலவனின் திருமேனியையையும் வடித்து விட, இம்முறை சிற்பியின் கண்களையும் பறித்து விடுகின்றான்.
கண்களும் கட்டை விரலுமின்றி இத்தலத்துறை கந்தவேளின் திருமேனியை (ஒரு சிறுமியின் துணை கொண்டு) வடித்தவுடன், சிவகுமரனின் திருவருளால் கண்களையும் விரலையும் மீண்டும் பெற்று மகிழ்கின்றான். எண்ணத்தையே கண்களாகக் கொண்டு வடித்ததால் 'எண்கண்'.
திருப்புகழ் மாமுனிவரான நம் அருணகிரிப் பெருமானார் இத்தலத்துறை அறுமுகக் கடவுளை ஒரு திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்,
(Google Maps: Sri Murugan Temple, Engan, Tamil Nadu 610104, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த ...... தனதான
சந்தனம் திமிர்ந்தணைந்து குங்குமம் கடம்பிலங்கு
சண்பகஞ் செறிந்திலங்கு ...... திரள்தோளும்
தண்டையஞ் சிலம்பலம்ப வெண்டையஞ் சலன்சலென்று
சஞ்சிதஞ் சதங்கை கொஞ்ச ...... மயிலேறித்
திந்திமிம் திமிந்திமிந்தி தந்தனம் தனந்த என்று
சென்றசைந்துகந்து வந்து ...... க்ருபையோடே
சிந்தைஅங்குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்துணர்ந்து
செம்பதம் பணிந்திரென்று ...... மொழிவாயே
அந்த மந்தி கொண்டிலங்கை வெந்தழிந்திடும்ப கண்டன்
அங்கமும் குலைந்தரங்கொள் ...... பொடியாக
அம்ப கும்பனும் கலங்க வெஞ்சினம் புரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம்!புனைந்தி
டும் பரன்தன் அன்பில் வந்த ...... குமரேசா
இந்திரன் பதம் பெறண்டர் தம்பயம் கடிந்த பின்பு
எண்கண் அங்கமர்ந்திருந்த ...... பெருமாளே
(2024 டிசம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment