(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: திருவாரூர்
திருக்கோயில்: அருள்மிகு அன்னை ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேஸ்வரர் திருக்கோயில் (கூந்தலூர் முருகன் கோயில் என்றும் பிரசித்தமாக அறியப்படுகின்றது)
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
திருவாரூரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், திருவீழிமிழலையிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது கூந்தலூர்.
அப்பர் சுவாமிகள் அருளியுள்ள ஷேத்திரக் கோவையில் குறிக்கப் பெற்று தேவார வைப்புத் தலமாகத் திகழ்வது,
-
(ஷேத்திரக் கோவை - திருப்பாடல் 9)
திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் வீரட்டம் கருகாவூரும்
கயிலாய நாதனையே காணலாமே
அடிப்படையில் சிவத்தலமாக இருப்பினும் இங்கு எழுந்தருளியுள்ள முருகப் பெருமானும் மிகப் பிரசித்தம் (ஆலய முகப்புப் பலகையில் "சிவபெருமானின் திருநாமத்தோடு சேர்த்து - முருகன் ஸ்தலம்" என்றும் குறிக்கப் பெற்றிருப்பதனால் இதனை அறியலாம்).
ஏகாந்தமான சூழலில் அமையப் பெற்றுள்ள திருத்தலம். இங்கு சிவபரம்பொருள் ஜம்புகாரணேஸ்வரர் எனும் திருநாமத்திலும், அம்பிகை ஆனந்தவல்லியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். ரோமரிஷி வழிபட்டு அருள் பெற்ற திருத்தலம்.
ஆலயத்துள் நுழைந்ததுமே வலது புறத்தில் திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமானின் திருச்சன்னிதி அமைந்துள்ளது. வேலாயுதக் கடவுள் இங்கு ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, மயில் பின்புறம் விளங்கியிருக்க, இரு தேவியரோடும் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். மாட்சி பொருந்திய திருக்கோலம், காண்பதற்கரிய திருக்காட்சி.
(ஆலயத்தில் நாங்கள் சென்றிருந்த நேரம் அர்ச்சகர் இல்லை. அர்ச்சகரின் இல்லம் அருகிலுள்ள சாலையில் இருப்பதை அறிந்து அங்கு சென்று, சிறிது நேரம் காத்திருந்து, அவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் ஆலயம் வந்தடைந்தோம். திருப்புகழ் தல யாத்திரை நிமித்தமாக நாங்கள் வந்திருப்பதைத் தெரிவித்தவுடன், கூந்தலூர் திருப்புகழை நெகிழ்விக்கும் முறையில் பாடி, தீபாராதனையும் செய்துவித்தார்).
(கூந்தலூர் வேலவனின் திருவருள் வடிவமாக, ஆலய வளாகத்திற்கருகில் சில மயில்களையும் தரிசித்து மகிழ்ந்தோம்).
அருணகிரிப் பெருமானார் இத்தலத்துறை கந்தவேளை ஒரு திருப்பாடலால் போற்றிப் பரவியுள்ளார்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன ...... தனதான
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டிடாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மிகுகேள்வி
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
அவமதியதனில் பொலாங்கு தீமைசெய்
சமடனை வலியஅசாங்கமாகிய ...... தமியேனை
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொடாங்கு கூடிய ...... வினையேனை
வெகுமலரது கொடு வேண்டியாகிலும்
ஒருமலர் இலைகொடும் ஓர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாள்தொழ ...... அருள்வாயே
ஒருபது சிரமிசை போந்த ராவணன்
இருபது புயமுடனேந்து மேதியும்
ஒருகணை தனில்அறவாங்கு மாயவன் ...... மருகோனே
உனதடியவர் புகழாய்ந்த நூலினர்
அமரர்கள் முனிவர்களீந்த பாலகர்
உயர்கதி பெறஅருளோங்கு மாமயில் உறைவோனே
குரைகழல் பணிவொடு கூம்பிடார்பொரு
களமிசை அறமது தீர்ந்த சூரர்கள்
குல முழுதனைவரும் மாய்ந்து தூளெழ ...... முனிவோனே
கொடுவிடம் அதுதனை வாங்கியேதிரு
மிடறினிலில் இருவென ஏந்தும் ஈசுரர்
குருபரன் எனவரு கூந்தலூர்உறை ...... பெருமாளே
(2024 டிசம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment