(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: திருவாரூர்
திருக்கோயில்: அருள்மிகு அன்னை சாந்த நாயகி சமேத ஸ்ரீபார்வதீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
திருவாரூரிலுருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும், நன்னிலத்திலிருந்து 13 கி.மீ தொலைவிலும், பேரளத்திலிருந்து 2.5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இஞ்சிக்குடி.
சிவபரம்பொருள் பார்வதீஸ்வரர் எனும் திருநாமத்திலும், அம்பிகை தவக்கோலத்தில் 'சாந்த நாயகி' எனும் திருநாமத்திலும் எழுந்தருளி இருக்கின்றனர்.
வெளிப் பிரகாரச் சுற்றின் பின்புறம் கந்தக் கடவுள் ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் சுப்பிரமணியனாய்த் திருக்காட்சி தருகின்றான்.
அருணகிரியார் இம்மூர்த்தியை ஒரு திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்.
இத்திருப்புகழில், ஸ்ரீராமசந்திர மூர்த்தி எழுபது வெள்ள வானர சேனைகளோடு, அலைகடலில் சேதுபந்தன பாலம் அமைத்துச் சென்று, இராவணன் உள்ளிட்ட அரக்கர் கூட்டத்தை வேரோடு அழித்தொழித்த நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றார்.
திருப்பாடலின் இறுதி வரியில் இத்தலத்து இறைவரான பார்வதீஸ்வரரின் திருப்பெயரையும் குறித்துப் போற்றுகின்றார்.
(Google Maps: Arulmigu Parvatheeswarar Temple, Injikudi.)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தந்ததனத் தான தான தனதன
தந்ததனத் தான தான தனதன
தந்ததனத் தான தான தனதன ...... தனதான
குங்கும கற்பூர நாவி இமசல
சந்தன கத்தூரி லேப பரிமள
கொங்கைதனைக் கோலி நீடு முகபட ...... நகரேகை
கொண்டைதனைக் கோதி வாரி வகைவகை
துங்க முடித்தாலகாலம் எனஅடல்
கொண்டவிடப் பார்வை காதினெதிர் பொரும் அமுதேயாம்
அங்குள நிட்டூர மாய விழிகொடு
வஞ்ச மனத்தாசை கூறிஎவரையும்
அன்புடை மெய்க்கோல ராக விரகினில் உறவாடி
அன்றளவுக்கான காசு பொருள்கவர்
மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழல்
அன்றியுனைப் பாடி வீடு புகுவதும் ஒருநாளே
சங்க தசக்ரீவனோடு சொலவள
மிண்டுசெயப் போன வாயுசுதனொடு
சம்பவ சுக்ரீவனாதி ஏழுபது ...... வெளமாகச்
சண்டகவிச் சேனையால் முனலைகடல்
குன்றிலடைத்தேறி மோச நிசிசரர்
தங்கிளை கெட்டோட ஏவு சரபதி ...... மருகோனே
எங்கு நினைப்போர்கள் நேச சரவண
சிந்துர கர்ப்பூர ஆறுமுககுக
எந்தனுடைச் சாமிநாத வயலியில் உறைவேலா
இன்புறுபொன் கூட மாட நவமணி
மண்டப வித்தார வீதி புடைவளர்
இஞ்சிகுடிப் பார்வதீசர் அருளிய ...... பெருமாளே
(2024 டிசம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment