Wednesday, November 28, 2018

மாகாளம்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (தென்கரை)

மாவட்டம்: திருவாரூர்

திருக்கோயில்: அருள்மிகு மகாகாளநாத சுவாமிதிருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருவாரூரிலிருந்து சுமார் 24 கி.மீ தூரத்தில் (40 நிமிட பயணத் தொலைவில்) அமைந்துள்ளது திருமாகாளம் (இங்கிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் மற்றொரு தேவார - திருப்புகழ் தலமான அம்பர் பெருந்திருக்கோயில் அமைந்துள்ளது). 

அன்னை ஸ்ரீகாளி (அம்பாசுரனை சம்ஹாரம் புரிந்த பழி தீர) சிவபரம்பொருளை வழிபட்ட திருக்கோயில். மூன்றாம் (வெளிப்) பிரகாரத்தில் தனிக்கோயில் போன்றதொரு அமைப்பிலும், முதல் பிரகாரச் சுற்றின் துவக்கத்திலும் அன்னை ஸ்ரீகாளி இருவேறு திருக்கோலங்களில் எழுந்தருளி இருக்கின்றாள். 

சோமாசி மாற நாயனார் சோமயாகம் புரிந்த திருத்தலம், சோமாசி நாயனாரின் யாகத்திற்கு இறைவர் புலையரின் வடிவில் எழுந்தருளி வரும் நிகழ்வு (பெரிய புராணத்தில் குறிக்கப் பெறாதிருப்பினும்) ஆண்டுதோறும் இங்கு உற்சவமாகக் கொண்டாடப் பெற்று வருகின்றது. 
-
யாகத்திற்கு இறைவருடன் ஸ்ரீவிநாயகப் பெருமானும், குமாரக் கடவுளும் சிறு பாலகர்களாக எழுந்தருளி வரும் திருமேனிகளை உட்பிரகாரச் சுற்றிலுள்ள தியாகராஜர் திருச்சன்னிதியில் தரிசித்து மகிழலாம் (இங்கு விநாயக மூர்த்தி நரமுக வடிவினராய்த் திருக்காட்சி தருகின்றார்).

மூலக்கருவறையில் மகாகாளநாதர் எழுந்தருளி இருக்கின்றார். ஞானசம்பந்தப் பெருமான் இம்மூர்த்தியை மூன்று திருப்பதிகங்களால் போற்றிப் பரவியுள்ளார், 
-
(திருப்பாடல் 1)
அடையார் புரமூன்றும் அனல்வாய் விழவெய்து
மடையார் புனல் அம்பர் மாகாளம் மேய
விடையார் கொடிஎந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினை தானே

2ஆம் (வெளிப்) பிரகாரச் சுற்றின் பின்புறம் திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களோடு, தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் சுப்பிரமணியனாய்த் திருக்காட்சி தருகின்றான். பின்னர் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மியின் திருச்சன்னிதிக்கு அருகில் பால சுப்ரமணியனாய் மற்றுமொரு திருக்கோலத்தில் சிவகுமரன் எழுந்தருளி இருக்கின்றான்.
-
அருணகிரிப் பெருமானார் இத்தலத்துறை கந்தவேளை ஒரு திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்.

(Google Maps: Kovil Thirumakalam Periya kovil, Sannathi Street Kovil Thirumalam, Poonthottam, Tamil Nadu 609503, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தானான தானதன தானதன தானதன
     தானான தானதன தானதன தானதன
          தானான தானதன தானதன தானதன ...... தனதான

காதோடு தோடிகலி ஆடவிழி வாள்சுழல
     கோலாகலார முலை மார்புதைய பூணகல
          காரோடு கூடளக பார மலரோடலைய ...... அணைமீதே

காலோடு கால்இகலி ஆடபரி !நூபுரமொ
     டேகாசமான உடை வீசியிடை நூல்துவள
          காவீரமான இதழூறல்தர நேசமென ...... மிடறோதை

நாதான கீதகுயில் போலஅல்குல் மால்புரள
     மார்போடு தோள் கரமொடாடிமிக நாணழிய
          நானா விநோதமுற மாதரொடு கூடிமயல் ...... படுவேனை

நானாரு நீயெவன் எனாமல் எனதாவி கவர்
     சீர்பாதமே கவலையாயும் உனவே நிதமும் 
          நாதா குமார முருகா எனவும் ஓதஅருள் ...... புரிவாயே

பாதாள சேடனுடல் ஆயிர பணாமகுட
     மாமேரொடேழு கடல் ஓதமலை சூரருடல்
          பாழாக தூளி விணிலேற புவி வாழவிடு ...... சுடர்வேலா

பாலாழி மீதரவின் மேல்திருவொடே அமளி
     சேர்நீலரூபன் வலி ராவணகுழாம் இரிய
          பாரேவை ஏவிய முராரிஐவர் தோழன்அரி ...... மருகோனே

மாதா புராரி சுகவாரிபரை நாரியுமை
     ஆகாச ரூபி அபிராமி வலமேவு சிவன்
          மாடேறியாடுமொரு நாதன்மகிழ் போதமருள் ...... குருநாதா

வானோர்கள் ஈசன்மயிலோடு குறமாது!மண
     வாளா குகாகுமர மாமயிலின் மீதுதிரு
          மாகாள மாநகரில் மாலொடடியார் பரவு ...... பெருமாளே


(2024 டிசம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)



































No comments:

Post a Comment