(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: நாகப்பட்டினம்
திருக்கோயில்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
நாகப்பட்டின மாவட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பரம புண்ணிய ஷேத்திரம் திருக்கடவூர் (தற்காலத்தில் சிறிது மருவி திருக்கடையூர் என்று பிரசித்தமாக அறியப் பெற்று வருகின்றது). தேவார மூவரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. குங்கிலியக் கலய நாயனாரும், காரி நாயனாரும் திருத்தொண்டு புரிந்து பரவிய திருத்தலம். அபிராமி பட்டரின் திருவாக்கினால் ஒப்புமையற்ற 'அபிராமி அந்தாதி' பாடல் பெற்றுள்ள புண்ணியப் பதி.
தருமை ஆதினத் திருக்கோயில், விசாலமான ஆலயவளாகம் (தற்பொழுது நடந்தேறி வரும் திருப்பணி இரு ஆண்டுகளில் நிறைவுற்று குடமுழுக்குப் பெருவிழா நிகழ்ந்தேறும் என்று அறிகின்றோம்). மூலக் கருவறையில் அமிர்தகடேஸ்வரப் பரம்பொருள் பேரழகுத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார், இவருக்கு வலப்புறம் மற்றொரு திருச்சன்னிதியில் காலசம்ஹார மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகையுறையும் இடபாகத்துத் திருவடியால் கூற்றுவனை உதைத்தருளும் காண்பதற்கரிய திருக்கோலம். இம்மூர்த்தியின் திருவடி நிலைகளில் கூப்பிய திருக்கரங்களுடன், சிறிய திருமேனியராய் மார்க்கண்டேயர் எழுந்தருளி இருக்கின்றார்.
-
'கூற்று மரித்திடவே உதை பார்வதியார்க்கும் இனித்த பெணாகிய மான்மகள் கோட்டு முலைக்கதிபா கடவூருறைப் பெருமாளே ' என்று போற்றுவார் நம் அருணகிரியார்
நால்வேதத் தலைவியான உலகீன்ற; நமையீன்ற அபிராமி அம்மை தனிக்கோயிலில் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாய் எழுந்தருளி இருக்கின்றாள், வார்த்தைகளால் விளக்கவொணாத பேரருள் திருக்கோலம். வெளிப்பிரகாரச் சுற்றில், கருவறையின் பின்புறம், வலது புறத்தில் நம் அபிராமி பட்டர் தனிச்சன்னிதியில், இரு கரங்களும் கூப்பிய திருக்கோலத்தில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார்.
திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் அமிர்தகடேஸ்வரர் ஆலயத் திருச்சுற்றிலும், அபிராமி அம்மை ஆலயத் திருச்சுற்றிலும் இரு தேவியரோடு நின்ற திருக்கோலத்தில், திருமுகத்தில் மெலிதான புன்முறுவலோடு எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கு 2 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார்,
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன ...... தனதான
ஏட்டின் விதிப்படியே கொடு மாபுர
வீட்டில் அடைத்திசைவே கசை மூணதில்
ஏற்றியடித்திடவே கடலோடமதெனஏகி
ஏற்குமெனப் பொருளாசை பெணாசை!கொ
ளாத்து எனத் திரியா பரியா தவம்
ஏற்றி இருப்பிடமே அறியாமலும் உடல்பேணிப்
பூட்டு சரப்பளியே மதனாமென
ஆட்டி அசைத்தியலே திரி நாளையில்
பூத்த மலக்குகையோ பொதி சோறென ...... கழுகாகம்
போற்றி நமக்கிரையாம் எனவே கொள
நாட்டில்ஒடுக்கெனவே விழு போதினில்
பூட்டு பணிப்பத மாமயிலா அருள் ...... புரிவாயே
வீட்டிலடைத்தெரியே இடு பாதகன்
நாட்டை விடுத்திடவே பல சூதினில்
வீழ்த்த விதிப்படியே குரு காவலர் ...... வனமேபோய்
வேற்றுமை உற்றுருவோடியல் நாளது
பார்த்து முடித்திடவே ஒரு பாரத
மேற்புனைவித்த மகாவிர மாயவன் ...... மருகோனே
கோட்டையழித்த சுரார்பதி கோவென
மூட்டியெரித்த பராபர சேகர
கோத்த மணிக்கதிரே நிகராகிய ...... வடிவேலா
கூற்று மரித்திடவே உதை !பார்வதி
யார்க்கும் இனித்த பெணாகிய மான்மகள்
கோட்டு முலைக்கதிபா கடவூருறை ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த ...... தனதான
சூலமெனவோடு சர்ப்ப வாயுவை விடாதடக்கி
தூயவொளி காண முத்தி ...... விதமாகச்
சூழுமிருள் பாவகத்தை வீழ அழலூடெரித்து
சோதிமணி பீடமிட்ட ...... மடமேவி
மேலைவெளி ஆயிரத்து நாலிரு பராபரத்தின்
மேவி அருணாசலத்தினுடன் மூழ்கி
வேலுமயில் வாகன ப்ரகாசமதிலே தரித்து
வீடும்அதுவே சிறக்க ...... அருள் தாராய்
ஓலசுரர் ஆழியெட்டு வாளகிரி மாய வெற்பும்
ஊடுருவ வேல் தொடுத்த ...... மயில்வீரா
ஓதுகுற மான்வனத்தில் மேவியவள் கால்பிடித்துள்
ஓமெனுபதேச வித்தொடணைவோனே
காலனொடு மேதிமட்க ஊழிபுவி மேல்கிடத்து
காலனிட மேவு சத்தி ...... அருள்பாலா
காலமுதல் வாழ் புவிக்கதாரநகர் கோபுரத்துள்
கானமயில் மேல்தரித்த ...... பெருமாளே.
(2021 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment