(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: நாகப்பட்டினம்
திருக்கோயில்: அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
மயிலாடுதுறையின் பிரதானப் பகுதியில் அமையப் பெற்றுள்ள திருத்தலம். ஞானசம்பந்தப் பெருமான் - அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. மிக விசாலமான - நன்கு பராமரிக்கப் பெற்று வரும் ஆலய வளாகம்.
அம்மை மயில் வடிவில் இறைவரைப் பூசித்த இரு பிரசித்தமான தலங்களுள் ஒன்று (மற்றொன்று திருமயிலை).
மயூரநாதப் பரம்பொருளும் அபயாம்பிகை அம்மையும் அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றனர்.
உட்பிரகாரச் சுற்றின் பின்புறம் நம் கந்தப்பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். கூடுதலாக பிரகாரச் சுற்றின் முடிவில் ஆறுதிருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு மயில் மீதமர்ந்த மற்றொரு திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்க எழுந்தருளி இருக்கின்றான்.
-
அம்பிகை திருச்சன்னிதியின் உட்ப்ரகாரத்திலும், ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியருடனும் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.
-
அருணகிரியார் இத்தலத்திற்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளிச் செய்துள்ளார்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான
அமுதினை மெத்தச் சொரிந்து !மாவின
தினிய பழத்தைப் பிழிந்து பால்!நற
வதனொடு தித்தித்தகண்டளாவிய ...... இதழாராய்
அழகிய பொற்றற்றி(ல்) நொண்டு வேடையின்
வரு பசியர்க்குற்ற அன்பினால்!உண
வருள்பவர் ஒத்துத் தளர்ந்த காமுகர் ...... மயல்தீரக்
குமுதம் விளர்க்கத் தடங்குலாவிய
நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய
குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபாரக்
குவடிளகக் கட்டியுந்தி மேல்விழும்
அவர்மயலிற் புக்கழிந்த பாவியை
குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ...... அருள்வாயே
வமிச மிகுத்துப் ப்ரபஞ்சம் யாவையும்
மறுகிட உக்ரக் கொடும்பையான புன்
மதி கொடழித்திட்டிடும்பை ராவணன் ...... மதியாமே
மறுவறு கற்பிற் சிறந்த சீதையை
விதனம் விளைக்கக் குரங்கினால்அவன்
வமிசம் அறுத்திட்டிலங்கு மாயவன் ...... மருகோனே
எமது மலத்தைக் களைந்து பாடென
அருள அதற்குப் புகழ்ந்து பாடிய
இயல்கவி மெச்சிட்டுயர்ந்த பேறருள் ...... முருகோனே
எழில்வளை மிக்கத் தவழ்ந்துலாவிய
பொனிநதி தெற்கில் திகழ்ந்து மேவிய
இணையிலி ரத்னச் சிகண்டி ஊருறை ...... பெருமாளே
No comments:
Post a Comment