Monday, November 26, 2018

திருமறைக்காடு (வேதவனம்)

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

எட்டுக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும், திருத்துறைப்பூண்டியிலிருந்து 35 கி.மீ தொலைவிலும்  அமைந்துள்ளது திருமறைக்காடு (வேதாரண்யம்). தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. சப்த விடங்கத் தலங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுவது. அகத்திய மாமுனி அம்மையப்பரின் திருமணக் கோல தரிசனம் பெற்று மகிழ்ந்த புண்ணியப் பதி. 

பன்னெடுங்காலமாய் வேதங்களால் திருக்காப்பிடப் பெற்றிருந்த பிரதான கோபுர வாயிலைத் திருவருளின் துணை கொண்டு அப்பர் சுவாமிகள் திறக்கப் பாடவும் பின்னர் ஞானசம்பந்த மூர்த்தி அடைக்கப் பாடவுமாக நிகழ்ந்தேறிய அற்புதங்களை நினைவு கூர்ந்தவாறே ஆலயத்துள் செல்கின்றோம். 

(திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா
இதுநன்கிறை வைத்தருள் செய்க, எனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே

(அப்பர் சுவாமிகள் தேவாரம் - திருப்பாடல் 1)
பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலஞ்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே

மிக விசாலமான பரந்து விரிந்த ஆலய வளாகம். ஆலயத் துவக்கத்திலேயே மணிகர்ணிகை திருக்குளம் அழகுற அமையப் பெற்றுள்ளது. இத்தலத்தில் சிவபரம்பொருள் பங்குனி உத்திர மதிய வேளையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்குத் திருக்காட்சியளித்துப் பேரருள் புரிந்திருந்த காரணத்தால், அனுதினமும் இங்கு மதிய நீராடல் விசேடம், குறிப்பாக பங்குனி உத்திரத் திருநாளன்று இறைவர் மதியம் 12 மணிக்குத் தீர்த்தவாரி கண்டருள்கின்றார். 

சிவமூர்த்தி வேதாரண்யேஸ்வரராகவும், அம்பிகை யாழைப் பழித்த மொழியாளாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். மூலக் கருவறையில் சிவலிங்கத் திருமேனியின் பின்புறம் நெடிதுயர்ந்த உருவத் திருமேனியராய் இறைவரும் அம்மையும் பிரட்சயட்சமாய்த் திருக்காட்சி தருகின்றனர், பிறவிப் பயனை நல்கியருளும் காண்பதற்கரிய திருக்கோலம். 

இத்தலத்திற்கென ஞானசம்பந்த மூர்த்தி 5 திருப்பதிகங்களையும், அப்பர் சுவாமிகள் 5 திருப்பதிகங்களையும், சுந்தரர் ஒரு திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளனர். 

பிரகாரச் சுற்றின் பின்புறம் திருப்புகழ் தெய்வமான நம் கந்தப்பெருமான் ஆறு திருமுகங்கள் பன்னிரு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, மயில் பின்புறம் விளங்கியிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமானார் இம்மூர்த்தியை 3 திருப்பாடல்களால் போற்றிப் பரவுகின்றார். 

பிரகாரச் சுற்றில் அன்னை ஸ்ரீசரஸ்வதி பெரியதொரு திருமேனியோடு அற்புதமாய்த் திருக்காட்சி தருகின்றாள்.  

வெளிப்பிரகாரத்தில் தனிக்கோயிலில், வேதாரண்யேஸ்வரப் பரம்பொருளின் இடபாகத்தில் கோயில் கொண்டருளும் யாழைப் பழித்த மொழியம்மை எழுந்தருளி இருக்கின்றாள். 

(Google Maps: SCN125 Thirumaraikadu / Vedaranyeswarar Shiva Temple)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தானன தத்தத் தந்தன தந்தன ...... தனதான

சூழும்வினைக் கட்டுன்ப நெடும்பிணி ...... கழிகாமம் 
சோரமிதற்குச் சிந்தை நினைந்துறு துணையாதே
ஏழையென் இத்துக்கங்களுடன் தினமும் உழல்வேனோ
ஏதமகற்றிச் செம்பத சிந்தனை ...... தருவாயே
ஆழியடைத்துத் தன்கை இலங்கையை ...... எழுநாளே
ஆண்மை செலுத்திக் கொண்ட கரும்புயல் ...... மருகோனே
வேழமுகற்கு தம்பியெனும்திரு ...... முருகோனே
வேதவனத்தில் சங்கரர் தந்தருள் ...... பெருமாளே

திருப்பாடல் 2:
தான தனத்தன தந்த தான தனத்தன தந்த
     தான தனத்தன தந்த ...... தனதான

சேலையுடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து
     சீத வரிக்குழல் கிண்டி ...... அளிமூசத்

தேனில் இனிக்கமொழிந்து காமுகரைச்சிறை கொண்டு
     தேசம்அனைத்தையும் வென்ற ...... விழிமானார்

மாலை மயக்கில் விழுந்து காம கலைக்குள் உளைந்து
     மாலில்அகப்பட நொந்து ...... திரிவேனோ

வால ரவிக் கிரணங்களாமென உற்றபதங்கள்
     மாயை தொலைத்திட உந்தன் அருள்தாராய்

பாலைவனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று
     பார மலைக்குள் அகன்று ...... கணையாலேழ்

பாரமரத்திரள் மங்க வாலி உரத்தையிடந்து
     பால்வருணத் தலைவன்சொல் ...... வழியாலே

வேலையடைத்து வரங்கள் சாடி அரக்கர்இலங்கை
     வீடணருக்கருள் கொண்டல் ...... மருகோனே

மேவு திருத்தணி செந்தில் நீள்பழநிக்குள் உகந்து
     வேதவனத்தில் அமர்ந்த ...... பெருமாளே

திருப்பாடல் 3:
தானன தத்த தனந்த தானன தத்த தனந்த
     தானன தத்த தனந்த ...... தனதான

நூலினையொத்த மருங்குல் தேரினையொத்த நிதம்பம்
     நூபுர மொய்த்த பதங்கள் ...... இவையாலும்

நூறிசை பெற்ற பதங்கொள் மேருவையொத்த தனங்கள்
     நூல்வல் மலர்ப்பொரு துண்டம் ...... அவையாலும்

சேலினையொத்திடு கண்களாலும் அழைத்திடுபெண்கள்
     தேனிதழ் பற்றும் ஒரின்ப ...... வலைமூழ்கிச்

சீலமனைத்தும் ஒழிந்து காமவிதத்தில் அழுந்தி
     தேறுதவத்தை இழந்து ...... திரிவேனோ

வாலஇளப் பிறைதும்பை ஆறுகடுக்கை கரந்தை
     வாசுகியைப் புனைநம்பர் ...... தருசேயே

மாவலியைச் சிறைமண்ட ஓரடியொட்டி அளந்து
     வாளிபரப்பி இலங்கை ...... அரசானோன்

மேல்முடி பத்தும்அரிந்து தோளிரு பத்தும் அரிந்து
     வீரமிகுத்த முகுந்தன் ...... மருகோனே

மேவுதிருத்தணி செந்தில் நீள்பழநிக்குள் உகந்து
     வேதவனத்தில் அமர்ந்த ...... பெருமாளே

(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

































No comments:

Post a Comment