Sunday, November 25, 2018

மருத்துவக்குடி:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: தஞ்சாவூர் 

திருக்கோயில்: அன்னை அபிராமி சமேத ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில்.

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்திலும், திருவிடைமருதூரிலிருந்து 3 1/2 கி .மீ பயணத் தொலைவிலும் அமைந்துள்ளது திருப்புகழ் தலமான மருத்துவக்குடி. பண்டைய பெயர் இடைக்குளம், நாவுக்கரசு சுவாமிகளின் தேவாரத் திருப்பாடலில் குறிக்கப் பெற்று வைப்புத் தலமாகவும் திகழ்வது, 
-
நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு
    நலம்திகழும் நாலாறும் திருவையாறும் 
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல்
    இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம்
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா
    கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறும் 
    குளம்களம்கா என அனைத்தும் கூறுவோமே

ஆதிப் பரம்பொருளான சிவமூர்த்தி இத்தலத்தில் ஐராவதீஸ்வரர் எனும் திருநாமத்திலும், உமையன்னை அபிராமி எனும் திருநாமத்திலும் எழுந்தருளி இருக்கின்றனர். 

வெளிப்பிரகாரச் சுற்றில், மூலக் கருவறையின் பின்புறம் வேலாயுதக் கடவுள் தனிச்சன்னிதியில் ஒரு திருமுகம் இரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியை ஒரு திருப்புகழ் திருப்பாடலால் பணிந்தேத்துகின்றார்,

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனத்த தத்தன தானா தானன
     தனத்த தத்தன தானா தானன
          தனத்த தத்தன தானா தானன ...... தனதான

கருத்திதப்படு காமா லீலைகள்
     விதத்தை நத்திய வீணா வீணிகள்
          கவட்டு விற்பன மாயாவாதிகள் ...... பலகாலும்

கரைத்துரைத்திடு மோகா மோகிகள்
     அளிக்குலப் பதி கார்போல் ஓதிகள்
          கடைக்கணின் சுழலாயே பாழ்படு ...... வினையேனை

உரைத்த புத்திகள் கேளா நீசனை
     அவத்த மெத்திய ஆசாபாசனை
          உளத்தில் மெய்ப்பொருள் ஓரா மூடனை ...... அருளாகி

உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை
     அளிக்கு நற்பொருளாயே மாதவ
          உணர்ச்சி பெற்றிடவே நீதாளிணை ...... அருள்வாயே

செருக்கி வெட்டிய தீயோராமெனும்
     மதத்த துட்டர்கள் மாசூராதிய
          சினத்தர் பட்டிடவே வேலேவிய ...... முருகோனே

சிவத்தை உற்றிடு தூயா தூயவர்
     கதித்த முத்தமிழ் மாலாய்ஓதிய
          செழிப்பை நத்திய சீலா வீறிய ...... மயில்வீரா

வரைத் தவர்க்கரர் சூலா பாணியர்
     அதிக் குணத்தரர் தீரா தீரர்தம்
          மனத்தியல்படு ஞானா தேசிக ...... வடிவேலா

வருக்கையின் கனி சாறாய் மேலிடு
     தழைத்த செய்த்தலை ஊடே பாய்தரு
          மருத்துவக்குடி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே


2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


















No comments:

Post a Comment