(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (காவிரி - தென்கரை)
மாவட்டம்: தஞ்சாவூர்
திருக்கோயில்: அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், கருவூர்த்தேவர் (திருவிசைப்பா)
தலக் குறிப்புகள்:
தஞ்சை பெரியகோயிலை அறியாதோரும் உளரோ! 9ஆம் திருமுறை - திருவிசைப்பாவில் கருவூர்த் தேவர் இத்தலத்தினை 11 திருப்பாடல்களால் போற்றிப் பரவியுள்ளார்.
(திருவிசைப்பா - தஞ்சை - இராசராசேச்சரம் - திருப்பாடல் 1)
உலகெலாம் தொழ வந்தெழுகதிர்ப் பரிதி
ஒன்று நூறாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பச்சோ
அங்ஙனே அழகிதோ அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர் வெண்திங்கள்
இலைகுலாம் பதணத்திஞ்சி சூழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இவர்க்கே
கடல் போன்று பரந்து விரிந்த திருக்கோயில் வளாகம், எத்தனை முறை தரிசித்தாலும் வியப்பிலாழ்த்தும் பிரமாண்டம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள். எந்நேரமும் அன்பர்கள் வெள்ளத்தில் அமிழ்ந்திருக்கும் ஆலய வளாகம்.
இங்கு சிவபரம்பொருள் பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) எனும் திருநாமத்திலும், அம்பிகை பெரியநாயகி (பிரஹந்நாயகி) எனும் திருப்பெயருடனும் எழுந்தருளி இருக்கின்றனர். இறைவர் 13 அடி சிவலிங்கத் திருமேனியில் திருக்காட்சி அளிக்கின்றார், உமையன்னை நெடிதுயர்ந்த திருக்கோலத்தில் பிரத்யட்சமாக எழுந்தருளி இருக்கின்றாள், காண்பதற்கரிய திருக்கோலங்கள்.
திருப்புகழ் தெய்வமான நம் அறுமுகப் பெருங்கடவுள் வெளிப்பிரகாரச் சுற்றில், மூலக் கருவறையின் பின்புறம், அற்புத வெளிப்பாடுகள் அமைந்துள்ள தனிக்கோயிலொன்றில் நெடிதுயர்ந்த மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், ஆறு திருமுகங்கள் - பன்னிரு திருக்கரங்களுடன், வள்ளியம்மையும் தெய்வயானைத் தாயாரும் உடன் எழுந்தருளி இருக்க பேரானந்தத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தந்தன தானன ...... தனதான
அஞ்சன வேல்விழி மடமாதர்
அங்கவர் மாயையில் அலைவேனோ
விஞ்சுறுமா உனதடிசேர
விம்பமதாய் அருள் அருளாதோ
நஞ்சமுதாய் உணும் அரனார்தம்
நல் குமரா உமை அருள்பாலா
தஞ்செனவாம் அடியவர் வாழத்
தஞ்சையில் மேவிய பெருமாளே.
திருப்பாடல் 2:
தந்த தானனத் தந்த தானனத்
தந்த தானனத் ...... தனதான
அம்புராசியில் கெண்டை !சேலொளித்
தஞ்சவே மணிக் ...... குழைவீசும்
அங்கணாரிடத்தின்ப !சாகரத்
தங்கி மூழ்கும் இச்சையினாலே
எம்பிரான்உனைச் !சிந்தியாதொழித்
திந்த்ரசால இப் ...... ப்ரமைதீர
இங்கு வாவெனப் பண்பினால் !அழைத்
தெங்குமான மெய்ப் ...... பொருள் தாராய்
கொம்பு போலிடைத் தொண்டை போல் இதழ்க்
கொண்டல் போல்குழல் ...... கனமேருக்
குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்
கொண்ட கோலசற் ...... குணவேலா
சம்பராரியைக் கொன்ற தீவிழிச்
சம்பு போதகக் ...... குருநாதா
சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
தஞ்சை மாநகர்ப் ...... பெருமாளே
திருப்பாடல் 3:
தந்த தானன தான தான தத்த தந்த
தந்த தானன தான தான தத்த தந்த
தந்த தானன தான தான தத்த தந்த ...... தனதான
கந்த வார்குழல் கோதி மாலையைப் புனைந்து
மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து
கண்ட மாலைகளான ஆணி முத்தணிந்து ...... தெருவூடே
கண்ட பேரையெலாம் அவாவினில் கொணர்ந்து
வண்பயோதர பார மேருவைத் திறந்து
கண்களாகிய கூர வேலை விட்டெறிந்து ...... விலைகூறி
வந்த பேர்களையே கையால் எடுத்தணைந்து
கொண்டு தேனிதழ்ஊறு வாயை வைத்தருந்தி
மந்த மாருதம் வீசு பாயலில் புணர்ந்து ...... மயல்பூணும்
மங்கை மார் அநுபோக தீவினைப் பவங்கள்
மங்கிஏகிடுமாறு ஞான வித்தை தந்து
வண்டுலாவிய நீபமாலை சற்றிலங்க ...... வருவாயே
இந்த்ர தாருவை ஞாலமீதினில் கொணர்ந்த
சங்க பாணியன் ஆதிகேசவ ப்ரசங்கன்
என்று வாழ்மணி மார்பன் வீரவிக்ரமன்தன் ...... மருகோனே
எண்திசா முகவேலை ஞாலமுற்று மண்டு
கந்த தாருக சேனை நீறு பட்டொதுங்க
வென்று பேரொளி சேர் ப்ரகாசம் இட்டிலங்கு ...... கதிர்வேலா
சந்த்ர சேகரி நாக பூஷணத்தி அண்டம்
உண்ட நாரணிஆல போஜனத்தி அம்பை
தந்த பூரண ஞானவேள் குறத்தி துஞ்சு ...... மணிமார்பா
சண்ட நீலகலாப வாசியில் திகழ்ந்து
கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்குயர்ந்த
தஞ்சை மாநகர் ராஜ கோபுரத்தமர்ந்த ...... பெருமாளே
(2024 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment