(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: நாகப்பட்டினம்
திருக்கோயில்: அருள்மிகு நவநீதேஸ்வரர் (வெண்ணை இலிங்கேஸ்வரர்) திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
திருவாரூரிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும், நாகப்பட்டினத்திலிருந்து 6 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது சிக்கல். ஞானசம்பந்த மூர்த்தியால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது.
வசிட்டர் காமதேனுவை வரமாகப் பெற்ற தலம். காமதேனுவின் பால் பெருகி வெண்ணையாக மாற, அதனைச் சிவலிங்கத் திருமேனியாக்கி வசிட்டர் வழிபட்டதால் சிவபரம்பொருள் இங்கு வெண்ணைப்பெருமான்; வெண்ணை இலிங்கேஸ்வரர்; நவநீதேஸ்வரர் எனும் திருநாமங்களோடு எழுந்தருளி இருக்கின்றார்.
ஆலயத்தினுள் படிகளேறிச் சென்றால், முதல் தளத்தில் சிறிய திருமேனியராய் வெண்ணைப் பெருமான் திருக்காட்சி தருகின்றார், வேல்நெடுங்கண்ணி அம்மையின் திருச்சன்னிதி தரைத்தளத்திலேயே அமையப் பெற்றுள்ளது,
-
(ஞானசம்பந்தர் தேவாரம்)
வானுலாவு மதி வந்துலவும் மதில் மாளிகை
தேனுலாவு மலர்ச்சோலை மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி
ஞானமாக நினைவார் வினையாயின நையுமே
முதல் தளத்தின் பிரகாரத் துவக்கத்தில், பெரியதொரு சலவைக்கல் மண்டபத்தில் கந்தப் பெருமான் 'சிங்கார வேலவர்' எனும் திருநாமத்தோடு உற்சவத் திருமேனியனாய் எழுந்தருளி இருக்கின்றான், காண்பதற்கரிய திருக்கோலம். சூர சம்ஹார நிகழ்வன்று இம்மூர்த்தியின் திருமேனியில் வியர்வை தோன்றுவது வியந்து போற்றுதற்குரியது.
அடிப்படையில் சிவத்தலமான சிக்கலை முருகன் திருக்கோயில் என்று பொதுவில் கருதப் பெறும் அளவிற்கு வேலவர் இங்கு மிகமிகப் பிரசித்தம். இம்மூர்த்தியின் மூலத் திருமேனியை அருகாமையிலுள்ள பொரவச்சேரி முருகன் திருக்கோயிலில் தரிசித்து மகிழலாம்.
ஆறுதிருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடும், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள பொரவச்சேரி கந்தக் கடவுளின் பேரழகுத் திருத்தோற்றத்தினை என்னென்று புகல்வது? தரிசிக்கக் கண்கள் கோடி வேண்டும்.
எட்டுக்குடி; எண்கண்; சிக்கல் (பொரவச்சேரி) எனும் இம்மூன்று ஆலயங்களிலுள்ள திருமேனியும் ஒரே சிற்பியால் சமைக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.
அவசியம் சிக்கல்; பொரவச்சேரி இரு ஆலயங்களையும் ஒருசேர தரிசித்துப் போற்றுதல் வேண்டும். அந்நியப் படையெடுப்பு சமயத்தில் கந்தவேளின் மூலத் திருமேனியும், உற்சவத் திருமேனியும் இவ்விருவேறு ஆலயங்களில் பாதுகாக்கப் பெற்றுள்ளது.
அருணகிரிப் பெருமானார் சிக்கல் வேலவரை இரு திருப்புகழ் திருப்பாடல்களால் போற்றிப் பரவுகின்றார்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தன்ன தத்த தனத்த தானன
தன்ன தத்த தனத்த தானன
தன்ன தத்த தனத்த தானன ...... தனதான
கன்னலொத்த மொழிச்சொல் வேசியர்
வன்மனத்தை உருக்கு லீலையர்
கண்வெருட்டி விழித்த பார்வையர் ...... இதமாகக்
கையிலுற்ற பொருட்கள் யாவையும்
வையெனக்கை விரிக்கும் வீணியர்
கைகள் பற்றியிழுத்து மார்முலை ...... தனில்வீழப்
பின்னி விட்ட சடைக்குளே மலர்
தன்னை வைத்து முடிப்பை நீயவிழ்
என்னும்அற்ப குணத்தர் ஆசையில் உழலாமல்
பெய்யு முத்தமிழில் தயாபர
என்ன முத்தர் துதிக்கவே மகிழ்
பிஞ்ஞகர்க்குரை செப்பு நாயக ...... அருள்தாராய்
வன்னியொத்த படைக்கலாதிய
துன்னு கைக்கொள்அரக்கர் மாமுடி
மண்ணிலற்று விழச்செய் மாதவன் ...... மருகோனே
மன்னு பைப்பணிஉற்ற நீள்விடம்
என்ன விட்டு முடுக்கு சூரனை
மல்லுடற்று முருட்டு மார்பற ...... அடைவாகச்
சென்னி பற்றியறுத்த கூரிய
மின்னிழைத்த திறத்த வேலவ
செய்ய பொற்புன வெற்பு மானணை ...... மணிமார்பா
செம்மனத்தர் மிகுத்த மாதவர்
நன்மை பெற்ற உளத்திலேமலர்
செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன ...... தனதானா
புலவரை ரக்ஷிக்குந் தாருவே!மது
ரிதகுண வெற்பொக்கும் பூவை மார்முலை
பொருபுய திக்கெட்டும் போயுலாவிய ...... புகழாளா
பொருவரு நட்புப் பண்பான வாய்மையில்
உலகிலுனக்கொப்புண்டோ எனாநல
பொருள்கள் நிரைத்துச் செம்பாகமாகிய ...... கவிபாடி
விலையில் தமிழ்ச்சொற்குன் போல்உதாரிகள்
எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
வெறிகொள் உலுத்தர்க்கென் பாடு கூறிடு ...... மிடிதீர
மிகஅருமைப்பட்டுன் பாத தாமரை
சரணமெனப் பற்றும் பேதையேன் மிசை
விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையும் அருள்வாயே
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
சிலைநுதல் மைக்கண் சிந்தூர வாணுதல்
இமயமகட்குச் சந்தானமாகிய ...... முருகோனே
இளைய கொடிச்சிக்கும் பாகசாதனன்
உதவும்ஒருத்திக்குஞ் சீலநாயக
எழிலியெழிற் பற்றுங் காய மாயவன் ...... மருகோனே
அலர்தரு புட்பத்துண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத்தெண் காதம் வீசிய
அணிபொழிலுக்குச் சஞ்சார மாமளி ...... இசையாலே
அழகிய சிக்கல் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்காரமாய் வரும்
அசுரரை வெட்டிச் சங்காரமாடிய ...... பெருமாளே
(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment