(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: நாகப்பட்டினம்
திருக்கோயில்: அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலம். அஷ்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுவது.
யானைத்தோல் உரித்த வீரட்ட அம்சத்துடன் இங்கு இறைவர் எழுந்தருளி இருக்கின்றார் என்று கொள்வது ஏற்புடையது.
விசாலமான ஆலய வளாகம், துவக்கத்திலேயே மிக நீண்ட அளவிலான திருக்குளத்தினைத் தரிசிக்கலாம். ஆலயத்துள் நுழைந்ததும் திருக்கோயில் சுவற்றில், தாருகவன முனிவர்கள்; பிச்சாடனர் திருக்கோலத்திலுள்ள சிவபரம்பொருள் - அருகில் மோகினி வடிவினரான திருமால் ஆகியோரின் அற்புத சித்திரங்களைத் தரிசிக்கலாம்.
வீரட்டேஸ்வரப் பரம்பொருள் அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார், அம்மை இளங்கிளை நாயகியாய்த் திருக்காட்சி தருகின்றாள்.
வெளிப்பிராகாரச் சுற்றின் பின்புறம் திருப்புகழ் தெய்வமான நம் குமரப் பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களுடன், இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியை இரு திருப்புகழ் திருப்பாடல்களால் போற்றிப் பரவுகின்றார்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன ...... தனதானா
தருவூர் இசையார் அமுதார்நிகர்
குயிலார் மொழி தோதக மாதர்கள்
தணியா மயலாழியில் ஆழவும் அமிழாதே
தழலேபொழி கோர விலோசனம்
எறிபாச மகாமுனை சூலமுள்
சமனார்முகில் மேனி கடாவினில் அணுகாதே
கருவூறிய நாளு(ம்) முநூறெழு
மலதேகமும் ஆவலும் ஆசை!க
படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக்
கனிவீறிய போத மெய்ஞானமும்
இயலார்சிவ நேசமுமே வர
கழல் சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய்
புருகூதன் மினாளொரு பாலுற
சிலைவேடுவர் மானொரு பாலுற
புதுமாமயில் மீதணையா வரும் அழகோனே
புழுகார்பனிர் மூசிய வாசனை
உரகாலணி கோலமென் மாலைய
புரிநூலும் உலாவு துவாதச ...... புயவீரா
மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்
செழிசாலி குலாவிய கார்வயல்
மக தாபத சீலமுமே புனை ...... வளமூதூர்
மகதேவர் புராரி சதாசிவர்
சுதராகிய தேவ சிகாமணி
வழுவூரில் நிலாவிய வாழ்வருள் ...... பெருமாளே
திருப்பாடல் 2:
தனனா தத்தன தாத்த தந்தன
தனனா தத்தன தாத்த தந்தன
தனனா தத்தன தாத்த தந்தன ...... தனதான
தலை நாளில் பதமேத்தி அன்புற
உபதேசப் பொருளூட்டி மந்திர
தவஞானக் கடலாட்டி எந்தனை அருளால்உன்
சதுராகத்தொடு கூட்டி அண்டர்கள்
அறியா முத்தமிழூட்டி முண்டக
தளிர்வேதத்துறை காட்டி மண்டலம் ...... வலமேவும்
கலைசோதிக்கதிர் காட்டி நன்சுடர்
ஒளிநாதப் பரமேற்றி முன்சுழி
கமழ் வாசற்படி நாட்டமும் கொள ...... விதிதாவிக்
கமலாலைப்பதி சேர்த்து முன்பதி
வெளியாகப்புக ஏற்றி அன்பொடு
கதிர்தோகைப்பரி மேற்கொளுஞ்செயல் ...... மறவேனே
சிலைவீழக்கடல் கூட்டமுங்கெட
அவுணோரைத் தலை வாட்டி அம்பர
சிரமாலைப்புக ஏற்றவுந்தொடு ...... கதிர்வேலா
சிவகாமிக்கொரு தூர்த்தர் எந்தையர்
வரிநாகத் தொடையார்க்குகந்தொரு
சிவஞானப் பொருளூட்டும் முண்டக ...... அழகோனே
மலை மேவித்தினை காக்கும் ஒண்கிளி
அமுதாகத் தனவாட்டி இந்துளம்
மலர்மாலைக் குழலாட்டணங்கி தன் ...... மணவாளா
வரிகோழிக்கொடி மீக்கொளும்படி
நடமாடிச் சுரர் போற்று தண்பொழில்
வழுவூர் நற்பதி வீற்றிருந்தருள் ...... பெருமாளே
(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment