(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (தென்கரை)
மாவட்டம்: திருவாரூர்
திருக்கோயில்: அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்), மணிவாசகர் (திருவாசகம்), பூந்துருத்தி காடநம்பி (திருவிசைப்பா)
தலக் குறிப்புகள்:
திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலை அறியாதோரும் உளரோ?
பிரதான கிழக்கு கோபுர வாயிலின் இருபுறமும் விநாயக மூர்த்தியும் வேலவனும் திருக்காட்சி தருகின்றனர். இங்கு கந்தப் பெருமான் இரு தேவியரோடு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். சிவகுமாரர்களை வணங்கி உள்ளே செல்கின்றோம்.
நடுநாயகமாய் தனிச்சன்னிதியில் திருக்காட்சி தரும் வீதிவிடங்க விநாயகப் பெருமானைத் தரிசித்துப் பணிந்தவாறு மேலும் முன்னேறிச் செல்கின்றோம்.
வலது புறம் தோன்றும் தேவாசிரியன் மண்டபத்திற்கு அருகாமையில் சென்று வீழ்ந்து வணங்கி, நம் சுந்தரனார் அருளியுள்ள திருத்தொண்டத் தொகையினைப் பாராயணம் புரிந்து பணிகின்றோம்.
அடுத்த கோபுர வாயிலின் வலது புறத்தில் நம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, மயில் மேல் அமர்ந்த திருக்கோலத்தில் இரு தேவியரோடும் எழுந்தருளி இருக்கின்றான்.
மேலும் முன்னேறிச் சென்று பூங்கோயில் எனும் கோபுர வாயிலுள் புகுந்து திருமூலட்டானம் எனும் திருக்கருவறையுள் எழுந்தருளி இருக்கும் வன்மீகநாதப் பரம்பொருளைத் தரிசித்துப் பணிகின்றோம். சிறிய திருமேனியர், அபிஷேக காலங்கள் அல்லாத சமயங்களில் கவசத்தோடு திருக்காட்சி தருகின்றார். அனுதினம் இரவு 7.15 மணிக்கு அபிஷேகம் கண்டருளுகையில் இறைவரின் அற்புதத் திருமேனியைத் தரிசித்து மகிழலாம்.
மூலக் கருவறை அமைந்துள்ள உட்பிரகாரச் சுற்றின் பின்புறம், வலது புறத்தில் கந்தக் கடவுள் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான்.
-
அருணகிரியார் இத்தலத்திற்கு அருளியுள்ள அற்புத அற்புதமான 7 திருப்புகழ் திருப்பாடல்களையும் இம்மூர்த்தியின் திருமுன்னர் பாராயணம் புரிந்து பணிகின்றோம்.
மூலக் கருவறைக்கு அருகிலுள்ள தனி மண்டபமொன்றில் சோமாஸ்கந்த மூர்த்தியான தியாகேசப் பெருமான் எழுந்தருளி இருக்கின்றார், உடன் எழுந்தருளியுள்ள உமையன்னையின் திருநாமம் 'கொண்டியம்மை'. வைகுந்த நகரில் பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணுவால் எண்ணிறந்த யுகங்கள் பூசிக்கப் பெற்றுப் பின் நான்முகக் கடவுளால் சத்திய லோகத்தில் பூசிக்கப் பெற்றுப் பின் இந்திரனின் பூசனைகளை சுவர்க்க லோகத்தில் ஏற்றிருந்துப் பின்னர் இறுதியாய் முசுகுந்த சக்கரவர்த்தியால் திருவாரூரில் எழுந்தருளிய மூர்த்தி இத்தியாகேசப் பெருமான்.
தியாகேச மூர்த்தியின் திருமுன்னர் அமர்ந்தவாறு இத்தலத்திற்கான 34 தேவாரத் திருப்பதிகங்களையும் பாராயணம் புரிந்து பணிகின்றோம்.
வெளிப்பிரகாரச் சுற்றில் நம் உமையன்னை தனிக்கோயிலில் கமலாம்பிகை எனும் திருநாமத்தோடு, அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். காண்பதற்கரிய திருக்காட்சி.
-
இக்கருவறையின் உட்பிரகாரச் சுற்றின் பின்புறம் வேலாயுதக் கடவுள் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு, மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில், இரு தேவியரோடும் எழுந்தருளி இருக்கின்றான்.
-
இம்மூர்த்திக்கு அருகாமையில் நம் கந்தப் பெருமான் 'பால சுப்பிரமணியன்' எனும் மற்றொரு திருநாமத்திலும் திருக்காட்சி தருகின்றான்.
வன்மீகநாதரின் ஆலயத்திற்கு அருகாமையில் நம் அம்மை நீலோத்பல தேவியாய் மற்றுமொரு திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். இச்சன்னிதியின் துவக்கத்திலேயே நம் கந்தப் பெருமான் ஒரு முகம் நான்கு திருக்கரங்களோடு, மயில் பின்புறம் விளங்கியிருக்க, இரு தேவியரோடு நின்ற திருக்கோலத்தில், 'சிங்கார வேலவர்' எனும் திருநாமத்தோடு எழுந்தருளி இருக்கின்றான்.
(Google Maps: Arulmigu Thiyagaraja Swamy Temple, Sannathi Street, Thanjai Salai, Vasan Nagar, Madapuram, Thiruvarur, Tamil Nadu 610001, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 7.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
கூசாதே பார் ஏசாதே மால்
கூறா நூல் கற்றுளம் வேறு
கோடாதே வேல் பாடாதே மால்
கூர்கூதாளத் ...... தொடை தோளில்
வீசாதேபேர் பேசாதேசீர்
வேதாதீதக் ...... கழல்மீதே
வீழாதேபோய் நாயேன் வாணாள்
வீணே போகத் ...... தகுமோதான்
நேசா வானோர்ஈசா வாமா
நீபா கானப் ...... புனமானை
நேர்வாய் ஆர்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற்பக சாலத்
தேசாதீனா தீனார் ஈசா
சீர்ஆரூரில் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே
திருப்பாடல் 2:
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
கூர்வாய் நாராய் வாராய் போனார்
கூடாரே சற்றலஆவி
கோதானேன் மாதா மாறானாள்
கோளே கேள் மற்றிள வாடை
ஈர்வாள் போலே மேலே வீசா
ஏறா வேறிட்டது தீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா
ஈடேறாரில் ...... கெடலாமோ
சூர் வாழாதே மாறாதே வாழ்
சூழ் வானோர்கட்கருள் கூரும்
தோலா வேலா வீறாரூர்வாழ்
சோதீ பாகத்துமையூடே
சேர்வாய் நீதீ வானோர் வீரா
சேரார் ஊரைச் ...... சுடுவார்தம்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
பாலோ தேனோ பாகோ வானோர்
பாரா வாரத்தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
பானோ வான்முத்தென நீளத்
தாலோ தாலேலோ பாடாதே
தாய்மார் நேசத்துனு!சாரந்
தாராதே பேர்ஈயாதே!பே
சாதே ஏசத் ...... தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாள்!மா
லானாதேனற் ...... புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப் ...... புகுவோனே
சேலோடே சேர் ஆரால் சாலார்
சீராரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
திருப்பாடல் 4:
தானானத் தனதான தானானத் ...... தனதான
நீதான் எத்தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி
மா தானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய்
வேதா மைத்துனவேளே வீரா சற்குணசீலா
ஆதாரத்தொளியானே ஆரூரில் ...... பெருமாளே
திருப்பாடல் 5:
தனதன தனன தனதன தனன
தானான தந்த ...... தனதான
மகரமது கெட இருகுமிழ் அடைசி
வாரார் சரங்களென நீளும்
மதர்விழி வலைகொடுலகினில் மனிதர்
வாழ்நாளடங்க ...... வருவார்தம்
பகர்தரு மொழியில் ம்ருகமத களப
பாடீர கும்ப ...... மிசை வாவிப்
படி மனதுனது பரிபுர சரண
பாதார விந்த ...... நினையாதோ
நகமுக சமுக நிருதரும் மடிய
நானா விலங்கல் ...... பொடியாக
நதிபதி கதற ஒருகணை தெரியும்
நாராயணன்தன் ...... மருகோனே
அகனக கனக சிவதல முழுதும்
ஆராம பந்தி ...... அவைதோறும்
அரியளி விததி முறைமுறை கருதும்
ஆரூர்அமர்ந்த ...... பெருமாளே
திருப்பாடல் 6:
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
கனமதெணு மொழி கனிகதிர் முலைநகை
கலகமிடுவிழி கடலென விடமென ...... மனதூடே
கருதியன நடை கொடியிடை இயல்மயில்
கமழும் அகிலுடன் இளகிய ம்ருகமத
களப புளகித கிரியினும் மயல்கொடு ...... திரிவேனும்
இரவு பகலற இகலற மலமற
இயலும் மயலற விழியில்நீர் இழிவர
இதயமுருகியெ ஒருகுள பதமுற ...... மடலூடே
எழுத அரியவள் குறமகள் இருதன
கிரியில் முழுகின இளையவள் எனுமுரை
இனிமை பெறுவதும் இருபதம் அடைவதும் ஒருநாளே
சுரபி மகவினை எழுபொருள் வினவிட
மனுவின்நெறி மணி அசைவுற விசைமிகு
துயரில் செவியினில் அடிபட வினவுமின் அதிதீது
துணிவிலிதுபிழை பெரிதென வருமநு
உருகி அரகர சிவசிவ பெறுமதொர்
சுரபி அலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்
பரவி அதனது துயர்கொடு நடவிய
பழுதின் மதலையை உடலிரு பிளவொடு
படிய ரதமதை நடவிட மொழிபவன் அருள்ஆரூர்ப்
படியில் அறுமுக சிவசுத கணபதி
இளைய குமர நிருப பதி சரவண
பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே
திருப்பாடல் 7:
தானா தானா தனதன தனதன
தானா தானா தனதன தனதன
தானா தானா தனதன தனதன ...... தனதான
பாலோ தேனோ பலஉறு சுளையது
தானோ வானோர் அமுதுகொல் கழைரச
பாகோ ஊனோடுருகிய மகன்உண ...... அருள்ஞானப்
பாலோ வேறோ மொழியென அடுகொடு
வேலோ கோலோ விழியென முகமது
பானோ வானூர் நிலவு கொலெனமகள் ...... மகிழ்வேனை
நாலாம் ரூபா கமல ஷண்முகவொளி
ஏதோ மா தோம் எனதகம் வளரொளி
நானோ நீயோ படிகமொடொளிர் இடம் அதுசோதி
நாடோ வீடோ நடுமொழி எனநடு
தூணேர் தோளா சுரமுக கனசபை
நாதா தாதா எனஉருகிட அருள் ...... புரிவாயே
மாலாய் வானோர் மலர்மழை பொழி!அவ
தாரா சூரா எனமுநிவர்கள் புகழ்
மாயா ரூபா அரகர சிவசிவ ...... எனஓதா
வாதாடூரோடவுணரொடலை கடல்
கோகோ கோகோ எனமலை வெடிபட
வாளால் வேலால் மடிவு செய்தருளிய ...... முருகோனே
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்
ஓதார் சீராள் கதிர்மதி குலவிய
தோடாள் கோடார் இணைமுலை குமரிமுன் ...... அருள்பாலா
தூயார் ஆயார் இதுசுக சிவபத
வாழ்வாம் ஈனே வதிவம் எனுணர்வொடு
சூழ்சீர்ஆரூர் மருவிய இமையவர் ...... பெருமாளே
(2024 டிசம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment