(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (தென்கரை)
மாவட்டம்: திருவாரூர்
திருக்கோயில்: அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
திருவாரூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
(Google Maps: Kudavasal Koneswaran Shiva TEMPLE, Kudavasal, Tamil Nadu 612601, India)
(Google Maps: Kudavasal Koneswaran Shiva TEMPLE, Kudavasal, Tamil Nadu 612601, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனனா தத்தன தனனா தத்தன
தனனா தத்தன ...... தனதான
அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்
அயலார் நத்திடு ...... விலைமாதர்
அணை மீதிற்துயில் பொழுதே தெட்டிகள்
அவரேவல் செய்து ...... தமியேனும்
மயலாகித் திரிவது தானற்றிட
மல மாயைக் குணமதுமாற
மறையால் மிக்கருள் பெறவே அற்புத
மது மாலைப் பதம் அருள்வாயே
கயிலாயப் பதி உடையாருக்கொரு
பொருளே கட்டளை ...... இடுவோனே
கடலோடிப்புகு முதுசூர் பொட்டெழ
கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே
குயில்ஆலித்திடு பொழிலே சுற்றிய
குடவாயிற்பதி ...... உறைவோனே
குறமாதைப் புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவர் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ...... தனதான
சுருதியாய் இயலாய்இயல் நீடிய
தொகுதியாய் வெகுவாய்வெகு பாஷைகொள்
தொடர்புமாய் அடியாய் நடுவாய்மிகு ...... துணையாய்மேல்
துறவுமாய் அறமாய் நெறியாய்மிகு
விரிவுமாய் விளைவாய்அருள் ஞானிகள்
சுகமுமாய் முகிலாய் மழையாயெழு ...... சுடர்வீசும்
பருதியாய் மதியாய் நிறை தாரகை
பலவுமாய் வெளியாய் ஒளியாய்எழு
பகல் இராவிலையாய் நிலையாய் மிகு ...... பரமாகும்
பரம மாயையின் நேர்மையை யாவரும்
அறியொணாததை நீகுருவாய்இது
பகருமாறு செய்தாய்முதல் நாளுறு ...... பயனோதான்
கருதும் ஆறிரு தோள்மயில் வேலிவை
கருதொணா வகை ஓர்அரசாய் வரு
கவுணியோர்குல வேதியனாய் உமை ...... கனபாரக்
களப பூண்முலை ஊறிய பாலுணும்
மதலையாய்மிகு பாடலின் மீறிய
கவிஞனாய் விளையாடிடம் வாதிகள் ...... கழுவேறக்
குருதியாறெழ வீதியெலா மலர்
நிறைவதாய் விட நீறிடவே செய்து
கொடிய மாறன்மெய் கூன்நிமிரா முனை ...... குலையா வான்
குடி புகீரென மாமதுராபுரி
இயலை ஆரண ஊரென நேர்செய்து
குடசை மாநகர் வாழ்வுற மேவிய ...... பெருமாளே.
No comments:
Post a Comment